Pages

Saturday, February 12, 2011

நகர வருணனை – நாகை 1970

கனவு

பளபளத்த கருமையுடன் பரவி நிற்கும் தார் ரோடு
சளசளத்த மழையினிலும் சகதியிலாத் தன்மையது
குண்டு குழிகளின்றிக் குறைகள் ஏதுமின்றி
வண்டுறை குளத்தில் வாலன்னம் மிதத்தல் போல்
செல்லும் ஊர்திகளைச் சீராகத் தாங்குவது
கொல்லும் புழுதியிலை, குப்பையிலை, கூளமிலை
வீடு கழித்த குப்பையென விரல் நீளச் சிறுதுரும்பும்
போடுதற்குக் கூச்சம் தரும் புனிதம் நிரம்பியது
அகலத்திற் குறைவுமிலை, அதிலேயோர் நெளிசலிலை
பகலென்ன இரவாக்கும் பாங்கான ஒளிக்குழல்கள்.
உருண்டிடும் ஊர்திகளில் ஒன்றேனும் புகை கக்கா
மருண்டிடும் அளவுக்கு மாவிரைச்சல் போடாதாம்.
உண்டிங்கே நடைபாதை ஓரங்கள் இருபுறத்தும்
வண்டிகளின் தடையின்றி மக்கள் நடப்பதற்கே
மற்று அவரன்றி மாடு நாய் முதலான
சிற்றறிவுயிரினங்கள் சிலவேனும் காண்கிலேன்.

ஓரத்தே வீடுகள் உயரத்திற் பெரியனவாய்
சீரொத்த பான்மைையதாய் சிறப்புமிகு தூய்மையதாய்
இடமகன்ற மாளிகைகள் இவை ஒளியிற் குறைவில்லா
தடமகன்ற தன்மையினால் தங்காத வளியுடைய.
குடிமக்கள் என்பாரோ கோலமிகு வனப்புடையார்
மிடியில்லார் நோயில்லார் மிகவான பகையில்லார்
நகரெங்கும் சென்றேன் நானிதுவே கண்டேன்
அகமெங்கும் மகிழ்ச்சியால் ஆகா நான் நிரம்பிட்டேன்.

நனவு

தாங்கிடும் பெயரால் தாமரைக் குளமெனவே
ஓங்கரும் புகழ் படைத்த ஒரு நீர் நிலையுண்டு
பாசியும் வெறுக்கும் பாவத் தீர்த்தமிது
நாசிக்கும் விழிகளுக்கும் நரகமெனத் தோன்றுமால்.
தூம்பொன்று வடித்து நிற்கும் துர்நாற்றச் சாக்கடை நீர்
ஆம்பலுடன் தாமரையும் அல்லியும் இதில் வாழா.
பண்டுமுதல் இந்நீரால் பயன் பெறுவது கிருமிகளே.
உண்டிங்கே மீன்கள். ஓரத்தே இருந்து அவற்றைத்
தூண்டிலிட்டுத் தூக்கித் தொழில் செய்வோர் சிலராவர்.

குளத்தின் கரையெனிலோ கோடி தொழிற்கூடம்
பொறுக்கி வந்த சாணத்தைப் போராய்க் குவித்ததனை
வரட்டி தட்டி விற்கும் வனிதையரும் ஆங்குண்டு

குளத்தின் கரையோரம் குடிசைகள் பல உளவாம்
குடிசையிலே வாழ்கின்ற குழந்தையர்க்குக் கழிவிடமாய்
பன்றிகளும் நாய்களும் பக்கக் கண் காக்கைகளும்
இரை தேடிப் பெறுகின்ற இன்பக் களஞ்சியமாய்
குளிர் தாங்கா மூதாட்டி குளிர் காயும் நல்லிடமாய்
அழுக்கினையே அன்றி ஆடை பிற அணியாத
சிறுவர் விளையாடச் சீரான ஆட்டிடமாய்
குடிசைவாழ் மக்கள் தம் குப்பைகளின் நிலைக்களனாய்
அவ்விடத்தின் பயன் கூற ஆயிரம் நா வேண்டும்

தார் போட்ட ரோடுண்டு தாமரைக் குளக்கரையில்
தார் பிரிந்து விட்டதனால் தனிப் பிரிந்த கல்லுண்டு.
கோணலோ சொல்லப் போனால் கோடி கோடி ஆகிடாதோ
குழிகளில் விழுந்தேறிக் குலுங்கியே செலும் வண்டி

அச்சாலையை அடுத்து அமைந்ததோர் சிறு குப்பம்.
குப்பத்து மக்கள் தாம் குறைவில்லாச் சண்டையினர்
ஒரு வீட்டு வாசலிலே ஒடுங்கி நிற்கும் ஒரு சொறிநாய்
மறு வீட்டில் உயிருக்கு மன்றாடும் ஒரு கிழவன்
சூரியனும் சந்திரனும் சோவென்னும் பெருமழையும்
கூரையினைத் தாண்டிக் குடிசையினுள் செல்லும்.

No comments:

Post a Comment