Pages

Thursday, February 20, 2014

பயன் எண்ணாமல் உழை, பக்தி செய்து பிழை





        பாரதியை உலகியலிலும் ஆன்மிகத்திலும் வழிநடத்தியது வேதங்களின் சாரமாகிய பகவத்கீதை. அதைத் தமிழில் மொழிபெயர்த்த பாரதி அதற்கு ஒரு அழகான முன்னுரையும் கொடுத்திருக்கிறார். அதன் சுருக்கத்தை இனி வரும் பக்கங்களில்  காணலாம்.

கீதை ஒரு கர்ம சாஸ்திரம்

        புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறந்துவிடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக, யோகம் செயல்களிலே திறமையானது. (கீதை 2-50)

        இஃதே கீதையில் பகவான் செய்யும் உபதேசத்துக் கெல்லாம் அடிப்படையாம். புத்தியிலே சார்பு எய்தலாவது, அறிவை முற்றிலும் தெளிவாக மாசு மறுவின்றி வைத்திருத்தல், கவலை நினைப்புகளும் அவற்றுக்கு ஆதாரமான பாவ நினைப்புகளுமின்றி அறிவை இயற்கை நிலைபெறத் திருத்துதல்.

        அறிவுத் தெளிவைத் தவறவிடாதே. பின் ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. நீ எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும். நீ சும்மா இருந்தாலும், அப்போது உன் மனம் தனக்குத்தான் ஏதேனும் நன்மை செய்து கொண்டேயிருக்கும்.
       
இது யோக சாஸ்திரம்

        அறிவுத் தெளிவைக் கலங்க விடாதே. அப்பால், யோகம் பண்ணு. தொழிலுக்குத் தன்னைத் தகுதியுடையவனாகச் செய்து கொள்வதே யோகம் எனப்படும்.

        யோகமாவது சமத்துவம். அதாவது, பிறிதொரு பொருளைக் கவனிக்குமிடத்து அப்போது மனத்தில் எவ்விதமான சஞ்சலமேனும் சலிப்பேனும் பயமேனும் இன்றி, அதை ஆழ்ந்து, மனம் முழுவதையும் அதனுடன் லயப்படுத்திக் கவனிப்பதாகிய பயிற்சி.

        யோகி தன் அறிவைக் கடவுளின் அறிவுபோல விசாலப்படுத்திக் கொள்ளுதல் இயலும். ஏனென்றால், ஊன்றிக் கவனிக்கும் வழக்கும் அவனுக்குத் தெளிவாக அர்த்தமாய் விடுகிறது. ஆதலால் அவனுடைய அறிவு தெய்வீகமான விசாலத் தன்மை பெற்று விளங்குகிறது. அவனுடைய அறிவுக்கு வரம்பே கிடையாது. எனவே, அவன் எங்கும் கடவுள் இருப்பதை காண்கிறான். 

        வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப் பட்டது. ரிக் வேதத்திலுள்ள புருஷ ஸூக்தம் சொல்லுகிறது, 'இஃதெல்லாம் கடவுள்' என்று. இக்கருத்தையொட்டியே கீதையிலும் பகவான், 'எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்' என்கிறார்.

        நீயும் கடவுள், நீ செய்யும் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள், நீ பந்தத்தில் பிறப்பதும் கடவுளுடைய செயல். மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே பூட்டிக் கொள்வதும் கடவுளுடைய செயல். நீ முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல்.

        'ஆனால் நான் எதற்காக தளை நீங்கும்படி பாடுபடவேண்டும்? எல்லாம் கடவுளுடைய செய்கையாய் இருக்கும் போது முக்தியடையும்படி நான் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?' என்று ஒருவன் கேட்பானாயின், அதற்கு நாம் கேட்கிறோம், 'முக்தியாவது யாது?'
       
        எல்லாத் துயரங்களும் எல்லா அச்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. அதனை எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்குண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய்.

         ''ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்'' - அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பையெல்லாம் தொப்பென்று கீழே போட்டுவிட்டு, சந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்து கொண்டிரு.

