அம்மையார் கண்ணுதற் பெருமானையே எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவதெனக் கொண்டார். பிறவி என்னும் பெருங் கடலைக் கடக்க வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்டு எப்பொழுதும் அவனையே சிந்தித்துக் கொண்டிருந்தாலும், அவர் கடுமையானவராக இல்லை. அவரிடத்தில் இயல்பாகவே ஒரு நகைச் சுவை உணர்வு இருந்தது. தன்னை அவர் பேய் என்று கூறிக் கொண்டாலும் இந்தப் பேய் அச்சுறுத்தும் பேயாக இல்லை.
இறைவனுடைய தோற்றத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவருக்குப் பக்தியுடன் கூட நகைச் சுவையும் பீறிட்டுக் கொண்டு வருகிறது. சுடுகாட்டில் பிணம் எரித்தல், பேய்கள் பிணம் தின்னல் போன்ற அச்சம் தரும் காட்சிகளை வர்ணிக்கும் போதும் அவருக்கு உள்ள இயல்பான இந்த நகைச் சுவை உணர்வு நீங்காமல் உள்ளது. இந்தப் பாடல்களின் கருத்துகளைப் பார்ப்போம்.
பரமன் பால் கொண்ட அன்பின் மிகுதியால் அவர் தன்னை அவனுடைய தாய் ஸ்தானத்திற்குக் கொண்டு போய் இருத்திக் கொண்டு அவனுக்காகக் கவலைப்படுகிறார்.
“உன் நடனத்தை இந்தப் பூமி தாங்காது, பார்த்து ஆடப்பா” என்கிறார். (அ-77)
இன்னும் சற்று நெருங்கி அவனைக் கிண்டல் செய்யவும் துணிகிறார். சிவனுடைய தலையில் உள்ள விசித்திரமான பொருள்களாகிய அரவு, மதி, கங்கை இவை அவருக்குச் சரியான வாய்ப்பைத் தருகின்றன.
“உன் தலையில் உள்ள கங்கை திடீரென்று ஒரு நாள் வெள்ளப் பெருக்கெடுத்து ஒடினால் தலையில் உள்ள மதியும் அரவும் அடித்துக் கொண்டு போய் விடுமே, என்ன செய்வாய்.” (அ-90)
“உன் மேல் உள்ள நாகம் ஒருநாள் மலைமகளைச் சார்ந்திடுமேல் உனக்குப் பழி வந்து சேரும். எச்சரிக்கையாக இருந்து கொள்.” (அ-13)
“பூணாக, நாணாக, பொன்முடிமேற் கண்ணியாக எல்லாவற்றிற்கும் பாம்பு தானா? இது எதில் போய் முடியப் போகிறது?” (அ-28)
“ஒரு பொன்னாரம் பூணக்கூடாதா?” (அ-27)
“பாம்பை அணியாதே என்று நாங்கள் பல முறை சொல்லிப் பார்த்துவிட்டோம். நீ கேட்கமாட்டாயா?” (அ-27)
“பலி ஏற்கச் செல்லும் போதாவது அரவுகளைக் கழற்றி வைத்து விட்டுச் செல். இன்றேல் பெண்கள் வந்து பலியிட மாட்டார்கள்.” (அ-57)
“திங்கள் சூடிப் பலிக்கென்று ஊர் திரியேல் என்று தேவர்கள் தடுத்துப் பார்த்து விட்டனர். நான் சொல்லியா கேட்கப் போகிறாய்?”(அ-43)
“நீ தலையில் நிலவை அணிந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் முக்காடு அணிந்தாற் போல உள்ளது. தவறான செயல் செய்பவர்கள் தாம் முக்காடு அணிவார்கள். நீ புலால் நாற்றம் வீசும் கபாலத்தில் பிச்சை எடுத்து உண்பதை மற்றவர்கள் பழிக்கப் போகிறார்களே என்று பயந்து இவ்வாறு செய்கிறாயோ?” (அ-56)
“உன்னை அன்பால் அடையலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் ஒருவரையும் நெருங்கவிடாமல் அச்சுறுத்தும் பாம்புகளும், தலை மாலையும், ஒரு முரட்டுக் காளையும் உன்னிடம் உள்ளனவே, உன்னை எப்படி அன்பால் அடைவது?” (தி-17)
“காளையை வாகனமாகக் கொண்டாயே, உனக்கு வேறு ஊர்தி கிடைக்கவில்லையா?” (அ-18)
“உன்னைப் பிரியாமல் உமை எப்பொழுதும் உன்னுடனேயே சேர்ந்திருப்பதற்குக் காரணம், நீ அவளைப் பிரிய விரும்பவில்லையா? அவளைப் பாதுகாப்பாக விட்டுச் செல்வதற்கு உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா? அல்லது அவள் தனியே இருக்க அஞ்சுகிறாளா?” (அ-94)
“உமையை உன் உடலில் வைத்துக் கொண்டு ஈமப் பெருங்காட்டிற்குப் போகாதே. அவள் பெண்ணல்லவா? பயப்படுவாள் என்று உனக்குத் தெரியவில்லையே.” (அ-51)
“அவளுக்கு ஒரு வாகனம் தேடிப் பெற்றுத் தர உனக்குத் துப்பில்லை, கூடவே அவளையும் அழைத்துக் கொண்டு திரிகிறாயே?” (தி-19)
“உன்னுடைய உடம்பின் ஒரு கூறனாகிய மாலுக்குக் கூட அறிய முடியாமல் நீ எங்கே ஒளிந்து கொண்டாய்?” (அ-54)
“உமையும் மாலும் உன் உடலின் பகுதிகளைப் பிடுங்கிக் கொண்டு விட்டனர். இனி எப்படி நீ நீறணிவாய்?” (அ-59)
“நஞ்சம் உண்ட உன் வாய் அப்படியே இருக்க, உன்னுடைய கண்டம் மட்டும் இருள் கொண்டது போலக் கருத்தது ஏன்?” (அ-89)
“உன் உடல் முழுவதும் சிவப்பாக இருந்தும் நெஞ்சில் மட்டும் கறுப்பாக இருக்கிறதே. அங்கு கருணைக்குப் பதிலாக வஞ்சம் உள்ளது போலும். நாங்கள் பல முறை முறையிட்டும் நீ எங்களுக்கு அருள் செய்யாததன் காரணம் இப்பொழுதல்லவா புரிகிறது.” (அ-4)
இப்படி எல்லாம் இறைவனை எள்ளி நகையாடிய அம்மையார் இன்னும் ஒரு படி மேலே போய் அவனுடைய குடும்பத்தில் கலகம் செய்யக் கூட முனைகிறார்.
