புதுவையை
வாழிடமாகக் கொண்ட பாரதி அதன் தொலைத் திட்டுப் பகுதியான காரைக்காலுக்கு வந்ததாகத்
தெரியவில்லை. காரைக்கால் அம்மையாரின் பாடல்களை அவர் படித்திருக்கக் கூடும். ஆனால்
அவர் அவர் கம்பன், இளங்கோ, வள்ளுவன் தவிரப் பிற புலவர்களையோ எந்த ஒரு நாயன்மாரையோ
போற்றியதில்லை. என்றாலும், பாரதியின் ஒரு குறிப்பிட்ட பாடல் அம்மையாரைப் புகழ்ந்து
பாடப்பட்டதோ என்னும் எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. வெற்றி கொண்ட தாய் என்ற
தலைப்பிலான பாடலின் முதல் நான்கு பாக்களைப் பாருங்கள்.
பேயவள்
காண் எங்கள் அன்னை – பெரும்
பித்துடையாள்
காண் எங்கள் அன்னை
காயழல்
ஏந்திய பித்தன் தன்னைக்
காதலிப்பாள்
எங்கள் அன்னை
இன்னிசையாம்
இன்பக் கடலில் எழுந்
தெற்றும்
அலைத் திரள் வெள்ளம்
தன்னிடை
மூழ்கித் திளைப்பாள் அங்குத்
தாவிக்
குதிப்பாள் எம் அன்னை.
தீஞ்சொற்
கவிதை யஞ்சோலை தனில்
தெய்விக
நன்மணம் வீசும்
தேஞ்சொரி
மாமலர் சூடி மதுத்
தேக்கி
நடிப்பவள் எம் அன்னை.
வேதங்கள்
பாடுவள் காணீர் உண்மை
வேல்
கையிற் பற்றிக் குதிப்பாள்
ஓதரும்
சாத்திரம் கோடி உணர்ந்
தோதி
உலகெங்கும் விதைப்பாள்.
பேய்க்
கோலத்தை விரும்பி ஏற்றவர் அம்மையார். பேயாடும் கானில் பிறங்கக் கனலேந்தித்
தீயாடும் பெம்மான் மேல் அவருக்குக் காதல், பிறந்து மொழி பயின்ற போதே
ஏற்பட்டுவிட்டது. இக் காதல் கசிந்து பெருகிக் கடலென மறுகி அகம் குழைந்து
அனுகுலமாய் மெய்விதிர்த்ததால், மணிவாசகர் கூறுவது போல, சகம் பேய் என்று தம்மைச்
சிரிப்பதில் முடிவடைந்தது. அவரது பாடல்களில் இறைவனிடம் ஆரா அன்பு, பணிவு, வியப்பு,
பெருமகிழ்வு, நகைச்சுவை என்று பல்வேறுபட்ட உணர்ச்சிகள் கணத்துக்கு கணம் மாறி மாறி
வருவதைக் காண்போர் இவர் பித்துக் கொண்டவர் என்று கருதியதில் வியப்பு என்னே!
தமிழிசையின்
முன்னோடி அம்மையார். ஆலங்காட்டில் அப்பன் ஆடும் ஆட்டத்தை விவரிக்கப் புகுந்த அவர்
பல இசைக் கருவிகளைப் பட்டியலிடுகிறார். இன்றைய ஸரிகமபதநி- க்கு இணையான தமிழ்ச்
சுரப் பெயர்களான துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை ஆகியவற்றை நாம்
அறிய உதவும் பழைமையான நூல் அவரது பாடல்களே. எனவே அவர் இசையில் புலமையும் ஈடுபாடும்
கொண்டவர் என்பதை நாம் ஐயமின்றி ஊகிக்கலாம்.
இறைவனின் பேயாய நற்கணத்தில் ஒன்றாய அவர் இசை வெள்ளத்தில் மூழ்கித்
திளைத்துப் பாடிய பாடல்கள் அவர் தாவிக் குதித்து ஆடியதை நம் கண் முன் கொண்டு
நிறுத்துகின்றன.
அம்மையாரின்
கவிதைச் சிறப்போ சொல்லொணாதது. அதில் இல்லாத சுவை இல்லை. இல்லாத அணி இல்லை. அவரது
பாடல்கள் அத்தனையும் தெய்விக நன் மணம் வீசும் தேன் சொரி மாமலர்களே, ஐயமில்லை.
வேதியனை,
வேதப் பொருளானை, வேதத்திற்கு ஆதியனைப் புகழ்ந்து அவர் பாடிய பாடல்கள் சாதாரண
மக்கள் எளிதில் கற்க முடியாத ஓதரும் சாத்திரம் கோடியின் உண்மையை எளிமைப் படுத்தித்
தருகின்றன. ‘ஏழைகளே,
எந்தை அராப் பூண்டு உழலும் அம்மானை உள் நினைந்த சிந்தையராய் வாழும் திறம் எளியது
தான்,
வாருங்கள்’ என்று
கூவி அவர் பக்தி விதைகளை உலகெங்கும் விதைக்கிறார்.
இந்த
நான்கு பாடல்களும் பாரதி அம்மையாரைத் தான் பாடி இருப்பாரோ என்று மயக்கம் தந்தாலும்
ஐந்தாவதாகிய நிறைவுப் பாடல் நம்மை அதிலிருந்து மீட்கிறது.
பாரதப்
போரெனில் எளிதோ விறற்
பார்த்தன்
கை வில்லிடை ஒளிர்வாள்
மாரதர்
கோடி வந்தாலும் கணம்
மாய்த்துக்
குருதியில் திளைப்பாள்.
சந்தேகமில்லை.
பாரதி குறிப்பிடுவது பாரத அன்னையைத் தான். என்றாலும் நமக்கு அம்மையாரைப் பற்றிச்
சிந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது அல்லவா?
No comments:
Post a Comment