Pages

Thursday, July 21, 2011

பூதமாகி நின்றாய் காளி

புயல் என்றாலே அஞ்சி நடுங்கி அலறுகிறோம். அதன் உள்ளேயும் பரமாத்மாவைக் கண்டு வழிபடும் மனப் பக்குவத்தை ரிஷிகள் பெற்றிருந்தனர். ரிஷிகளின் வேத மந்திரம் நமக்கு வட மொழியில் சொன்னாலும் புரிவதில்லை, அதைத் தமிழில் மொழி பெயர்த்தாலும் புரிவதில்லை. எனவே பாரதி தன் ஆழ்ந்த புலமையால் அதன் உட்பொருளை நாம் அனைவரும் விளங்கிக் கொள்ளும்படியாக எளிமைப்படுத்திப் புதுமை செய்தததை இப்பொழுது காண்போம்.

ரிக்வேதம் முதல் மண்டலம் 88 வது சூக்தம் - மருத்துக்களை (காற்றை)ப் பற்றி கௌதம ரிஷி பாடியது.

1வாரீர் மருத்துக்களே! மின்னல்களும் நல்ல பாட்டுக்களும் வேல்களும் நிரம்பியனவாய் காற்றுக் குதிரைகளைச் சிறகு போல் உடையனவாகிய தேர்களின் மீதேறி வருக. நல்ல மாயைகளை உடையீர்! மிக்க வளமுடைய இன்பத்தைக் கொண்டு எம்மிடத்தே பறவைகள் போல் வருக.

4 பருந்துகளே! எமது நாட்கள் உம்மை ஒரு முறை சுற்றி வந்து பிறகு எமது அறிவிடத்தேயும் எமது தெய்வீகமான செய்கையினிடத்தேயும் மீண்டெய்தி விட்டன.

ஆறு செய்யுள்கள் கொண்ட இதைப் பாரதி மொழி பெயர்த்துள்ளார். இரண்டு மட்டும் மேலே காட்டப்பட்டுள்ளன. படித்துப் பார்த்தால் என்ன புரிகிறது? இதற்குப் பாரதியின் முன்னுரையைப் படித்தால் ஓரளவு தெளிவு கிடைக்கும்.

வேத ரிஷிகள் காலத்தில் கோவில் கிடையாது. விக்ரக ஆராதனை கிடையாது. ஸந்யாஸம் கிடையாது. அத்வைத, த்வைத, விசிஷ்டாத்வைதப் பிரிவுகள் கிடையா. பக்தி மாத்திரம் தானுண்டு. கோவிலும் மடமும் பெளத்த மதப் பழக்கத்தால் நமக்குக் கிடைத்தவை. ஆனால் இப்போது இந்து மதத்திலிருந்து கோவிலைப் பிரிக்க முடியாது. கோவில்களுக்குள்ளே பரஸ்பரம் பொறாமையும் சண்டையும் இல்லாதபடி எல்லாக் கோவில்களும் ஸாக்ஷாத் ஸூர்யனாகவும் அக்னியாகவும் ருத்ரனாகவும் இந்திரனாகவும் வருணனாகவும் விளங்குகிற- பரமாத்மாவின் கோவில்களென்று நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ப்ரக்ருதி- இயற்கைத் தோற்றம். இதற்குள்ளே வியாபித்து நிற்கும் ஆத்மாவே விஷ்ணு. விஷ்ணுவைச் சிலையிலும் வணங்கலாம். மலையிலும் வணங்கலாம். வேத ரிஷிகள் நேராகக் கண்டு வணங்கினார்கள். உலகமே இவனுடைய உடம்பு. ஆதலால் அவர்கள் உலகத்தை வணங்கினர்.