இது ஞான சாஸ்திரம்

        கடவுள் சொல்லுகிறார் :- ''லோபமும் பயமும் சினமும் அழிந்து, என் மயமாய், என்னைச் சார்ந்தோராய், ஞானத் தவத்தால் தூய்மை பெற்றோர் பலர் எனது தன்மை எய்தியுள்ளார்'' (கீதை 4-10)

        இந்த சுலோகத்தில் ஒருவன் இகலோகத்திலேயே ஜீவன் முக்தி பெற்று ஈசுவரத் தன்மையடைதற்குரிய உபாயம் பகவானால் குறிப்படப்பட்டிருக்கிறது. ''ஞானத்தைக் கடைப்பிடி. அதனையே தவமாகக் கொண்டொழுகு. சினத்தை விடு. என்னையே சரணாகக் கொண்டு என்னுடன் லயித்திரு. நீ எனது தன்மை பெறுவாய்'' என்று கடவுள் சொல்லுகிறார்.

        எல்லாச் செயல்களையும் கடவுளுக்கென்று சமர்ப்பித்து விட்டுப் பற்றுதல் நீக்கி எவன் தொழில் செய்கிறானோ அவனைப் பாவம் தீண்டுவதில்லை. தாமரையிலை மீது நீர் போலே. (கீதை, 5-10)

        சால நல்ல செய்தியன்றோ, மானுடர்காள், இஃது உங்களுக்கு! பாவத்தைச் செய்யாமலிருக்கும் வழி தெரியாமல் தவிக்கும் மானுடரே! உங்களுக்கு இந்த சுலோகத்தில் நல்வழி காட்டியிருக்கின்றான் கடவுள். ஈசனைக் கருதி, அவன் செயலென்றும், அவன் பொருட்டாகாச் செயல்படுவதென்றும் நன்கு தெளிவெய்தி, நீங்கள் எத்தொழிலைச் செய்யப் புகுந்தாலும், அதில் பாவம் ஒட்டாது. தாமரையிலை மீது நீர் தங்காமல் நழுவி ஓடிவிடுவது போல் உங்கள் மதியைப் பாவம் கவர்ந்து நிற்கும் வலியற்றதாய் உங்களை விட்டு நழுவியோடிப் போய்விடும். 

        ''கல்வியும் விநயமுமுடைய அந்தணனிடத்திலும், மாட்டினிடத்திலும், யானையினிடத்திலும், நாயினிடத்திலும், அதையுண்ணும் சண்டாளனிடத்திலும் அறிஞர் சமமான பார்வையுடையோர்'' (கீதை 5-18) என்று பகவான் சொல்லுகிறார்.

        எல்லாம் கடவுள் மயம் அன்றோ? எவ்வுயிரிலும் விஷ்ணுதானே நிரம்பியிருக்கிறான்? 'ஸர்வமிதம் ப்ரஹ்ம, பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன். பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம்', இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லக்ஷணம். அவ்விதமான ஏற்றத் தாழ்வு பற்றிய நினைவுகளுடையோர் எக்காலத்தும் துக்கங்களிலிருந்து நிவர்த்தியடைய மாட்டார். வேற்றுமையுள்ள இடத்தில் பயமுண்டு, ஆபத்துண்டு, மரணமுண்டு. எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம்.

இது மோக்ஷ சாஸ்திரம்

        பகவத் கீதை தர்ம சாஸ்திரமென்று மாத்திரமே பலர் நினைக்கின்றார்கள். அதாவது, மனிதனை நன்கு தொழில் புரியும்படி தூண்டி விடுவதே அதன் நோக்கமென்று பலர் கருதுகிறார்கள். இது சரியான கருத்தன்று. அது முக்கியமான மோக்ஷ சாஸ்திரம். மனிதன் சர்வ துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. ஏனென்றால், தொழில் இன்றியமையாதது.

        இங்குத் தொழில் செய்யும்படி தூண்டியிருப்பது முக்கியமன்று. அதனை என்ன நிலையிலிருந்து, என்ன மாதிரிச் செய்ய வேண்டுமென்று பகவான் காட்டியிருப்பதே மிக மிக முக்கியமாகக் கொள்ளத் தக்கது.

