Pages

Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Thursday, November 22, 2012

பனங்காய் சுமக்கும் குருவி



சீக்கிரம் போவணும், சீக்கிரம் போவணும்
அடுத்த வீட்டுக்காரி முந்திக்கிட்டான்னா,
நம்ம பூ விக்காது.
எல்லாப் பூவும் வித்து,
பூக்காரருக்குக் கணக்குத் தீர்த்து,
அரிசி வாங்கியாந்து,
சோறாக்கணும்.
நேரமாச்சுன்னா,
அப்பா குடிச்சிட்டு வந்து,
அம்மாவை அடிக்கும்.
இனியும் அடிவாங்கினா,
அம்மா செத்துடும்.
சீக்கிரம் போவணும், சீக்கிரம் போவணும். 

காணிக்கை


            கோவில் உண்டியல் காணிக்கைக்குக்
            காசினை எடுக்கையில் அறிவு தடுத்தது
            பற்பல கோவிலில் உண்டியல் திருட்டு,
            அறங்காவலரால் ஆலயம் சூறை,
            என நிதம் படிக்கிறோம் செய்தித்தாளில்.
            நேரே  நல்லோர்க் கீவாய் என்றது.
           
            தீபத்தட்டுடன் குருக்கள் வந்தார்-
            வைரக்கடுக்கன் வகை வகை மோதிரம்
            “இவர்க்கேன் எந்தன் அற்பக்காசு?
            தனிகர்க் களித்தல் தருமம் அல்ல.”
           
            வறுமையின் உருவமாய் வந்தார் பணியாள்
            “ஐயகோ! இவனொரு குடியன் அன்றோ?
            ஆலயப் பணியின் புனிதம் மறந்து
            அறவழி பிறழும் இவனும் வேண்டாம்.”

            வெளியே பலபேர் பிச்சை எடுத்தனர்
            எஃகினைப்போன்ற உடலினைக் கொண்டோர்
            உழைக்கா துண்பதில் தனிச்சுகம் காண்போர்
            “இவர்க்கு ஈந்தால் சோம்பல் வளரும்,
     எனக்கோர் சமூகக் கடமையும் உண்டு.

தெருவில் இறங்கி நடந்தபோது
எதிரில் சுவரில் இருந்ததிவ் வாசகம்
கடமையைச் செய்யவே உனக்குளதுரிமை,
பலனை அலசுதல் மாபெரும் மடமை.”

காசினை அங்கே வைத்து நகர்ந்தேன்
கனமிலா மனத்துடன் இல்லம் வந்தேன்.

Saturday, August 18, 2012

மனைவி



என்னை மணந்த சின்னாளில்
உன்னில் பாதி நான் என்றாள்.
ஆம் ஆம் உண்மை அதுவென்றேன்.
இருவர் தலைமை இழுபறியாம்
ஒரு தனித் தலைமை உயர்வென்றாள்.
அதுவே எனது கருத்தென்றேன்.
அந்தத் தலைவர் நானென்றாள்.
அகப்பட்டேன் நான் விழிக்கின்றேன்.

வெண்டை முற்றல் கத்தரி சொத்தை
வாடிய கீரை வதங்கிய மல்லி
எந்தப் பொருளும் வாங்குதல் அறியார்
எனக்கென வாய்த்ததோர் அசடு என்பாள்

ஏது நான் செய்யினும் ஏது நான் பேசினும்
குற்றம் காண்பது ஒன்றே அவள் தொழில்.
எதற்கவள் மகிழ்வாள்? என்றவள் வெகுள்வாள்?
ஈசனே அன்றி யாவரே அறிகுவர்?
என்ன தான் செய்வேன்? எங்கு போய்ச் சொல்வேன்?

நமக்கேன் பொறுப்பு? நானெனும் தனிப் பொருள்
இல்லை, நானெனும் எண்ணமே பொய்யெனப்
புத்தன் புகன்றதைப் புத்தியில் கொண்டு
நானாம் பான்மையை நசுக்கிக்  கொண்டேன்.
அவள் கைப் பாவையாய் ஆகி விட்டேன்.
ஆணாம் எனக்கு ஐயகோ வீழ்ச்சி!

மனைவியால் பட்ட தொல்லை மிகவுண்டு கண்டீர்!

பொருளை ஓங்க வளர்த்தல் என் கடன்.
மற்றைக் கருமம் யாவும் முடித்தே
மனையை வாழச் செய்பவள் அவளே.
வேளைக்குணவு விதவிதமாக
இனிய சுவையுடன் இயற்றுவ தவளே.
வீட்டுத் தூய்மை விருந்தினரோம்பல்
குழந்தை வளர்ப்பெனக் கோடி வேலைகள்.
ஓய்வெனச் சாயாள் விடுமுறை அறியாள்.