“மதியை நீ தலையில் கங்கை அருகே வைத்ததால் இடப்பாகங் கொண்டவளாகிய மலைப்பாவைக்குப் பங்கு ஒன்றும் இல்லாமல் போய்விட்டதே.” (அ-71)
“இந்த இருவருள் உமக்கு மிகவும் அன்புடையார் யார் என்று சொல்லுமின்.” (அ-95)
“உமைக்குத் தெரியாமல் இன்னொரு மனைவியைத் தலையில் வைத்துக் கொண்டிருக்கிறாய். என்றாவது ஒரு நாள் இவள் அவளைப் பார்த்துவிடப் போகிறாள். அப்பொழுது நீ என்ன செய்வாய்?” (தி-5)
கிரகணம் என்பது ராகு, கேது என்னும் பாம்புகள் சந்திரனை விழுங்க வருவதால் உண்டாகும் நிகழ்ச்சி என்ற முற்கால நம்பிக்கையைப் பயன்படுத்தி அம்மையார் சிவனிடம் சேர்ந்திருக்கும் மதி, அரவு இவற்றை வைத்து நகைச் சுவையாகப் பேசும் பாடல்கள் பல உள்ளன.
“உன் பாம்பின் சிந்தை எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்க. அது ஒரு நாள் நிலவை விழுங்கிவிடப் போகிறது” என்று எச்சரிக்கிறார். (அ-22)
“தன் பரம்பரைப் பகையான நாகம் அருகாமையில் இருப்பதால் அச்சத்தினாலேயே உனது நிலா வளராமல் பிள்ளை மதியாகவே உள்ளது.” (அ36)
“ உனது ஏனக் கொம்பு அரவந் தீண்டிச் சிறுத்த நிலவு போல் உள்ளது.” (அ-38)
“உமது மார்பில் உள்ள பாம்பு சரியான முட்டாள். தலையில் உள்ள உண்மையான நிலவையும் மார்பில் உள்ள ஏனக் கொம்பையும் பார்த்து இவ்விரண்டில் எது மதி என்பதைத் தீர்மானிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதனால் உமது மதி பிழைத்தது” என்று சிரிக்கிறார். (அ-48)
“உன் தலை மீது பாம்பு ஊர்ந்து கொண்டிருக்கிறதே, அது மதியைத் தேடித்தான் உலாவுகிறதா?” என்று வினவுகிறார். (அ-64)
சுடுகாட்டுக் காட்சிகளை வர்ணிக்கும் போது அச்சச் சுவையுடன் நகைச்சுவை கலந்து மிளிர்வதைக் காண்கிறோம்.
கள்ளி மரத்தின் கிளைகளிடையே காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறதாம் ஒரு பெண் பேய். கொள்ளிக் கட்டையை அரைத்து உண்டாக்கிய மையைக் கண்ணில் பளிச்சென்று தெரியும்படி தீட்டிக் கொண்டிருக்கிறதாம். திடீரென அதற்கு ஏதோ அச்சம் ஏற்படுகிறது. மிரண்டு துள்ளிக் குதிக்கிறது. அப்படிக் குதிக்கும்போது பிணத்தைச் சுடும் தீச் சுட்டுவிடுகிறது. உடனே அதற்கு நெருப்பு மேல் கோபம் வந்து விடுகிறது. முகத்தைச் சுளித்துக் கொண்டு புழுதியை அள்ளி தன்னைச் சுட்ட தீயை அவிக்கிறது. இத்தகைய காட்டில் ஆடுகிறான் எங்கள் அப்பன் என்கிறார். (பதிகம் 1-2)
மற்றொரு காட்சி. காட்டில் ஒரு பிணம் கிடக்கிறது. ஒரு பேய் (அது ஒரு அறியாத குழந்தைப் பேய் போலும்) அது பிணம் என்று அறியாமல் படுத்துக் கிடக்கின்ற உயிருள்ள ஆள் என்று நினைத்துப் பயந்து சற்றே அருகிற் சென்று தனது சுட்டு விரலைக் காட்டி, உரக்கக் கத்தி, உறுமி, கொள்ளி ஒன்றை எடுத்து வீசிவிட்டு ஓடிவிடுகிறது. இதைப் பார்த்த மற்றைப் பேய்களும் அந்த ஆளுக்கு அஞ்சித் தங்கள் பெரிய வயிற்றில் அடித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு ஓடுகின்றனவாம். இத் தன்மையதாய் இருக்கின்ற காட்டில் பெருமான் தானும் ஒரு பித்தன் போல வேடம் பூண்டு நடனம் ஆடுகின்றான் என்கிறார். (பதிகம் 2-4)
No comments:
Post a Comment