Pages

Sunday, July 29, 2012

அரக்கனைச் செற்ற ஆதி




சம்பந்தர் தேவாரத்தில் ஒவ்வொரு பதிகத்தின் எட்டாவது பாடலும் ராவணன் பற்றிய குறிப்பைக் கொண்டுள்ளது. இந்தப் பாடல்களின் திரண்ட கருத்தைத் தொகுத்துக் காண்போம்.

இலங்கையை மூதூர் எனச் சிறப்பிக்கிறார் சம்பந்தர். அது உயர்வும் அழகும் பொருந்தியது. இங்குக் குன்றின் உச்சி மேல் கொடியுடன் கூடிய நீண்ட மதில் சூழ்ந்த நகர் உண்டு. இது மாட வீதிகளால் அழகு பெறுவது. தேசு குன்றாத் தெண்ணீர் கொண்டது, வாசங் கமழும் பொழில் சூழ்ந்தது.

இத்தகைய பெருமை வாய்ந்த இலங்கை நகர்க்கு இறைவன் ராவணன் என்னும் அரக்கன். அவனும் பெருமைகள் பல பொருந்தியவன். கதிரவன் போன்ற ஒளியுடைய நீண்ட மகுடங்களைச் சூடிய பத்துத் தலைகளும் இருபது தோள்களும் கொண்டவன், வியர்வை தோன்றும் மலை போன்ற திரண்ட தோள்களை உடையவன், பெரும் வீரம் கொண்டவன். எண்திசைகளிலும் காவல் காத்து நிற்கும் யானைகளோடு மோதும்போது அவற்றின் கொம்புகள் அவனது மார்பில் குத்தி உடைந்தன. அவன் தன் வீரத்தைப் பறை சாற்றும் விதமாக அந்தப் புண்களைச் சுற்றிப் பூண்கள் அமைத்துக் கொண்டான். வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப் பாய்ந்து அமர் செய்யும் தொழில் கொண்ட அவனது படை வீரர்களாகிய அரக்கர்கள் மயங்கு மாயம் வல்லவர்கள்.  வானிலும் நீரிலும் இயங்கும் ஆற்றல் கொண்டவர்கள். அவனுடைய தரைப் படையோடு கப்பற் படையும் வலிமை உள்ளதாக இருந்தது.

இத்தகைய பெருமை பொருந்திய ராவணனின் மறுபக்கத்தைப் பார்ப்போம். அவன் தொன்மையான அறவுரைகளைச் சிந்தை செய்யாதவன்,சித்தத் தெளிவு அற்றவன், போரில் முறையற்ற செயல்களைச் செய்யும் தூர்த்தன். இவன் தவம் செய்து அயன் அருளால் மிகுந்த வலிமை பெற்றுச் செருக்குக் கொண்டான். அதனால் இறைவனிடம் கூட மனம் பொருந்தாது போயினான்.

இவனது தேர் செல்லும் வழியில் இறைவன் வீற்றிருக்கும் கைலாய மலை தடுத்தது.  அது இறைவன் நல்லிடம் என்றறியான்,  பெருவரையின் மேலோர் பெருமானும் உளனோ என வெகுண்டான், வள்ளல் இருந்த மலையதனை வலஞ்செய்தல் வாய்மையென உள்ளங் கொள்ளாது கொதித்தெழுந்தான். வரும் விளைவை எண்ணாதவனாக, வாளமர் வீரத்தை மட்டுமே நினைந்து, இந்த மலை எனக்கு எம்மாத்திரம் என்று கருதிப் பெயர்த்தெடுத்தான். மலை நிலை குலைந்தது, விண் அதிர்ந்தது, உமை அம்மை அஞ்சி நடுங்கினாள்.