செய்தித் தாளில் தலையை நுழைத்து
உலகக் கவலை ஊர் வம்புகளில்
மும்முரமாக முழுகி நான் இருக்கையில்
மற்றவர் பசியை மாற்றுவான் வேண்டி
சமையல் அறையில் பரபரத் திருப்பாள்.
தொக்கா முன்னே சொகுசாய் அமர்ந்து
ஒலிம்பிக் காட்சி நான் ரசித்திருக்கையில்
மறுநாள் இட்டிலி மிளகாய்ப் பொடியென
அறவைக் கருவியோ டைக்கிய மடைவாள்.
இல்லில் உள்ளோர் எவர்க்கும் நோயெனில்
இரவும் பகலும் ஓய்வே இன்றி
உடனிருந் துற்ற சேவைகள் செய்வாள்.
பத்திய உணவைப் பதமாய்ச் சமைப்பாள்.
கவலைப் படுவாள், கடவுளை வேண்டுவாள்.
தனக்கென வாழாத் தியாகத் திருவுரு.
நானாம் பான்மை அறவே ஒழிந்து
பணிவிடை ஒன்றே குறியாய் இருப்பாள்.
இவள் போல் மனைவி பெறற்கரும் பாக்கியம்.

மனைவி இலாவிடில் செய்கை நடக்குமோ?

Wednesday, July 18, 2012

ஒளியும் இருளும்





ஒளியா இருளா வலியது எதுவோ?
ஒளியைக் கண்டால் விலகுது இருளும்.
விலகலே அன்றி அழிதல் இல்லை.
ஒளி மறைந்த பின் மீண்டும் வருகை
முழுமையாக இருளை ஒழித்து
ஒளி ஒரு நாளும் வென்றது இல்லை
பதுங்கித் தாக்கல் இருளின் தனி வழி

ஒளியும் இருளும் பலத்தில் சமமா?
இருளே அதிகம் ஆட்சி செய்வது
ஒளியின் வீச்சைத் தடுப்பன பொருள்கள்
இருளின் வீச்சை எவரும் தடுக்கிலர்.
ஒன்றின் வேரை மற்றது அறுத்து
அழிக்காததனால் எதிரிகள் அல்லர்.

இருளும் ஒளியும் இயல்பினில் நட்போ?
இருவரும் சேர்ந்து செல்வது இல்லை
இருவரும் பிரிந்து வாழ்வதும் இல்லை

என்ன தான் உறவு இவர்களுக்குள்ளே?


முப்பது வருஷம் வாழ்ந்தவரில்லை




மரத்தடி ஒன்றில் கிடந்தார் பிள்ளையார்
கோயில் இல்லை, கூரையும் இல்லை
கும்பிடப் பெரிதாய்க் கூட்டமும் இல்லை

பணமிகப் படைத்ததோர் பக்தன் வந்தான்
எந்தன் செல்வம் என்றும் காப்பீர்
நாளும் உனக்கு நாலணா தருவேன்
நன்றியோடிருப்பேன் நாயகா என்றான்.

திருடன் ஒருவனும் அவ்விடம் வந்தான்
இந்தச் செல்வனின் சொத்தைத் திருடுவேன்
சிறையுள் புகாமல் நீ எனைக் காத்தால்
கிடைப்பதில் பாதி உனக்கே என்றான்.

ஏழைப் பிள்ளையார் ஏழைக்குதவினார்
உண்டியல் நிரம்ப நோட்டுக் கத்தை
அறங் காவலர்கள் அப்பாவி மக்கள்
அத்தனை பணத்தையும் அவர்க்கே ஆக்கினர்
நிலங்கள் வாங்கினர் கோயிலைக் கட்டினர்
நகைகள் செய்தனர் கவசம் பூட்டினர்
பக்தர் கூட்டமோ பல பல ஆயிரம்
உள்ளே நுழையவே ஒரு நூறு கட்டணம்

அரசியல் வாதியின் கைகள் அரித்தன
வட்டம் பிடித்துமா வட்டம் வளைத்து
கோட்டையை நெருக்கினான். கோவிலில் இவனை
அறங்காவலனாய் அமைச்சர் அமைத்தார்.

கணக்கில் மறைத்துக் கரவுகள் செய்து
நிலங்கள் வளைத்து நகைகள் பதுக்கி
உண்டியல் திருடியும் நிறைவடையாமல்
சாமிக்கடியில் ரத்தினம் உளதென
பாறையால் ஒரு நாள் பெயர்த்துப் போட்டான்
மீண்டும் பிள்ளையார் மரத்தடி வந்தார்

முப்பது வருஷம் வாழ்ந்தவரில்லை
மூத்த கணபதி விதிவிலக்கில்லை.

Thursday, September 15, 2011

புதிய ஆலயம்

(இந்த என் படைப்பு வல்லமை மின் இதழில் பிரசுரம் ஆகியுள்ளது.)

