Pages

Saturday, June 1, 2013

ஒன்று பரம் பொருள்

முன்னுரை
       பாரதி என்றாலே முண்டாசும் கொடுவாள் மீசையும் கறுப்புக் கோட்டும் கொண்ட உருவம் தான் நினைவுக்கு வருகிறது. அது போல அவரது கவிதைகளைப் பற்றி நினைக்கும்போது அவரது தெய்வபக்தி, தேசபக்தி, சமுதாய மறுமலர்ச்சி நாட்டம், பெண் விடுதலையில் ஆர்வம் ஆகியவை தான் முதலில் புலப்படுகின்றன. கறுப்புக் கோட்டின் பின்புலமாக ஒரு வெள்ளைச் சட்டை இருந்தது போல, இத்தனை பண்புகளுக்கும் பின்புலமாக அமைந்திருந்தது வேதங்களில் அவர் கொண்டிருந்த பற்று.

      தான் பிறந்த குலத்துக்கு உரிய ஆசாரங்களைக் கைவிட்டதோடு அல்லாமல், தன் சாதியினரையும் எள்ளி நகையாடியவர் பாரதி. அப்படிப்பட்ட புரட்சிக்காரர், பழைமையான தனது குல வித்தையாகிய வேதத்தினிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்பது வியப்புக்குரிய உண்மை.

      தனது பாடல்களிலும், கட்டுரைகளிலும், கதைகளிலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அவர் வேதத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார். அவரது இந்த வேதப் பற்று தெய்வ பக்திப் பாடல்களில் மட்டுமல்லாது சமூக விடுதலைப் பாடல்களிலும், தேச பக்திப் பாடல்களிலும் கூட வெளிப்படுவதைக் காணலாம்.

      வேதம் பாரத நாட்டின் கலாசாரத்தின் ஆணி வேராக இருந்து வந்துள்ளது. ஆனால் இடைக்காலத்தில் சில தவறான கருத்துகளும் தவறான விளக்கங்களும் வேத இலக்கியத்தில் புகுந்துவிட்டன. இவற்றையும் அக்கால வேதியர்கள் வேதம் என்ற பெயரிட்டே அழைத்தனர். இந்தப் போலி வேதங்களை நீக்கி விட்டு வேதத்தை அதன் தொன்மையான தூய நிலையில் கொண்டு வைக்க வேண்டும் என்பது அவரது பேரவா. இந்தக் கருத்து அவரது ஒவ்வொரு பாடலின், கதையின், கட்டுரையின் அடிநாதமாக ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. அவற்றில் சிலவற்றை அடுத்து வரும் பக்கங்களில் காண்போம்.

                பாரதி இந்து மதத்தின் மீதும் வேதங்களிடத்தும் பெரு மதிப்புக் கொண்டிருந்த போதிலும் பிற மதங்களைச் சமமாகவே போற்றினார். அவரது இந்தச் சமயப் பொதுமைக்கு அடிப்படை ரிக் வேதமும் பகவத்கீதையும் தாம். ரிக் வேதத்தில் வரும் ஒரு புகழ் பெற்ற வசனம், ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி என்பது. ஒன்றே மெய்ப் பொருள், அதனை ரிஷிகள் பலவிதமாய்ச் சொல்லினர்,” என்று பாரதி அதை மொழி பெயர்க்கிறார். கீதையில் கண்ணன் கூறுகிறான், யார் யார் என்னை எந்தெந்த வடிவில் வழிபடுகிறார்களோ அவரவரை அந்தந்த நம்பிக்கையில் நான் நிலைக்கச் செய்கிறேன். இவற்றை நன்கு உள்வாங்கிக் கொண்ட பாரதி தன் எழுத்துகளில் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இக் கருத்தை வலியுறுத்தத் தவறவில்லை.