        பற்று நீக்கித் தொழில், பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி - இது தான் முக்கியமான பாடம். தொழில்தான் நீ செய்து தீரவேண்டியதாயிற்றே? நீ விரும்பினாலும் விரும்பாவிடினும் இயற்கை உன்னை வற்புறுத்தித் தொழிலில் மூட்டுவதாயிற்றே? எனவே அதை மீட்டும் சொல்வது கீதையின் முக்கிய நோக்கமன்று. தொழிலின் வலைகளில் மாட்டிக் கொள்ளாதே. அவற்றால் இடர்ப்படாதே. அவற்றால் பந்தப் படாதே. தளைப்படாதே. இது தான் முக்கியமான உபதேசம். எல்லாவிதமான பற்றுகளையுங் களைந்துவிட்டு, மனச் சோர்வுக்கும் கவலைக்கும் கலக்கத்துக்கும் பயத்துக்கும் இவையனைத்திலுங் கொடியதாகிய ஐயத்துக்கும் இடங்கொடாதிரு.

        அதற்கு உபாயம் கடவுளை நம்புதல், கடவுளை முற்றிலும் உண்மையாகத் தமது உள்ளத்தில் வெற்றியுற நிறுத்தினாலன்றி, உள்ளத்தைக் கவலையும் பயமும் அரித்துக் கொண்டுதான் இருக்கும். கோபமும் காமமும் அதனை வெதுப்பிக் கொண்டுதானிருக்கும். அதனால் மனிதன் நாசமடையத்தான் செய்வான். 

இது பக்தி சாஸ்திரம்

        நம்பிக்கையை உள்ளத்தில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்குப் பக்திதான் சாதனம். பக்தியாவது, "ஈசன் நம்மைக் கைவிட மாட்டான்" என்ற உறுதியான நம்பிக்கை. இவ்விஷயத்தைக் குறித்து ஸ்ரீ பகவான் பின்வருமாறு திருவாய் மலர்ந்தருளி யிருக்கிறான் :-
       
        "எல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு. நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கிறேன். துயரப் படாதே." (கீதை 18-66)

        நதியினுள்ளே விழுந்துவிட்ட ஒருவன் இரண்டு கையையும் தூக்கி விடுவதுபோல, சம்ஸார வெள்ளத்தில் விழுந்த ஒவ்வொருவனும் இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு (அதாவது, எவ்விதப் பொறுப்புமின்றி எல்லாப் பொறுப்புகளும் ஈசனுக்கென்று துறந்துவிட்டு) கடவுளைச் சரண்புக வேண்டும் என்று ஸ்ரீ ராமாநுஜாசாரியர் உபதேசம் புரிந்தனர்.

        கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச் சிவாயவே" என்ற நாவுக்கரசரின் உறுதி சான்ற சொற்களும் பரம பக்தியின் இலக்கணத்தைக் குறிப்பவனவாம்.

        எல்லாம் கடவுள் செயலாகையிலே நாம் எல்லாவற்றையும் சமமாகக் கருத வேண்டுமென்று பகவத் கீதை சொல்லுகையிலே, நமக்குக் கடவுள் துணை எதன் பொருட்டு? நம்மைக் கற்றூணுடன் வலியக் கட்டி யாரேனும் கடலுள் வீழ்த்தினால், நாம் இதுவும் கடவுள் செயலென்று கருதி அப்படியே மூழ்கி இறந்து விடுதல் பொருந்துமன்றி, நமச்சிவாய, நமச்சிவாய என்று கூறி நம்மைக் காத்துக்கொள்ள ஏன் முயல வேண்டும் என்று சிலர் ஆக்ஷேபிக்கலாம்.

