பிளாட்பாரத்தில் நின்ற கூட்டத்தைப் பார்த்தால், இடம்
கிடைக்குமா என்று கவலையாக இருந்தது. தேவையில்லாத கவலை. சௌகரியமாக உட்கார இடம்
கிடைத்தது. இந்த அவசர யுகத்தில் யார் பாசஞ்சர் வண்டியில் போகிறார்கள்? எனக்கு
ஒரு நிர்ப்பந்தம். நேற்று மதுரையில் ஒரு உறவினர் திருமணம். காலையில் கட்டுச் சாதக்
கூடை வைத்துக் கிளப்பி விட்டார்கள். நாளை கும்பகோணத்தில் நண்பர்
வீட்டுத் திருமணம். எனக்கு இந்தப் பகல் பொழுதைப் போக்குவதற்கு இந்த ரயில் தான்
ஏற்றதாக இருந்தது. 9 மணிக்கு மதுரையில் ஏறினால் 4 மணிக்குக் கும்பகோணம் போகும்.
பாசஞ்சரில்
ஏறி விட்டதால் மட்டும் பொழுது போய்விடுமா? யாராவது பேச்சுத் துணையும் இருந்தால் தான்
போகும். எதிரில் மூன்று பேர் தங்களுக்குள் இந்தியில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ராமேஸ்வரம் சென்று திரும்பும் வடக்கத்திக்காரர்கள் போல இருந்தது. நடை பாதைக்கு
மறுபுறம் நான்கு முஸ்லிம் பெண்கள், முக்காட்டை வாயால் கவ்வியபடி பல்லிடுக்கால்
பேசிக் கொண்டிருந்தார்கள். என் பக்கத்தில் ஒரு கிழவர் - நானும் அந்த ரகம் தான்-
வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது உள்ளே முகத்தைத்
திருப்பினாலும் குறிக்கோள் இல்லாது எங்கேயோ பார்த்தபடி இருந்தார். ஆக, பேச்சுக்கு
ஆள் இல்லை. கிழவரிடம் வலுவில் கூப்பிட்டுப் பேசலாம். ஏதேனும் சொல்லி விட்டால் என்ன
செய்வது என்று பயம்.
முன்பு
ஒருசமயம் அப்படித்தான், தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் போய்க் கொண்டிருந்தேன். ஒன்றரை
நாள் பயணமாயிற்றே என்று பக்கத்தில் இருந்தவரிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன்.
"ஸார்,
டில்லி வரைக்குமா?"
படீரென்று பதில் வந்தது- "கல்கத்தா
வரைக்கும்".
எனக்குத்
தூக்கிவாரிப் போட்டது. 'மனிதர் வண்டி மாறி ஏறிவிட்டாரா?
பார்த்தால் விஷயம் தெரிந்தவராகத் தென்படுகிறது!’
அவரே
என் சிந்தனை ஓட்டத்தைக் கலைத்தார். "பின்னே
என்ன, தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் ஏறி எங்கே போவார்கள்?"
அதிர்ச்சியடைந்தாலும்
நான் சமாளிக்கப் பார்த்தேன். "இல்லை, நீங்கள் வழியில் ஆக்ராவில்
இறங்குகிறீர்களோ என்று கேட்டேன்."
"நான் டில்லியா,
ஆக்ராவா என்று தெரிந்து கொண்டு உமக்கு என்ன லாபம்?"
நல்ல மூக்குடைப்பு. இது போலப் பலமுறை அடிபட்ட பின் இப்போது தான் புத்தி வந்திருக்கிறது - அவர்களாகப் பேசினாலன்றிப் புதிய
மனிதர்களிடம் நாமாகப் பேசக்கூடாது என்று.
நமக்கு
நாமே பேசிக் கொள்ளலாம். பழைய அனுபவங்களை அசை போடுவதும் ஒரு சுகம் தானே.
வண்டி
திண்டுக்கல்லில் நின்றது. யாரோ இறங்கினார்கள், யாரோ ஏறினார்கள். எங்கள் பகுதியில்
மாற்றம் இல்லை. இடம் நிறைய இருந்தது. மரத்துப் போன காலை மடக்கி வைத்துக் கொண்டேன்.
பக்கத்துக் கிழவரைப் பார்த்தேன். அவர் இன்னமும் சூனிய ஆராய்ச்சி தான் செய்து
கொண்டிருந்தார். ஒருக்கால் அவரும் என்னைப் போல் எப்படிப் பேச்சைத் துவக்குவது
என்று யோசனை செய்கிறாரோ?
நாகரிக
வளர்ச்சி நம்மைத் தனித் தனிச் சிறைகளில் கட்டிப் போட்டுவிட்டது.
