தடதடவென்று
அதிர்ச்சியான சத்தம் கேட்டது. சுகமான தாள வாத்தியக் கச்சேரி போல் சென்று கொண்டிருந்த ரயில் ஓட்டத்துக்கு என்ன வந்து
விட்டது? எட்டிப் பார்ப்பதற்குள்
சடசடவென்று பரணிலிருந்து வரட்டிகள் சரிவதைப் போல் ரயில் பெட்டிகள் பாலத்திலிருந்து
கீழே ஓடும் ஆற்றில் விழுந்து கொண்டிருந்தன. நான் எங்கிருக்கிறேன்? நான் இருந்த பெட்டி விழவில்லையோ? ஒரே இருட்டு. ஒன்றும் புரியவில்லை.
கண்ணைக் கசக்கித் தெளிவு
ஏற்படுத்திக் கொண்டு எட்டிப் பார்த்தேன். நான் உட்கார்ந்திருந்த பெட்டி தவிர மற்ற
எல்லாப் பெட்டிகளும் ஆற்றினுள் கிடப்பது தெரிந்தது.
மங்கலான வெளிச்சத்தில் வண்ண வண்ண
ஆடைகள் ஜன்னலின் வழியே தெரிந்தன. தூங்கிக் கொண்டிருந்த ஜனங்கள் திடீரென்று ஜல சமாதி
அடைந்து விட்டனர்.
நானிருந்த
பெட்டி மட்டும் மற்றவற்றின் வழி போகாமல் தண்டவாளத்திலேயே நின்று விட்டது. இது தான் விதி
என்பது. நானும்
என்னுடன் இருந்த சிலரும் மட்டும் வாழ வேண்டும் என விதி விரும்பி விட்டது போலும். அல்லது வேறு ஒரு
விபத்தில் பலி வாங்குவதற்காக எங்களை ஒதுக்கி வைத்துள்ளதோ?
பிழைத்த
அதிருஷ்டசாலிகள் உடனே மீட்புப் பணியில் இறங்கத் துடித்தனர்.
ஆனால் அந்த நட்சத்திர
வெளிச்சத்தில் ஓடும் ஆற்றில் யார் இறங்குவது? யார் யாரோ யாருக்கோ போன் செய்து கொண்டிருந்தார்கள். மேலே நின்று கொண்டு
விபத்தில் சிக்கியவர்களுக்காக அனுதாபப்படுவதையும் தான் எத்தகைய கண்டத்திலிருந்து
தப்பியிருக்கிறோம் என்று எண்ணி எண்ணி அதிசயப்படுவதையும் தவிர அவர்களுக்கு ஏதும்
தெரியவில்லை.
நான்?
நான்
முன் பெட்டியில் இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். என்
பிரச்சினைகளுக்கு ஒரேயடியாக முடிவு கிடைத்திருக்கும்.
இந்த விபத்தில் தப்பிப் பிழைத்த
எனக்கு என்ன மகிழ்ச்சியான வாழ்க்கை காத்திருக்கிறது? திரும்பவும் அந்தச் சண்டாளி முகத்தில் தான் விழிக்க
வேண்டும். விதி இரக்கம் இல்லாதது தான். வாழ விரும்பியவர்களை எல்லாம் கணப் பொழுதில்
கொன்று விட்டு என்னைப் பார்த்துக் கெக்கலி கொட்டிச் சிரிக்கிறது. சாவின் விளிம்பு
வரை என்னைக் கொண்டு வந்து ஏமாற்றி விட்டதே.
சாவுக்கு
ஏங்கும் அளவுக்கு எனக்கு என்ன பிரச்சினை என்று கேட்கிறீர்களா? உள்
வீட்டுச் செய்தியை எல்லாம் ஊர் அம்பலத்தில் உரைக்கலாகுமோ? குறிப்பாகச் சொல்கிறேன், முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்.
நான் ஔவையார் கூறிய கொடுமையின் உச்ச கட்டத்தில் நின்று கொண்டு விவேக சிந்தாமணி
கூறிய கப்பிய பசியினோடு கடும் பசியை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
பத்து
வருடமாகத் துன்பத்தில் உழன்றும் எனக்கு ஏனோ தற்கொலை எண்ணம் தோன்றியது இல்லை. ஆனால் இன்று
மயிரிழையில் சாவு கை நழுவிப் போனது மிக ஏமாற்றமாக இருந்தது.