        இந்த ஆக்ஷேபம் தவறானது. யாங்ஙனமெனில், சொல்லுகிறேன். முந்திய கர்மங்களால் நமக்கு விளையும் நன்மை தீமைகளைச் சமமாகக் கருதி நாம் மனச் சஞ்லத்தை விட்டுக் கடவுளை நம்பினால், அப்போது கடவுள் நம்மைச் சில வலிய சோதனைகளுக்கு உட்படுத்துகிறார். அந்தச் சோதனைகளில் நாம் மனஞ் சோர்ந்து கடவுளிடம் நம்பிக்கையை இழந்து விடாமல் இருப்போமாயின், அப்போது நமக்குள் ஈசனே வந்து குடிபுகிறான். அப்பால் நமக்குத் துன்பங்களே நேர்வதில்லை. ஆபத்துக்கள் நம்மை அணுகா. மரணம் நம்மை அணுகாது. எல்லாவிதமான ஐயுறவுகளும், கவலைகளும், துயரங்களும், தாமாகவே நம்மை விட்டு நழுவிவிடுகின்றன. இந்த உலகத்திலே நாம் விண்ணவரின் வாழ்க்கை பெற்று நித்தியானந்தத்தை அனுபவிக்கிறோம்.

        மேலும், எல்லாவற்றையும் ஞானி சமமாகக் கருதவேண்டுமென்ற இடத்தில், அவன் மனித வாழ்க்கைக்குரிய விதிகளையெல்லாம் அறவே மறந்து போய்ப் பித்தனாய் விடவேண்டுமென்பது கருத்தன்று.

       
இது அமரத்வ சாஸ்திரம்

        குந்தியின் மகனே, சீதம், உஷ்ணம், இன்பம், துன்பம் என்பனவற்றைத் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் வந்து போகும் இயல்புடையன. அநித்யமாயின; அவற்றைப் பொறுத்துக் கொள், பாரதா!" (கீதை 2-14)

        "ஆண்காளையே! இவை எந்த மனிதனைத் துன்புறுத்தமாட்டாவோ, இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கருதும் அந்தத் தீரன் சாகாதிருக்கத் தகுவான்" (கீதை 2-15)

        இஃதே பகவத் கீதையின் சிகரம். சாகாதிருத்தல், மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல், இதுவே கீதையின் ரஸம். அமரத்தன்மை. இஃதே வேத ரகஸ்யம். இந்த வழியைக் காட்டுவது பற்றியே வேதங்கள் இத்தனை மதிக்கப்படுகின்றன.
       
        நித்திய ஜீவிகளாய் மண்மேல் அமரரைப் போல் வாழ்வாரே நித்திய ஜீவன் முக்தராவர். அத்தகைய நிலையை இந்த உலகில் அடைதல் சாத்தியமென்று மேற்கூறிய இரண்டு சுலோகங்களிலே கடவுள் போதிததிருக்கிறார். அதற்கு உபாயமும் அவரே குறிப்பபிட்டிருக்கிறார். குளிர் - வெம்மை, இன்பம் - துன்பம் எனும் இவற்றை விளைக்கும் இயற்கையின் அனுபவங்கள், தோன்றி மறையும் இயல்புடையன. ஆதலால் இவற்றைக் கண்டவிடத்தே நெஞ்சமிளகுதலும் நெஞ்சுடைந்து மடிதலும் சால மிகப் பேதமையாமன்றோ? ஆதலால் இவற்றைக் கருதி எவனும் மனத்துயரப் படுதல் வேண்டா. அங்ஙனம் துயரப் படாதிருக்கக் கற்பான் சாகாமலிருக்கத் தகுவான். இஃது ஸ்ரீ கிருஷ்ணனுடை கொள்கை. இதுவே அவருடைய உபதேசத்தின் சாராம்சம். 

இது கொலை நூல் அல்ல

        துரியோதனாதிகளைக் கொல்லும்படி அர்ஜுனனைத் தூண்டுவதற்காகவே, இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டனவாதலால், இது கொலைக்குத் தூண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூலென்று சிலர் பேசுகிறார்கள். கொலை செய்யச் சொல்ல வந்த இடத்தே, இத்தனை வேதாந்தமும், இத்தனை சத்வ குணமும், இத்தனை துக்க நிவர்த்தியும் இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவதென்னே என்பதை அச்சில மூடர் கருதுகின்றனர்.

