இஸ்லாமிய
வேதம் குர் ஆன் பல இடங்களில் அல்லா மேல் ஈமான் கொள்ளுங்கள் என்று நம்பிக்கையை
வலியுறுத்துகிறது. கிருத்துவர்களின்
பைபிளும் பல இடங்களில், விசுவாசியுங்கள்
என்று நம்பிக்கையை முதன்மைப்படுத்துகிறது. ஆனால்
இந்து மதமோ அந்த அளவுக்கு நம்பிக்கையை வலியுறுத்துவதாகத் தெரியவில்லை.
வேதம்
தனி மனித சிந்தனைக்குக் கொடுத்துள்ள சுதந்திரம் வேறு எங்கும் காணக் கிடைக்காதது. வேதத்தை ஒப்புக் கொள்ளாதவரைப் பாவி என்றோ
காபிர் என்றோ இந்துக்கள் இகழ்வதில்லை. மாறாக
புதிய சிந்தனைகளை வரவேற்று அவற்றின் உண்மைகளை ஆராய்ந்து அவற்றில் உள்ள நல்லனவற்றை
ஏற்றுக் கொண்டு தன்னை மாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரே வேதத்திற்கு சங்கரர் ஒரு விதமாகவும்
ராமானுஜர் ஒரு விதமாகவும் மத்வர் ஒரு விதமாகவும் விரிவுரை எழுதியுள்ளனர். அவரவருக்கு எது சரி என்று படுகிறதோ அதை
ஏற்றுக் கொள்ளவும் அதன்படி நடக்கவும் பிறப்புரிமை பெற்றவன் இந்து. கடவுள் இல்லை என்று சொல்பவனையும் வேத
மதம் வெறுப்பதில்லை. இன்றைய பெரியார்
மட்டுமல்ல, முற்காலத்தில்
வாழ்ந்த ஜாபாலி என்ற முனிவரின் கருத்துகளும், சார்வாகர்கள் என்றழைக்கப்பட்ட
நாஸ்திகர்களின் கருத்துகளும் இந்து சமய இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.
வேதம்
நம்பிக்கையை வலியுறுத்துகிறதா? சாதாரண
மக்கள் வழக்கில் நம்பினவருக்கு நடராசா,
நம்பாதவருக்கு யமராசா என்று சொல்லப்படுகிறது என்றாலும் வேதத்தில் எந்த இடத்திலும்
இந்த வேதம் சொல்வதை நம்புங்கள்.
நம்பினால் தான் கடைத்தேறுவீர்கள், இல்லாவிட்டால் நரகத்துக்குப் போவீர்கள் என்ற
மிரட்டல்கள் காணப்படுவதில்லை.
இத்தகைய
சூழ்நிலையில் பாரதியின் இரு வரிகள் நமக்குப் புதிராக உள்ளன. முதலாவது, சக்தியைக் கும்பிடுமாறு தன் மனத்துக்கு அறிவுறுத்தும்
இடத்தில்
நம்புவதே
வழி என்ற மறை தனை
நாம் இன்று நம்பி விட்டோம் என்கிறார்.
இன்னொரு பாடலில்
நம்பினோர்
கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக நலம் பெறலாம்
என்கிறார்.
வேதம் நம்பிக்கையை
வலியுறுத்துவதாக அல்லவா கூறுகிறார்.
உண்மையா? தேடினால்
கிடைப்பது சிரத்தை பற்றிய ஒரு சூக்தம்.
சிரத்தை
என்பது அடைய வேண்டிய லட்சியத்தில் உறுதியும் அதை அடைவதற்கான வழியில் முழு
முனைப்புடன் ஈடுபடுவதையும் குறிக்கும். செய்யும் ஒவ்வொரு சிறு செயலும் தன் இறுதி
நோக்கத்துக்குப் பயன்படுமா என்று ஆராய்ந்து பயன்படக்கூடிய எந்த சிறு செயலையும்
விடாமல் செய்வதும் பயன் தராத எந்த சிறு செயலையும் செய்யாதிருப்பதும் இதில்
அடங்கும். இதில்
நம்பிக்கை எங்கே வந்தது?