மற்றொரு முறை விளங்கச் சொல்கிறேன். புயற் காற்று அடித்தது. வேத ரிஷிகள் அதன் முன்னே போய் நின்றார்கள். ஆயிரம் மின்னல்கள் வாள் போல வீசின. உலகம் குலுங்கிற்று. அண்டங்கள் இடிவது போலே சத்தம் கேட்டது. மேற்படி ரிஷிகள் பயப்படவில்லை. மந்திரங்களைப் பாடினார்கள். ருத்ரனுடைய உடம்பு தானே உலகம். வாயுவே ருத்ரன். வாயுவினுடைய உட் செய்கை தானே புயற் காற்று!

இந்திரன் மின்னலையும் இடியையும் காட்டுகிறான். மேகங்கள் சிதறுகின்றன. பூமிக்குத் தண்ணீர் கிடைக்கிறது. இதில் பயத்துக்கு இடம் எங்கே? ரிஷி புயற் காற்றைத் துதிக்கிறார். பிறகு இரவு நீங்கி சூர்யோதயம் உண்டாகிறது. அதைப் பார்த்து நேரே கை கூப்பி ரிஷி மந்திரம் பாடுகிறார். பட்சிகள் பாடுகின்றன. பூக்கள் மலர்கின்றன. நீரும் காற்றும் சிரிக்கின்றன. இதை ரிஷி போற்றும் போது ப்ரத்யக்ஷ நாராயணனைப் போற்றுகிறார்.

வீட்டிலே நெருப்பு வளர்த்து அதில் தெய்வத்தைக் கண்டு தொழும் வழக்கம் அக்காலத்தில் மிகுதிப்பட்டது. பொதுவாக இயற்கை வணக்கம் வழக்கமில்லாமல் போன பிறகும் அக்னி பூஜையும் சூர்ய பூஜையும் இன்று வரை நமக்குள்ளே மிஞ்சி நிற்கின்றன. ஸந்த்யா வந்தனாதிகளில் சூர்ய பூஜை நியதமாக நடந்து வருகிறது. சர்வ வைதிக கிரியைகளும் ஹோமம் வளர்த்துப் பூஜை பண்ணாமல் நடப்பதில்லை.

ப்ரக்ருதியை நேரே தொழும் வழக்கம் மிகுதிப்பட்டால் வேதம் ஒளி பெறும். மனத்தைக் கட்டி ஆளுவதற்கு மந்திரத்தை உச்சரிப்பதே வழி. மந்திரத்தின் ஒலியைத் தியானம் செய்தால் பயன் கிடைக்குமென்று தோன்றவில்லை. அதன் பொருளைத் தியானிக்க வேண்டும்.”

இனி முன் மொழி பெயர்த்த சூக்தத்தின் விளக்கத்தைப் பாரதி தருகிறார் கேட்போம்.

1 பழைய உலகத்தை மாற்றி புதிய உலகம் செய்வதும் பழைய காட்டை அழித்து புதிய காடு தோற்றுவிப்பதும் பழைய அறிவை நீக்கி புதிய அறிவு கொடுப்பதும் மருத்துக்களின் தொழில். அதனால் அவர்களுடைய தேர்களில் மின்னலும் நல்ல பாட்டும் வேலும் கொண்டு வருகிறார். மின்னலாலும் வேலாலும் பழமையை அழித்து நல்ல பாட்டினால் புதுமை பிறக்கும்படி செய்கிறார்கள்.

2 மருத்துக்களின் தலைவன் அரிவாளும் பொன் உடலும் கொண்டவன்.

3 மனிதர் பொருட்டாக மருத்துக்கள் மலையை அசைக்கிறார்கள். இந்த மலை அஞ்ஞானம், அகங்காரம்.

4 நாம் பல நாட்களாக மருத்துக்களை வேண்டிச் செய்த தவம் பயனடைந்துவிட்டது. கௌதம ரிஷியின் கூட்டத்தார் அமர வாழ்க்கை என்னும் கிணற்றின் மேல் உள்ள ஆணவம் என்னும் மூடியை அகற்றி அமிர்த பானம் செய்ய வழி வகுத்து விட்டனர். பருந்துகள் என்பது மருத்துக்களை.