        துரியோதனாதியர் காமக் குரோதங்கள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா. இந்த ரகசியம் அறியாதவருக்குப் பகவத் கீதை ஒருபோதும் அர்த்தமாகாது.

        க்ஷத்திரிய அரசர் படித்துப் பயன்பெறச் செய்ய வேண்டுமென்பதே இந்த நூலில் விசேஷ நோக்கம். பூமண்டலத்தார் அனைவருக்கும் பொதுமையாகவே விடுதலைக்குரிய வழிகளை உணர்த்த வேண்டுமென்று கருதி எழுதப்பட்டதே பகவத் கீதை. இதில் ஐயமில்லை. எனினும், இந்த நூல் க்ஷத்திரிய மன்னருக்கு விசேஷமாக உரியது. இது அவர்களுக்குள்ளேயே அதிகமாக வழங்கி வந்தது. வேதங்கள், எப்படி உலகத்துக்கெல்லாம் பொதுவே ஆயினும், பிராமணர்களுக்கு விசேஷமாக உரியனவோ அதுபோலே புராணங்கள் க்ஷத்திரியர்களுக்கு உரியன.

        மேலும் கீதையைச் சொன்னவன் ராஜா; கேட்டவன் ராஜா. ஆதலால் க்ஷத்திரிய அரசருக்கு இதில் ரஸம் உண்டாகும் பொருட்டாக இது போர்க்களத்தை முகவுரையாகக் கொண்ட மகா அற்புத நாடகத் தொடக்கத்துடன் ஆரம்பிக்கிறது.

        பகவத் கீதைக்கு - சங்கரர், ராமானுஜாசாரியார், மத்வாசாரியார் என்ற மூன்று மத ஸ்தாபகாசாரியரும் வியாக்கியானமெழுதி, இதனை ஹிந்து தர்மத்தின் ஆதாரக் கற்களில் ஒன்றாக நாட்டியிருக்கிறார்கள்' என்பதை இந்த மூடர் அறிகின்றிலர். கொலைக்குத் தூண்டும் நூலொன்றுக்கு சங்கராச்சாரியார் பாஷ்யம் எழுதுவதென்றால், அஃது எத்தனை விநோதமாக இருக்குமென்பதைக் கருதித் தம்மைத் தாமே நகைக்குந் திறமையிலர்.      

        ஈசனைச் சரணாகதி அடைந்து இகலோகத்தில் மோக்ஷ சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக் களியில் மூழ்கி வாழும்படி வழிகாட்டுவதே, பகவத் கீதையின் முக்கிய நோக்கம்.

        இங்ஙனம் மோக்ஷத்தை அடைய விரும்புவோனுக்கு முக்கியமான சத்துரு - ஒரே சத்துரு - அவனுடைய சொந்த மனமேயாம். 'தன்னைத்தான் வென்றவன் தனக்குத் தான் நண்பன், தன்னைத்தான் ஆளாதவன் தனக்குத் தான் பகைவன். இங்ஙனம் ஒருவன் தானே தனக்குப் பகைவன், தானே தனக்கு நண்பன்' என்று கடவுள் சொல்லுகிறார்.

        தன்னைக் காட்டிலும் உயர்ந்த நட்பும் தனக்குப் பிறிதில்லை. தன்னையொழியத் தனக்குப் பகையும் வேறு கிடையாது. ஒருவன் தனக்குத்தான் நட்பாகியபோது, உலக முழுதும் அவனுக்கு நட்பாய் விடுகிறது. அங்ஙனமின்றித் தான் கட்டியாளாமல் தனக்குத் தான் பகையாக நிற்போனுக்கு வையகமெல்லாம் பகையாகவே முடிகிறது. உள்ளப் பகையே பகை, புறப் பகை பகையன்று. உள்ளப் பகையின் வெளித் தோற்றமே புறப் பகையாவது. உள்ளப் பகையை களைந்து விட்டால், புறப்பகை தானே நழுவிப் போய்விடும்.

        புறத்தே எல்லாம் கடவுளாகப் போற்றத் தக்கது. உள்ளப் பகையாகிய அஞ்ஞானம் - அதாவது வேற்றுமை உணர்ச்சி - ஒன்று மாத்திரமே அழித்தற்குரியது.

