Pages

Thursday, August 1, 2013

இப்போதே முக்தி



               
                தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கும் புருஷார்த்தங்கள் எனப்படுகின்றன. இதையே தமிழில் அறம் பொருள் இன்பம் வீடு என்கிறோம். இவை ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் அடைய வேண்டியவை என்று கூறப்படுகின்றன.
               
      தரும நெறிப்படி நடக்க வேண்டும். பொருள் தேடி உண்ண வேண்டும். உலக இன்பங்களைச் சுவைக்க வேண்டும். பின் மோட்சம் அடைய வேண்டும். இந்த மோட்சம் என்ற சொல்லுக்கு விடுதலை, விடுபட்டு நிற்றல் என்று பொருள். இறந்தபின் அடைய வேண்டிய நிலை என்று தான் அனைவரும் இதற்குப் பொருள் கூறுகின்றனர்.
               
      ஆனால் மோட்சம் என்பது இறந்த பிறகு அடையப்பட வேண்டியது என்பது வேதத்தின் உண்மையான கருத்து அல்ல. வேதத்தின் உண்மையான கூற்றுப்படி நான்காவது புருஷார்த்தம் இறந்த பிறகு அடையும் சொர்க்கப் பதவி அல்ல, பயத்திலிருந்து விடுபடுவதையே அது குறிக்கிறது என்கிறார் விவேகானந்தர்.
               
      பாரதியாரின் பாடல் ஒவ்வொன்றிலும் இந்த வேதக்                         கருத்து ஆதார சுருதியாக ஒலிப்பதைக் கேட்கலாம்.
               
      மோட்சம் என்பது இறந்த பிறகு கிடைப்பது அல்ல என்பதை அவர் வாக்கிலேயே கேட்போம்.

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர் அவர் சொலும் சாத்திரம்
பேயுரையாமென்று இங்கு ஊதேடா சங்கம்
               
இத்தரை மீதினில் இந்த நாளில்
இப்போதே முத்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையில் களிப்பவர்
தூயவராம் என்று இங்கு ஊதேடா சங்கம்
                               
                கவலைப்படுதலே கருநரகம்மா, கவலையற்றிருத்தலே முக்தி என்று அவரது விநாயகர் நான்மணிமாலை விளக்குகிறது.

                விடுதலை என்ற தலைப்பில் பாரதி நான்கு பாடல்கள் பாடியிருக்கிறார். நான்கில் எதுவும் அரசியல் சுதந்திரம் அடைவது பற்றியோ இறந்த பின் அடைவதாகச் சொல்லப்படும் சுவர்க்கம் பற்றியோ பேசவில்லை.

                பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை என்ற பாட்டில் ஜாதி சமத்துவம், ஆண் பெண் சமத்துவம், ஏழை பணக்காரன் சமத்துவம், ஆண்டான் அடிமை என்ற வேறுபாடற்ற சமத்துவம் இவை தான் பேசப்படுகின்றன. சமத்துவமற்ற நிலையிலிருந்து விடுதலை பெறுவதே இதன் கருப்பொருள். எல்லாம் கடவுளின் ரூபங்கள் என்ற வேதக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு பாரதி இந்த சமத்துவத்தை வலியுறுத்துகிறார். இது சமுதாய வாழ்வின் விடுதலை.

                மற்ற மூன்று பாடல்களிலும் பாரதி மனிதன் தன் சொந்த வாழ்வில் தானாக ஏற்படுத்திக்கொண்ட தளைகளிலிருந்து விடுதலை பெறுவதைக் கூறுகிறார்.

                உயிர்க் கூட்டங்களில் மனிதன் மட்டும் தான் உணவு தேடுவதை ஒரு சுமையான வேலையாகச் செய்து கொண்டவன். தாவரங்களோ பறவைகளோ மனிதன் அளவு அலட்டிக் கொள்வதில்லை. ஏனெனில் அவற்றின் உணவுத் தேவை சொற்பமானது. உணவு தேடுவதையும் உண்பதையும் சுமையான கடமையாகக் கருதாமல் அவை மகிழ்ச்சியாகச் செயல்படுகின்றன. மரங்களும் செடி கொடிகளும் எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ என்று கேட்கிறார் பாரதி.

                அவரது முக்தி இலக்கணம் சிட்டுக்குருவியினது போன்ற வாழ்க்கை தான். அது எப்படிப் பொழுது போக்குகிறது?

                முட்டை தருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
                முந்த உணவு கொடுத்து அன்பு செய்திங்கு
                முற்றத்திலேயும் கழனி வெளியிலும்
                முன் கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
                மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப் பின்
                வைகறையாகு முன் பாடி விழிப்புற்று
                விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்
                சிட்டுக்குருவி போலே
               
                சோம்பேறித்தனமாக ஒரு வேலையும் செய்யாமல் கதை பேசிப் பொழுது போக்குவது தான் முக்தி என்று பாரதி கருதுகிறாரா? அல்ல, அல்ல. அன்பு செய்து என்று ஒரு வார்த்தை போட்டிருக்கிறார் கவனியுங்கள்.

