Pages

Saturday, June 8, 2013

பூரண ஞானம் பொலிந்த நன்னாடு

      பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
      விளங்குக, துன்பமு மிடிமையு நோவும்
      சாவு நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம்
      இன்புற்றுவாழ்க
என்பது பாரதி விநாயகரிடம் வைக்கும் வேண்டுகோள். எல்லா உயிர்களும் தெய்வம் என்பதை உணர்ந்து விட்டால் பிறர் மீது அச்சம், பகைமை, கோபம், பொறாமை ஏற்படுமா? பூமண்டலம் எங்கும் அன்பும் பொறையும் மட்டுமே விளங்கும்.

      அச்சம் முதலான இந்தத் தீய குணங்களை நீக்கி விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும் என்று பாரதி கூறுகிறார். எல்லோரும் அமர நிலை எய்த முடியும்.

      எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளான் என்ற வேதக் கருத்தை உலகிற்கு அளிக்கத் தகுதி பெற்ற ஒரே நாடு இந்தியா தான்.

எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்
என்றுரைத்தான் கண்ண பெருமான்
எல்லோரும் அமர நிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்களிக்கும் ஆம்
இந்தியா உலகிற்களிக்கும் ஆம் ஆம்
இந்தியா உலகிற்களிக்கும் - வாழ்க

      இந்தியா தாழ்ந்து நின்றால் உலகனைத்திலும் அஞ்ஞான இருள் பரவி விடும். எனவே தான் பாரதி இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்று பாடுபடுகிறார்.

சுதந்திர தேவியின் ஒளி பெறாவிடில் அங்கு அறிவுண்டோ, ஆக்கமுண்டோ?
காவிய நூல்கள், ஞானக் கலைகள், வேதங்களுண்டோ?”          என்று கேட்கிறார். மேலும் மற்றோரிடத்தில்,

வேத நூல் பழிக்கும் வெளித் திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பாளோ பாரத தேவி?”
என வினவுகிறார். ஏனெனில் அம்மிலேச்சர்,

மாதர் கற்பழித்தலும் மறையவர் வேள்விக்கு
ஏதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார்

      எனவே பாரதி இந்தியாவிற்குச் சுதந்திரம் வேண்டியது வேத நெறி தழைக்கவும், உலகெங்கிலும் அறம் ஓங்கி வளரவும் தான்.

            பாரதி மகாத்மா காந்தியைப் போற்றியது ஏன்? எல்லா உயிர்களும் கடவுள் என்ற உயர் கொள்கையைக் கொண்டு, இழிவான வழி முறைகளே நிறைந்த அரசியலைத் தூய்மைப்படுத்தியதற்காகத் தான்.

            மன்னுயிரெல்லாம் கடவுளின் வடிவம்
            கடவுளின் மக்களென் றுணர்தல்
            இன்ன மெய்ஞானத் துணிவினை மற்றாங்
            கிழிபடு போர் கொலை தண்டம்
            பின்னியே கிடக்கும் அரசியலதனிற்
            பிணைத்திடத் துணிந்தனை, பெருமான்




No comments:

Post a Comment