இப்படிச் சாகவும் விரும்பாமல்
வாழவும் விரும்பாமல் திரிசங்கு சொர்க்கத்தில் தவிப்பது தான் என் தலை எழுத்தா?
திடீரென்று
என் உள்ளத்தில் புதிய வேகம் ஒன்று பிறக்கிறது.
விதியே, உன்னை நான் பழி வாங்குவேன்.
உன்னை என் மதியால் வென்றுவிடுவேன். நீ என்னைப்
பார்த்துச் சிரிக்கிற இந்தச் சந்தர்ப்பத்தையே பயன்படுத்தி உன் தலையில் போடுகிறேன். நான் இனி திரிசங்கு
சொர்க்கத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
அசல் சொர்க்க வாழ்வையே அமைத்துக்
கொள்வேன். சாகவும் மாட்டேன்.
ஐநூறு
பேராவது இறந்திருப்பார்கள். யாரை யார் அடையாளம் கண்டார்கள்? நானும் இறந்துவிட்டதாக இருக்கட்டுமே. முற்றிலும் புதிய
வாழ்வை என் விருப்பப்படி அமைத்துக் கொள்வேன்.
பழைய வாழ்வை இந்தக் கணத்தில்
முற்றிலும் மறந்து விட்டேன்.
இது
தான் அவளுக்குச் சரியான தண்டனை. மங்கலம் போய்விட்டதே என்று சில நாட்கள் அழுவாள். மற்றபடி எனக்காக
அழமாட்டாள். என் மேல் என்றுமே அவளுக்கு அன்பு கிடையாது.
அவளுக்குப் பணக் கஷ்டமும்
ஏற்படாது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏதேனும் நஷ்ட ஈடு கொடுப்பார்கள். மற்றும் என்
காப்பீடு, சேமநிதி. பத்து வருடம் அவளுக்குக் கணவனாக இருந்ததற்கு என் கடமை முடிந்து விட்டது. குழந்தைகள் சில
நாட்களுக்கு அப்பா அப்பா என்று சொல்லிக் கொண்டிருக்கும்.
பின் மறந்து விடும். எல்லாருக்கும்
தொந்தரவு இல்லாத வழி இது ஒன்று தான்.
நினைக்கவே
மனம் இனித்தது. இனி அவளைத் திருத்த நான் முயற்சி செய்ய வேண்டியது இல்லை. எல்லோரிடமும்
அன்பாக நடந்து கொள், கனிவு காட்டு என்று பத்து வருடங்களாக நான் செய்து வந்த உபதேசி
வேலை இன்றுடன் முடிவடைந்தது.
நான்
என்னுள்ளே மூழ்கி இருந்தாலும் சுற்றுப்புறம் பரபரப்புடன் வேலை செய்து
கொண்டிருந்தது. செய்தி கேட்டுப் பக்கத்து ஸ்டேஷன்களிலிருந்து உதவி வண்டிகள் வந்தன. பெரிய பெரிய விளக்குகளைப் போட்டுக் கொணடு நீரில்
குதித்து அகப்பட்ட உடல்களை மேலே கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். என் எதிர்
சீட்காரர் அருகில் வந்து கேட்டார்.
நீங்க எந்த ஊரு?
ம்.. ம்.. ம்.. திருநெல்வேலி.
கொண்டு
வந்த கைப்பையை ஆற்றின் கரையோரம் ஒருவரும் அறியாமல் நழுவ விட்டு எட்ட நின்று
பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் என் விலாசம் இருந்தது. யாரோ ஒருவர்
பார்த்து அதைக் குறித்துக் கொண்டார். அப்பாடா, சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன் செத்தான். இனி மறந்தும் வாழ மாட்டான்.
பத்திரிகை
நிருபர்களா, ரயில்வே அதிகாரிகளா, தெரியவில்லை.
தப்பிப் பிழைத்தவர்களின்
விலாசங்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டிருந்தார்கள்.
என்னிடம் வந்தார்.
"ராமசாமி, மேல வீதி, திருநெல்வேலி."
பழைய
பெயருக்கும் பழைய ஊருக்கும் எட்டாத தொலைவில் வந்தாகி விட்டது.
