Pages

Sunday, January 15, 2012

செய்க தவம்
      எடுத்த காரியம் யாவினும் வெற்றி அடைய வேண்டுமென்று தான் எல்லோரும் விரும்புகிறோம். ஆனால் நடைபெறுகிறதா? எண்ணி எண்ணிப் பல நாளும் முயன்று இங்கு இறுதியில் சோர்வடைகிறோம். எய்த விரும்பியதை எய்தப் பாரதி ஒரு வழி காட்டுகிறார்.

செய்க தவம் செய்க தவம் நெஞ்சே, தவம் செய்தால்
எய்த விரும்பியதை எய்தலாம்

            தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம். துருவன், பகீரதன், அர்ஜுனன் முதலானோர் தவம் செய்து விரும்பியதை அடைந்தனர். அவர்களைப் போல நாமும் கானகம் சென்று கனி கிழங்குகளைப் புசித்து நீரிடையேயும் நெருப்பிடையேயும் ஒற்றைக் காலில் நின்று இரவு பகல் விடாது இறைவன் பெயரை உச்சரிக்க வேண்டுமா? (தவம் என்றால் இப்படித் தான் என்று கேட்டு வந்திருக்கிறோம்.) அப்படிச் செய்வதற்கு வேண்டிய மனத் திண்மை நம்மிடம் இல்லை.

      அஞ்ச வேண்டாம். பாரதி கூறுவது மிக எளிமையான தவம். அது தான் அன்பு செய்வது. வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை என்கிறார் அவர். இது எளிமையானது மட்டுமல்ல, முனிவரின் தவத்தை விட மேம்பட்டதும் ஆகும்.

துறந்தார் பெருமை பெரிது அதனினும் பெரிதாகும் இங்குக்
குறைந்தாரைக் காத்து எளியார்க்கு உணவீந்து குலமகளும்
அறந் தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்டமெலாம்
சிறந்தாளும் நாதனைப் போற்றிடும் தொண்டர் செயும் தவமே.

      எளியோரைக் காத்து உணவளிப்பது, நல்லோர் வாழ்க என இறைவனிடம் வேண்டுவது - இவை, இல்லறம் துறந்து கானகம் சென்று முனிவர் செய்யும் தவத்தை விட மேம்பட்டது ஆகும் என்கிறார் பாரதி.

      மிக எளிதான வழியாக இருக்கிறதே, எல்லோரும் இவ்வாறு அன்பு செய்வதன் மூலம் எய்த விரும்பியதை எய்தி விடலாமே. இதில் மற்றொரு பலனும் உண்டு. உணவுக்காக அரும்பாடுபட்டு அல்லல் பட்டு உழைக்கிறோமே, அது இனிமேல் தேவை இல்லை. உழைக்காமலேயே உணவு கிடைக்கும் என்று பாரதி கூறுகிறார். 

மானிடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினும் அன்றி நீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர் தருமேல் மண் மீது மரங்கள்
வகை வகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்குமன்றே
யானெதற்கும் அஞ்சுகிலேன் மானிடரே நீவிர்
என் மதத்தைக் கைக்கொண்மின், பாடுபடல் வேண்டா
ஊனுடலை வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும்
உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்

      அன்பு செய்து கொண்டிருந்தால் போதும். உழ வேண்டாம், விதை போட வேண்டாம், எல்லாப் பயிர் வகைகளும் செழித்து ஓங்கும்.
     
     பாரதி ஏதோ மயக்கத்தில் உளறுவதாக நினைத்தோம் என்றால்,
வள்ளுவரும் இதையே கூறுகிறார். விருந்தோம்பி விட்டு மீதி இருப்பதைப் புசிப்பவன் தன் நிலத்திற்கு விதையே போட வேண்டாம், விளைந்து விடும் என்கிறார். விவிலியமும் ஏசுநாதர் கூற்றாக இதைக் கூறுகிறது-
     
      என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும் என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள்.

      ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள், அவைகள் விதைக்கிறதும் இல்லை, அறுக்கிறதும் இல்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதும் இல்லை. அவைகளையும் உங்கள் பரம பிதா பிழைப்பூட்டுகிறார்.

      இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரம பிதா அறிந்திருக்கிறார். முதலாவது, தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கும் கூடக் கொடுக்கப்படும்.

      கேட்க நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் உழைக்காமல் தேவனுடைய நீதியைத் தேடி அன்பு செய்து கொண்டிருந்தால் உணவு கிடைக்கும் என்று நம்புவதற்கு நம்முடைய அனுபவமும் பகுத்தறிவும் இடையூறாக உள்ளனவே?

      ஏசுநாதர், வள்ளுவர், பாரதி கூறியபடி உழைக்காமல் அன்பு செய்து கொண்டிருந்தால் சில பயிர்கள் வேண்டுமானால் வளரலாம். ஆடைகள், வீடுகள் தானாகவே முளைக்குமா?

      விளக்கம் கேட்டு மீண்டும் பாரதியிடமே போவோம். அன்பே தவம் என்று சொன்ன பாரதி வேறோரிடத்தில் தவமே யோகம், யோகமே தவம் என்கிறார். அதாவது அன்பு, தவம், யோகம் இவை ஒரு பொருள் சொற்கள். யோகத்தை விளக்குகிறார்
     
      ஊருக்கு உழைத்தல் யோகம்.

      பாரதி குறிப்பிடும் தவம் என்பதும் அன்பு செய்தல் என்பதும்  ஊருக்கு உழைத்தலைத் தான் குறிக்கிறது என்பதை அறிகிறோம்.  
      பாரதியால் பெரிதும் போற்றப்பட்ட பகவத்கீதையின் இந்தக் கருத்தைக் கவனியுங்கள்.
      யாகத்தில் மிஞ்சியதை உண்ணும் நல்லோர் எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். எவர் தமக்காகச் சமைக்கிறார்களோ அவர்கள் பாபத்தை உண்கின்றனர்.

      இங்கு யாகம் எனப்படுவது பிறர் நன்மைக்காகச் செய்யப்படும செயல்களைக் குறிக்கிறது. எனவே உழைக்கத் தான் வேண்டும், ஆனால் தனக்காக அல்ல, பிறருக்காக என்பதே பாரதியின் கொள்கை என்பதை அறிகிறோம். ஊருக்காக உழைத்தால் அது உழைப்பாகத் தோன்றாது, உடலை வருத்தாது. தன்னலமின்றிப் பொதுப்பணியில் ஈடுபட்டவர்கள் மட்டுமே இதை உணர முடியும்
இது தொடர்பாக வினோபா கூறுகிறார் தாய் குழந்தைக்கு வேண்டிய போஷணையைச் செய்கிறாள். நான் என்ன செய்து விட்டேன், ஒன்றுமே செய்யவில்லையே, எனக்கு இது ஒரு பாரமா என்று அவள் கேட்கிறாள். மனிதன் இதய பூர்வமாய்க் கர்மம் செய்கையில் வேதனை, கஷ்டம், ஆயாசம் போன்ற எதுவுமே இருப்பதில்லை.

      பிறர் நலனுக்காக உழைக்கும்போது உடம்போ மனமோ பாதிக்கப்படுவதில்லை, எனவே அது உழைப்பே அல்ல.

      எனவே அன்பு செய்யுங்கள். சூழ்ந்ததெல்லாம் கடவுள் எனக் கருதி எல்லாவற்றிடத்தும் அன்பு செய்யுங்கள்பிறர் நன்மை மட்டும் கருதி உழையுங்கள். உங்கள் வயிற்றுப் பாட்டை இறைவன் கவனித்துக் கொள்வான்ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். அதுவே தவம். தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடும் வழியும் அதுவே.

No comments:

Post a Comment