Pages

Thursday, August 1, 2013

தீக்குள் விரலை வைத்தால்




      பாரதியின் கவிதைகளைப் படித்துக் கொண்டே கண்ணயர்ந்தேன். கனவில் முண்டாசு தெரிந்தது. கம்பீரமான குரலில் பாட்டொலியும் கேட்டது.

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா உன்னைத்
தீண்டுமின்பம்  தோன்றுதடா நந்தலாலா

      அவர் பாடி முடித்ததும் நான் அவருடன் வார்த்தையாடத் தொடங்கினேன்.
     
      குருவே, வணக்கம். ஐயம் தீர்த்து விட வேண்டும். மிகைப்படுத்துவது என்பது புலவர்களுக்குள்ள உரிமை தான் என்றாலும், அது அளவுக்கு மீறலாமா?  தீக்குள் விரலை வைத்தால் இன்பம் தோன்றுமா? பொய்மை இகழ் என்று உபதேசித்த தாங்களே பொய் கூறலாமா?

மலிவு கண்டீர் இவ்வுண்மை பொய் கூறேன் யான்
மடிந்தாலும் பொய் கூறேன் மானிடர்க்கே

      அப்படியானால் நீங்கள் அஞ்சாமல் தீக்குள் விரலை வைத்ததுண்டா?

அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில்லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம்
ஒம் சக்தி ஓம் சக்தி ஓம்

      தீ தங்களைச் சுடுவதில்லையா? அல்லது தீமிதி மிதிப்பவர்கள் போல, சூட்டை உணராத அளவுக்கு உணர்ச்சி வேகம் அடைகிறீர்களா?

காற்றிலே குளிர்ந்ததென்னே கண்ணபெருமானே
கனலிலே சுடுவதென்னே கண்ணபெருமானே

      தீயோ சுடுகிறது என்கிறீர்கள். சூடாகவும் குளிர்ச்சியாகவும் விளங்குவது தெய்வமே என்று தங்கள் மனம் நம்பினாலும் தீக்குள் வைத்த விரல் இரணமாகி விடுமே, இன்பமா தோன்றும்?

இரணமும் சுகமும் பழியும் நற்புகழும்
யாவுமோர் பொருளெனக் கொள்வேன்

      ஒரு விரல் இரணமாவது பற்றித் தாங்கள் பொருட்படுத்தாது இருக்கலாம். ஒரு புலி துரத்தி வந்தால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவீர்களா, மாட்டீர்களா?

தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு
சிந்தையிற் போற்றிடுவாய் நன்னெஞ்சே
அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்
அவளைக் கும்பிடுவாய்.

      தீயும் பராசக்தி, புலியும் பராசக்தி என்று தாங்கள் நம்பலாம். அதனால் அஞ்சாமல் இருக்கலாம். துன்பத்தைச் சகித்துக் கொள்ளலாம். ஆனால் அது எப்படி இன்பமாக இருக்கும்?

இன்பமாகி நின்றாய் காளி என்னுளே புகுந்தாய்
பின்பு நின்னை அல்லால் காளி பிறிது நானுமுண்டோ?

      இந்த மனநிலை தங்களுக்கு எப்படி வந்தது?

சூழ்ந்ததெல்லாம் கடவுள் எனச் சுருதி சொல்லும்.

      சுருதி சொன்ன இக்கருத்தைச் சங்கரர் அத்வைதம் என்ற பெயரில் உபதேசித்ததாகச் சொல்கிறார்கள். நான் படிப்பறியாத பாமரன். எனக்குப் புரியும்படியாகத் தாங்கள் அதை விளக்கவேண்டும்.

கேளப்பா சீடனே கழுதை ஒன்றைக்
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப் பார்த்திரு கரமும் சிரமேற் கூப்பி
சங்கர சங்கர வென்று பணிதல் வேண்டும்.
கூளத்தினை மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்

      நான் வெறும் மண்ணாங்கட்டி. எந்த வித்தையும் அறியாத எளியேன். விண் போன்று உயர்நது நிற்கும் தங்களைப் போன்ற குருமார்களைத் தெய்வமாக நினைக்க என்னால் முடிகிறது. மற்றவற்றைத் தெய்வமாகக் கருத முடியவில்லையே.

விண் மட்டும் தெய்வம் அன்று மண்ணும் அஃதே

சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்;
சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,
வித்தையிலாப் புலையனு மஃதென்னும் வேதம்;

      நானும் தெய்வமா? ஆஹா, வானத்தில் பறப்பது போல உணர்கிறேன், கவியரசே.

பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்

      கேட்கவே புல்லரிக்கிறது. நானும் தெய்வம், என்னைச் சூழ்ந்துள்ள உயிர்கள், பொருள்கள் யாவும் தெய்வம். இனி எங்களுக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை, பகையும் இல்லை. அஞ்சுதல் இல்லை, கோபமும் இல்லை. கவலைகள், துன்பங்கள் மறைந்தன. அன்பு ஒன்றே எங்கும் நிரம்பி இருப்பதைக் காண்கிறேன்.

அன்பென்று கொட்டு முரசே அதில்
ஆக்கமுண்டாமென்று கொட்டு
துன்பங்கள் யாவுமே போகும் வெறும்
சூதுப் பிரிவுகள் போனால்

      என்னைப் புதிய உயிராக்கி எனக்கு
      ஏதும் கவலையறச் செய்து மதி
      தன்னை மிகத் தெளிவு செய்து
      என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்தீர்கள்

      நன்றி, குருவே, மீண்டும் வணங்குகிறேன். 

No comments:

Post a Comment