பாரில்
எறும்பும் உயிர் பிழைக்கப் படும் பாடு முழுவதும் அறிந்திலீரோ என்றார் கவிமணி. ஆம்,
உலகில் ஒவ்வொரு பிராணியும் உயிர் வாழவே விரும்புகிறது.
“அநியாய
மரணமெய்தல் கொடுமை அன்றோ?
தேனான
உயிரை விட்டுச் சாகலாமோ?” என்று பாரதி
கேட்கும் போது, உயிருக்கும் உடம்புக்கும் உள்ள இந்த இயல்பான பாசமே வெளிப்படுகிறது.
“நோவு
வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்” என்றும்,
“கனக்கும்
செல்வம் நூறு வயது
இவையும்
தர நீ கடவாயே” என்றும்
“நூறு
வயது புகழுடன் வாழ்ந்து உயர்
நோக்கங்கள் பெற்றிட வேண்டுமென்றே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி என்றுரை செய்திடுவோம்”
என்றும் வேண்டும்போது எல்லோரையும்
போலத் தான் பாரதியும் நீண்ட ஆயுளை விரும்புகிறார் என்று நினைக்கிறோம்.
ஆனால்
பாரதி பிற்காலத்தில் பாடிய பாடல்களில் ஒரு மாற்றம் தெரிகிறது. அவர் நீண்ட ஆயுள் கேட்காமல்
சாகாமல் இருக்கும் அமர நிலை வேண்டும் என்று கேட்கிறார். மண்ணில் தெரியும் வானத்தை வசப்படுத்தவும்,
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் என்றில்லாமல் ‘இத்தரை
மீதிலே இப்போதே முக்தி சேர்ந்திட நாடிச் சுத்த அறிவு நிலையிற்’ களிக்கவும்
விரும்புகிறார். சாகாவரம் வேண்டியது மட்டுமல்ல, அதைத் தான் அடைந்து விட்டதாகவும் அவர்
கூறுகிறார்.
“நோவாலே
மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம்
சங்கராசாரியன் மாண்டான்
அதற்கடுத்த
இராமானுஜனும் போனான்
சிலுவையிலே
அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு
கருணையாலே கண்ணன் மாண்டான்
பலர்
புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்
பார்
மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்
மலிவு
கண்டீர் இவ்வுண்மை, பொய் கூறேன் யான்,
மடிந்தாலும்
பொய் கூறேன் மானுடர்க்கே.”
இந்தப் பாடல் சில கேள்விகளை நம்முள்
எழுப்புகிறது.
முதல் கேள்வி
பார்
மீது நான் சாகாதிருப்பேன் என்று பாரதி மனதாரத் தான் பாடினாரா அல்லது புலவர்க்குள்ள
உரிமையைப் பயன்படுத்தி மிகைப்படுத்திக் கூறினாரா?
இப்படி
நாம் சந்தேகப்படுவோம் என்று ஊகித்தோ என்னவோ ‘பொய் கூறேன்’ என்று இரு முறை சத்தியப் பிரமாணம் செய்கிறார் பாரதி.
சாகாமல் இருப்பது சாத்தியம் என்று அவர் சத்தியமாக நம்பினார். திருமூலர் கூறியது போல
திடம்பட மெய்ஞானம் சேர்வதற்காக அவர் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து கொண்டு விட்டதாக
நம்பினார்.
“நலிவுமில்லை
சாவுமில்லை கேளீர் கேளீர்
நாணத்தைக்
கவலையினைச் சினத்தைப் பொய்யை
அச்சத்தை
வேட்கை தனை அழித்து விட்டால்
அபபோது
சாவும் அங்கே அழிந்து போகும்.”
இதற்கு
விஞ்ஞான ரீதியான ஆதாரம் வேறு காட்டுகிறார். அக்காலத்திய பிரபல விஞ்ஞானி ஜகதீச சந்திர
வசு கூறுவதாக அவர் கூறுகிறார்,
“நாடியிலே
அதிர்ச்சியினால் மரணம் என்றான்.
கோபத்தால்
நாடியிலே அதிர்ச்சி உண்டாம்.”