5 இரும்புப் பற்களை உடைய காட்டுப் பன்றிகள் போல மருத்துக்கள் வருவதை நேரே ஞான விழியால் கௌதம ரிஷி கண்டு தன் அனுபூதியால் பாடியதால் இது நிகரற்ற பாட்டாகும்.

6 ஸ்வானுபூதியால் வெளிப்பட்ட பாட்டாகையால் இது யாதொரு சிரமமும் இல்லாமல் ஊற்றிலிருந்து நீர் புறப்படுவது போல் இயற்கையிலே தோன்றுகிறது. இந்த வாக்கினால் உலகத்தாரின் அஞ்ஞானம் நாசமடைகிறது.

Monday, July 18, 2011

ரிஷிகள்

ரிஷிகள் பற்றிய சில தவறான கருத்துகள் நம்மிடையே நிலவுகின்றன. சரியானதைத் தெரிந்து கொள்வோம்.

1 ரிஷிகளும் சன்னியாசிகளும் ஒன்று அல்ல. ரிஷிகள் அல்லது முனிவர் என்போர் வேறு. சந்நியாசிகள் அல்லது துறவிகள் என்போர் வேறு. ரிஷிகள் மனைவி மக்களுடன் வாழ்ந்தவர்கள். மாறாக, சன்னியாசி என்பவர் இல்லற வாழ்வைத் துறந்தவர். வேத காலத்தில் பிராமணர்களுக்கு மட்டுமே இந்தத் துறவறம் விதிக்கப்பட்டிருந்தது. பிரம்மசரியம் அல்லது கல்விப்பருவம், கிருஹஸ்தம் அல்லது இல்லறம், வானபிரஸ்தம் அல்லது காடுவாழ் பருவம் மூன்றையும் கடந்தபின் வருவது சன்னியாசம்.

ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றித் தீவிரமாகச் சிந்தனை செய்வோரே ரிஷி எனப்பட்டார். இது இறைவனைப் பற்றியதாகத் தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. பிற விஷயங்களாகவும் இருக்கலாம். நாட்டிய சாத்திரம் வகுத்த பரதரும், காம சூத்ராவின் ஆசிரியரான வாத்ஸ்யாயனரும் ரிஷி என்றே கூறப்படுகின்றனர். கடவுள் மறுப்புக் கொள்கையான சார்வாகம் பேசிய ஜாபாலி என்ற முனிவர் பற்றி வால்மீகி ராமாயணம் பேசுகிறது. முனி என்ற சொல்லுக்கு மனனம் (சிந்தனை) செய்பவர் என்பது பொருள். ரிஷி என்ற சொல்லுக்கு மந்திரத்தை மனக்கண்ணால் கண்டவர் என்பது பொருள். மந்திரம் என்பது இறைவன் பற்றிய மெய்ஞானம் மட்டுமல்ல, மனத்தின் ஆழத்தில் புதைந்து இருந்து, தீவிர சிந்தனையின் விளைவாக வெளிப்படும் உண்மையையும் குறிக்கும். சுருக்கமாகக் கூறுவதானால், இன்று ஆராய்ச்சியாளர் அல்லது சிந்தனையாளர் எனப்படுவோரே முன்பு ரிஷி எனப்பட்டனர் என்பது தெரிகிறது.

2 ரிஷிகள் என்றால் காட்டில் தான் வாழ வேண்டுமென்பது இல்லை. நகரத்தில் வாழ்ந்த ரிஷிகள் பலர் உண்டு. உதாரணமாக, ஜனகர், விஸ்வாமித்திரர் போன்ற ராஜரிஷிகளைக் கூறலாம். வசிஷ்டர் போன்று அரசருடைய குருவாக இருந்தவர்களும் நகரங்களிலேயே வாழ்ந்தனர்.