        'தன் மனமே தனக்குப் பகையென்பது பேதைமையன்றோ? எல்லாம் கடவுளாயின், என் மனமும் கடவுள் அன்றோ? அதனைப் பகைவனாகக் கருதுமாறென்னே?' எனில் - தன்னைத்தான் வென்று தனக்குத்தான் நன்மை செய்யும்போது, தன்னுடைய மனம் தனக்குத்தான் நன்மையுடையதாகக் கருதிப் போற்றத் தக்கது. மற்றப் போது பகையாம்.

        எல்லாம் கடவுளாயின், மனம் தீமை செய்யும்போதும் கடவுளாகுமன்றோ? 'எப்பொருள் யாது செய்யுமாயினும் அப்பொருள் கடவுள், அதன் செய்கை கடவுளுடைய செய்கை' யென்னும் விதி மாறாதன்றோ? எனில் - அவ்வுரை மெய்யே. எனினும், நமக்கு லோகானுபவம் மறுக்கத்தகாத பிரமாணமாகும். லோகானுபவத்தில் மனம் நமக்குத் தீமை செய்கிறது. அதை வென்று நன்மை செய்யத் தக்கதாகப் புரிதல் சாத்தியம்.

        அங்ஙனம் செய்யும் பொருட்டாகவே, சாஸ்திரங்களும், வேதங்களும் எண்ணிறந்தனவாகச் சமைக்கப் பட்டிருக்கின்றன. மனம் துன்பமிழைப்பதையும், அதனால் உயிர்கள் கோடானு கோடியாக மடிவதையும் நாம் கண் முன்பு காணும்போது, அதை ஒரேயடியாக மறந்து விடுவதில் பயனில்லை.

        கடவுள் எங்குமிருக்கிறார், எப்போதுமிருக்கிறார், யாதுமாவார். எனினும், தனி உயிருக்கு இன்பமும் துன்பமும் இருப்பதைக் காண்கிறோம். ஜீவர்கள் அஞ்ஞானத்திலேதான் துன்பங்களேற்படுத்திக் கொள்ளுகிறார்களென்பது மெய்யே. அவர்களுக்கு யதார்த்தத்தில் தீமைகளேனும் துன்பங்களேனும் இல்லை என்பது மெய்யே.

        ஆனாலும், அந்த அஞ்ஞானம் ஒரு தீங்குதானே? அதைத் தொலைக்கத்தானே வேண்டும்? மனத்தைக் கட்டுதல், மனத்தை வெல்லுதல் என்பதெல்லாம் அஞ்ஞானத்தைத் தொலைத்தல் என்ற பொருளன்று வேறு பொருள் இலதாம்.

        அஞ்ஞானம் கடவுள் மயந்தானே? அதை ஏன் தொலைக்க வேண்டும்? என்று கேட்டால் -நீ 'எல்லாம் கடவுள், ஞானமும் கடவுள், அஞ்ஞானமும் கடவுள்' என்பதை உண்மையாகத் தெரிந்த அளவில் உன்னைப் பரம ஞானம் எய்திவிட்டது. உனக்கு அஞ்ஞானமும் நீங்கிப் போய்விட்டது. அஞ்ஞானமும் அதனாலாகிய துன்பமும் கடவுள் மயம் என்பது மெய்யே எனில் பின்னர் அவை நீங்கி, நீ ஞானமும் இன்பமும் எய்தியும் கடவுள் செயலென்பதை மறந்து விடாதே. அவ்விடத்து அஞ்ஞானம் நீங்கியது பற்றி வருத்தப் படாதே.

