Pages

Saturday, June 8, 2013

எத்தனை கோடி இன்பம்




                வேத ரிஷிகள் உலக வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவையும் ரசித்து ரசித்து அனுபவித்தவர்கள். காணும் ஒவ்வொரு பொருளிலும், கேட்கும் ஒவ்வொரு ஒலியிலும் அவர்களுக்கு இன்பம் பொங்கி வருவது தெரிகிறது. வாழ்க்கையின் இருண்ட பகுதியையே எண்ணி, ஐயோ என் வாழ்க்கை இப்படித் துன்ப மயமாக ஆகிவிட்டதே, உலகில் எல்லாரும் வஞ்சகக்காரர்கள், எல்லாப் பொருளும் துன்பம் நிறைந்தவை என்று அஞ்சி அஞ்சிச் சாகும் மானிடப் பூச்சிகளுக்கும் அவர்களுக்கும் தான் எத்தனை வேறுபாடு. இதோ இந்த வேத மந்திரத்தைப் பாருங்கள்.
     
      மது வாதா ருதாயதே
                மது க்ஷரந்தி ஸிந்தவ:
                மாத்வீர் நஸ் ஸந்த் வோஷதீ:       
               
      மது நக்தம் உதோஷஸி
                மதுமத் பார்த்திவகும் ரஜ:
                மது த்யௌ ரஸ்து ந: பிதா
               
      மதுமாந்நோ வனஸ்பதி:
                மதுமாகும் அஸ்து சூர்ய:
                மாத்வீர் காவோ பவந்துந:

                பித்ரு தர்ப்பணத்தின் போது முப்பாட்டனார்க்கு எள்ளும் நீரும் அளிக்கும் போது இந்த மந்திரத்தைச் சொல்கிறோம். இதன் பொருள் என்ன?

                இனிய காற்று வீசுகிறது. நதிகள் இனிமையாக ஓடுகின்றன. செடி கொடிகள் நமக்கு இனியனவாக இருக்கட்டும். இரவும் விடியற்காலையும் இனியவையாக உள்ளன. பூமியின் புழுதி இனிதாக உள்ளது. நமது தந்தை போன்ற ஆகாயம் இன்பம் அளிக்கட்டும். வனத்தின் மரங்கள் இன்பம் நிறைந்தவைகளாக இருக்கட்டும். சூரியன் இன்பம் தரட்டும். பசுக்கள் இனிமையான பாலை அளிக்கட்டும்.      

                உலகில் துன்பம் இருப்பது உண்மை தான். ஆனால் அதற்காகத் துவண்டு விடக் கூடாது என்பது பாரதியின் கருத்து. நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கு அளிப்பாள் என்று நம்புக என்று ஊக்கம் தருகிறார் அவர். துன்பமே இயற்கை என்னும் சொல்லை மறந்திடுவோம், இன்பமே வேண்டி நிற்போம் யாதும் அவள் தருவாள் என்று கூறுகிறார். அவருக்குக் காக்கைச் சிறகினிலும், பார்க்கும் மரங்களிலும் நந்தலாலா தென்படுகிறான். கேட்கும் ஒலியில் எல்லாம் அவனது கீதமே காதில் விழுகிறது. தீக்குள் விரலை வைத்தாலும் நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் தோன்றுகிறது. அவரது இந்த வசன கவிதையைப் பாருங்கள். இந்த வேத மந்திரத்தின் நேர் மொழிபெயர்ப்பு போலவே உள்ளது.

                இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமை யுடைத்து
                காற்றும் இனிது தீ இனிது நீர் இனிது நிலம் இனிது
                ஞாயிறு நன்று திங்களும் நன்று
                வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன
                மழை இனிது மின்னல் இனிது இடி இனிது
                கடல் இனிது மலை இனிது காடு இனிது
                ஆறுகள் இனியன


                இன்பம் என்ற இந்த வசன கவிதை முழுவதையும் படித்துப் பாருங்கள். நமக்கும் பாரதியைப் போல எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்று நன்றி சொல்லத் தோன்றும்.

No comments:

Post a Comment