இறைவனிடம் கொண்ட தூய அன்பில் மட்டுமல்லாது அதை வெளிப்படுத்தும் கவிதைத் திறனிலும் அம்மையார் விஞ்சி நிற்கிறார். பல வகை அணிகளும் அவருக்குக் கைகட்டிச் சேவகம் செய்கின்றன.
அவரது உவமைத் திறத்துக்கு ஒரு சான்று- இறைவனின் சடைமுடி பொன்மலை போல் மின்னுகிறது. கற்றைகள் பொன்னைச் சுருளாகச் செய்தது போல் விளங்குகின்றன. தலையில் சூடிய நிலவு வெள்ளித் தட்டினைத் தேய்த்து வளைத்தது போல் உள்ளது. அதன் ஒளிக்கதிர்கள் சடைக் கற்றைகளின் ஊடே பரவி விழும் காட்சி பொன் சரிகையையும் வெள்ளி சரிகையையும் சேர்த்து முறுக்கியது போலத் தோற்றமளிக்கிறதாம்.
ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன
போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின்- ஞான்றெங்கும்
மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே
அக்கயலே வைத்த அரவு. (அ-26)
அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்
விராவு கதிர்விரிய ஓடி- விராவுதலால்
பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே
தன்னோடே ஒப்பான் சடை. (அ-49)
இறைவனின் கண்டத்தில் உள்ள கருமையின் ஒளிக்கு அவர் அடுக்கும் உவமைகளைப் பாருங்கள். நிலவு சூடியின் நீல கண்டத்துக்கு உவமையாக இருளைக் கூறுவேனா, மேகத்தை மொழிவேனா, நீல மணியை நினைப்பேனா என்று கூறுகிறார். ராம பிரானின் கருமேனியின் அழகை வர்ணிக்கப் புகுந்த கம்பர் மையோ மரகதமோ மழை முகிலோ மறிகடலோ எனப் பேசியபோது அம்மையாரின் இந்தப்பாடலை நினைவு கூர்ந்திருப்பார்.
இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ
மருளின் மணிநீலம் என்கோ- அருளெமக்கு
நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்
ஒன்றுடையாய் கண்டத் தொளி. (அ-88)
தற்குறிப்பேற்ற அணியை அம்மையார் கையாளும் திறனுக்கு இதோ ஒரு சான்று- ஈசன் கழுத்தில் கருமையும் தலையில் நிலவும் உள்ளது. அது எப்படி உள்ளது தெரியுமா? வெண்ணிலா தன்னை அழித்துவிடும் என்று அஞ்சி இருள் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்து கொண்டிருப்பது போல் உள்ளதாம்.
அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி இருள்போந்
திடங்கொண் டிருக்கின்ற தொக்கும்- படங்கொள்
அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல
மணிமிடற்றின் உள்ள மறு. (அ-35)
அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
அழகால் அழல்சிவந்த வாறோ (அ-98)
என்று அவர் வியக்கும் அழகு தனித்தன்மை வாய்ந்தது. கொடி அசைந்த்தும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடி அசைந்ததா என்று கண்ணதாசனைப் பாட வைத்தது இவ்வரிகள் தாமோ?
அவரது எதுகை மோனைகளும் அடுக்குத் தொடர்களும் ஓசை நயத்தினால் கற்பாரைக் களிப்பிப்பன. சில உதாரணம் காண்போம்.
சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்
பேராளன் வானோர் பிரான் (அ-44)
ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகாது
ஈதொக்கும் என்பதனை யாரறிவார் (அ-62)
இருளின் உரு என்கோ மாமேகம் என்கோ
மருளில் மணிநீல மென்கோ (அ-88)
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேளையே போன்றிலங்கும் வெண்ணீறு (அ-65)
ஆறாடி ஆறா அனலாடி அவ்வனலின்
நீறாடி நெய்யாடி நீ (தி-14)
அம்மையாரின் இலக்கியம் அளவில் மிகச் சிறியது. அவர் பல்வேறு கதா பாத்திரங்கள் கொண்ட ஒரு காப்பியம் எழுதவில்லை. இறைவனின் பெருமையைப் போற்றியும் அவரிடம் தான் கொண்ட அன்பைப் பற்றியும் பேசும் அவருக்கு பல வகைச் சுவைகளையும் வெளிப்படுத்துவதற்கான களம் மிகச் சிறியது. எனினும் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகிய எண் வகை மெய்ப்பாடுகளும் அம்மையாரின் கவிதையில் விரவி வந்துள்ளன. நகைச் சுவையைப் பற்றித் தனித்த தலைப்பில் காண்போம். முதலில் பிற சுவைகளைக் காண்போம்.