 சுற்றிலும் பார்க்கிறோம் சோகச் செய்திகள்
சாதியின் பெயரால் மதமெனும் சாக்கால்
உடமை சேர்க்க உரிமை நாட்ட
அடிதடி கொலைகள் ஆயிரம் நிதமும்
அமைதி வேண்டி ஆலயம் சென்றால்
அங்கும் ஆண்டவன் கையில் ஆயுதம்
ராமன் பாணம் கண்ணன் சக்கரம்
கணபதி அங்குசம் காளியின் போர்வாள்
 மாறுபட்டார் மனத்தினை மாற்ற
கொலை வழி அன்றிப் பிறவழி அறியா
முதிரா மனத்தினர் வகுத்தவை இவையாம்
 சமய முறையிலும் சாத்திரங்களிலும்
புதியன புகுதல் வழுவல அதனால்
புத்தர் காந்தி புனிதர் வள்ளல்
போதனை செய்த புண்ணிய வழியை
நெஞ்சில் நிறுத்தும் தெய்வங் களுக்கு
புதிய ஆலயம் புனைவோம் வாரீர்
 ஆலமர்ந் திருந்து அறமொழி அருளும்
மோன குருவை மூலவர் ஆக்குவோம்
ஆடல் புரிந்து அணுதொறும் இயக்கும்
தாண்டவன் கோயில் தனியே அமைப்போம்
செல்வம் அருளும் சீரார் திருமகள்
அறிவினை அருளும் கலைமக ளுக்கும்
ஆலயம் பலவாய் ஆங்காங் கமைப்போம்
வள்ள லாரை வணங்கிடும் மன்றம்
போதி மரத்தடி முனிவன் சைத்தியம்
வீதிகள் தோறும் விளங்க வைப்போம்
அமைதி வழியில் அகிலம் வெல்லும்
ஆற்றல் பெற்றிட அவரை வணங்குவோம்

Wednesday, March 2, 2011

निशि दिन बरसत नयन हमारे

நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை பிறங்கிற்று உலகு.

வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் பிறர்க்கு இடமேது.

இவ்வுலகிற்கு வந்த வரிசைப்படியே எவரும் திரும்புவதில்லை.

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் சாவு செய்தித் தாள்களில் இடம் பெறுகிறது. அத்தகைய இளைஞர்களின் பெற்றோர்களில் ஒருவனாக இருக்க மாட்டேன் என்று கோருவதற்கு நான் என்ன கடவுளுக்குச் செல்லப் பிள்ளையா?

தவிர்க்க முடியாத சாவைப் பற்றி வருந்துவதால் பயன் என்ன.?

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் மீண்டு வாரார்.

சென்ற பிறவியில் நீ யாரோ, அவன் யாரோ, அடுத்த பிறவியில் நீ யாரோ, அவன் யாரோ?

அவன் திரும்பி வாரான் என்ற உண்மையை நேருக்கு நேராகச் சந்தித்து விடு. ஏற்றுக் கொள்ள மறுப்பதால் தான் துயரம்.

மேலே கண்ட உண்மைகளை எல்லாம் நான் புரிந்து கொண்டுவிட்டேன்.

ஆனால் இவற்றை எனக்குப் படித்துச் சொன்ன கண்கள் புரிந்து கொள்ள மறுக்கி்ன்றனவே!

இரவும் பகலும் பொழியுதே, எமது கண்கள், என் செய்ய?

Saturday, February 12, 2011

வாயுதேவன் புலம்பல்

வெப்பம் மிகுந்த இடம் நோக்கி
விரைந்து செல்லும் இயல்புடனும்
சூடு என் மேல் பட்டவுடன்
சுர்ரென மேலெழும் இயல்புடனும்
இறைவா என்னைப் படைத்துவிட்டாய்
இவ்விதி மாற்றல் எளிதாமோ

வீடுகள் தோறும் கூரையினில்
விதவிதப் பெயருடன் தொங்கிடுவார்
முக்கரம் விரத்துச் சுழன்றிடும் இச்
சக்கரத்தாழ்வார் செயல் காணீர்

தலைவா உன்னை மறந்துவிட்டு
தானே விதியெனத் தருக்குகிறார்
மக்கள் உடலைக் குளிர்வித்து
மற்றவர் வெப்பம் நான் பெற்று
மேலே செல்ல முயலுகையில்
மிகுந்த எதிர்ப்புக் காட்டுகிறார்
கழுத்தைப் பற்றித் திருகுகிறார்
தரையில் தள்ளி மோதுகிறார்
குனிய வைத்துக் குட்டுகிறார்
கொடுமை அந்தோ நான் சகியேன்
இறைவா உன்னை வேண்டுகிறேன்
இனிப் படமுடியாது இத்துயரம்
சக்கரத்தாழ்வார் செயும் கொடுமை
சற்றே மாற்ற மாட்டீரோ

அன்ன தாதா ஸுகீ பவ

வயிறு முட்டப் பாலை அருந்தி
வாயை விலக்கித் தாய்முகம் பார்த்து
இனிய வாயை இதமாய்த் திறந்து
கனிவும் மகிழ்வும் கண்களில் காட்டி
சின்னக் குழந்தை சிரிப்பதன் பொருள் என்?
அன்னம் இட்டவர் நலமுடன் வாழ்க

ஏதும் இல்லா ஏழை மெலிந்து
காதம் நடந்து வேற்றூர் ந்ண்ணி
வருத்தும் பசியினால் வயிறு சுருங்கி
அறத்திடு பிச்சை இரந்து பெற்றது
உப்பும் நீரில் ஊறிய சோறும்
தொப்பை குளிரத் தொலைந்தது துன்பம்.
உண்டபின் ஈந்தவன் முகத்தினை நோக்கி
கண்களில் நன்றிக் கண்ணீர் துளிர்க்க
சொன்ன செய்தி எதுவெனக் கேளீர் !
அன்னம் இட்டவர் நலமுடன் வாழ்க.

