விநாயகப் பெருமானின் திருவுருவைப் பார்த்தவுடன் நமது கவனத்தைக் கவர்வது அவரது பெரிய வயிறு தான். அதனால் தான் அவரைப் பற்றிய எல்லாத் தோத்திரங்களும் வடமொழியிலும் சரி, தமிழிலும் சரி, அவரது பெரு வயிற்றையும் அவரது உணவையும் குறிப்பிடுகின்றன.
ஔவையார் பாடிய விநாயகர் அகவலில்
பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்
என்று குறிப்பிட்டதோடு,
முப்பழ நுகரும் மூஷிக வாகன
என்று அவரது உணவையும் குறிப்பிடுகிறார்.
அருணகிரி நாதர் இன்னும் விளக்கமாகவே பேசுகிறார்.
இக்கு (கரும்பு) அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்
எள் பொரி அவல் துவரை இளநீர் வண்டெச்சில் (தேன்) பயறு
அப்ப வகை பச்சரிசி பிட்டு வெளரிப்பழம் இடிப்பல் வகை (இடித்த மாவினால் செய்தவை) தனி மூலம் (கிழங்கு வகைகள்)
மிக்க அடிசில் (சோறு) கடலை பட்சணம் எனக் கொள் அரு விக்கின சமர்த்தன் எனும் அருளாழி
என்பது விநாயகருக்கு அவர் கொடுக்கும் அடைமொழி.
பள்ளியிற் பிள்ளையார் சிந்தனை என்று ஒரு தோத்திரம் உண்டு. முற்காலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் போதிக்கப்பட்டது. அது
எள்ளுப் பொரித்த பொரியும் இடித்து அவல் தன்னில் கலந்து
வள்ளிக் கிழங்கைத் திருத்தி வாழைப் பழத்தை உரித்து
உள்ளிய பாகு திரட்டி உண்ணும்படியே தருவோம்
கள்ளத் திருமால் மருகா கணபதி சப்பாணி கொட்டாயே
ஆறு தேங்காய் அவல் தூணி அதற்குத் தகுந்த எள்ளுருண்டை
நூறு குடலை மாம்பழம் நொடிக்கும் அளவில் அமுது செய்ய
வல்ல பிள்ளாய்
என்று துவங்குகிறது.
வேறு எந்தத் தெய்வத்துக்கும் இது போல விருப்பமான உணவு என்று குறிப்பிட்டுச் சொல்வது இல்லை. ஆம், ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு. லலிதா ஸஹஸ்ரநாமம் ஓரிடத்தில் அம்பிகையை பாயசான்னப் பிரியா என்கிறது. ஆனால் இது பொது வழக்காக இல்லை.
உணவைப் பொறுத்துப் பெருமை பெறுபவர் விநாயகர் மட்டுமே.
இந்த விநாயகரைப் போற்றி பாரதி 40 பாடல்கள் கொண்ட ஒரு நான்மணிமாலை இயற்றியுள்ளார். வேழ முகம், அங்குச பாசம், கொம்பு இவற்றைக் குறிப்பிடும் பாரதி அதில் ஓரிடத்தில் கூட விநாயகரின் பெருவயிறைப் பற்றியோ அவரது உணவைப் பற்றியோ குறிப்பிடவில்லை. பெருந் தீனி தின்பது ஒருதெய்வத்துக்குப் பெருமை சேர்க்கக்கூடிய விஷயமல்ல என்று அவர் கருதியிருப்பார் போலும்.
சிவன் மகன், சக்தி குமாரன் என்று அவர் பேசினாலும் அவரது விநாயகர் புராணக் கதை எல்லைகளைக் கடந்த தெய்வம். அவர் வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த பிருஹஸ்பதியும் பிரமனும் யாவும் தானே ஆகிய தனி முதற் கடவுள். அவருள் மாடன், இருளன் ஆகிய தொல் பழம் தெய்வங்கள் உள்ளிட்ட எல்லாத் தெய்வங்களும் அடங்கி இருப்பதாகக் கூறுகிறார்.
தேவதேவா சிவனே கண்ணா
வேலா சாத்தா விநாயகா மாடா
இருளா சூரியா இந்துவே சக்தியே
வாணீ காளீ மாமகளேயோ
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ள
யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே
வேதச்சுடரே மெய்யாங் கடவுளே
மற்றொரு பாடலில் இன்னும் ஒரு படி மேலே போய் பிற மதக் கடவுள்களையும் உள்ளடக்குகிறார்.
விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்
நாராயணனாய் நதிச் சடை முடியனாய்
பிறநாட்டிருப்போர் பெயர் பல கூறி
அல்லா யெஹோவா எனத் தொழுதன்புறும்
தேவரும் தானாய் திருமகள் பாரதி
உமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்.
உலகெலாம் காக்கும ஒரு தனிப் பரம்பொருளுக்கு மானிடர் அளித்துள்ள ஆயிரக்கணக்கான பெயர்களில் விநாயகர் என்பதும் ஒன்று என்று கூறி சமய சமரசத்தை நிலைநாட்டுகிறார்.
No comments:
Post a Comment