எனவே
கோபம் முதலான தீய குணங்களை, அசுரர்களை அழித்து விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து
போகும், விடம் உண்டும் சாகாமல் இருக்கலாம் என்பது அவரது நம்பிக்கை. இந்த நம்பிக்கை
அவருக்கு எப்படி வந்தது?
புதுச்சேரியில்
அவர் தங்கி இருந்த போது அவருக்குச் சில ஞானிகளின் தொடர்பு ஏற்படுகிறது. குள்ளச்சாமி,
கோவிந்த ஸ்வாமி, யாழ்ப்பாணத்து சுவாமி இவர்கள் எல்லோருமே பெரும் யோகிகள். இவர்களில்
குள்ளச்சாமி அஷ்டாங்க யோக சித்தி பெற்றவர். ‘வானத்தை
இவ்வுலகிலிருந்து தீண்டும் வகை உணர்த்திக் காத்த பிரான்’ என்றும் ‘காய
கற்பம் செய்து விட்டான் அவன் வாழ்நாளைக் கணக்கிட்டு வயதுரைப்பார் யாருமில்லை’ என்றும் ‘குப்பாய ஞானத்தால் மரணமென்ற குளிர் நீக்கி எனைக் காத்தான்’ என்றும்
பாரதி அவரைப் போற்றுகிறார்.
குள்ளச்
சாமி இவருக்குச்
“சக்தி
தேவி வயப்பட்டுத் தனை மறந்து வாழ்தல் வேண்டும்” என்றும்
“நீ
குறிப்பை நீக்கி அநந்தமாம் தொழில் செய்தால் அமரனாவாய்” என்றும்
“வாசியை
நீ கும்பகத்தால் வலியக் கட்டி
மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும்
தேசுடைய பரிதி உரு கிணற்றினுள்ளே
தெரிவது போல உனக்குள்ளே சிவனைக் காண்பாய்”
என்றும் உபதேசிக்கிறார். அதாவது முன்
சொன்ன தீய குணங்களை நீக்கி மூச்சுப் பயிற்சியும் செய்து வந்தால் உள்ளத்தில் ஈசனைக்
காணலாம். தன்னை மறந்து ஈசன் வசப்பட்டு வாழ்ந்தால் மரணமிலாப் பெருவாழ்வு பெறலாம்.
சாமியார்களைப்
பார்த்ததும் கண்மூடித்தனமான பக்தி கொள்பவரல்லர் பாரதி.
“.......................தன்னுடை
அறிவினுக்குப் புலப்படல் இன்றியே
தேயமீது எவரோ சொலும் சொல்லினைச்
செம்மையென்று மனத்திடைக் கொள்வதாம்
தீய பக்தி இயற்கையும் வாய்ந்திலன்”
என்று அவர் தன்னைப் பற்றிச் சொல்லிக்
கொள்வதால் இதை அறியலாம்.
மனிதன்
அமரத் தன்மை அடைதலே வேத ரகசியம் என்று கூறிய அரவிந்தரின் தொடர்பும் அவரது
சிந்தனைகளில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதை அவரது பகவத்கீதை
முன்னுரையிலிருந்து அறியலாம்.
சாகாதிருத்தல், மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல்
வாழ்தல் – இதுவே கீதையின் ரஸம்.
அமரத் தன்மை- இதுவே வேத ரஹஸ்யம். இந்த வழியைக் காட்டுவது பற்றியே வேதங்கள் இத்தனை
மதிக்கப்படுகின்றன.
நித்ய ஜீவிகளாய் மண் மேல் அமரரைப் போல்
வாழ்வாரே நித்ய ஜீவன் முக்தராவர். அத்தகைய நிலையை இந்த உலகில் அடைதல் ஸாத்யமென்று
கடவுள் போதித்திருக்கிறார். அதற்கு உபாயமும் அவரே குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த
ஞானிகளைப் பற்றி நன்கு அறிந்து அவர்கள் கூறும் முறைகளை நன்கு ஆராய்ந்து, உண்மை என்று தன்
அனுபவத்தில் கண்ட பிறகு தான் அவர்
‘மண்ணின்
மீதிருந்து வானத்தைத் தீண்ட முடியும்’,
‘தேவசக்திகளை
நம்முள் நிலை பெறச் செய்யலாம்’,
‘உயிர்
வெள்ளம் கரையடங்கிப் பாயும்’,
‘உயிர்
நித்தம் நவமெனச் சுடர்தரும்’,
‘அத்வைத
நிலை கண்டால் மரணமில்லை’ என்றும் நம்புகிறார்.