வேதனைக்கு நன்றி

செலுத்துகிறேன் நன்றி சேர்ந்திட்ட வேதனைக்கு
இதயத்தைக் கனமாக்கி எனைக் கவிஞன் ஆக்கியதால்.
உலகெல்லாம் பெருவெள்ளம், ஊரெங்கும் பால் வெள்ளம்
எந்தன் குடிசையிலே இருப்பதுவோ சிறு கலயம்
அதனில் இருப்பதுவோ அழுக்கடைந்த நீராகும்
தாகமும் தீர்ப்பதில்லை, தாபமும் தணிப்பதில்லை.
பொங்கு வரும் பாலாற்றில் மொண்டுவந்து ஒருகுவளை
விடாய் தீர்த்துக் கொள்ள விதி எனக்குப் பணிக்கவில்லை
அடுத்தவரைப் பார்த்து அழுக்காறு கொள்கின்றேன்
அவலாசைப் படுகின்றேன், ஆற்றாமை உணர்கின்றேன்.
விதியென்னும் தத்துவத்தை மனிதர்க்குரைத்தவனை
வியந்து பாராட்டி விடுகின்றேன் பெருமூச்சை

நரகத்தைத் தேடி நான் எங்கும் செல்லவில்லை
எனைத் தேடி வந்தஃது இயற்றியது ஓர்அரங்கை.
அரங்கின் பொருள் யாவும் ஆக்கியவன் யானே
என் செயலின் விளைவான இழிவான நரகிற்கு
விதியையோ நோவேன், வீழ்ந்து விட்ட மதியையோ நோவேன்

ஊரெங்கும் கொண்டாட்டம் உல்லாசம் களியாட்டம்
ஆற்றிடை நந்தி போல் அசையாமல் நிற்கின்றேன்
தனைமறந்து எல்லோரும் தமருடனே களிக்கையிலே
எனை மறக்க இயலாமல் எனக்குள்ளே குமைகின்றேன்

யான் என்பவன் எனக்கோர் பெரும்புதிர்
தன்னைப் புரிந்து கொள்ளத் தான் அனுமதிப்பதில்லை.
ஊரோடும் உறவில்லை, உறவோடும் ஒட்டில்லை.
வேலையிலும் ஓய்வினிலும் விளையாட்டு வேளையிலும்
தன்னைப் பற்றியே தான் மூழ்கி இருத்தலால்.
காணும் பொருள் யாவும் காட்டுவது என் குறையை
இந்த முட்செடி என்னால் தோன்றியது
அந்தப் பெரும்பள்ளம் ஆக்கியவன் நானே
இறைந்திருக்கும கற்களெல்லாம் இறைத்ததும் யானே
என் வாழ்வு என் துன்பம் யான் அடையத் துணிந்தேன்
எனை நாடி வந்தோர்க்கும் ஏனளித்தேன் துயரம்
அன்பால் எனை அணைத்து ஆறுதலாய் ஒரு வார்த்தை
நீயுரைப்பாய் என்று நிலையாக உனை நம்பி
அடைக்கலம் புகுந்த எனை ஆதரிப்பாயே.
கருணைக் கடலன்றோ, கவினுறு மலையன்றோ
சொல்லாமற் சொலவல்ல சூக்குமப் பரம்பொருளே
கேட்காமற் கொடுக்கின்ற கேடிலா வள்ளல் நீ.
உன்னை அடைந்தோர்க்கு உண்டோ ஒரு துன்பம்.

நகர வருணனை – நாகை 1970

கனவு

பளபளத்த கருமையுடன் பரவி நிற்கும் தார் ரோடு
சளசளத்த மழையினிலும் சகதியிலாத் தன்மையது
குண்டு குழிகளின்றிக் குறைகள் ஏதுமின்றி
வண்டுறை குளத்தில் வாலன்னம் மிதத்தல் போல்
செல்லும் ஊர்திகளைச் சீராகத் தாங்குவது
கொல்லும் புழுதியிலை, குப்பையிலை, கூளமிலை
வீடு கழித்த குப்பையென விரல் நீளச் சிறுதுரும்பும்
போடுதற்குக் கூச்சம் தரும் புனிதம் நிரம்பியது
அகலத்திற் குறைவுமிலை, அதிலேயோர் நெளிசலிலை
பகலென்ன இரவாக்கும் பாங்கான ஒளிக்குழல்கள்.
உருண்டிடும் ஊர்திகளில் ஒன்றேனும் புகை கக்கா
மருண்டிடும் அளவுக்கு மாவிரைச்சல் போடாதாம்.
உண்டிங்கே நடைபாதை ஓரங்கள் இருபுறத்தும்
வண்டிகளின் தடையின்றி மக்கள் நடப்பதற்கே
மற்று அவரன்றி மாடு நாய் முதலான
சிற்றறிவுயிரினங்கள் சிலவேனும் காண்கிலேன்.