                விடுதலை என்று தலைப்பிட்ட மற்றொரு பாடலில் பாரதி கூறுகிறார்,

                                        ....................பாடுபடல்வேண்டா               
                ஊனுடலை வருத்தாதீர், உணவு இயற்கை கொடுக்கும்
                உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்

                பாடுபடல் வேண்டா, ஊனுடலை வருத்தாதீர் என்று சொல்லும்போது சோம்பேறித்தனத்தைத் தான் அவர் விடுதலை என்று கூறுகிறாரோ என்று தோன்றுகிறது. அடுத்த வரியில் தொழில் அன்பு செய்தல் என்று கூறுவதைச் சற்று சிந்தித்தால் தான் உண்மையான பொருள் விளங்கும்.

                மீண்டும் விநாயகர் துதிக்குப் போவோம். அதில் கடமைகள் யாவை என்று பட்டியல் இடுகிறார். தன்னைக் கட்டுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், இறைவனைப் போற்றுதல் இந்நான்கே பூமியில் எவர்க்கும் கடமை என்கிறார். பிறர் நலம் வேண்டுதல் என்பது மற்றவர்க்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தல் என்று பொருள். பிறர் துயர் தீர்த்தல் என்பது அதிலிருந்து வேறானது என்பது புலனாகின்றது. அங்கு அன்பு செய்தல் என்று கூறியதைத் தான் இங்கு பிறர் துயர் தீர்த்தல் என்கிறார். இது மனத்தாலோ வாய்ச் சொல்லாலோ செய்யப்படும் பிரார்த்தனை அல்ல. இது உடலால் உழைப்பதையே குறிக்கும். தனக்காக உழைக்காமல் பிறருக்காக உழைத்தால் அது ஊனுடலை வருத்தாது. அது பாடாக, சுமையாகத் தோன்றாது. எனவே தன் உணவுக்காக, தன் சுகத்துக்காக உழைக்கும்போது தான் கவலைகளும் பயங்களும் துயரங்களும் ஏமாற்றங்களும் தோன்றும். அவ்வாறின்றி பிறருக்காக உழைப்பது கவலையிலிருந்து விடுபட வழியாகிறது. அதுவே முக்தி என்பது பாரதியின் கருத்து.

                பாரான உடம்பினிலே மயிர்களைப் போல்
                பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கையாலே
                நேராக மானுடர் தாம் பிறரைக் கொல்ல
                நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா
                காரான நிலத்தைப் போய்த் திருத்த வேண்டா
                கால்வாய்கள் பாய்ச்சுவதிற் கலகம் வேண்டா
                சீரான மழை பெய்யும் தெய்வமுண்டு
                சிவன் செத்தாலன்றி மண் மேல் செழுமையுண்டு

                ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்
                அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண்டாகும்
                பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப்
                பின்னதற்குக் காவலென்று பேருமிட்டு
                நீதியில்லாக் கள்வர் நெறியாயிற்றப்பா
                நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சியன்றோ

                தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் அன்பு செய்து கொண்டிருந்தால் உணவு இயற்கை கொடுக்கும் என்பதை மற்றொரு பாட்டிலும் தெளிவுபடுத்துகிறார்,

                நமக்குத் தொழில் கவிதை நாட்டுக் குழைத்தல்
                இமைப்பொழுதும் சோராதிருத்தல் - உமைக்கினிய
                மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
                சிந்தையே இம்மூன்றும் செய்.


                இவ்வாறு ஊருக்கு உழைப்பதன் மூலம் தன்னைப் பற்றிய கவலையைத் துறந்து வாழும் வழியை அடைவது இவ்வுலகில் வாழும்போது தான் முடியும். அதைத் தான் பாரதி மண்ணுலகிலிருந்து வானகத்தைத் தீண்டுவது என்கிறார்.

1 comment:

  1. பாரதியாரின் கவிதைகள் ஆழ்ந்த தத் து வார் த் தங்களை க் கொண்டவை. அவர் ஒரு மகா ஞானி. அவற்றை மேலெழுந்தவாரியாகப் புரிந்து கொள்வது அவர் ஞானத்திற்குச் செய்யப்படும் அநீதி. இந்தச் சி ட் டு க் குரு வி யின் விடுதலையை ஜீவன் முக்திக்கு ஒப்பிட்ட உங்களுக்குக் கோடி நமஸ்காரம். கடமைகளைக் கர்ம யோகமாய்ச் செய்வதற்கு எப்பேர்ப்பட்ட உதாரணம். நான் நிதய சுத்த புக்த முக்த வஸ்து என்பதைக் குறிக்கச் சி ட் டு க் குரு வி யை த் தேர்ந்ட்கெடுத்த பாரதியின் அறிவு வியக்க வைக்கிறது. அதை ஆழகு தமிழில் கொடுத்த உங்கள் விவேகம் மலைக்க வைக்கிறது. நன்றி

    ReplyDelete