இரண்டாவது கேள்வி
ராமன்
முதலான அவதார புருஷர்களுக்குத் தெரியாத ஒரு கலை தனக்குத் தெரிந்து விட்டதாகப் பாரதி
ஆணவத்துடன் மார் தட்டுகிறாரா?
இல்லை.
பாரதியை முழுமையாக அறிந்தவர்கள் அவரிடம் ஆணவத்தைக் காண முடியாது. அவதார புருஷர்கள்
சாகாக் கலையை அறிந்திருந்தும் அதைப் பயன்படுத்தாமல் தங்கள் அவதார நோக்கம் முடிந்தவுடன்
தங்களைக் கூற்றுக்கு இரையாக்கிக் கொண்டனர். ஆனால் நான் அதைப் பயன்படுத்துவேன் என்ற
கருத்தில் தான் அவர் அதைக் கூறுகிறார். எதற்காக?
அவருக்கு
நிறைவேற்ற வேண்டிய கடமை ஒன்று இருந்தது. பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திடும்
கடமை தான் அது. இந்நாட்டைத்
“தொல்லை
தீர்த்து உயர்வு, கல்வி, வெற்றி,
சூழும்
வீரம், அறிவு, ஆண்மை,
கூடும்
திரவியத்தின் வகைகள், திறல்
கொள்ளும்
கோடி வகைத் தொழில்கள் இவை
நாடும்படிக்கு
வினை செய்து இந்த
நாட்டார்
கீர்த்தி எங்கும் ஓங்கக் கலி
சாடும்
திறன்” பெற்றுக் கிருத யுகத்தினை நிலை நாட்டும்
மகத்தான பணி அது. அதற்கு நூறாண்டு, இருநூறாண்டு என்று கால எல்லை கொண்ட வாழ்வு போதாது.
இப் பணி நிறைவேறும் வரை அது எவ்வளவு காலமானாலும் சாகாமல் இருந்து ‘விசையுறு பந்தினைப் போல் உளம் வேண்டியபடி’ செல்லக்
கூடியதும், ‘அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டுறுதி
மாறாததும்’, ‘அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில்லாததுமான’ உடல் பெற்று
வாழவே விரும்புகிறார். தன் நலத்துக்காக அல்ல, மாநிலம் பயனுற வாழ்வதற்கே.
ராமனும்
கிருஷ்ணனும் பயன்படுத்தாத சாகாக் கலையை நான் பயன்படுத்துவேன் என்று கூறினாலும் அவர்களை
இவர் தாழ்வாக நினைக்கவில்லை என்பதற்கு மற்றொரு சான்று “சாகா வரம் அருள்வாய், ராமா” என்று ராமனையே இவர் வேண்டுவது தான்.
மூன்றாவது கேள்வி
அத்வைத
நிலை கண்டால் மரணமுண்டோ என்று வினவிய பாரதி, தான் அந்நிலையை அடைந்தாரா?
“நான்
புதியன், நான் கடவுள், நலிவிலாதோன்
என்றிந்த
உலகின் மிசை வானோர் போலே
இயன்றிடுவார்
சித்தரென்பார்”
என்று சித்தருக்கு இலக்கணம் கூறிய
அவர் வேறு ஒரு பாடலில் தன்னையும் ஒரு சித்தனாகக் கூறிக் கொள்கிறார். எனவே நான் கடவுள்
என்ற அத்வைத நிலையை அவர் அடைந்திருந்தார் என்று ஊகிக்கலாம்.
பிரகலாதன்
கதையை அத்வைத நோக்கில் சொல்லி வரும்போது “இந்த
எழுது கோல் தெய்வம். இந்த எழுத்தும் தெய்வம்” என்று கூறுவது
அவரது அத்வைத மனநிலையைக் காட்டுகிறது.
“வானில்
பறக்கும் புள்ளெல்லாம் நான்,” என்று அவர் பாடியது
அத்வைத நிலையில் இருந்தே.