3 ரிஷிகள் காவி ஆடை உடுத்துபவர்கள் அல்ல. சன்னியாசிகள் தாம் துவராடை பூண்பவர்கள். அதுவும் சமண சாக்கிய சமயங்கள் தோன்றிய பின்னர் ஏற்பட்ட வழக்கமே. இளமையிலேயே துறவு பூணுதல், எல்லா வகுப்பினரும் துறவு பூணல், மற்றும் தலையை மழித்துக் கொள்ளுதல் ஆகிய வழக்கங்களை ஏற்படுத்தியது அவையே. சங்கரர் பௌத்த சந்நியாசிகளைப் பின்பற்றித் தலையை முண்டனம் செய்துகொண்டு பூணூலையும் களைந்து இளமையிலேயே துறவு பூண்டார். அதனால் அவர் பிரச்சன்ன பௌத்தர் –மறைமுக பௌத்தர்- எனப்பட்டார். இன்றும் சங்கரரின் வழிவந்தவர்கள் மேற்படி முறையில் தான் கோலம் கொள்கின்றனர். மாறாக, வைணவ சன்னியாசிகள் பழைய வேத முறைப்படி இல்லறத்தைக் கடந்த பின்னரே துறவு பூணுகின்றனர். தலையை முண்டனம் செய்யாமலும், பூணூல் அணிந்தும் காணப்படுகின்றனர்.

4 தவம் என்பது ஆராய்ச்சியே. தவம் என்ற சொல் தபஸ் என்ற வடமொழி வேரிலிருந்து பிறந்தது. அதற்கு உடலையும் உள்ளத்தையும் வெம்மைப் படுத்திக் கொள்ளுதல் என்பது பொருள். இடைவிடாத சிந்தனை இவ்வாறான நிலைமையை ஏற்படுத்துவதால் அது தவம் எனப்பட்டது. எனவே தவம் செய்யக் காட்டுக்குத் தான் போகவேண்டும் என்பது இல்லை.

5 எல்லா ரிஷிகளும் பிராமணர்கள் அல்லர். வேதப் பனுவல்களை இயற்றிய ரிஷிகளில் பலர் பிராமணர் அல்லாதவர்கள். பிறப்பின் காரணமாக ஒருவர் ரிஷி ஆவதில்லை. கடுமையான தவத்தின் மூலம் எவரும் ரிஷித் தன்மை அடைய முடியும் என்பதற்கு விசுவாமித்திரர் சான்று. விசுவாமித்திரர் தவிர வேறு பல அரசர்களும் வேத மந்திரங்களை இயற்றிய ரிஷிகளாகப் போற்றப்படுகின்றனர்- மந்தாத்ரி, ஷிபி, வசுமனான், பிரதர்த்தனன், மதுசந்தஸ், ரிஷபன், ரேணி, அம்பரீஷன், பரதன், மேதாநிதி, நாயகன், ரகுகணன், வக்ஷப்ரியன், புரூலன், வேனன், சுதாசன், கிருதசமதன், தேவாபி, சந்தானு.

வேதம் இயற்றிய ரிஷிகளில் பெண்டிரும் உண்டு - புலோமனை மகள் ஷசி, காமை மகள் சிரத்தை, சக்தி மகள் கோரவி, அப்பிரீணா மகள் வாக்கு, அகத்தியர் மனைவி லோபாமுத்ரை. (ஆதாரம் - தேவநேயப் பாவாணர் இயற்றிய தமிழர் மதம்)

வியாசர் பராசர முனிவருக்கும் மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவர். ஜாபாலா என்ற பெண்ணுடைய மகன் சத்திய காமன் கல்வி கற்கப் போகும்போது தன் தந்தை பெயரை அறிய விரும்பினான். அப்பொழுது அவள், உன் தந்தை யார் என்று எனக்குத் தெரியவில்லை என்றாள். அந்த சத்திய காமன் சிறந்த ரிஷியாகப் பெயர் பெற்றார். அதனால் தான் ரிஷி மூலம் விசாரிக்கக் கூடாது என்ற பழமொழி பிறந்தது. ஒருவர் ரிஷி ஆகிவிட்டால் அவருடைய சந்ததியினருக்கு அதே துறையில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்வதற்கான வாய்ப்பு மற்றவர்களை விட மிகுதியாக இருந்ததால் அவர்களும் ரிஷி ஆயினர்.