வேதக்
கருத்துகளைத் தன் பாடல்களில் பாரதி பயன்படுத்தியதைப் பார்த்தோம். வேத சூக்தங்களில்
சிலவற்றை அவர் மொழிபெயர்த்ததையும்
அறிந்தோம். ஒரு சிறிய வேத மந்திரத்தை விளக்கிப் பாரதி பல பக்கங்களில் எழுதிய வசன
கவிதை ஒன்றையும் இப்பொழுது பார்ப்போம்.
வேத்தில் வரும் ‘நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி’ (காற்றே, நீயே
கண் கண்ட தெய்வம்)
என்பதற்கு விளக்கமாகப் பாரதி பதினைந்து அழகிய வசன கவிதைகள் எழுதியுள்ளார். அவற்றில் ஒரு சில மட்டும் கீழே
சுருக்கித் தருகிறேன்
1 ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஒரு மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக்
கயிறு தொங்குகிறது. எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் ஸ்னேகம். நாங்கள் அடிக்கடி
வார்த்தை சொல்லிக் கொள்வதுண்டு. ஒரு கயிறா சொன்னேன்?
இரண்டு கயிறு உண்டு. ஒன்று ஆண். மற்றொன்று பெண். கணவனும் மனைவியும். ஆண் கயிற்றுக்குக் கந்தன் என்று பெயர். பெண் கயிற்றுக்குப் பெயர்
வள்ளியம்மை. அவை இரண்டும் ஒன்றை ஒன்று காமப் பார்வை பார்த்துக் கொண்டும் புன்சிரிப்பு
சிரித்துக் கொண்டும் வேடிக்கைப் பேச்சு பேசிக்கொண்டும் ரஸப் போக்கிலே இருந்தன.
இங்ஙனம் நெடும் பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்குக் களியேறிவிட்டது.
நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்து விட்டு வரப் போனேன்.
நான் திரும்பி வந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக் கொண்டிருந்தது.
கந்தன் என் வரவை எதிர் நோக்கி இருந்தது.
எங்கேடா போயிருந்தாய் வைதீகம்?
சொல்லிக்கொள்ளாமல் போய் விட்டாயே என்றது. அம்மா நல்ல நித்திரை
போலிருக்கிறது என்று கேட்டேன். ஆகா அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து
வெடித்து என் முன்னே நின்ற தேவனுடைய மகிமையை என்னென்று சொல்வேன்?
காற்றுத் தேவன் தோன்றினான். அவனுடல் விம்மி விசாலமாக
இருக்குமென்று நினைத்திருந்தேன். வயிர ஊசி போல் ஒளி வடிவமாக இருந்தது.
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி
காற்றே போற்றி நீயே கண் கண்ட தெய்வம்.
அவன் தோன்றிய போதிலே வான முழுதும் ப்ராண
சக்தி நிரம்பிக் கனல் வீசிக் கொண்டிருந்தது. ஆயிர முறை அஞ்சலி செய்து
வணங்கினேன். காற்றுத் தேவன் சொல்வதாயினன்- மகனே ஏதடா கேட்டாய்?
அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா?
இல்லை. அது செத்துப் போய் விட்டது. நான் ப்ராணசக்தி.
என்னுடனே உறவு கொண்ட உடல் இயங்கும். என் உறவு இல்லாதது சவம்.
நான் ப்ராணன். என்னாலே அச் சிறு கயிறு உயிர்த்திருந்தது.
சுகம் பெற்றது. சிறிது களைப்பெய்தியவுடனே அதை உறங்க- இறக்க-
விட்டு விட்டேன். துயிலும் சாவு தான். சாவும் துயிலே. நான் விளங்குமிடத்தே அவ்விரண்டும் இல்லை.
மாலையில் வந்து ஊதுவேன். அது மறுபடி பிழைத்து விடும். நான் விழிக்கச் செய்கிறேன்.
அசையச் செய்கிறேன். நான் சக்தி குமாரன். என்னை வணங்கி வாழ்க.
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி
த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்ம வதிஷ்யாமி
2 நடுக் கடல்.
தனிக் கப்பல். வானமே சினந்து வருவது போன்ற புயற் காற்று.
ஹதம். இரு நூறு உயிர்கள் அழிந்தன. ஊழி முடிவும் இப்படியே தானிருக்கும்.
சக்தி காற்றாகி விடுகிறாள். காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கிறான்.
அவற்றில் உயிர் பெய்கிறான். காற்றே நீரில் சூறாவளி காட்டி,
வானத்தில் மின்னலேற்றி, நீரை நெருப்பாக்கி நெருப்பை நீராக்கி, நீரைத் தூளாக்கி,
தூளை நீராக்கிச் சண்ட மாருதம் செய்கின்றான். காற்றே யுக முடிவு
செய்கின்றான். காற்றே காக்கின்றான். அவன் நம்மைக் காத்திடுக.
3 வீமனும் அனுமனும் காற்றின் மக்கள்
என்று புராணங்கள் கூறும். உயிருடையன வெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம்.
உயிர் தான் காற்று. தோன்றுதல், வளர்தல், மாறுதல், மறைதல் எல்லாம் உயிர்ச் செயல். உயிரை வாழ்த்துகின்றோம்.
4 எறும்பு உண்ணுகிறது,
உறங்குகின்றது, மணம் செய்து கொள்கின்றது, குழந்தை பெறுகின்றது,
ஓடுகிறது, தேடுகிறது, போர் செய்கிறது, நாடு காக்கிறது. இதற்கெல்லாம் காற்று தான் ஆதாரம். மகா சக்தி காற்றைக் கொண்டு தான் உயிர்
விளையாட்டு விளையாடுகிறாள்.
5 காற்றுக்கு அஞ்சி உலகத்திலே
இன்பத்துடன் வாழ முடியாது. மலைக் காற்று நல்லது. கடற் காற்று மருந்து. வான் காற்று நன்று. ஊர்க் காற்றை மனிதர் பகைவனாக்கி விடுகின்றனர்.
அவன் வரும் வழியிலே எவ்விதமான அசுத்தமும் கூடாது.
அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்து வைப்போம்.
அவன் சக்தி குமாரன். மகாராணியின் மைந்தன். அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம். அவன் வாழ்க. (சுற்றுச் சூழல் பற்றி இன்று ஏற்பட்டிருக்கும்
விழிப்புணர்வுக்கு அன்றே வேத அடிப்படையில் வித்திட்டவர் பாரதி)
6 நொய்ந்த வீடு,
நொய்ந்த உடல், நொய்ந்த உயிர், நொய்ந்த உள்ளம் இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து நொறுக்கி விடுவான்.
ஆதலால் மானிடரே வாருங்கள். வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம். உடலை உறுதி கொள்ளப் பழகுவோம்.
உயிரை வலிமையுற நிறுத்துவோம். உள்ளத்தை உறுதி செய்வோம்.
7 காற்றைப் புகழ நம்மால் முடியாது.
அவன் புகழ் தீராது. அவனை ரிஷிகள் ப்ரத்யக்ஷம் ப்ரம்ம என்று போற்றுகிறார்கள்.
ப்ராண வாயுவைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக.
அபானனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க. வ்யானனைத் தொழுகின்றோம்
அவன் நம்மைக் காக்க. உதானனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க.
காற்றின் செயல்களை எல்லாம் பரவுகின்றோம். உயிரை வணங்குகின்றோம்.
உயிர் வாழ்க. புலவர்களே, காலையில் எழுந்தவுடன் உயிர்களை எல்லாம் போற்றுவோம்.
நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி
No comments:
Post a Comment