“இன்பமாகி
நின்றாய் காளி என்னுளே புகுந்தாய்
பின்பு உன்னை அல்லால் பிறிது நானுமுண்டோ”
என்று கேட்பதிலிருந்து இறைப் பேராற்றலுடன்
இரண்டறக் கலந்த சமாதி நிலையைச் சில சமயங்களிலாவது அவர் அடைந்திருந்தார் என்பதை அறியலாம்.
நான்காவது கேள்வி
பாரதி
கண்ட அத்வைத நிலை அவரை மரணமடையாமல் இருக்கச் செய்ததா?
இல்லை.
அற்பாயுளில் அவர் மரணம் அடைந்து விட்டார். தவறு எங்கே நடந்தது?
“...........................நிலத்தின்
மீது
போராக
நோயாக மரணமாகப்
போந்திதனை
அழித்திடுவாள் புணர்ச்சி கொண்டால்
நேராக
மோன மகானந்த வாழ்வை
நிலத்தின்மிசை
அளித்து அமரத் தன்மை ஈவாள்” என்று அவர்
நம்பிய பராசக்தி அவரைக் கைவிட்டு விட்டாளா?
அல்லது
பொறுமையை நெடுநாள் காத்த தருமன் இறுதியிலே பொறுமை நெறி தவறி விட்டான் என்பது போல இவரும்
முன் அடித்து விரட்டிய தீய குணங்களுக்கு இடம் கொடுத்து விட்டாரா?
அல்லது
நம் கண்களிலிருந்து அவரது ஊன உடல் மறைந்தாலும்,
“பொந்திலே
உள்ளாராம், வனத்தில் எங்கோ
புதர்களிலே இருப்பாராம், பொதியை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலைப் போல
சற்றே அங்கங்கே தென்படுகின்றாராம்”
என்று அவரால் வர்ணிக்கப்பட்ட சித்தர்களைப்
போல இவரும் சற்றே அங்கங்கே தென்படுகின்றாரா?
எல்லாவற்றிற்கும்
விடை ‘இல்லை’ என்பது தான்.
உண்மை
என்னவென்றால் விதி வலியது. தன்னை எள்ளி நகையாடி, பூமியில் கிருத யுகத்தை நிலைநாட்ட,
அடங்காத ஆர்வமும் அளவிலாச் சக்தியும் உடையவனாக ஒருவன் வளர்ந்து வருவதை அதனால் சகித்துக்
கொள்ள முடியவில்லை. பாரதியும் விதியின் வலிமையை உணர்ந்தே இருந்தார்.
“ஊழ்
கடந்து வருவதும் ஒன்றுண்டோ
உண்மை
தன்னிலோர் பாதி உணர்ந்திட்டேன்”
பாதி
உண்மையை உணர்ந்து கொண்டு யமனுக்குச் சவால் விடும் பாரதியைப் பார்த்து விதி நகைத்திருக்க
வேண்டும்.
தான்
ஞானியரிடமிருந்து கற்றுக் கொன்ட அறிவு மட்டும் தனக்குச் சாகா நிலை தந்து விடாது என்பதை
பாரதி உணர்ந்திருந்தார். அதனால் தான் அவர் பாடுகிறார்,
“சாகாமல்
இருப்பது நம் சதுரால் அன்று,
சக்தி
அருளால் அன்றோ பிறந்தோம் பார் மேல்”
“முன்னர்
நமது இச்சையினால் பிறந்தோமில்லை
முதல்
இறுதி இடை நமது வசத்தில் இல்லை”
நமது
ஆராய்ச்சி, அறிவு (சதுர்) இவற்றிற்கெல்லாம்
அப்பாற்பட்டது சக்தியின் அருள் என்று அவர் சக்தியைச் சரணடையும்போது “எல்லாத் தர்மங்களையும்
விட்டு விட்டு என்னைச் சரண் அடைக” என்று கீதாநாதன் சொன்னதை அப்படியே கடைப்பிடித்த பாரதியைக் காண்கிறோம்.
