Pages

Thursday, August 1, 2013

ஓம்


     

      வேதம் ஓதத் துவங்கும் போதும், முடிக்கும் போதும், ஓம் என்னும் மந்திரத்தைச் சொல்வது வழக்கமாக உள்ளது. எந்த மந்திரத்தைக் கூறினாலும் அதற்கு முன் ஓங்காரம் உச்சரிக்கப்படுகிறது. இது எல்லா வேதங்களின் சாரம் என்று சாந்தோக்கிய உபநிஷத்தும், ஓங்காரமே பிரம்மம் (பரம்பொருள்) என்று தைத்திரீய, பிரச்ன உபநிடதங்களும் கூறுகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் ஓங்காரத்தின் பொருள் என்ன?
     
      ஓங்காரத்துக்குப் பொருளே சொல்ல முடியாது என்று சிலரும், இறைவன் தான் ஓங்காரத்தின் உட்பொருள் என்று சிலரும் கூறுவர். இன்னும் சிலர், உலகிலுள்ள அனைத்து ஒலிகளின் சங்கமமே ஓங்காரம் என்பர்.  

      வேத மந்திரங்களில் பாரதிக்கு மிகவும் பிடித்தமான சொல் ஓம். கந்தர்வ லோகத்தில் பிரதிமைகள் இல்லாத கோவில்களும் சில உண்டு. அங்கு ஓம் என்று ஒளி எழுத்தில் எழுதி வைத்திருப்பதாக ஞானரதம் என்ற கட்டுரையில் அவர் கூறுகிறார். பாஞ்சாலி சபதத்தின் இறை வணக்கப் பாடலில் ஓம் எனப் பெரியோர்கள் ஓதுவது தான் பிரமம் எனப்படும் அறிவும் அனந்தமும் ஆகிய நிர்மலப் பொருள் என்கிறார். இறைவனை வணங்கும் போது ஓம் எனும் பொருளை உளத்திலே நிறுத்த வேண்டும் என்று அவரது விநாயகர் நான்மணிமாலை கூறுகிறது.

      ஓங்காரம் ஆசீர்வாதத்திற்கு உரிய மங்கலச் சொல் என்று பாரதி கருதியதை, தருமன் முகமலர்ந்து வருக என்று சொல்லி ஓம் என்று ஆசீர்வதித்தான் என்று அவரது தர்மலோகம் கூறுகிறது. ஓங்காரத்தை தியானத்திற்குரிய எளிய மந்திரமாகவும் மன அமைதி் தருவதாகவும் அவர் கருதினார் என்பது தருமலோகம் என்ற கட்டுரையில் முனிவர்கள் இருவரும் பிரம்மத் தியானத்திலே அமர்ந்திருந்தார். நான் ஓம் என்று ஜெபித்து சாந்தி தேவியை வரிக்கலானேன் என்று கூறுவதிலிருந்து அறியலாம்..

      இறைவனை ஓங்கார வடிவினனாகச் சொல்வது ஏன்?

      ஓங்காரத்துக்கு இன்னொரு பெயர் பிரணவம் என்பது. ப்ரணவ என்ற வட சொல் ப்ர+நவ என்ற இரு சொற்களின் கூட்டு. ப்ர என்ற முன்னொட்டு முதன்மை அல்லது சிறப்பைக் குறிக்கும். நவ என்பதற்குப் புதுமை என்பது பொருள். எனவே ப்ரணவம் என்பது புதுமைக்குச் சிறப்பு என்று பொருள் தருகிறது.

      புதுமைக்குச் சிறப்பு அளித்தல் என்பது, அடிப்படையை மாற்றாமல் பிற விஷயங்களில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகும்.
     
      பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் கணம் தோறும் மாறிக் கொண்டே, புதுமை அடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு பிரபஞ்சமே ஓங்கார ஸ்வரூபமாக உள்ளது. இந்த இடை விடாத மாற்றங்களின் காரண கர்த்தாவான இறைவனும் ஓங்கார ஸ்வரூபனாகக் கருதப்படுகிறான். இறைவனை முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே என்று போற்றிய மாணிக்கவாசகர் அடுத்த அடியில் பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே என்று கூறுவதை நோக்குக.

      பதஞ்ஜலி யோக சூத்ர உரையில் பாரதி கூறுவதைக் கேட்போம். ஓம் என்பது பிரணவ மந்திரம். இந்த மந்திரத்துக்கு ஆகமங்கள் கோடி வகைகளில் பொருள் சொல்கின்றன. ப்ரணவம் என்ற சொல் எப்போதும் புதுமையானது என்ற பொருள் தருவது.

      வேதத்தில் ஓங்காரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுவதன் நோக்கம் புதுமையில் நாட்டம் கொண்டவனாக இரு என்று அறிவுறுத்துவதற்கே.
     
      சாதாரணமாகக் குழந்தைகள் தாம் புதுமையில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். புதிய கற்பனைகள், புதிய சிந்தனைகள், புதிய விளையாட்டுகள், புதிய நண்பர்கள் என்று நாள் தோறும் புதுமையை வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைப் பருவம் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் இது தான். குழந்தைகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.

