Pages

Saturday, January 7, 2012

அம்மையாரின் அன்பு வழி


 

                அம்மையாருக்கு இறைவன் மேல் அன்பு ஏற்பட்டது எப்பொழுது? பிறந்தது முதலே என்று அவர் கூறுகிறார். மழலை பேசத் தொடங்கியதிலிருந்தே இறைவனுக்கு நாமாலை சூட்டத் தொடங்கினார் அவர். இது பலனை எதிர்பார்த்த அன்பு அல்ல. என் துன்பம் தீர்ப்பாயாக என்று இறைவனிடம் வேண்டும் அவர், ‘எனக்கே அருளாவாறு என்கொல் என்று உரிமையோடு சண்டைக்குப் போகிறார். ஆனால், “இறைவன் என் துன்பத்தைக் களையாமல் மீண்டும் பிறக்க வைத்தாலும் என் அன்பு அறாது, அவனல்லாத பிறர்க்கு ஆளாக மாட்டேன், எழுபிறப்பும் அவனுக்கே ஆளாவேன் என்கிறார். அவனுக்கு ஆட்பட்டோம் என்ற நினைவே இன்பம் தருகிறது அவருக்கு.

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்        (-1)

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும்- சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்நெஞ் சவர்க்கு.         (-2)

அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ தல்லால்- பவர்ச்சடைமேல்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.       (அ-3)

பிறையும் புனலும் அனல் அரவுஞ் சூடும்
இறைவர் எமக்கிரங்கா ரேனுங்- கறைமிடற்ற
எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
எந்தையா உள்ள மிது.                       (அ-23)

தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்
எனக்கே அருளாவாறு என்கொல்-    (அ-44)

                இவ்வாறு, தான் அம்மானுக்கு ஆட்படக் கிடைத்த வாய்ப்பு, தன் தவப் பயனாய்க் கிடைத்தது என்றும் இது பெறற்கரிய பேறு என்றும் அவர் மகிழ்கிறார். உன் அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன். உன்னை அன்பாலே போர்த்து நெஞ்சினுள் அடைத்து வைத்து விட்டேன். அதில் வேறு யாருக்கும் இடமில்லை. என் நெஞ்சம் நல்ல நெஞ்சம். தனக்கு நன்மை தருவது எது என்று அறிந்து கொண்டு விட்டது. அதனால் காலனையும் வென்றோம், கடுநரகம் கை கழன்றோம், பிறவிக் கடலை நீந்தி விட்டோம் எனப் பெருமைப்படுகிறார். இந்தப் பெருமித உணர்ச்சி வளர்ந்து செருக்காகவே ஆகிவிட்டதாம். எந்தையார்க்கு ஆட்செய்யப் பெற்ற இது கொலோ சிந்தையார்க்கு உள்ள செருக்கு என்று தன் சிந்தையைப் பார்த்து வியக்கிறார்.

யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்
...................................................
அம்மானுக் காளாயி னேன்.          (அ-7)

ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்
ஆயினேன்                     (-8)

……………………………………….அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் (-9)

தானே தனிநெஞ்சந் தன்னை யுயக்கொள்வான்,
தானே பெருஞ்சேமஞ் செய்யுமால்      (அ-14)

இனியோ நாம்உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம் நெஞ்சே- இனியோர்
வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்.         (அ-16)

மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும்
திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய்  (-31)

எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு.          (அ- 79)
                அம்மையாரின் உள்ளத்தில் உள்ள பக்தி உணர்ச்சி உலகத்துப் பொருள்களில் பிரதிபலிக்கிறது. பாரதியின் உள்ளத்தில் இருந்த நந்தலாலா காக்கைச் சிறகினிலும் பார்க்கும் மரங்களிலும் தோற்றம் காட்டியதைப்போல, அம்மையாருக்கும் எந்தக் காட்சியைப் பார்த்தாலும் செஞ்சடைப் பெம்மானாகவே தோன்றுகிறது. கார் கால வெள்ளம் அவருக்குக் கங்காதரனை நினைவூட்டுகிறது. பூத்துச் சொரிகின்ற கொன்றை மரம் அவருக்குக் கொன்றை மாலை அணிந்த குழகனாகக் காட்சியளிக்கிறது. கிரகண வேளையில் நிலவையும் அதை விழுங்க வரும் பாம்பையும் பார்த்ததும் ஆகாயம் விண்ணோர் பிரானின் விரிசடையாகவே தோன்றுகிறது. மேகங்கள் கங்கையாறு போன்று தோன்றுகின்றன. காலை இளஞ் சூரியனின் செந்நிறத்தில் அவர் செம்மேனிப் பெம்மானைக் காண்கிறார். கடும்பகலின் வெய்யில் அவருக்கு வேத முதல்வனின் வெண்ணீறாகத் தெரிகிறது. மாலைச் சூரியனின் பொன்னிறம் சங்கரனின் சடையாகத் தெரிகிறது. இரவின் இருளோ கறைமிடற்றன் கண்டத்தை நினைவூட்டுகிறது.

சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி
நீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப்- போரார்ந்த
நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான்
காண்பார்க்குச் செவ்வேயோர் கார்.       (-53)

நிலாவிலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல்
உலாவி உழிதருமா கொல்லோ- நிலாஇருந்த
செக்கரவ் வானமே ஒக்குந் திருமுடிக்கே
புக்கரவங் காலையே போன்று.           (அ-64)

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு- மாலையின்
தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு.       (அ-65)

கலங்கு புனற்கங்கை ஊடால லாலும்
இலங்கு மதியியங்க லாலும்- நலங்கொள்
பரிசுடையான் நீள்முடிமேற் பாம்பியங்க லாலும்
விரிசடையாங் காணில் விசும்பு.           (அ-75)
                யாம் உய்ந்தோம் என்று பெருமைப்பட்டுக் கொண்டாலும் சில சமயங்களில் அம்மையாருக்குக் கவலை வந்து விடுகிறது. அவனோ வானவர்க்கும் அரியன். வானவர்கள் மலரிட்டு வணங்கியும் அடி பொருந்த மாட்டார்கள். அப்படி இருக்க எனக்கு என்ன செய்வானோ?” என்று கவல்கிறார் அவர்.

நினைந்திருந்து வானவர்கள் நீள்மலரால் பாதம்
புனைந்தும் அடிபொருந்த மாட்டார்- நினைந்திருந்து
மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்
கென்செய்வான் கொல்லோ இனி.         (அ-15)

                இறை வணக்கத்துக்கென்று நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அம்மையார் ஒதுக்கினாரா? அல்ல. நாள் முழுவதும் அவரது சிந்தனையில் இறைவன் பற்றிய நினைவு சுழன்று கொண்டே இருக்கின்றது. ஆயினும் அவன் பால் கொண்ட பேரன்பை இன்னும் பெருக்கு என்று தன் நெஞ்சுக்கு அறிவுறுத்துகிறார்.

இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா
றிதுவன்றே என்றனக் கோர் சேமம்- இதுவன்றே
மின்னுஞ் சுடருருவாய் மீண்டொயென் சிந்தனைக்கே
இன்னுஞ் சுழல்கின்ற திங்கு.            (அ-24)

…………………………………………...  இகழாதே
யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே இன்னும் பெருக்கு       (அ-31)

                அம்மையாரின் உறவினரும் சுற்றத்தாரும் அவருடைய இந்தப் பேய்த்தனமான பக்தியைப் பார்த்து குறை கூறினர் போலும். அவர்களைக் குறித்து, “இந்தப் பேய்க் கோலம் எனக்குப் பொருந்துகிறதா இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இறைவனிடம் ஆட்பட்ட அன்பு காரணமாக எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் தேவையானது எல்லாம் கிடைத்து விட்டதே. உங்கள் குறை கூறலால் எனக்கு ஒன்றும் தாழ்வு ஏற்படப் போவதில்லை என்கிறார்.

திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்
உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர்- தெரிமினோ
இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே
எம்மைப் புறனுரைப்ப தென்        (-1)

பெறினும் பிறிதியாதும் வேண்டேம் எமக்கீ
துறினும் உறாதொழியு மேனுஞ்- சிறிதுணர்த்தி
மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்றன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம்.               (-86)

                உலகியல் ஆசைகளை எல்லாம் துறந்து இறைவனை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த அம்மையாருக்கும் ஒரு ஆசை இருக்கிறதாம். சாதாரண ஆசை அல்ல, பேராசை. ஈமப் பெருங்காட்டில் இறைவன் பேய்களோடு நடனமாடுவதை ஒரு நாள் காண வேண்டும் என்பது தான் அது. இறைவனது பேயாய நற்கணத்தில் ஒன்றாக நான் இருந்து அவனுக்குக் கைப்பணி செய்ய வாய்ப்புக் கிடைத்தால் போதும். அண்டம் பெறினும் வேண்டேன். பிறிது யாதும் வேண்ட மாட்டேன் என்கிறார் அவர்.

கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அதுவேண்டேன்     (அ-72)

எமக்கிதுவோ பேராசை என்றுந் தவிரா
தெமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய்- அமைக்கவே
போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில்
ஏந்தெரிபாய்ந் தாடும் இடம்.              (-70)

                அம்மையார் நமக்கு அளிக்கும் செய்தி என்ன? இறைவனை எப்போதும் நினைந்து துதித்துக் கொண்டிருந்தால் விரும்பியது கைகூடும். இறைவன் மனது இரங்கிவிட்டால் அவன் கருணைக்கு எல்லை இல்லை. அவன் எதை வேண்டினாலும் தருவான். எந்த உலகம் வேண்டுமானாலும் அருள்வான் என்பது தான்.

கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே
திருத்தலாஞ் சிக்கெனநான் சொன்னேன்- பருத்தரங்க
வெள்ளநீர் ஏற்றான் அடிக்கமலம் நீ விரும்பி
உள்ளமே எப்போதும் ஒது.                   (அ-73)

அரங்கமாப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய்- இரங்குமேல்
என்னாக வையான் தான் எவ்வுலகம் ஈந்தளியான்
பன்னாள் இரந்தாற் பணிந்து.                 (அ-78)

கீழா யினதுன்ப வெள்ளக்
    கடல்தள்ளி உள்ளுறப்போய்
வீழா திருந்தின்பம் வேண்டுமென் பீர்
    விர வார்புரங்கள்
பாழா யிடக்கண்ட கண்டன் எண்
    தோளன்பைம் பொற்கழலே
தாழா திறைஞ்சிப் பணிந்துபன்
    னாளுந் தலைநின்மினே.   (திருவிரட்டைமணிமாலை-9)


      அம்மையார் சில பாடல்களில், தான் இறை அருள் பெற்று விட்டதாகவும் இனித் தனக்குத் துன்பமே இல்லை என்றும் மகிழ்கிறார்.

முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்ல
அடிமேற் கொடுமதியோம் கூற்றைப்- படிமேற்
குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம்
இனியவலம் உண்டோ எமக்கு.           (அ-69)

காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்
மேலை இருவினையும் வேரறுத்தோம்- கோல
அரணார் அவிந்தழிய வெந்தீஅம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து.                  (அ-81)

                வேறு சில பாடல்களில், “என் துன்பத்தை எப்பொழுது தீர்க்கப் போகிறாய், நான் திரும்பத் திரும்பக் கூறியும் நீ காதில் வாங்கிக் கொள்ள மறுக்கிறாயே என்று வருந்துகிறார்.

ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டால்
கேளாத தென்கொலோ          (-4)

                உண்மை என்ன? இந்தப் பாடல்கள் பாடிய காலத்தில் அம்மையார் இறை அருளுக்கு ஆட்பட்டுவிட்டாரா, இல்லையா? ஆட்பட்டு விட்டார் என்றால், சில இடங்களில் எனக்கு அருளாதது ஏன் ஏன்று கேட்கிறாரே, அது ஏன்? இவை வெவ்வேறு காலங்களில், அதாவது அருள் பெறுவதற்கு முன்னும் பின்னும் பாடியவையா?

                அம்மையார் தன் நெஞ்சோடு பேசி அறிவுறுத்தும் பாடல்களைக் கவனித்தால் இதற்கு விடை கிடைக்கும்.