            எல்லாச் சமயங்களும் கடவுள் ஒன்றே என்று தான் கூறுகின்றன. ஆயினும் ஏன் தகராறு? தன் சமயத்தையே நன்கு அறியாத அரை குறை மனிதர்கள், நான் வணங்குவது மட்டுமே கடவுள், மற்ற சமயத்தவர் வணங்குவது பேய்களை, பேய் வழிபாடு செய்வோரைத் திருத்துவது அல்லது அழிப்பது என் கடவுளுக்கு உகப்பானது, என்ற வகையில் பேசுகிறார்கள். அத்தகையோருக்குப் பாரதி அறிவுறுத்துகிறார் -

            வேடம்பல் கோடியோ ருண்மைக்குள வென்று
            வேதம் புகன்றிடுமே- ஆங்கோர்
            வேடத்தை நீருண்மையென்று கொள்வீரென்றவ்
            வேதமறியாதே

            நாமம் பல்கோடி ஓர் உண்மைக்கு உள என்று
            நான்மறை கூறிடுமே- ஆங்கோர்
            நாமத்தை நீருண்மை என்று கொள்வீரென்று அந்
            நான்மறை கண்டிலதே.

            வெவ்வேறு பெயர்களில் வழிபடப்படுபவை வெவ்வேறு தெய்வங்கள் அல்ல. அவை அனைத்தும் ஒரு தெய்வத்தின் வெவ்வேறு வேடங்களே. இந்த வேடங்களைத் தெய்வத்தின் மீது மனிதர் தாம் சுமத்துகின்றனர். அதன் உண்மையான சொரூபம் சுத்த அறிவு ஆகும். வள்ளுவர் இறைவனை வாலறிவன் என்று போற்றுகிறார். இறைவன் எல்லாம் அறிந்தவன் என்று தான் எல்லாச் சமயங்களும் கூறுகின்றன. இதை உணர்த்தும் வேத வசனம், ப்ரக்ஞானம் ப்ரம்ம (அறிவே கடவுள்) என்பதைப் பாரதி மிக எளிமையாக வெளிப்படுத்துகிறார்.

            ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
            அலையும் அறிவிலிகாள் -பல்
            லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
      டாமெனல் கேளீரோ என்று பாரதி கேட்கிறார்.

            நாம் என்ன செய்கிறோம்? மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறுங் கதைகள் சேர்த்துப் பல கள்ள மதங்கள் பரப்பிக் கொண்டிருக்கிறோம். இது முறையா? அச்சமும் அறியாமையுமே வன்முறையின் அடிப்படை. எனது சமயம் அழிந்து விடுமோ என்ற அச்சமும், எல்லா மதங்களுக்கும் உட்புகுந்த கருத்து ஒன்றே என்பதை அறியாமையுமே மாற்றுச் சமயத்தாரை அழித்தால் நம் சமயம் வாழும் என்ற மூட நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது. வீரமில்லாமல் இந்த அச்சங்களுக்கு இடமளிப்பவர் எந்தச் சமயத்தவரானாலும் இறைவனை அடைய முடியாது என்கிறார் பாரதி.
           
      வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
            எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்
            பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
            பேணுமவர் பதமலரும் பூணல் வேண்டும்

      ஒவ்வொரு மனிதனும் தனித் தனி இயல்பினன். அவனவன் மதம் அவனது தனித் தன்மையைப் பொறுத்தது. எனவே இன்னும் இரண்டு கோடி மதங்கள் பெருகட்டும். எத்தனை பேர் எத்தனை விதமாக வழிபட்டாலும் உண்மை ஒன்றே என்கிறார் விவேகானந்தர். பாரதி அதனை வழிமொழிகிறார்-

            பூமியிலே கண்டமைந்து மதங்கள் கோடி
            புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம்
            சாமிஎன ஏசுபதம் போற்றும் மார்க்கம்
            ஸநாதனமாம் இந்துமதம் இஸ்லாம் யூதம்
            நாமமுயர் சீனத்துத் தாவு மார்க்கம்
            நல்ல கண்பூசி மத முதலாப் பார்மேல்
            யாமறிந்த மதங்கள்பல உளவாமன்றே
            யாவினுக்கும் உட்புகுந்த கருத்திங்கொன்றே      
           