முன்பெல்லாம் ரயிலில் பயணம் செய்பவர்கள் ஒருவரை ஒருவர் விசாரித்துத் தெரிந்து
கொண்டு, அது திருமண உறவில் கூட முடிந்தது உண்டு. குறைந்த பட்சம் ஆத்மார்த்தமாக
அளவளாவுவார்கள், ஊருக்குப் போனதும் மறந்து விடுவார்கள். அவ்வாறு இருப்பதை ரயில்
சினேகம் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. இப்பொழுது பேசுவதற்கே யோசனை செய்ய
வேண்டி உள்ளது. நாம் சரளமாகப் பேச ஆரம்பித்தால் மற்றவர்கள் நம்மை 'பிஸ்கட்
பண்டிட்' என்று நினைக்கக் கூட வாய்ப்பிருக்கிறது.
பயணத்தின்
போது மட்டுமல்ல, தினசரி வாழ்விலும் அப்படித்தான். வருஷக் கணக்கில் பக்கத்தில்
குடியிருப்பவர் பெயர் கூடத் தெரிந்து கொள்ளாமல் வாழ்கிறோம். ஒரு நாலரை அங்குலச் சுவர்
நம்மை வெவ்வேறு உலகத்தவராகப் பிரித்து விடுகிறது. இங்கே பக்கத்துக் கிழவருக்கும்
எனக்கும் நடுவில் ஒரு காகித மறைப்பு கூட இல்லை. ஆனாலும் எங்கெங்கோ பட்ட சூடுகளின்
நினைவுகள் சீனத்துப் பெருஞ் சுவராகக் குறுக்கே நிற்கிறது.
பழைய
நினைவுகளில் ஊறிக் குளிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்குப் பொழுது போக்குவது ஒன்றும்
பிரச்சினை அல்ல. சிறுவயதில் ஆசிரியரோடு ரயிலில் சுற்றுலா சென்றது நினைவுக்கு
வந்தது. அப்பொழுது பக்கத்தில் என் நண்பன் கணேசன் வாய் ஓயாமல் பேசிக் கொண்டு
வந்தான். வகுப்பிலும் அவன் அப்படித் தான். ஆசிரியரிடம் பல முறை இதற்காக அடி வாங்கியிருக்கிறான். நான் அதிகம் பேசமாட்டேன், என்றாலும் கேட்டுக்
கொண்டிருந்ததற்காக எனக்கும் தண்டனை கிடைக்கும்.
இப்படி மூச்சு விடாமல் பேச அவனுக்கு என்ன தான் விஷயம் இருக்குமோ என்று
எனக்கு அன்றைக்கும் ஆச்சரியம், இன்றைக்கும் தான்.
பிற்காலத்தில்
பலர் நண்பர்களானார்கள். ஆனால் கணேசனிடம் எனக்கு இருந்த நெருக்கம் வேறு யாரிடமும்
ஏற்படவில்லை. அவன் தந்தை கல்கத்தாவில் இருந்தார். அவன் மாமாவின் வீட்டில் தங்கிப்
படித்து வந்தான். தாயில்லாப் பிள்ளை என்று என் அம்மாவுக்கு அவன் மேல் விசேஷப்
பரிவு உண்டு. என் வீட்டிலேயே பழியாகக் கிடப்பான். ஒன்றாக உண்டு, ஒன்றாகக்
குளத்தில் நீச்சலடித்து, ஒன்றாகப் படித்து, தோப்பில் போய் நாவல் பழம் திருடி
ஒன்றாக அடிவாங்கி - இப்படி இருந்தவர்கள் எஸ்.எஸ்.எல்.சி முடித்ததும் வேலை தேடி
ஆளுக்கொரு திசையாகப் பறக்க தொடர்பே விட்டுப் போய்விட்டது.
பத்து
வருஷம் கழித்து ஒருநாள் அவனது மாமாவைப் பார்த்தேன். 'கணேசன்
அடிக்கடி வேலையை விட்டு விட்டு வெவ்வேறு ஊரில் வேலைக்குத் தாவிக்
கொண்டிருக்கிறான். மூன்று வருஷமாக எனக்கும் தொடர்பில்லை' என்றார்.
இந்த
ஐம்பது வருஷங்களில் அவனை நினைக்காத நாள் இல்லை. அவனும் என்னை நினைத்துக் கொண்டு
தான் இருப்பான்.
நினைவுச்
சுழல்களில் முழுகிப் போனதில் நேரம் போனதே தெரியவில்லை. திடீரென்று வெள்ளரிப்
பிஞ்சு, வெள்ளரிப் பிஞ்சு என்று கூவும் சத்தம் கேட்டதும் தான் வெளி உலக நினைவு
வந்தது. பாபநாசம் வந்து விட்டது. இன்னும் 10 நிமிடத்தில் கும்பகோணம் வந்துவிடும்.