        கடவுளை உபாஸனை செய்தவற்குரிய வழி எங்ஙனமெனில் :- ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லுகிறார் - 'நான் எல்லாவற்றுக்கும் பிதா, என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்தக் கருத்துடையோரான அறிஞர் என்னை வழிபடுகிறார்கள்' (கீதை 10-8)

        எந்த ஜந்துவுக்கும் ஹிம்ஸை செய்வோர் உண்மையான பக்தராக மாட்டார். எந்த ஜீவனையும் பகைப்போர் கடவுளின் மெய்த்தொண்டர் ஆகார், எந்த ஜீவனையுங் கண்டு வெறுப்பெய்துவோர் ஈசனுடைய மெய்யன்பரென்று கருதத் தகார். நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அதனால் உயிர் வளரும், அதாவது நமக்கு மேன்மேலும் ஜீவசக்தி வளர்ச்சி பெற்றுக் கொண்டு வரும். நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டும், ஆனால் அதே காலத்தில் நாம் பிறருக்கு எப்போதும் மனத்தாலும் செயலாலும் தீங்கிழைத்துகொண்டும் இருப்போமாயின் - அதாவது பிறரை வெறுத்துக்கொண்டும், பகைத்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் - நாம் அழிந்து விடுவோமென்பதில் ஐயமில்லை.

ஸந்யாஸ நூல் அல்ல

        இனி, வேறு சிலர் பகவத் கீதையை ஸந்யாஸ நூலென்று கருதுகிறார்கள். அதாவது பெண்டாட்டி பிள்ளைகளைத் துறந்து, தலையை மொட்டையிட்டுக் கொண்டு ஆண்டியாய்த் திரிவோருக்கு எழுதப்பட்ட நூலென்று நினைக்கிறார்கள். இதைக் காட்டிலும் ஆச்சரியமான தப்பிதம் நாம் பார்த்ததே கிடையாது. கீதையைக் கேட்டவனும் ஸந்யாஸியல்லன், சொல்லியவனும் ஸந்யாஸியல்லன். இருவரும் பூமியாளும் மன்னர். குடும்ப வாழ்விலிருந்தோர்.    

        கீதையிலே பகவான் சொல்லுகிறான் - ''அர்ஜுனா! மூன்றுலகங்களிலும் இனிச் செய்ய வேண்டியதென மிஞ்சி நிற்கும் செய்கையொன்றும் எனக்குக் கிடையாது, 'அடையத் தக்கது, ஆனால், என்னால் அடையப் படாதது, எனவொரு பேதமில்லை எனினும், நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன்'' என.

        ஏனெனில், கடவுள் சொல்லுகிறான் - ''நான் தொழில் செய்யாது வாளா இருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும் என் வழியையே பின்பற்றும். அதனால், இந்த உலகத்துக்கு அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரண பூதனாகும்படி நேரும். அது நேராதபடி நான் எப்போதும் தொழில் செய்து கொண்டேயிருக்கிறேன்'' என.

        கடவுள் ஓயாமல் தொழில் செய்து கொண்டிருக்கிறான். அவன் அண்டகோடிகளைப் படைத்த வண்ணமாகவும் காத்த வண்ணமாகவும் அழித்த வண்ணமாகவும் இருக்கிறான். இத்தனை வேலையும் ஒரு சோம்பேறிக் கடவுள் செய்ய முடியுமா? கடவுள் கர்ம யோகிகளிலே சிறந்தவன். அவன் ஜீவாத்மாவுக்கும் இடைவிடாத தொழிலை விதித்திருக்கிறான்; சம்சாரத்தை விதித்திருக்கிறான்; குடும்பத்தை விதித்திருக்கிறான்; மனைவி மக்களை விதித்திருக்கிறான்; சுற்றத்தாரையும் அயலாரையும் விதித்திருக்கிறான்.

        பெண்டு பிள்ளைகளையும் சுற்றத்தாரையும் இனத்தாரையும் நாட்டாரையும் துறந்து செல்பவன் கடவுளுடைய இயற்கை விதிகளைத் துறந்து செல்கிறான். ஜன சமூக வாழ்க்கையைத் துறந்து செல்வோன் வலிமை இல்லாமையால் அங்ஙனம் செய்கிறான். குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சி பண்ணுகிறான்.

        குறிப்பிட்ட காலம் வரை தவங்கள் செய்து முடித்துப் பின்பு இல்வாழ்க்கையுட் புகுதலே மகரிஷிகளுக்குள்ளே வழக்கமாக நடைபெற்றுவந்தது.         பௌத்த மதமே துறவு நெறியை உலகத்தில் புகுத்திற்று.

