Pages

Saturday, January 7, 2012

பேயார்-1





                எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் எல்லாச் சமயங்களிலும் பேய் என்னும் கருத்துரு உண்டு. ஆனால் இது இடத்துக்கு இடம் காலத்துக்குக் காலம் மாறுபடுகிறது.

                ஆசை நிறைவேறாமல் அற்ப ஆயுளில் இறந்தவர்களும் தற்கொலை, விபத்து இவற்றால் இறந்தவர்களும் பேயாக மாறி உலவுகின்றனர் என்பதும், இப் பேய்கள் உருவம் இல்லாதவை என்பதும், இவை பெண்களையும் பலவீனமானவர்களையும் பிடித்துத் துன்புறுத்துகின்றன என்பதும் இன்றைய தமிழ்நாட்டு நம்பிக்கை. ஆனால் அம்மையார் கூறும் பேய்கள் வேறு வகையானவை. அவரது மூத்த திருப்பதிகம் பேய்களைப் பற்றிக் கூறும் விவரங்களைப் பார்ப்போம். 

      இறந்தவர்கள் பேயாவதில்லை. மாறாக, பேய்கள் என்பவை மனிதர் போன்ற உருவம், ஆனால் அழகற்ற தோற்றம் உடைய தனி உயிரினம். வற்றிய கொங்கை, புடைத்த நரம்பு, ஆழமான கண், வெண் பல், ஒட்டிய வயிறு, சிவந்த தலை மயிர், இரு கோரைப் பற்கள், உயரமான புறங்கால், நீண்ட கணுக்கால் கொண்டவை பேய்கள். இவற்றில் சில வாயி்ல் தீயும், சில கண்ணில் தீயும் கொண்டவை. இவற்றில் கூளி என்ற ஒரு வகை உண்டு. இவை மற்றப் பேய்களிலிருந்து எவ்வாறு மாறுபட்டவை என்பது தெரியவில்லை.

      இவை சுடுகாட்டில் வாழ்கின்றன. அங்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றன. அவற்றிற்குப் பெயரும் இடுகின்றன. மனிதர்களைப் போலவே தாய்ப் பாசம் உள்ளவை இவை. குழந்தைக்குத் தாய்ப்பாலும் நிணமும் ஊட்டிப் பேணி வளர்க்கின்றன. குழந்தையின் முகத்தில் உள்ள புழுதியைத் துடைக்கின்றன. அது தூங்கும்போது சிறிது நேரம் தாய்ப் பேய் வெளியில் செல்கிறது. விழித்து எழுந்த குழந்தை தாயைக் காணாது அழுதுவிட்டுப் பின் உறங்குகிறது. பிள்ளைப் பேய்களை இருட் காலத்தில் அன்புடன் தடவிக் கொடுக்கின்றன தாய்ப் பேய்கள். அவை குறும்பு செய்யாமல் இருப்பதற்காக அவற்றை அச்சுறுத்தி கொள் என்று இசை பாடுகின்றன.

      நம்முடைய கண்ணோட்டத்தில் தான் பேய்கள் அழகற்றவை. அவை தாம் அழகாக இருப்பதாகத் தான் கருதுகின்றன போலும். அவை மனிதப் பெண்களைப் போலவே தம்மை ஒப்பனை செய்து கொள்வதில் நாட்டம் கொண்டவை. கூந்தலைக் காய வைக்கிறது ஒரு பேய். மற்றொன்று கள்ளி மரத்தின் கிளைகளிடையே காலை நீட்டிக் கொண்டு ஒய்யாரமாகப் படுத்திருக்கிறது. எரிந்து அணைந்த கொள்ளிக் கட்டையை மசிய அரைத்து உண்டாக்கிய மையைக் கண்ணில் பளிச்சென்று தெரியும்படியாக தீட்டிக் கொள்கிறது அது.

      அவற்றிற்கும் நம்மைப் போலவே கோபம், பயம், மகிழ்ச்சி முதலான உணர்ச்சிகள் உண்டு. மரத்தில் உட்கார்ந்திருக்கும் ஒரு பேய் திடீரென்று ஏதோ சத்தம் கேட்டதும் பயந்து குதிக்கிறது. அங்கு பிணஞ்சுடு தீச் சுட்டுவிடவே, கோபித்து புழுதியை அள்ளி தன்னைச் சுட்ட தீயை அவிக்கிறது என்பதையும் அம்மையாரின் பாடலின் மூலம் அறிகிறோம்.

      பேய்களுக்கும் துன்பம், வறுமை எல்லாம் உண்டு. ஊரில் யாரும் இறக்காத நாளில் அவை, பாவம், பட்டினி் தான். கிடைத்த நாட்களிலும் அவை நரி, கழுகு முதலானவற்றுடன் போட்டி போட வேண்டி இருக்கிறது. இறுதிக் கடன் செய்து மனிதர் விட்டுப் போன சோற்றை நரி தின்னும்போது இதை முன்பே பார்க்கவில்லையே, பார்த்திருந்தால் நரிகளை வெருட்டித் தின்றிருக்கலாமே என்று கோபத்துடன் பேய்கள் கையைத் தட்டிக் கொண்டு வட்டமாகச் சென்று ஆடி, இசை கூட்டுகின்றன. துணங்கைக் கூத்தினை ஆடுகின்றன. வலிய பேய்கள் ஒன்றை ஒன்று அடித்து ஒரு சேரக் கூச்சலிடுகின்றன.

      பிணங்களை உண்டு களிக்கும் அவை உயிருள்ள மனிதர்களை ஒன்றும் செய்வதில்லை. உண்மையில் அவை மனிதர்களிடம் அஞ்சுகின்றன. ஒரு பிணத்தை உயிருள்ள மனிதன் என்று தவறாக நினைத்த ஒரு பேய் பயந்து போய் ஊரைக் கூட்டிய செய்தியை அம்மையார் நகைச்சுவையோடு விவரிப்பதைக் காண்கிறோம்.

      பேய்கள் பற்றி அம்மையார் கூறியவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது மனித மாமிசம் தின்னும் வழக்கம் உடைய மனிதர்களைத் தான் அக்காலத்து மக்கள் பேய் எனக் கருதினார்கள் எனத் தோன்றுகிறது. அம்மையார் காலத்தில் உண்மையில் அத்தகைய மனிதர்கள் இருந்தார்களா? இருந்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. காரணங்களை ஆராய்வோம்.

                பரிணாம வளர்ச்சிப் படிகளில் கீழ்நிலையில் உள்ள மீன் போன்ற சில தவிர, ஏனைய உயிரினம் எதுவும் தன் இனத்தாரின் புலாலை உண்பதில்லை. கொடிய புலி கூட மற்றொரு புலியைத் தின்பதில்லை. வளர்ச்சி நிலையில் மேல் படியில் உள்ள மனிதனுக்கு தன் இனத்தாரின் மாமிசம் இயல்பான உணவு அல்ல. வக்கிர புத்தி உடைய சிலர் எப்பொழுதேனும் அவ்வாறு உண்டிருக்கலாம். மற்ற மனிதர்களுக்கு இது அதிர்ச்சியும் ஆச்சரியமும் பயமும் தரும் செய்தியாக இருக்கும். எனவே அவர்கள் இதைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருப்பர். செவி வழிச் செய்தியாக இது பரவும்போது சொல்பவரின் கற்பனையும் அதில் கலந்து பரவும். அதனால் இது பற்றிய கதைகள் இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன.  

                டேனியல் டேபோ எழுதிய ராபின்சன் குரூசோ என்னும் புகழ் பெற்ற கதையில் கன்னிபல் எனப்படும் காட்டுமிராண்டி ஆண்கள் தங்களில் ஒருவனை அவ்வப்பொழுது கொன்று தின்பதாகக் கூறுகிறார். இது கதை எழுதியவரின் நாட்டில் அக்காலத்தில் நிலவிய நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது எனக் கொள்ளலாம்.

                பிணம் தின்பதால் அதீதமான வலிமை பெற்ற மந்திரவாதிகள் பற்றிய கதைகள் பல நாடுகளில் காணப்படுகின்றன. அவர்கள் பெண்களாகவே இருக்கக் காண்கிறோம்.

                சங்கத் தமிழ் இலக்கியங்களில் பேய் மகளிர் பிணம் தின்பதாகப் பல குறிப்புகள் உள்ளன. இங்கு ஆண் பேய்கள் கிடையாது. இந்தப் பேய் மகளிர் அஞ்சுவதற்குரியவராக வர்ணிக்கப்பட்டாலும் அவர்கள் ஊருக்குள் புகுந்து மனிதரைத் தூக்கிச் சென்று கொன்று தின்பதாகச் சொல்லப்படவில்லை. சுடுகாட்டில் கொண்டு வைக்கப்படும் பிணங்களை மட்டுமே அவர்கள் தின்பராம். துணங்கை என்னும் கூத்தினை ஆடி மகிழ்வராம்.

                அம்மையார் தான் முதன் முதலில் பேய்களின் செயல்களை எல்லாம் விவரமாக வர்ணித்தவர். பிற்காலத்தில் பேய்களைக் கதா பாத்திரங்களாக்கிப் புனையப்பட்ட பரணி என்னும் சிற்றிலக்கிய வகைக்கு வழிகாட்டியவர் அம்மையாரே.

       அம்மையார் கூறும் பேய்களும் பெண்களே. ஒரு ஆண் பேய் கூடக் குறிக்கப் படவில்லை. குழந்தைப் பேய் என்னும் ஒரு புதிய வகையை உருவாக்கிய அம்மையார், சங்க காலத்திலிருந்து தொடர்ந்து வந்த பிணம் தின்னும் பேய் மகளிர் என்னும் கருத்துருவுக்குத் தன் கற்பனை மூலம் தாய்ப் பாசம், பயம் ஆகிய உணர்ச்சிகளைப் படைத்து விரிவுபடுத்தினார் என்பது பெறப்படுகிறது. அம்மையாரைப் பின்பற்றியே பிற்காலத்தில் வந்த ஜயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியில் குழந்தைப் பேய்களை அறிமுகப்படுத்துகிறார்.

                அம்மையார் கொண்ட பேய்வடிவம் சுடலைப் பேய்களுக்கு உண்டான அருவருக்கத்தக்க தோற்றமும் செயல்களும் உள்ளதல்ல. மாறாக, வனப்பு நின்ற தசைப் பொதி கழிந்து, எற்பு உடம்பே ஆன, எல்லோரும் வணங்கும் பெருமை சேர் வடிவமாக இருந்தது. இறைவனின் அருகாமையை விரும்புவதில் மட்டும் தான் இவர் பேயுடன் ஒன்றுகிறார். ஈசன் பேய்களுடன் நடனமாடுகிறார் என 24 முறை கூறும் இவர் தன்னைப் பேய் என 4 முறை கூறிக் கொள்கிறார்.

                அவர் தம்மைப் பேய் எனச் சொல்லிக் கொள்ள வேண்டிய நிலை எப்படி ஏற்பட்டது? பேயார்- 2 என்றபகுதியில் காண்போம்.






No comments:

Post a Comment