ஓரத்தே வீடுகள் உயரத்திற் பெரியனவாய்
சீரொத்த பான்மைையதாய் சிறப்புமிகு தூய்மையதாய்
இடமகன்ற மாளிகைகள் இவை ஒளியிற் குறைவில்லா
தடமகன்ற தன்மையினால் தங்காத வளியுடைய.
குடிமக்கள் என்பாரோ கோலமிகு வனப்புடையார்
மிடியில்லார் நோயில்லார் மிகவான பகையில்லார்
நகரெங்கும் சென்றேன் நானிதுவே கண்டேன்
அகமெங்கும் மகிழ்ச்சியால் ஆகா நான் நிரம்பிட்டேன்.

நனவு

தாங்கிடும் பெயரால் தாமரைக் குளமெனவே
ஓங்கரும் புகழ் படைத்த ஒரு நீர் நிலையுண்டு
பாசியும் வெறுக்கும் பாவத் தீர்த்தமிது
நாசிக்கும் விழிகளுக்கும் நரகமெனத் தோன்றுமால்.
தூம்பொன்று வடித்து நிற்கும் துர்நாற்றச் சாக்கடை நீர்
ஆம்பலுடன் தாமரையும் அல்லியும் இதில் வாழா.
பண்டுமுதல் இந்நீரால் பயன் பெறுவது கிருமிகளே.
உண்டிங்கே மீன்கள். ஓரத்தே இருந்து அவற்றைத்
தூண்டிலிட்டுத் தூக்கித் தொழில் செய்வோர் சிலராவர்.

குளத்தின் கரையெனிலோ கோடி தொழிற்கூடம்
பொறுக்கி வந்த சாணத்தைப் போராய்க் குவித்ததனை
வரட்டி தட்டி விற்கும் வனிதையரும் ஆங்குண்டு

குளத்தின் கரையோரம் குடிசைகள் பல உளவாம்
குடிசையிலே வாழ்கின்ற குழந்தையர்க்குக் கழிவிடமாய்
பன்றிகளும் நாய்களும் பக்கக் கண் காக்கைகளும்
இரை தேடிப் பெறுகின்ற இன்பக் களஞ்சியமாய்
குளிர் தாங்கா மூதாட்டி குளிர் காயும் நல்லிடமாய்
அழுக்கினையே அன்றி ஆடை பிற அணியாத
சிறுவர் விளையாடச் சீரான ஆட்டிடமாய்
குடிசைவாழ் மக்கள் தம் குப்பைகளின் நிலைக்களனாய்
அவ்விடத்தின் பயன் கூற ஆயிரம் நா வேண்டும்

தார் போட்ட ரோடுண்டு தாமரைக் குளக்கரையில்
தார் பிரிந்து விட்டதனால் தனிப் பிரிந்த கல்லுண்டு.
கோணலோ சொல்லப் போனால் கோடி கோடி ஆகிடாதோ
குழிகளில் விழுந்தேறிக் குலுங்கியே செலும் வண்டி

அச்சாலையை அடுத்து அமைந்ததோர் சிறு குப்பம்.
குப்பத்து மக்கள் தாம் குறைவில்லாச் சண்டையினர்
ஒரு வீட்டு வாசலிலே ஒடுங்கி நிற்கும் ஒரு சொறிநாய்
மறு வீட்டில் உயிருக்கு மன்றாடும் ஒரு கிழவன்
சூரியனும் சந்திரனும் சோவென்னும் பெருமழையும்
கூரையினைத் தாண்டிக் குடிசையினுள் செல்லும்.

Monday, February 7, 2011

கண்ணீர்

என்னருமைக் கண்ணீரே,
இன்னலிலே என் தோழா,
உன்னருமை நானறிவேன்
ஒன்றுரைப்பேன் கேளாய் நீ

நலிந்தார்க்கு நற்றோழா நானறிவேன் நின் திறமை
வலிமையுள்ள நின் முன்னே வாள் திறனும் சிறிதாகும்
ஞாலத்தின் முழுமையிலும் நீ தூண்டி நடத்திட்ட
கோலப் பெருஞ்செயல்கள் கோடி கோடி ஆகுமையே

வாயினால் வடித்திடவே வார்த்தையிலாச் செய்தியெலாம்
நீயாக உரைத்திடுவாய் நீள் விழியினில் நின்று.
பேசவொணாப் பெருஞ்செய்தி இதயத்தில் உளதெல்லாம்
நேசமுடை நெஞ்சத்தில் நீயே உரைத்திடுவாய்.

உள்ளத்துச் சோகத்தை உன்னி உன்னி நின்னை பெரு
வெள்ளம் போல் பெருக்கிவிட வேட்கை பிறக்குதையே.

ஆனால்

பத்துப் பேர் என்னைப் பார்த்து நிற்கும் போது
முத்துப் போல் நீ வந்து முகம் காட்டி நிற்கிறாய்
பிறரறியாது உன்னைப் பேணி மறைக்கிறேன்
ஊரறிய அழுவதிலே உண்டாமோ ஆறுதலும்

அருகில் யாருமே இல்லாத நேரம் நீ
பெருகி வரவேண்டுமெனப் பிடித்து வைக்கிறேன்.
தனிமையிலே நின்றுன்னை ஆறாய்ப் பெருக்குவதே
மனச்சுமை குறைத்திடும் மார்க்கம் ஆகுமே.