        பாரத தேசத்தில் புத்த மதம் ஜீவகாருண்யம், சர்வ ஜன சமத்துவம் என்ற இரு தர்மங்களையும் நெடுந்தூரம் ஊன்றும்படி செய்தது. ஆனால், உலக வாழ்க்கையாகிய ஜகத்தில் ஒளி போன்றவளாகிய பத்தினியைத் துறந்தவர்களே மேலோர் என்று வைத்து, அவர்களுக்குக் கீழே மற்ற உலகத்தை அடக்கி வைத்து உலகமெல்லாம் பொய் மயம் என்றும், துக்க மயம் என்றும் பிதற்றிக் கொண்டு வாழ்நாள் கழிப்பதே ஞான நெறியாக ஏற்படுத்தி மனித நாகரிகத்தை நாசஞ் செய்ய முயன்றதாகிய குற்றம் புத்த மதத்துக்கு உண்டு.

       அதை நல்ல வேளையாக இந்தியா உதறித் தள்ளிவிட்டது. பூர்வ ஜன்ம சித்தாந்தத்தைப் பௌத்த மதம் நமது தேசத்தில் ஊர்ஜிதப்படுத்தியது பற்றி நாம் அதற்கு அதிக நன்றி செலுத்த இடமில்லை.

       பௌத்த மதத்தால் நாம் அடைந்த நன்மைகளிலே உண்மையான நன்மை ஒன்றுதான். அதாவது, விக்கிரக ஆராதனையை பௌத்த மதம் ஊர்ஜிதப்படுத்திற்று. புதிதாக உண்டாக்கவில்லை. ஏற்கனவேயிருந்த வழக்கத்தை மிகவும் விஸ்தாரமாக்கி ஊர்ஜிதப்படுத்திற்று. பௌத்தர்கள் மனிதருக்கேற்படுத்திய சிலைகளை நம்மவர் தம்முடைய அற்புத ஞான சக்தியின் விரிவாலும் கற்பனைச் சக்தியின் தெளிவாலும் தேவர்களுக்குச் சமைத்துக் கொண்டனர். தேவர்களைச் சிலைகளில் வைத்து வணங்குதல் முக்திக்கு மகத்தான சாதனங்களிலொன்றாம். ஆனால் உண்மையான பக்தியுடன் வணங்க வேண்டும்.

       இனி, புத்த மதம் இழைத்த பெருந்தீங்கு யாதெனிலோ இடைக்காலத்து மாயாவாதத்தை நம்முள்ளே எழுப்பிவிட்டது. உபநிஷத்துக்களிலும் வேதத்திலும் 'மாயா' என்ற சொல் பராசக்தியை குறிப்பது. இடைக்காலத்தில் மாயை பொய்யென்றதொரு வாதம் உண்டாயிற்று.

       இதனால், ஜகத் பொய்; தேவர்கள் பொய்; சூரிய நக்ஷத்திராதிகள் பொய்; மனம் பொய்; சைதந்யம் மாத்திரம் மெய். ஆதலால், இந்த உலகத்துக் கடமைகளெல்லாம் எறிந்துவிடத் தக்கன. இதன் இன்பங்களெல்லாம் துறந்துவிடத் தக்கன, என்றதொரு வாதம் எழுந்தது. 'இவ்வுலக இன்பங்களெல்லாம் அசாசுவதம்; துன்பங்கள் சாசுவதம்; இத்தகைய உலகத்தில் நாம் எந்த இன்பங்களையும் தேடப் புகுதல் மடமையாகும். எனவே எந்தக் கடமைகளையுஞ் செய்யப்புகுதல் வீண் சிரமமாகும்' என்ற கட்சி ஏற்பட்டது.

       உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் இயற்கை.

       மாயை பொய்யில்லை. அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன, நன்மைகள் செய்தற்கும் எய்தற்கும் உரியன. சரணாகதியால் - கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள். இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது.

1 comment:

  1. விரிவான விளக்கங்களுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete