பாரதி எல்லா இந்து
தெய்வங்களையும் அல்லாவையும் ஏசுவையும் போற்றிப் பாடியுள்ளார் என்றாலும் விநாயகர்
ஒருவருக்குத் தான் அவர் நான்மணிமாலை பாடிச் சூடியுள்ளார். விநாயகரைக் குறிப்பதாகக் கருதப்படும் “கணானாம் த்வா கணபதிம்
ஹவாமஹே” என்ற வேத மந்திரத்தின் பொருளையும் அதில் மறவாமல்
குறிப்பிடுகிறார்.
வேத முனிவர்
விரிவாப் புகழ்ந்த
பிருகஸ்பதியும்
பிரமனும் யாவும்
தானேயாகிய
தனி முதற் கடவுள்
என்று வாழ்த்துகிறார்.
பிற்காலத்தில்
ஏற்பட்டதாயினும் தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் விநாயகர் துதியாகிய
சுக்லாம்பரதரம் விஷ்ணும் என்ற சுலோகத்தையும் அவர் மறக்கவில்லை.
வெள்ளாடை
தரித்த விட்டுணு என்று
செப்பிய
மந்திரத் தேவனை
முப்பொழுதேத்திப்
பணிவது முறையே.
மேலும் விநாயகரை ஆர்ந்த
வேதப் பொருள் காட்டும் தீபன், வேதச் சுடர், வேத காரணன் என்றும் போற்றுகிறார். விநாயகர்,
ஸத்தெனத் தத்தெனச் சதுர் மறையாளர் நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள். எல்லா மதங்களுக்கும் பொதுவான முழுமுதற் கடவுளுக்கு உள்ள பல பெயர்களில்
விநாயகர் என்பதும் ஒன்று என்பது தான் பாரதியின் கொள்கை. அவர் விநாயகருக்குச் செய்யும் அர்ச்சனை நாமாவளியைப் பார்த்தால் எல்லா
தெய்வங்களின் பெயர்களும் அதில் வந்து விடுகின்றன.
பரம் பொருளேயோ பரம் பொருளேயோ
ஆதி மூலமே
அனைத்தையும் காக்கும்
தேவ தேவா
சிவனே கண்ணா
வேலா சாத்தா
விநாயகா மாடா
இருளா சூரியா
இந்துவே சக்தியே
வாணீ காளீ
மாமகளேயோ
இன்னொரு பாடலில் இன்னும்
ஒரு படி மேலே போய்ப் பிற மத தெய்வங்களின் பெயர்களையும் சூட்டுகிறார்.
விநாயக
தேவனாய் வேலுடைக் குமரனாய்
நாராயணனாய்
நதிச் சடை முடியனாய்
பிறநாட்டிருப்போர்
பெயர் பல கூறி
அல்லா யெஹோவா
எனத் தொழுதன்புறும்
தேவரும் தானாய்
திருமகள் பாரதி
உமையெனும்
தேவியர் உகந்த வான் பொருளாய்
உலகெலாம்
காக்கும் ஒருவனைப் போற்றுதல்.
புராணங்களை ஒட்டி
விநாயகரைக் கறையுண்ட கண்டன் மகன், சக்தி மகன், அரங்கத்திலே திருமாதுடன்
பள்ளிகொண்டான் மருகன் என்று அழைத்தாலும் அவர் புராணக் கதைகளின்படி விநாயகரைப்
பெருவயிறன் (லம்போதரன்) என்றோ, அருணகிரியார் பாடியபடி ‘மிக்க அடிசில் கடலை
பட்சணமெனக் கொள் அருள் விக்கின சமர்த்தன்’ என்றோ அக்காலப் பள்ளி
மாணவர்களின் தோத்திரப் பாடலின்படி ‘நூறு குடலை மாம்பழம்
நொடிக்கும் அளவில் அமுது செய்ய வல்ல பிள்ளாய்’ என்றோ ஓரிடத்திலும்
குறிப்பிடவில்லை. ஏன்? எல்லாம் வல்ல கடவுளுக்குப் பெருந் தீனி தின்பது சிறப்புச் சேர்க்கும் ஒரு
செயலா? கடவுளை உணவு உண்பதில் சமர்த்தன் என்று குறிப்பிட்டால்
வழிபடுவோருக்கும் அதுவே வழக்கமாகி விடும் என்று பாரதி கருதி இருப்பார்.
மனிதர்கள் எல்லோரும் ஒரே
மாதிரியானவர்கள் அல்லர். ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொருவிதமான மூர்த்தி மனதுக்கு ஏற்றதாக இருக்கிறது. சிவனின் உக்ர தோற்றத்தில் ஒருவருக்கு ஈடுபாடு ஏற்படுகிறது என்றால்
மற்றவருக்கு நாராயணனின் பள்ளி கொண்ட தோற்றம் அமைதி தருகிறது. குறும்பு செய்யும் கண்ணன் ஒருவனுக்கு மகிழ்ச்சி தந்தால் மற்றவனுக்குக்
கோபத்துடன் வேலேந்தும் முருகன் ஆறுதல் தருகிறான். சோகமே வடிவான ஏசு
ஒருவனுக்கு ஈடுபாடு தருமானால் இன்னொருவனுக்கு ஆனந்தமே வடிவான கணபதி மகிழ்ச்சி
தருகிறார். விநாயகரைப் பார்த்து பாரதி பாடுகிறார் கேட்போம்.
எனக்கு
வேண்டும் வரங்களை
இசைப்பேன்
கேளாய் கணபதி
மனதிற் சலனம்
இல்லாமல்
மதியில்
இருளே தோன்றாமல்
நினைக்கும்போது
நின் மவுன
நிலை வந்திட
நீ அருள் செய்வாய்
கனக்கும்
செல்வம் நூறு வயது
இவையும் தர
நீ கடவாயே
‘யத்பாவயஸி தத் பவஸி’ என்ற பழமொழிப்படி எந்த
உருவத்தை மனதில் தியானிக்கிறோமோ அந்த உருவத்தின் தன்மைகள் நம்மிடம் படியும். ஆம். அசையாமல் உட்கார்ந்திருக்கும் கணபதியை நாம் வழிபட்டால்
நமக்கும் அவருடைய மவுன நிலை சித்திக்கும். மனதில் சலனமோ மதியில்
இருளோ தோன்றாது. தலையில் இடி விழுந்தால்
சஞ்சலப்படாமல் இருக்க முடியும். ஏது நிகழினும் நமக்கென்ன
என்று இருக்க முடியும். சலனமற்ற மனமும் தெளிவான
புத்தியும் தானே நாம் பெறக் கூடிய வரங்களுள் மிகச் சிறந்தவை.
No comments:
Post a Comment