என்னை மணந்த சின்னாளில்
உன்னில் பாதி நான் என்றாள்.
ஆம் ஆம் உண்மை அதுவென்றேன்.
இருவர் தலைமை இழுபறியாம்
ஒரு தனித் தலைமை உயர்வென்றாள்.
அதுவே எனது கருத்தென்றேன்.
அந்தத் தலைவர் நானென்றாள்.
அகப்பட்டேன் நான் விழிக்கின்றேன்.
“வெண்டை
முற்றல் கத்தரி சொத்தை
வாடிய கீரை வதங்கிய மல்லி
எந்தப் பொருளும் வாங்குதல்
அறியார்
எனக்கென வாய்த்ததோர் அசடு” என்பாள்
ஏது நான் செய்யினும் ஏது நான்
பேசினும்
குற்றம் காண்பது ஒன்றே அவள்
தொழில்.
எதற்கவள் மகிழ்வாள்? என்றவள் வெகுள்வாள்?
ஈசனே அன்றி யாவரே அறிகுவர்?
என்ன தான் செய்வேன்? எங்கு போய்ச் சொல்வேன்?
“நமக்கேன்
பொறுப்பு? நானெனும்
தனிப் பொருள்
இல்லை, நானெனும் எண்ணமே பொய்யெனப்”
புத்தன் புகன்றதைப் புத்தியில்
கொண்டு
நானாம் பான்மையை நசுக்கிக் கொண்டேன்.
அவள் கைப் பாவையாய் ஆகி விட்டேன்.
ஆணாம் எனக்கு ஐயகோ வீழ்ச்சி!
மனைவியால் பட்ட தொல்லை மிகவுண்டு கண்டீர்!
பொருளை ஓங்க வளர்த்தல் என் கடன்.
மற்றைக் கருமம் யாவும் முடித்தே
மனையை வாழச் செய்பவள் அவளே.
வேளைக்குணவு விதவிதமாக
இனிய சுவையுடன் இயற்றுவ தவளே.
வீட்டுத் தூய்மை விருந்தினரோம்பல்
குழந்தை வளர்ப்பெனக் கோடி
வேலைகள்.
ஓய்வெனச் சாயாள் விடுமுறை அறியாள்.
செய்தித் தாளில் தலையை நுழைத்து
உலகக் கவலை ஊர் வம்புகளில்
மும்முரமாக முழுகி நான்
இருக்கையில்
மற்றவர் பசியை மாற்றுவான் வேண்டி
சமையல் அறையில் பரபரத் திருப்பாள்.
தொக்கா முன்னே சொகுசாய் அமர்ந்து
ஒலிம்பிக் காட்சி நான்
ரசித்திருக்கையில்
மறுநாள் இட்டிலி மிளகாய்ப்
பொடியென
அறவைக் கருவியோ டைக்கிய மடைவாள்.
இல்லில் உள்ளோர் எவர்க்கும்
நோயெனில்
இரவும் பகலும் ஓய்வே இன்றி
உடனிருந் துற்ற சேவைகள் செய்வாள்.
பத்திய உணவைப் பதமாய்ச் சமைப்பாள்.
கவலைப் படுவாள், கடவுளை
வேண்டுவாள்.
தனக்கென வாழாத் தியாகத் திருவுரு.
நானாம் பான்மை அறவே ஒழிந்து
பணிவிடை ஒன்றே குறியாய்
இருப்பாள்.
இவள் போல் மனைவி பெறற்கரும்
பாக்கியம்.
மனைவி இலாவிடில் செய்கை நடக்குமோ?
No comments:
Post a Comment