Pages

Thursday, August 1, 2013

இனி ஒரு விதி செய்வோம்




      பாரதியின் கோபம் வெளிப்படும் இடங்களில் ஒன்று இனி ஒரு விதி செய்வோம் என்று துவங்குகிறது. தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்பதை எந்த நாளும் காக்க வேண்டிய ஒரு விதியாக அவர் விதிக்கிறார். தின்ன வரும் புலியை அன்போடு சிந்தையில் தேக்கச் சொன்ன அவர் இவ்வளவு கொடூரமாகச் சபதம் செய்தது ஏன் ?

      சற்றே பின்னோக்கி, அவர் வாழ்ந்த காலத்தைப் பார்ப்போம். புகழ் பெற்ற தாது வருஷத்துப் பஞ்சம், இந்திய மக்களில் மூன்று கோடிப் பேரைப் பலி வாங்கிய கொடுமை அவர் பிறப்பதற்கு ஆறு ஆண்டுகள் முன்பு தான் ஏற்பட்டது. இதன் துன்பங்கள் எல்லாம் மக்கள் கூறக் கேட்டு இளம் பாரதி மனதில் படிந்திருக்க வேண்டும். பசியின் கொடுமையை அனுபவித்தவர் தான் உள்ளபடி உணரமுடியும். பாரதியும் அதை அனுபவித்திருந்தார். கவிதையையும் நாட்டுக்கு உழைத்தலையும்  தொழிலாகக் கொண்ட அவருக்குப் பரிசாகக் கிடைத்தது வறுமை தான். ஆனால் அவர் ஒரு போதும் வாடிய தன் வயிற்றுக்காகக் கவலைப் படவில்லை. அவர் வருந்தியது இந்நாட்டு மக்களுக்காகத் தான்.

கஞ்சி குடிப்பதற்கு இலார் அதன்
காரணங்கள் இவை என்னும் அறிவும் இலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்தே
துஞ்சி மடிகின்றாரே இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழி இல்லையே         
என்று நெஞ்சு பொறுக்காமல் புலம்புகிறார்.

      பஞ்சம் ஏற்படக் காரணம் என்ன? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பயிரிட்டு இந்திய மண்ணின் சாரம் குறைந்துவிட்டது என்ற வாதத்தைப் பாரதி ஒப்புக் கொள்ளவில்லை. இந்தியா பாருக்குள்ளே நல்ல நாடு என்றும், கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாடு என்றும் இனிய பொழில்கள் நெடிய வயல்கள்  எண்ணறு நிறை நாடு என்றும் கூறுகிறார்.

      பின் ஏன் பஞ்சம்? நம் மக்கள் உழைக்க அஞ்சுவதாகச் சிலர் கூறுகின்றனர். ஜப்பானியரைப் போல் உழைத்தால் நாம் எங்கோ போயிருப்போம் என்பர். பாரதி இதையும் மறுக்கிறார்.

      மானிடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் நீர் பாய்ச்சாவிடினும்       வகை வகையாப் புற்கள் நெற்கள் மலிந்திருக்கும் என்பார் அவர்.   

      ஆக, பஞ்சத்துக்குக் காரணம் வளமின்மையோ உழைப்பின்மையோ அல்ல. எல்லாம் விளைந்தும் சரியான பங்கீடு இல்லாதது தான் காரணம். உடையவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுக்காமல் பதுக்குகிறார்கள். அதற்கு அடிப்படையான அன்பு இல்லை அவர்களிடம். அதனால் பாரதி பல இடங்களிலும் அன்பையே வலியுறுத்துகிறார்.

      மனிதரின் கடமையாக அவர் கூறும் நான்கில் ஒன்று, பிறர் துயர் தீர்த்தல். இதைச் செய்யச் சிலர் தவறுவதால் உலகில் பிறர் துடிதுடிக்கின்றனர். பஞ்சத்திலும் நோய்களிலும் பாரத மக்கள் புழுக்கள் போலத் துஞ்சத் தம் கண்ணால் கண்டும சோம்பிக் கிடக்கும் இந்நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கத் துடிக்கும் அவரது சொல்லின் வேகத்தைப் பாருங்கள்.

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ ? 

      இந்நிலை வளரவிட்டால் என்ன ஆகும் ? ரஷ்யப் புரட்சியைச் சுட்டிக் காட்டுகிறார். அங்கு

உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவில்லை
மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள்
ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி

      அன்பு கொண்டு பகுத்துண்டு வாழ்ந்தால் மேன்மையுறலாம். இன்றேல் மாகாளியின் கோபத்துக்கு இலக்காகி வஞ்சனையாளர் எல்லாம் வீழ்ந்திடுவர். எனவே நான் அழிக்காவிட்டாலும் மாகாளி இந்த சுயநல ஜகத்தை அழிக்கப் போவது திண்ணம். எனவே அன்பு செய்யுங்கள். அடுத்தவர் பசியை நீக்குங்கள். கிருத யுகம் மீண்டும் மலரும் என்கிறார் அவர். பாரதியின் கோபம் நமக்குப் புரிகிறது.

      பாரதியின் அன்பு வட்டம் இந்தியாவை மட்டுமோ, மனிதரை மட்டுமோ உள்ளடக்கியதல்ல. பூமண்டலம் முழுமையும் உள்ள எல்லா உயிர்களையும் கொண்டது அது.

மண் மீதுள்ள மக்கள் பறவைகள்
விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்
யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும் தேவதேவா
ஞானாகாசத்து நடுவே நின்று நான்
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக. துன்பமும் மிடிமையும் நோவும்
சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம்
இன்புற்று வாழ்க என்பேன். இதனை நீ
திருச்செவிக்கொண்டு திருவுளமிரங்கி
அங்ஙனே யாகுக என்பாய் ஐயனே.


      மங்கலம் நல்கும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். யக்ஞம் சிறப்பாக நிறைவுற வேண்டுகிறோம். யக்ஞம் செய்பவருக்காக வேண்டுகிறோம். நமக்கு தேவதைகள் நன்மை செய்யட்டும். மனிதர்கள் எல்லோருக்கும் நன்மை உண்டாகட்டும். செடி கொடிகள் மேலோங்கி வளரட்டும். நம்மிடமுள்ள இரண்டு கால் பிராணிகளுக்கு மங்கலம் உண்டாகட்டும். நான்கு கால் பிராணிகளுக்கும் நலம் உண்டாகட்டும் என்ற வேதத்தின் கூற்றே இங்கு எதிரொலிக்கக் கேட்கிறோம்.   

No comments:

Post a Comment