இது கண்ட இறைவன் தனது திருவடியின் அழகிய பவழம் போன்ற விரலை ஊன்றி மலையை அழுத்தினார். விரலை ஊன்றக் கூட இல்லை, நகத்தை சற்றே ஒற்றினார். மலை அதனிடத்தில் அமர்ந்தது. நசுக்கப்பட்டான் ராவணன். பத்து வாய்களாலும் கதறினான். அவனது ஆற்றல், ஆண்மை, புகழ், செருக்கு யாவும் அடங்கின. ராவணனுக்குக் கிடைத்த தண்டனையால் அளகாபுரிக்கு இறைவனாகிய குபேரன் மகிழ்ந்தான். ராவணவனது வலிமையால் ஒடுக்கப்பட்டவன்  அல்லவா அவன்? 

இறைவனது ஊன்றலில் சினம், கருணை ஆகிய இருவகைக் குறிப்பும் காணப்பட்டன. அடர்த்ததோடு மட்டுமன்றி இன்னருளும் செய்தார் அவர். மலையின் கீழ் நசுங்கிக் கொண்டிருந்த ராவணன் தன் பிழையை உணர்ந்து நல் உரைகளால் இயன்ற பாடல்களைப் பாடத் தொடங்கினான். நிமலா போற்றி என்று வேத கீதங்கள் இசைத்தான். இசை கேட்டு இறைவன் மகிழ்ந்தார், இரங்கினார். சந்திரனின் பெயர் உடைய வலிமை மிகுந்த வாள் ஈந்தார், முக்கோடி வாழ்நாளும் கொடுத்தார். அன்று முதல் தான் அவன் அழுபவன் என்று பொருள் கொண்ட ராவணன் எனும் பெயரைப் பெற்றான்.

சம்பந்தர் இந்த நிகழ்ச்சியைப் பதிகம் தோறும் பாட வேண்டிய அவசியம் என்ன? இதனை 353 தடவை வலியுறுத்துவதன் மூலம் அவர் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன?

சிவபெருமானிடம் முரண் கொண்டவர்கள் பிழைப்பது இல்லை. அவரது கண் பார்வையால் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட காமன் மற்றையோர் காணுமாறு மீண்டும் தன் உரு பெறவில்லை. தக்கன், சலந்தரன் ஆகியோர் அழிந்தே போயினர். திரிபுர அவுணர்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். இவரை எதிர்த்து வந்த யானை, புலி முதலானவை உயிரிழந்து இவருக்கு ஆடையாக மாறிவிட்டன. இவரது கோபத்துக்கு ஆளாகி மீண்டவர் இருவரே. ஒருவன் யமன். அவன் மார்க்கண்டன் என்னும் அடியாரின் உயிரைக் கவர வந்ததால் சிவனால் உதையுண்டான் எனினும் பின்னர்ப் பணிந்ததால் மன்னிக்கப்பட்டான். ராவணன் ஆணவம் கொண்டு சிவனைப் புறக்கணித்தான். ஆயினும் தன் பிழையை உணர்ந்ததால் மன்னிக்கப்பட்டான். மன்னித்தது மட்டுமல்ல, அவனுக்கு முக்கோடி வாணாளும் கூர்வாளும் கொடுத்து இன்னருளும் செய்தார் இறைவன்.

எனவே முரண்பட்டாரை அழிப்பதும், பணிந்தாரை, அவர்கள் தவறே செய்திருப்பினும், காப்பதும் இறைவனின் பண்பு என்பதை இது உணர்த்துகிறது.

சங்க காலத்தில் சிவன் காய்கடவுள் என்று அழைக்கப்பட்டார். அவரது கோபத் தோற்றம் தான் முதன்மைப் படுத்தப்பட்டது. இன்று சிவ வழிபாட்டில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் வேத மந்திரமாகிய ருத்ரம், ருத்திரனே உன் கோபத்துக்கு நமஸ்காரம் என்று தான் தொடங்குகிறது.  இந்நிலையை மாற்றி அஞ்சுதலுக்கு உரியவராக இருந்த சிவனை அன்புக்கு உரியவராகச் சித்தரித்த அம்மையார் முதன் முதலில் சிவனது கருணை வடிவை வெளிப்படுத்தினார். பணிந்து விட்டால் இறைவன் என்ன தான் கொடுக்க மாட்டான் என்று அவர் வியக்கிறார்.