      நெஞ்சே, இறைவனுக்கு ஆட்பட்டதால் உனக்கு நீயே பெரும் நலம் சேர்த்துக் கொண்டாய். அவன் பால் கொண்ட பேரன்பை இன்னும் பெருக்கு. இறைவனடி பணிந்தும் அதனை மலர் கொண்டு அணிவித்தும் அவ்வாறு வழிபடும் அடியாரை ஏத்தியும் எந்தையார்க்கு ஆட்செய்ய வாய்ப்புப் பெற்றதால் என் நெஞ்சம் பெருமையே கொள்கிறது என்று கூறுவதிலிருந்து அவர் இறைவனுக்கு ஆட்பட்டு விட்டார் என்பதையும் பிறவிக் கடலை நீந்திவிட்டோம் என்ற நம்பிக்கை அவருக்கு வந்துவிட்டது என்பதையும் அறிகிறோம்.

மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும்
திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய்- இகழாதே
யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே இன்னும் பெருக்கு       (அ-31)

பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால்
அணிந்தும் அணிந்தவரை ஏத்தத்- துணிந்தென்றும்
எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு.           (-79)

                “நெஞ்சே, அவனை அடைவதற்கென்று ஒரு முறை உண்டு. அது இல்லாமல் அவனை நீ பெற முடியாது. தளர்ச்சி அடையாமல் அவனை வணங்கு. அவன் புகழை ஓயாது உரை. மனைவி மக்களைச் தஞ்சமென்று எண்ணி அவனடி நினையாது அழிகின்றாய். சாவு வருமுன் நெய்யாடியின் திறம் கேட்டு உய்க. எப்போதும் அவன் அடிக்கமலம் விரும்பி ஒது, நீ கருதியது எல்லாம் உடனே நிறைவேறும். அவன் இரக்கம் காட்டிவிட்டால் எந்த உயர் நிலையிலும் வைப்பான், எவ்வுலகம் வேண்டுமானாலும் ஈந்தளிப்பான். அவனடியாரை வினைகள் தீண்டா, ஈசனது தொண்டர் பாதத்தைக் குறிக்கோளாகக் கொள்க. அவனடி நினையாதாரை விட்டு நீங்கு என்று கூறும் போது தன் நெஞ்சுக்கு அறிவுறுத்துவது போல மற்றவர்களுக்கு உபதேசம் செய்கிறார் என்பதையும் உலக மக்கள் அனைவரும் தான் பெற்ற இன்பம் பெற வேண்டும் என்று விரும்புவதால் அவர்கள் சார்பில் தான், “எப்பொழுது இடர் தீர்க்கப் போகிறாய்?” என்று கேட்கிறார் என்பதையும் அறிகிறோம்.

மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக்
குறித்துத் தொழுதொண்டர் பாதங்- குறித்தொருவர்
கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்
டுள்ளாதார் கூட்டம் ஒருவு        (அ-40)

திறத்தால் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்
பெறத்தானும் ஆதியோ பேதாய்- நிறத்த
இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான்
திருவடிக்கட் சேருந் திரு.              (அ-47)

கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும்
    போதஞ்சி நெஞ்சமென்பாய்த்
தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண்
    டாய்தள ராதுவந்தி
வளர்ந்துந்து கங்கையும் வானத்
    திடைவளர் கோட்டுவெள்ளை
இளந்திங் களும்எருக் கும்இருக்
    குஞ்சென்னி ஈசனுக்கே.       (தி-1)

சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஒவாது நெஞ்சே உரை.    (தி-6)

நினையா தொழிதிகண் டாய்நெஞ்ச
    மேஇங்கொர் தஞ்சமென்று
மனையா ளையும்மக்கள் தம்மையுந்
    தேறிஓர் ஆறுபுக்கு
நனையாச் சடைமுடி நம்பன் நந்
    தாதைநொந் தாதசெந்தீ
அனையான் அமரர் பிரான்அண்ட
    வாணன் அடித்தலமே.            (தி-13)

உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்த மரமடுக்கித் தீயாமுன் உத்தமனாய்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து.       (தி-20)












No comments:

Post a Comment