எங்கள் பெட்டிப் பகுதியில் இருந்த வடக்கத்திக் காரர்களையும் காணவில்லை, முஸ்லிம்
பெண்களையும் காணோம். வழியில் எங்காவது இறங்கி இருப்பார்கள். பக்கத்துக் கிழவர்
இறங்குவதற்குத் தயாராகக் கதவை நோக்கிப் போனார்.
வண்டி
கும்பகோணத்தோடு சரி. பொறுமையாக இறங்கலாம். இவர் ஏன் அவசரப்படுகிறார் என்று
நினைத்துக் கொண்டேன்.
வண்டி
நின்றது. பிளாட்பாரத்தில் நின்ற இளைஞன் ஒருவன் பெரியவரிடம் வந்தான். ‘மெதுவாக
இறங்குங்கப்பா’ என்று சொல்லிக் கொண்டு அவரைக் கையைப் பிடித்து
இறக்கி அழைத்துக் கொண்டு போனான். அவரது மகன் போல இருக்கிறது. போகிற போக்கில்,
தந்தையின் சக பயணி என நினைத்தோ என்னவோ என் மேல் ஒரு சினேகமான புன்னகையை வீசி விட்டுப்
போனான். நான் கல்யாண மண்டபத்தை நோக்கி நடந்தேன்.
மறு
நாள் கல்யாணம் முடிந்தது. அன்று இரவு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸில் சென்னை போக ரிசர்வ்
செய்திருந்தேன். மாலையில் ஸ்டேஷனை நோக்கி நடந்து கொண்டிருக்கையில் தற்செயலாக ஒரு
வீட்டுத் திண்ணையில் அந்த இளைஞன் தென்பட்டான். அவனது கலைந்த தலையும், கசங்கிய
ஆடைகளும் அவன் துக்கத்தில் இருப்பதாக உணர்த்தின. பெரியவர் மண்டையைப் போட்டு விட்டாரோ? சரி,
யார் எப்படி ஆனால் என்ன? ரயிலில் ஆயிரம் பயணிகள், ஊரில் ஆயிரம்
சாவுகள். நான் மேற்கொண்டு நடக்கத் தொடங்கியபோது அந்த இளைஞன் என்னை நோக்கி வந்தான்.
"ஸார், உங்க பேர்
விசுவநாதனா?"
"ஆம்."
"பூர்வீகம்
மன்னார்குடியா?"
"ஆமாம், உங்களுக்கு
எப்படி..., அது சரி, என்னவோ போல் இருககிறீ்ர்களே, எதாவது விசேஷமா?"
"ஆம். நேற்று
உங்களுடன் ரயிலில் வந்தாரே, அவர் என் அப்பா. காலமாகிவிட்டார். "
"அப்படியா, த்சொ,
த்சொ!"
"அவர் கடைசியாகப்
பேசினது உங்களைப் பற்றித் தான்."
"என்னைப் பற்றியா? அவர்
பேர்?"
“கணேசன்.”
“கணேசனா?”
"ஸ்டேஷனிலிருந்து
காரில் வரும் போது பேசிக் கொண்டு வந்தார். ரயிலில் பக்கத்தில் வந்தவரைப் பார்த்த போது
என் பாலிய நண்பன் விசுவநாதன் ஞாபகம் வந்தது. நெற்றியில் பெரிய தழும்பு இருந்தது.
அவரிடம் கேட்கலாம் என்று பல தடவை நினைத்தேன். விசுவநாதனாக இருந்தால் என்னை
எப்படியும் அடையாளம் கண்டு பிடித்துப் பேசியிருப்பான். வேறு யாராவதாக இருந்து
ஏதேனும் சொல்லி விடப் போகிறாரே என்று பேசாமல் இருந்து விட்டேன் என்றார்.
வீட்டுக்கு வந்து கார் கதவைத் திறந்ததும் மடேல் என்று சாய்ந்தார். பிராணன்
போய்விட்டது."
நான் திகைத்து நின்றேன்
ஐம்பது
வருஷம் ஒருவரை ஒருவர் பாராமல் நினைவிலேயே வாழ்ந்த நாங்கள் இன்னும் ஒரு நாள்
பாராமலே இருந்திருக்கக் கூடாதா? விதியே என்ன கொடுமை செய்து விட்டாய்? ஏழு
மணி நேரம் அருகருகே உட்காரவைத்தும் பேச முடியாமல் செய்து வேடிக்கை பார்த்து
விட்டாயே!
.
No comments:
Post a Comment