Sunday, February 6, 2011

அவன் வாழ்ந்தது கனவா, மாண்டது கனவா

இவர்கள் ஏன் அழுகின்றனர்?
நானும் தான் விம்முகிறேன்
எதற்காக?
என் மகன் இறந்துவிட்டானா
இல்லை, இருக்க முடியாது.
அவனுக்கென்ன நோயா, நொடியா?
கிழமா, கட்டையா?
இது யாரோ பரப்பிய பொய்.

அவனைப் பற்றிய செய்தி வந்ததும்
கனலிடை அவனுடல் மடுத்ததுவும்
கடலினில் அஸ்தி கரைத்ததுவும்
எல்லாமே கனவுத் தோற்றங்கள்.

அய்லநாடு சென்றுளான் என் மகன்
அடுத்த வாரம் வருவான்
அவனிடம் இக்கனவைச்சொல்வேன்
கைதட்டிச் சிரிப்பான்
கண்டு நான் மகிழ்வேன்

***************************

ஒரு சுகமான நீண்ட கனவு.
ஓடிய ஆண்டு முப்பத்தைந்து

முருகனே எனக்கு மகனாய்ப் பிறந்ததும்
குழந்தையாய் வளர்ந்து குதூகலம் தந்ததும்
தாய் தந்தையரைத் தாங்கிடும் விழுதாய்
பொங்கும் இளமையில் பூரித்து நின்றதும்
மெச்சியே அவனை ஊரார் புகழ்கையில்
மேனி சிலிர்த்து நாங்கள் நின்றதும்

எல்லாமே கனவுகள்,
இன்று முடிந்தன.

கனவு கலைந்ததற்காக
வருந்துவார் உண்டோ?
பின் ஏன் இவர்கள் அழுகின்றனர்,
நானும் தான் விம்முகிறேன்?

அவன் வாழ்ந்தது கனவா, இல்லை மாண்டது கனவா?









சுமை

தாய் உனைச் சுமந்தாள் வயிற்றில்
முன்னூறு நாளில்
அதற்கு ஒரு மகிழ்ச்சியான முடிவு.
நீ பிறந்தாய். 

நாங்கள் உனைத் தோளில் சுமந்தோம்
அதற்கு ஒரு மகிழ்ச்சியான முடிவு
நீ நடக்கத் தொடங்கினாய்.

இன்று
முன்னூறு நாளாக்
நான் உனை நெஞ்சில் சுமக்கிறேன்.
இதற்கு எது முடிவு?

Wednesday, November 3, 2010

குருவாய் வருவாய்

குருவாய் வந்தருள குகனை நான் வேண்டி நின்றேன்
குழந்தையாய் வந்தெனக்குக் கூறிட்டான் உண்மையினை

சென்றதைக் குறித்துக் குமையாதே, அது வேண்டாம்.
இன்றெது உன் கண் முன் உள்ளதோ அதைக் கவனி.
வருவது பற்றியொரு கவலை ஏன்? கற்பனை ஏன்?
இருப்பது இக்கணத்தில் இதனில் வாழ் என்றுரைத்தான்.

வாயால் உரைக்கவில்லை வார்த்தையிலாச் செய்தியது.
சேயாம் இவன் முகத்தில் தெரிந்திட்ட காட்சியது.

நேற்று வலித்ததை நினைவில் வைத்திருந்து
தேற்றுவார் தேடி தினமும் அழமாட்டான்.
பசி வரும் கணத்துக்கு முந்தியதோர் கணம் வரையில்
வசீகரப் புன்னகை மாறாமல் படுத்திருப்பான்.

சிறுவா உன் முன்னர் சிரம் தாழ்ந்து நிற்கிறேன்
ஒரு வார்த்தை உரையாமல் உபதேசம் தந்ததனால்.

Thursday, August 19, 2010

வைகறைப் பொழுது

       

மொழிபெயர்ப்புகள் எப்போதுமே குறை உடையவை தாம். வேதக் கவிதையின் உயிர்த்துடிப்பை, அதில் அடங்கியுள்ள வியப்புணர்ச்சியை, ஆனந்தத்தை மொழிபெயர்ப்பது அரிது. அதன் கருத்தை மட்டுமே இங்கு தந்துள்ளேன்.

1     வந்தது வந்தது பேரொளி இன்று,
      வானகமெங்கும் பரவியே நின்று.
      ஆதவன் தோன்ற வழி விடும் இருட்டு
      அணங்கு உஷை பிறக்க அமைத்ததோர் அரங்கு.