எஞ்ஞான்று தீர்ப்ப திடர் (அ-1), அல்லல் அறிய முறையிட்டால் கேளாதது என்கொலோ (அ-4), மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்கு என்செய்வான் கொல்லோ இனி (அ-15) என்று கேட்கும்போது அழுகைச் சுவையைக் காண்கிறோம்.
ஏறலால் ஏற மற்றில்லையே எம்பெருமான் (தி-18), படுவெண் புலால் தலையின் உள்ளூண் புறம்பேசக் கேட்டோம் (அ-56) என்னும் போது இளிவரல் சுவையைக் காண்கிறோம்.
அரனென்கோ நான்முகன் என்கோ அரிய பரனென்கோ (அ-18), அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள் முடிபேரின் மாமுகடு பேரும், கடகம் மறிந்தாடும் கைபேரில் வான்திசைகள் பேரும் (அ-77), இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ மருளின் மணிநீலம் என்கோ கண்டத் தொளி (அ-88), நடக்கிற் படிநடுங்கும், நோக்கில் திசைவேம், இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் அடுக்கல் பொருமேறோ ஆனேறோ நின்னேறு (அ-100) என்பதில் மருட்கை தெரிகிறது.
இலக்கியத்தில் அரிதாகவே ஆளப்படும் அச்சச் சுவையை அம்மையார் போல் அழகாகப் பயன்படுத்தியவர் எவரும் இல்லை. சுடுகாட்டுக் காட்சிகளை அவர் வர்ணிக்கும்போது நமக்கு அச்சம் ஏற்படுவதுடன் மெல்லியல்பு உடைய ஒரு பெண்மணி எப்படி இதை எல்லாம் நுட்பமாக வர்ணிக்கிறார் என்று வியப்புத் தோன்றுகிறது. சூழ்நிலையின் அச்சம் தரும் தன்மையை மிகுதிப்படுத்திக் காட்டியதன் மூலம் அவர் இறைவனின் அளவற்ற சக்தியை கோடிட்டுக் காட்டுகிறார். அத்தகைய அச்சம் தரும் ஈசன், அளவு கடந்த வலிமை உள்ள ஈசன், அடியார்களுக்கு மிக நல்லவன் என்று அவனது கருணையை வெளிப்படுத்தி, மக்கள் மனதில் இறை அன்பையும் பாதுகாப்பு உணர்வையும் விதைக்கிறார்.
யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம் (அ-7), ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன் ஆயினேன் (அ-8), இனியோ நாம் உய்ந்தோம் இறைவன் அருள் சேர்ந்தோம் இனியோர் இடரில்லோம் (அ-16), மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும் திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் (அ-21) என்பதில் உவகை வெளிப்படுகிறது.
எனக்கவனைக் கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன் உண்டே எனக்கரிய தொன்று (அ-10) என்பதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் தெரிகின்றன.
இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும் அன்றும் அளப்பரியன் ஆனானை, என்றும் ஓர் மூவா மதியானை மூவேழுலகங்கள் ஆவானைக் காணும் அறிவு (அ-19) என்பதில் பெருமிதம் பீறிடுகிறது.
இறைவர் எமக்கிரங்காரேனும் கறைமிடற்ற எந்தையார்க் காட்பட்டேம் என்றென்றிருக்குமே எந்தையா உள்ள மிது (அ-23) என்பதில் சாந்தம் என்னும் ஒன்பதாவது சுவை அடங்கி இருக்கிறது.
அம்மையார் தாய்மை அன்பே வடிவானவர். இறை உணர்வில் தோய்ந்து இருப்பதால் அவருக்கு உலகியல் நினைவுகளே இருப்பதாகத் தெரியவில்லை. எனவே அவருக்குக் கோபம் வருவதற்கான வாய்ப்பே இல்லை. எனினும் நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக (அ-33) என்னும் ஓரிடத்தில் மட்டும் அவருடைய வெகுளி சற்றே வெளிப்படுகிறது.
No comments:
Post a Comment