கீதையை
முழுதும் ஓதி உணர்ந்த பாரதி ஒரு கால கட்டத்தில் உணர்ச்சி வேகத்தில் கீதையின் மற்றொரு
கருத்தை, அதாவது ‘தர்மத்திற்கு
எப்பொழுதெல்லாம் தீங்கு வருமோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன்’ என்று கண்ணன் சொன்னதை
மறந்து விட்டார்.
இந்த
நாட்டை உயர்த்த வேண்டும் என்ற உணர்ச்சி மேலோங்கும்போது ‘அதற்கு இந்த ஆயுள்
போதாது, சாகா நிலை பெற்றுத் தான் அதைச் சாதிக்க முடியும், சக்தியைப் பூரணமாகச் சரணடைந்து
விட்டதால் அவள் அதை எனக்கு நிச்சயம் அருள்வாள்’ என்று அவர் நம்பினார்.
சக்தியின்
லீலைகளை யாரே முழுமையாக அறிய முடியும்? இந்திய மக்களைக் காப்பாற்றச் சுதந்திரப் போராட்ட காலத்தில்
பாரதி உள்ளிட்ட பல சித்தர்களை அனுப்பிய பராசக்தி அவ்வக்காலத் தேவைக்கு ஏற்ப மேலும்
அவதார புருஷர்களை அனுப்பிக் கொண்டேயிருப்பாள், அவர்களது வரிசை பாரதியுடன் முற்றுப்
பெறாது என்பதை அவர் சற்று மறந்த நேரத்தில் பிறந்தவை தான் “நான் சாகாதிருப்பேன்” என்ற வார்த்தைகள்.
ஒன்று
மட்டும் உறுதியாகக் கூறலாம். பாரதிக்கு வருங்காலம் உணரும் திறன் இருந்தது. ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோம் என்று அன்றே அவர் பாடிய பள்ளு இதை உறுதிப்படுத்துகிறது. தான் அற்பாயுளில்
மாளப் போகிறோம் என்பதையும் அவர் உணர்ந்திருக்க வேண்டும். தன் பாடல்களி்ல் இருபதுக்கும்
மேற்பட்ட இடங்களில் அவர் நீண்ட ஆயுள், சாகா வரம் வேண்டுவதன் காரணம் இதுவாகத் தான் இருக்க
வேண்டும்.
மரணமும்
அஞ்சேன், நோயினை அஞ்சேன் என்று அவர் எவ்வளவு தைரியமாகப் பேசினாலும் அவ்வளவு விரைவில்
மரணத்தை ஏற்றுக் கொள்ள அவருக்கு விருப்பம் இல்லை. தேனான உயிரை விட்டுச் சாகலாமோ
என்ற சொற்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.
இவ்வுலகம்
இனியது, இதிலுள்ள வான் இனியது என்று இவ்வுலக வாழ்வின் ஒவ்வொரு அணுவையும் ரசித்துத்
துய்த்தவர் பாரதி. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று வியந்து இறைவனுக்கு நன்றி கூறும்
அவர் இவ்வுலகை விட்டு மறைய விரும்பாததில் ஆச்சரியம் இல்லை. பல வேடிக்கை மனிதரைப் போல
தேடிச் சோறு நிதம் தின்று வாழ்க்கை நடத்தியிருந்தால் கொடுங் கூற்றுக்கு இரையென மாய்வதை
அவர் விரும்பியிருக்கக் கூடும். அவருக்கோ எல்லாம் இன்ப மயம். தீக்குள் விரலை வைத்த
போதும் நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் பெற்றவர் அவர்.
இவ்வாறாக,
வாழவேண்டும் என்ற தீவிர விருப்பமும் அநியாய மரணம் எய்தப் போகிறோம் என்ற உள்ளுணர்வும்
மோதியதால் ஏற்பட்ட போராட்டம் தான் பாரதியைப் பல இடங்களில் நீண்ட ஆயுள் பற்றிப் புலம்ப
வைத்திருக்கிறது.
ஆனால்
பாரதியின் விருப்பம் வீண் போகவில்லை. அவரது ஒவ்வொரு பாடலிலும், கட்டுரையிலும் அவரது
ஆன்மா உயிர்த் துடிப்புடன் விளங்குவதைக் காண்கிறோம்.
No comments:
Post a Comment