ஆதி சங்கரர்
சிரத்தை என்பதற்கு நம்பிக்கை என்றே பொருள் தருகிறார். இறைவன் ஒருவர் உண்டு
என்பதில் சந்தேகம் இல்லாத தெளிவான மனத்துடன் இருப்பதே நம்பிக்கை என்கிறார்.
சிரத்தையின் அடிப்படை- குறிக்கோளில், அதாவது இறைவனிடத்தில் நம்பிக்கையும் அதை
அடையும் வழியாகிய, குருவின் வார்த்தைகளில் நம்பிக்கையும் தான்.
ஒரு
உதாரணம் பார்ப்போம். ஒருவன் ஒரு
புதிய ஊருக்குச் செல்ல விரும்புகிறான், ஒருவரிடம்
வழி கேட்கிறான். அவன் அதில்
நம்பிக்கையோடு பயணம் செய்ய வேண்டும். கொஞ்ச
நேரம் சென்ற பின் இந்தப் பாதை சரியானது தானா?
நமக்குச் சொன்னவர் சரியாகத் தான் சொல்லி இருப்பாரா? நாம் போய்ச் சேருவோமா என்று ஐயுறுதல்
கூடாது.
நம்பிக்கை இன்றி, சந்தேகம் தன்னை ஆட்கொள்ள அனுமதிப்பவன்
அழிவான் என்கிறது கீதை. (ஸம்சயாத்மா விநச்யதி)
இந்த
சிரத்தை, அதாவது
குறிக்கோளில் உறுதியும் செயல்பாட்டில் சந்தேகம் மற்றும் குறை இல்லாத வினைத்
திட்பமும், ஒரு தேவியாக
உருவகப்படுத்தப்பட்டு வேதத்தில் போற்றப்படுகிறது. அதன் சுருக்கமான மொழி பெயர்ப்பு இதோ:-
சிரத்தை
இறைவனின் தலையில் உள்ளது. அதைச்
சொற்களால் போற்றுவோம்.
சிரத்தையே,
கொடுப்போருக்கும் கொடுக்க விரும்புவோருக்கும் விரும்பிய பலன்களைக் கொடுப்பாயாக. (சிரத்தையோடு
செய்தால் விரும்பிய பலன் கிடைக்கும்.)
தேவர்கள் அசுரர்களுடன் இட்ட போரில் சிரத்தையைக் கைக் கொண்டனர். வெற்றி பெற்றனர். (நோக்கத்தில்
வெற்றி பெற வேண்டுமென்ற) இதய
தாகத்தால் சிரத்தை அடையப்படுகிறது.
சிரத்தையால் செல்வம் அடையப்படுகிறது.
சிரத்தையைக் காலையிலும் நண்பகலிலும் மாலையிலும் வணங்குகிறோம். சிரத்தா தேவியே, எங்களுக்கு சிரத்தையைக்
கொடு.
இந்தக்
கருத்துகளைத் தான் பாரதி ஒரு வரியில் கூறுகிறார்.
நம்பினோர்
கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு.
சிரத்தையை
அதற்கான இதய தாகத்தை அடைவது எப்படி? அவன்
அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல சிரத்தையை அடைய சிரத்தை என்னும் அம்பிகையைத்
தான் வணங்க வேண்டும். சிரத்தையே
எங்களுக்கு சிரத்தையைக் கொடு என்று தான் அந்த ரிக் வேத சூக்தம் நிறைவடைகிறது. பாரதியும் அதையே எதிரொலிக்கிறார்.
அம்பிகையைச்
சரண் புகுந்தால்
அதிக நலம் பெறலாம்.
நம்புவதே வழி என்ற மறை தனை
நாம் இன்று நம்பி விட்டோம்.
No comments:
Post a Comment