2     வெள்ளைக் குழவியாய் வைகறை மலர்ந்தாள்
      இருளின் கருமையோ இல்லம் விரைந்தது.
      இரவென ஒருத்தி பகலென ஒருத்தி
      அமரத் தன்மை அடைந்த மகளிர்
      ஒன்று போல் இருப்பர் நிறம் தான் வேறு
      ஒருவரை ஒருவர் தொடர்ந்து சென்று
      விண்ணில் நடக்கும் விந்தை காணீர்

3     மூலப் பரம்பொருள் ஏவியபடியே
      முடிவிலாப் பாதையில் முனைந்து செல்வர்
      இரு சோதரிக்கும் இருப்பது ஒரு வழி
      மாறி மாறியே பயணம் செய்வர்.
      நிறம் தான் வேறு மனமோ ஒன்று
      அழகியர் இருவரும் ஒருவரை ஒருவர்
      தடுப்பதும் இல்லை நிற்பதும் இல்லை.

4     உலகிற்கு ஒளிதரும் உஷையெனும் நங்கை
      இனிய சொற்களின் எழில்மிகு தலைவி
      பல நிறப் பாங்குடன் ஒளிர்வது கண்டோம்,
      கதவினைத் திறந்து, காட்டினள் செல்வம்.
      ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

5     சுருண்டு கிடந்து துயின்றிருந் தோரை
      பூசனை புரியவும் பொருளினைத் தேடவும்
      இன்ன நலன்களை இனிதே நாடவும்
      தூண்டி நிற்பாள் திருவளர் செல்வி
      விழியிலார்க்கு விழிகள் அருளி
      ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

6     கோலினை ஓச்சக் கிளம்பிடும் ஒருவன்
      புகழினைச் சேர்க்க புறப்படும் ஒருவன்
      இலாபம் ஈட்டவே இயங்கிடும் ஒருவன்
      கடமையைச் செய்யக் கடுகிடும் ஒருவன்
      வேலைகள் பலவாம் விரைதல் ஒன்று
      ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

7     விண்ணின் குழவியே, வெளிச்சம் என்னும்
      நல்லுடை உடுத்த நளின மங்கையே,
      புவியின் செல்வம் ஆளும் ராணியே,
      மங்கலச் செல்வி, இன்று எம்மீது
      உந்தன் ஒளியினை உவந்து பாய்ச்சுக.

8     கடந்து சென்ற கணக்கிலா விடியல்
      அடிச்சுவ டொற்றிச் செல்கிறாய் நீயும்
      இனி வர விருக்கும் எண்ணிலா விடியல்
      யாவற் றிற்கும் நீ வழி காட்டி.
      உதித்ததும் எழுப்பினை உயிரினம் யாவையும்.
      இறந்தோர் தம்மை எழுப்ப வலாயோ?

9     உஷையே, உன்னைக் கண்டதும் மக்கள்
      தீயினை மூட்டித் தொடங்குவர் வேள்வியை.
      சூரியக் கண்ணால் சுடரினைப் பரப்பினை.
      தேவ பூசனை செய்யும் உந்துதல்
      உன்னால் அன்றோ, உஷையே, நடைபெறும்!

10    எத்தனை காலமாய் எம்முடன் உள்ளாய்?
      இன்னும் எத்தனை காலம் இருப்பாய்?
      கடந்து சென்ற நாட்களின் வழியில்
      நடந்து வந்து நாளும் ஒளிர்வாய்.
      இனிவரும் விடியலை இனிதே அழைப்பாய்

11     எனக்கு முன்னர் எத்தனையோ மாந்தர்
      எண்ணிலா விடியல் கண்டு களித்து
      எங்கோ போயினர், இன்று அவர் இல்லை.
      உஷையின் ஒளி கண்டு உள்ளம் மகிழ்ந்திட
      இன்று கிடைத்தது எமக்கொரு வாய்ப்பு.
      புதிய மக்கள் நாளை வருவர்
      விடியலின் எழிலை வியந்து போற்றுவர்.

12    நியதியில் தோன்றினை, நியதியைக் காத்தனை
      நெடிய பகையினை நீளத் துரத்தினை
      மகிழ்வு அளித்தனை மங்கலச் செல்வி
      இனிய ஒலிகள் எழும்பச் செய்தனை
      தேவர்க்குணவை தினமும் கொணர்ந்தனை
      இன்றுனது ஒளியை எம்மிடம் வீசு
     
13    தேவி உனது திருநிறை ஒளியை
      பன்னெடுங்காலமாய்ப் பாய்ச்சி வந்துளாய்.
      இன்றுனது ஒளியை எமக்கு அளிக்கின்றாய்
      மூப்பும் இறப்பும் கடந்தவளாதலால்
      இனி வரும் நாளிலும் இனிதே ஒளிர்வாய்

14    விண்ணின் விளிம்பில் ஒளியுடன் வந்தாள்
      கருமையாம் போர்வையைக் கழற்றி எறிந்தாள்
      செந்நிறப் புரவியும் சிறந்ததோர் தேரும்
      கொண்டு அவள் விரைகிறாள் உலகினை எழுப்ப.