என்னாக வையான்தான் எவ்வுலகம் ஈந்தளியான்
பன்னாள் இரந்தாற் பணிந்து. (அற்புதத் திருவந்தாதி 78)

சிவன் தன்னைப் பகைத்தோரிடம் கடுமை காட்டினாலும் அவரது உண்மையான சொரூபம் கருணையே என்பதனால் சிவனின் தனிப் பெருங் கருணை வடிவை மக்கள் மனதில் பதிய வைக்கவே சம்பந்தர் பதிகம் தோறும் இதை வைத்தார் என்று கொள்ளலாம்.

        இதை மற்றொரு கோணத்திலும் காணலாம். ராவணன் பிறப்பால் அந்தணன். ஆம். புலஸ்திய ரிஷியின் மகன் விஸ்ரவசுக்கும் கேகசி என்ற அரக்கிக்கும் பிறந்த அவன் இளம் வயதில் வேதம் கற்றான். பராசரர் என்ற முனிவருக்கும் சத்தியவதி என்ற மீனவப் பெண்ணுக்கும் பிறந்த வியாசர் அந்தணராக ஏற்றுக் கொள்ளப்பட்டது போல ராவணனும் அந்தணனாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இல்லை. ஏனெனில் அவன் அந்தணருக்கு உரிய கடமைகளை விடுத்து அரசர்க்குரிய நடத்தைகளைப் பின்பற்றினான். அதனால் சம்பந்தர் எல்லாப் பாடல்களிலும் அவனை அரக்கன் என்று கூறுகிறாரே அன்றி ஓரிடத்தில் கூட அவனது பிறப்பு பற்றிய விபரம் சொல்லவில்லை. வேதநெறி தழைக்க வந்த சம்பந்தர் இவ்வாறு பிறப்பொழுக்கம் குன்றியவனை எவ்வாறு அந்தணனாக ஏற்றுக் கொள்வார்? அவன் மலையின் கீழ் நசுங்கிய நிலையில், தான் இளமையில் கற்ற வேதத்தை நினைவுபடுத்திக் கொண்டு அதை இசைக்க, இறைவன் மகிழ்ந்தார் என்று கூறிச் சம்பந்தர் வேதியர் வேதம் ஓதுதலின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

பதிகம் பாடும் முறைக்கு வழிகாட்டியவர் அம்மையார். அடுத்து  வந்த திருநாவுக்கரசர் தன் பதிகங்களில் சிலவற்றில் மட்டும் ஒன்பதாவது பாடலில் எரியுருவான ஈசன் என்னும் கருத்தையும் பத்தாவது பாடலில் ராவணனை அடர்த்தியதையும் குறிப்பிடுகிறார். அதை மேலும் விரிவு படுத்திய சம்பந்தர் தன் பெரும்பாலான பதிகங்களில் 8, 9, 10 பாடல்களுக்கு ஒரு திட்டமான அமைப்பைக் கொடுத்துத் தன் பாடல்களின் நோக்கம் என்ன என்பதைப் புலப்படுத்துகிறார்.

எட்டாவது பாடலில் ராவணனைப் பற்றிக் குறிப்பிட்டதன் மூலம்  வேதம் ஓதுதலை விடாமற் செய்க, தீ ஓம்புக என்று அந்தணர்க்கு அறிவுறுத்துகிறார். ஒன்பதாவது பாடலில் மாலயன் காணாச் சோதி வடிவைக் கூறி அச்சோதியே கோவிலில் சிவலிங்கமாக உள்ளது. அதனை நீரும் மலரும் கொண்டு வழிபடுக என்று ஏனையோருக்கு வழிகாட்டுகிறார். பத்தாவது பாடலில் சாக்கிய சமணரின் இழிவைப் பாடி இறைவன் இல்லை என்று கூறும் சமண சாக்கியரின் தீயுரைகளை விட்டு விலகுக. எப்படிப்பட்ட வழிபாட்டு முறை ஆனாலும் இறைவன் ஓருவன் உண்டு என்பதை ஓப்புக் கொண்டு அவருக்குப் பணிதல் நம் கடன் என்பதை உணர்த்துகிறார்.