            தெய்வம் பல பல சொல்லிப் பகைத்
            தீயை வளர்ப்பவர் மூடர்
            உய்வதனைத்திலும் ஒன்றாய் எங்கும்
            ஓர் பொருளானது தெய்வம்
என்கிறார் பாரதி. அல்லாவைப் போற்றி அவர் பாடுவதைக் கேட்போம்-           
      பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள்
            எல்லாத் திசையிலுமோர் எல்லையில்லா வெளிவானில்
            நில்லாது சுழன்றோட நியமம் செய்தருள் நாயகன்
            சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெருஞ்சோதி
            அல்லா அல்லா அல்லா
           
இதே கருத்தைக் காளி மீது ஏற்றிப் பாடுகிறார்.

            விண்டுரைக்க அறிய அரியதாய்
            விரிந்த வான வெளியென நின்றனை
            அண்டம் கோடி வானில் அமைத்தனை
            அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை

            பாரதி விநாயகருக்குச் செய்யும் அர்ச்சனையைக் கவனியுங்கள். தொல் பழம் தெய்வங்கள் உள்பட, வெவ்வேறு பெயர்களில் வணங்கப்படும் இந்துக் கடவுள்கள் மட்டுமல்லாது இஸ்லாமிய கிருத்துவப் பெயர்களும் ஒரே பரம்பொருளைக் குறிப்பதை விளக்குகிறது அது.

விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்
பிறநாட்டிருப்போர் பெயர்பலகூறி
அல்லா யெஹோவா எனத் தொழுது இன்புறும்
தேவரும் தானாய் திருமகள் பாரதி
உமை எனும் தேவியர் உகந்த வான்பொருளாய்
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்

      இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகித்
      தாயாய்த் தந்தையாய்ச் சக்தியும் சிவனுமாய்
      உள்ளொளியாகி உலகெலாம் திகழும்
      பரம்பொருளேயோ, பரம்பொருளேயோ
      ஆதிமூலமே அனைத்தையும் காக்கும்
      தேவதேவா சிவனே கண்ணா
      வேலா சாத்தா விநாயகா மாடா
      இருளா சூரியா இந்துவே சக்தியே
      வாணீ காளீ மாமகளேயோ
      ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ள
      யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே
      வேதச்சுடரே மெய்யாங் கடவுளே

            சமயங்கள், சாத்திரங்கள், சடங்குகள் எல்லாம் உண்மையை அடைவதற்கான படிகளே அன்றி அவையே இறுதி நிலை அல்ல. மனதைச் செம்மைப்படுத்திப் பரம்பொருளை உள்ளத்தால் தொட முடிந்தால் இவை தேவையற்றதாகி விடும்.

            காவித் துணி வேண்டா கற்றைச் சடை வேண்டா
            பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே
            சாத்திரங்கள் வேண்டா சதுர்மறைகள் ஏதுமில்லை
            தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டு நின்றால் போதுமடா
            தவமொன்றும் இல்லை ஒரு சாதனையுமில்லையடா
            சிவமொன்றே உள்ளதெனச் சிந்தை செய்தாற் போதுமடா

            அறிவு விளக்கம் பெறாத குழந்தை நிலையில் உள்ளோர் தாம் விரும்பிய வெவ்வேறு வடிவங்களில் பரம்பொருளை வழிபடட்டும். ஆனால் அதே நிலையில் நின்று விடாமல் படிப்படியாக                        மேலே உயர்ந்து வடிவங்கள், வழிபாட்டு முறைகள்,                                                    வேதங்கள்,  தவங்கள் இவற்றைக் கடந்து பரம்பொருளை உள்ளத்தால் உணரும் நிலைக்கு வரட்டும். இவை எல்லாமே உண்மை தான். இதை உலகுக்கு உணர்த்தவல்ல ஒரே நாடு நமது நாடு தான் என்பதில் பெருமை கொள்கிறார் பாரதி.
           
      ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்
            உலகின்பக் கேணிஎன்றே
            நன்று பல்வேதம் வரைந்தகை பாரத

            நாயகிதன் திருக்கை

No comments:

Post a Comment