      புராணங்களின் மெய்ப் பொருள் கண்டு பயன் பெற வேண்டும் என்ற பாரதியின் கருத்துக்கு இணங்க, ஓங்காரம் தொடர்பான ஒரு புராணக் கதையின் உட்பொருள் காண முயல்வோம்.

      பிரணவத்தின் பொருள் தெரியாத பிரமனைக் குட்டிச் சிறையில் அடைத்து சிவனார் மனம் குளிர அவர் செவியில் முருகன் ஓதினார் என்று புராணம் கூறுகிறது. புதுமையைப் போற்று என்று குழந்தைகள் சொல்கின்றனர். புதியனவற்றை ஏற்க மறுக்கும் முதியவர்களே, குழந்தைகளிடம் இதைக் கற்றுக் கொள்ளுங்கள் என்பது தான் முருகனின் உபதேசம்.

      இந்த நெறிப்படி, காலத்திற்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வந்ததால் தான் இந்து சமயம் எத்தனையோ சோதனைகள் வந்தும், அவற்றைக் கடந்து வந்து இன்று உலகளாவப் பரவத் தொடங்கியுள்ளது. ரிக் வேத ஸம்ஹிதையே இந்தப் பரந்த மனப்பான்மைக்கு அடித்தளம் இட்டது. பின்னர் எழுந்த நூல்களும் இத் தடத்திலேயே சென்றன. எனவே அவையும் வேதம் என்ற தலைப்பின் கீழ்க் கொண்டு வரப்பட்டன.

      வேதம் காலம் தோறும் புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு இந்த ஓங்காரமே சாட்சி. ஆம். வேதத்தின் ஸம்ஹிதை என்ற பகுதியில் இந்த ஓங்காரம் ஒரு சொல்லாக அமையவில்லை. இது ஒரு பிற்காலக் கண்டுபிடிப்புத் தான் என்றாலும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இன்று எந்த வேத மந்திரம் சொல்வதானாலும் ஓங்காரத்துடன் தான் துவக்கப்படுகிறது, ஓங்காரத்துடன் முடிக்கப்படுகிறது.

      நிகழ்காலத்திலும் இந்தப் புதுப்பி்க்கும் செயல் தொடர்ந்து நடைபெற வேண்டுமென்பது பாரதியின் விருப்பம். அதனால் தான் ஆத்திசூடியில் வேதம் புதுமை செய் என்கிறார். நாம் புதுமையை விரும்பினாலும் அதை ஏற்றுக் கொள்வதற்கும் பழமையைக் கைவிடுவதற்கும் நமக்குத் தயக்கம் அதிகம். இதைப் பாரதி தன் மனத்துக்கு அறிவுறுத்தும் பாடலில் காட்டுகிறார்.

புதியது காணில் புலனழிந்திடுவாய்
புதியது விரும்புவாய் புதியது அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டு போல்
பழமையாம் பொருளிற் பரிந்து போய் வீழ்வாய்
பழமையே அன்றிப் பார்மிசை ஏதும்
புதுமை காணோம் எனப் பொருமுவாய்

      பாரதி மற்றவர்க்கு உபதேசித்ததைத் தான் நடைமுறைப்படுத்திக் காட்டினார். முந்தைய புலவர்களினின்றும் மாறுபட்டு்க் காலத்திற்கு ஏற்ற புது வகையான பாடல்கள், புது வகையான கருப் பொருள்கள் கொண்டு தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியது போல, மானிட சமுதாயம் நலம் பெறுவதற்கான ஒரு புதிய மந்திரத்தையும் உருவாக்கினார்.

சொல் புதிது

      வேத மந்திரங்களைச் சொல்லி முடிக்கும்போது, எங்கும் அமைதி நிலவுவதாக என்று பொருள்பட ஓம் சாந்தி என்று மும்முறை சொல்லி முடிப்பது வழக்கம். இந்தியா தாழ்வுற்றுப் பாழ்பட்டு நின்ற நிலையில் நமக்குத் தேவை செயலற்றுக் கிடக்கும் அமைதி அல்ல, செயல்படுவதற்கான வலிமையே என்று உணர்ந்து பாரதி ஓம் சக்தி என்ற புதிய மந்திரத்தை அறிமுகப்படுத்துகிறார். இம்மந்திரம் வேத வழக்கில் இல்லாதது. ஆனால் இதன் கருத்து வேத சம்மதமானதே என்பதை விவேகானந்தரின் இந்த உபநிடத மேற்கோள் மெய்ப்பிக்கிறது.
     
      உபநிஷத் கூறுகிறது, வலிமை, வலிமை. மனிதா, பலவீனனாக இராதே. பலவீனத்தைப் பலவீனத்தால் குணப்படுத்த முடியுமா? அழுக்கை அழுக்கால் போக்க முடியுமா? மனிதா, நிமிர்ந்து நில். வலிமையாக இரு.”


      இவ்வாறு ஓம் சக்தி மந்திரம் பாரதியால் வேத நெறி அடிப்படையில் காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்டதை அறிகிறோம்.

No comments:

Post a Comment