Wednesday, July 18, 2012

ஒளியும் இருளும்





ஒளியா இருளா வலியது எதுவோ?
ஒளியைக் கண்டால் விலகுது இருளும்.
விலகலே அன்றி அழிதல் இல்லை.
ஒளி மறைந்த பின் மீண்டும் வருகை
முழுமையாக இருளை ஒழித்து
ஒளி ஒரு நாளும் வென்றது இல்லை
பதுங்கித் தாக்கல் இருளின் தனி வழி

ஒளியும் இருளும் பலத்தில் சமமா?
இருளே அதிகம் ஆட்சி செய்வது
ஒளியின் வீச்சைத் தடுப்பன பொருள்கள்
இருளின் வீச்சை எவரும் தடுக்கிலர்.
ஒன்றின் வேரை மற்றது அறுத்து
அழிக்காததனால் எதிரிகள் அல்லர்.

இருளும் ஒளியும் இயல்பினில் நட்போ?
இருவரும் சேர்ந்து செல்வது இல்லை
இருவரும் பிரிந்து வாழ்வதும் இல்லை

என்ன தான் உறவு இவர்களுக்குள்ளே?


முப்பது வருஷம் வாழ்ந்தவரில்லை




மரத்தடி ஒன்றில் கிடந்தார் பிள்ளையார்
கோயில் இல்லை, கூரையும் இல்லை
கும்பிடப் பெரிதாய்க் கூட்டமும் இல்லை

பணமிகப் படைத்ததோர் பக்தன் வந்தான்
எந்தன் செல்வம் என்றும் காப்பீர்
நாளும் உனக்கு நாலணா தருவேன்
நன்றியோடிருப்பேன் நாயகா என்றான்.

திருடன் ஒருவனும் அவ்விடம் வந்தான்
இந்தச் செல்வனின் சொத்தைத் திருடுவேன்
சிறையுள் புகாமல் நீ எனைக் காத்தால்
கிடைப்பதில் பாதி உனக்கே என்றான்.

ஏழைப் பிள்ளையார் ஏழைக்குதவினார்
உண்டியல் நிரம்ப நோட்டுக் கத்தை
அறங் காவலர்கள் அப்பாவி மக்கள்
அத்தனை பணத்தையும் அவர்க்கே ஆக்கினர்
நிலங்கள் வாங்கினர் கோயிலைக் கட்டினர்
நகைகள் செய்தனர் கவசம் பூட்டினர்
பக்தர் கூட்டமோ பல பல ஆயிரம்
உள்ளே நுழையவே ஒரு நூறு கட்டணம்

அரசியல் வாதியின் கைகள் அரித்தன
வட்டம் பிடித்துமா வட்டம் வளைத்து
கோட்டையை நெருக்கினான். கோவிலில் இவனை
அறங்காவலனாய் அமைச்சர் அமைத்தார்.

கணக்கில் மறைத்துக் கரவுகள் செய்து
நிலங்கள் வளைத்து நகைகள் பதுக்கி
உண்டியல் திருடியும் நிறைவடையாமல்
சாமிக்கடியில் ரத்தினம் உளதென
பாறையால் ஒரு நாள் பெயர்த்துப் போட்டான்
மீண்டும் பிள்ளையார் மரத்தடி வந்தார்

முப்பது வருஷம் வாழ்ந்தவரில்லை
மூத்த கணபதி விதிவிலக்கில்லை.