15    உயிரினை ஊட்டும் பொருள்களை எல்லாம்
      உடமையாய்க் கொண்ட உஷையெனும் நங்கை
      வியப்புறு ஒளியால் விழிப்பினைத் தந்தாள்
      கடந்து சென்ற விடியல் களிலே
      கடைசியாய் வந்தது இன்றைய வைகறை
      இனிவர விருக்கும் விடிவு களுக்கு
      முதலாய் அமைந்ததும் இதுவே ஆகும்

16    உயிர்த்து எழுந்தோம், ஒளியே எங்கணும்,
      விரைந்து மறைந்தது எங்கோ இருட்கணம்
      பகலவன் நடக்கவோர் பாதை அமைத்தாள்
      இன்று எமது ஆயுளில் இயைந்தது ஒரு நாள்

17    ஒளிமிகு உஷையை உளத்திலே துதித்து
      உயர்ந்த சொற்களால் பாக்கள் இயற்றிப்
      போற்றும் புலவர்க் கருளுக உஷையே
      குழந்தைப் பேறும் குன்றா ஆயுளும்.

18    சோமம் பிழிந்து செஞ்சொல் கலந்து
      காற்றினில் கனிவாய்க் கலந்திடும் புலவரை
      வீரப் புதல்வர், விரையும் குதிரைகள்
      பசுக்கள் பலவுடன் தந்து காத்திடுக.

19    தேவர் தாயே, அதிதியின் வடிவே
      வேள்விக் கொடியே ஓங்குக, ஒளிர்க!
      யாவரும் போற்றும் இனிய நங்காய்,
      உன்னைத் துதிக்கும் அடியார் தம்மை
      உலகில் உயர்ந்து ஓங்கிடச் செய்வாய்.

20    உஷையைப் போற்றும் புலவோர் தமக்கு
      உவந்து அவள் அளிக்கும் உயரிய செல்வம்
      மிதிரன் வருணனும் அதிதி சிந்துவும்
      விண்ணும் மண்ணும் ஆமெனக் கூறுக.

Tuesday, May 25, 2010

நான்

எறும்புடன் கரப்பானும் ஈயொடு கொசு யாவும்
இருந்தாலே தொல்லையென எய்திடுவோம் நாசினியை
ஆரோக்கிய வாழ்விற்கு அடிகோலும் அதுவென்று

பயிரழிக்கும் ஆடுகளைப் பசுக்களுடன் மான்களையும்
உயிரழித்து உண்கின்றோம் ஒரு சிறிதும் தயங்காமல்
பாரோர் பசி தீர்க்கப் பாங்கான வழி என்று.

நாட்டுக்குள் வந்திருந்து நாசம் விளைக்காமல்
காட்டு விலங்குகளைக் கண்டவுடன் சுட்டிடுவோம்
அச்சமின்றி வாழ்வதற்கு அது ஒன்றே வழி என்று.

நம் நாட்டுக் கொடி உயர நமதன்னை புகழ் பெறவே
பன்னாட்டுப் பகைவரையும் படையெடுத்து மாய்க்கின்றோம்
நாட்டுப் பற்றில்லையெனில் நாயினும் கீழன்றோ
தன்மொழியார் தன்னினத்தார் தன் சாதி உயிர் வாழ
தருகின்றோம் உடல் பொருளும் ஆவியுடன் துணிவுடனே
இன உணர்வு இல்லை எனில் இழிவு நமக்கென்று

அண்டையில் இருப்பவர் அழிந்திட்டால் பட்டினியால்
மண்டையில் எழுதியதால் மாய்கின்றார் அவர் என்போம்
தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்

அன்பு வட்டம் வரவரவே சிறிதாய் ஆகி
நானென்னும் புள்ளியாகச் சுருங்கல் நன்றோ
சூழ்ந்ததெலாம் கடவுளெனச் சுருதி சொலும்
நிச்சயமாம் ஞானத்தை நெஞ்சில் ஏற்போம்
முல்லைக்குத் தேரீந்த முன்னோன் கொடையும்
பறவைக்குத் தனை ஈந்த சிபியின் மனமும்
வாடுகின்ற பயிர் கொண்டு வாட்டம் கொண்ட
வள்ளல் பிரான் வாழ்வும் நாம் தினமும் ஓர்வோம்.

Saturday, May 22, 2010

இரண்டல்ல ஒன்றுதான்



கணபதி முருகன் வேறானாலும்  
சைவம் என்பது ஒன்று
விட்டுணு சிவனுடன் வேறுபட்டாலும் இந்து என்பது ஒன்று
இந்து இஸ்லாம்  வேறானாலும் தெய்வம் என்பது ஒன்று
நலமும் தீங்கும் வேறானாலும் கடவுள் தருவதால் ஒன்று

ஆணும் பெண்ணும் வேறானாலும் மனிதர் என்பதால் ஒன்று
வறியர் செல்வர் யாரானாலும் வலியின் வேதனை ஒன்று
கீழோர் மேலோர் யாரானாலும் மரணம் என்பது ஒன்று
மனிதர் மிருகம் வேறானாலும் பசியும் தாகமும் ஒன்று

மலையும் மடுவும் வேறானாலும் தாங்கும் பூமி ஒன்று
நதியும் கடலும் வேறானாலும் தண்ணீர் என்பது ஒன்று
பூமி சூரியன் வேறானாலும் ப்ரபஞ்சம் என்பது ஒன்று
வேற்றுமைகள் வெளியே காணினும் உள்ளே ப்ரம்மம் ஒன்று