நான் முன் பின் பார்த்திராத ஊரில்
வேலை தேடி அலைந்தேன். 15 நாட்கள் கழித்து கைக்
காசு தீரும் சமயம் ஒரு வேலை
கிடைத்தது. பங்களாவில் தோட்ட வேலை. வெங்கடேசன் பட்டதாரி,
கம்பெனி மானேஜர். அதனால் என்ன? ராமசாமி எட்டாம் வகுப்பு தான் படித்தவன். தோட்ட வேலை செய்து தான்
வாழ்வான். வருமானம் என் தேவைக்கு அதிகமாகவே இருந்தது.
இந்த எளிய வாழ்க்கையில்
கிடைக்கும் இன்பத்தை இத்தனை நாள் இழந்திருந்தேனே.
சே, பழைய வாழ்க்கையை அடிக்கடி நினைக்கக் கூடாது. என்னை அறியாமல்
நானே காட்டிக் கொடுத்து விடுவேன். அந்த ரகசியத்தை மனதின் ஆழத்தில் குழி தோண்டிப்
புதைத்து அது அங்கேயே மக்கி மண்ணாக வேண்டும்.
இவ்வாறு அடிக்கடி சங்கல்பம்
செய்து கொண்டேன்.
என் பூர்வ ஜன்மத்தின் குறைகளை எல்லாம்
இப்பொழுது நிறைவேற்றிக் கொண்டேன். எத்தனை காதலர்களைப் பார்த்துப் பெருமூச்சு
விட்டிருப்பேன், நானும் இந்த மாதிரி பழகிப் பார்த்து மணந்து கொண்டிருக்கக் கூடாதா என்று. இதோ இந்த
ஜன்மத்தில் அது நிறைவேறியது. 'இவள்' எனக்கு எல்லா வகையிலும் ஏற்றவள். மணம் ஆயிற்று.
மகிழ்ச்சியான வாழ்க்கை.
மனம் மகிழ்ச்சியாக இருந்தால் காலம் ஓடுவதே
தெரியாதோ?
ஒரு நாள் எதேச்சையாக நாட்காட்டியைப்
பார்த்தேன். பிப்ரவரி 29. ஆகா! 'புதிய நான்' பிறந்த நாள்.
இது நான்கு வருடங்களுக்கு ஒரு
முறை தானே வரும். எத்தனை நான்கு வருடங்கள் ஆகி இருக்கின்றன? 20
வருடங்களா?
இன்று என்னவோ காலை முதல் 'அவள்' நினைவு வந்துகொண்டே இருக்கிறது. கோவிலுக்குப் போகிறேன்.
அங்கு தூணருகே ஒரு இளம் விதவை தன்
இரு குழந்தைகளுடன் நின்றிருந்தாள். உடம்பில் ஒரு நகை இல்லை. பாழும் நெற்றி. என்
அவளும் இந்த மாதிரித் தான் கோலம் கொணடிருப்பாள்.
இந்த விதவையைப் பார்த்தால்
அசப்பில் அவள் மாதிரியே இருக்கிறதே. ஆனால் இருபது வருடங்கள் ஆகியும் அவள் அதே
இளமையுடன் இருப்பாளா? என் மகளோ? அருகில் உள்ள
குழந்தைகளும் என் குழந்தைகள் போலவே இருக்கிறார்கள்.
என் மகளுக்குத் திருமணம் ஆகி
குழந்தைகள் பிறந்து விதவை ஆகிவிட்டாளா?
அவள் என்னையே பார்க்கிறாளே! என்னை அடையாளம் கண்டு விட்டாளோ? என்னவோ பேசுகிறாளே?
"என்ன, பொழுது விடிஞ்சும் கண்ணைத் தொறந்துகிட்டே
தூங்கறீங்க. ஆபீசுக்கு நேரம் ஆய்ட்டுது. எந்திரிங்க."
கனவு கலைந்தது.
அவள் எண்ணை தேய்த்து முழுகிவிட்டு
தலையில் வெள்ளைத் துண்டைக் கட்டிக் கொண்டு குங்குமம் இட்டுக் கொள்ளப் போகிறாள். 20 ஆண்டுகளை 20 விநாடிகளில்
அனுபவித்துவிட்ட பிரமை மெல்ல நீங்கிற்று.
அருகில் பரணிலிருந்து எலி தள்ளி விட்ட
வரட்டிகள் சிதறிக் கிடந்தன.
விதி என்னைப் பார்த்து நிஜமாகவே சிரித்தது.
No comments:
Post a Comment