சின்னக் கவலைகள்



இரவு முழுவதும் தூக்கமில்லை. அறைக் குளிரூட்டி வேலை செய்யவில்லை. ஒரு நாளா, இரண்டு நாளா? ஒரு மாதமாக இப்படித்தான் இருக்கிறது. கேட்டால் மின்னழுத்தக் குறைவு, பூஸ்டர் போட்டால் சரியாகி விடும் என்றார்கள். போட்டேன், 10 நாள் நன்றாக வேலை செய்தது. மீண்டும் பிரச்சினை. அழுத்தக் குறைவு பூஸ்டரின் சக்தியை விட அதிகமாகி விட்டதாம். ஒரு ஜெனரேட்டர் வாங்கிடுங்க, சார் என்று அலுங்காமல் சொல்லி விட்டுப் போய் விட்டார்கள். பணச் செலவு பற்றிய கவலை இல்லை. ஒரு மாதமாக, துணி துவைக்கும் யந்திரம், தொக்கா, சமையல் அறவைப் பொறி, கணினி என்று ஏகப்பட்ட கருவிகள் பழுதாகி தினமும் ஏதேனும் ஒரு தொழிலாளியைத் தேடிப் போக வேண்டிய நிலையில், புதிதாக ஒரு கருவி வாங்குவதற்கு முன் அதில் என்னென்ன பிரச்சினை வருமோ என்ற பயம் பிடித்து ஆட்டவே, முடிவெடுக்காமல் ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.
பிரச்சினைகள் தீர்வதில்லை. உருமாறிக் கொண்டிருக்கின்றன. 
நேற்று இரவு புழுக்கம் அதிகம். மின் விசிறி சுற்றினாலும் வெப்பக் காற்று தானே வருகிறது. வியர்வை வழிந்து ஓட ஓட எப்படித் தூக்கம் வரும்?
விடியற்காலையில் எழுந்து நாற்காலியை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குப் போனேன். ஆகா, எவ்வளவு இனிமையாகக் காற்று வீசுகிறது! முன் இரவிலேயே வநதிருக்கலாமோ? ஆனால் அங்கு வெறும் தரையில் பாயை விரித்துப் படுக்க முடியாது. சூடு ஏறும். கட்டிலை இங்கே கொண்டு போடுவது என்பதும் சாத்தியமான விஷயம் அல்ல. லேசான மடக்குக் கட்டிலாக இருந்தால் வசதியாக இருக்கும். ஆ...மா...ம், மேலே மேலே வசதி வசதி என்று பார்த்துப் பார்த்து பிரச்சினைகளைத் தான் வளர்த்துக் கொள்கிறோம். வள்ளுவர் சொன்னது சரிதான். எந்தெந்தப் பொருள்களிலிருந்து விலகுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அவற்றால் வரும் துன்பத்திலிருந்தும் விடுதலை பெறுகிறோம். தற்போது நாற்காலியில் சாய்ந்து கொண்டு இதை அனுபவிக்க வாய்ப்பு கிடைத்த வரை லாபம் என்று நினைத்துக் கொண்டேன்.
மனதுக்கும் உடலுக்கும் இதமான காற்று. இதமான குளிர். சூரியனை வரவேற்க பூமித் தாய் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தாள். நிலம் எங்கும் புத்துணர்ச்சி. மரங்கள், செடிகள் எல்லாமே ஆழ்ந்த தியானத்திலிருந்து கலைந்து நம்முடன் பேசுவதற்கு விரும்புவது போல் காணப்பட்டன. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாரதியுடன் பாட வேண்டும் போல் இருந்தது.
                இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமை யுடைத்து
                காற்றும் இனிது தீ இனிது நீர் இனிது நிலம் இனிது
                ஞாயிறு நன்று திங்களும் நன்று
                வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன
                மழை இனிது மின்னல் இனிது இடி இனிது
                கடல் இனிது மலை இனிது காடு இனிது
                ஆறுகள் இனியன
என்று பாரதி பாடியிருப்பது நினைவுக்கு வந்தது. ஏன் எப்பொழுதும் அவை இனிதாக இருப்பதில்லை? கத்தரி வெய்யிலில் மத்தியான்னம் 12 மணிக்கு ஞாயிறு நன்று என்று பாட முடியுமா?
நேற்று அலுவலகத்திலிருந்து வரும்போது கார் அயோத்தியா மண்டபம் அருகில் போக்குவரத்து நெரிசலால் ஒரு நிமிடம் நின்றது. யாரோ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். எனக்கு அதற்கெல்லாம் நேரமும் இல்லை, அதில் ஈடுபாடும் இல்லை. ஆனால் நேற்று அந்த ஒரு நிமிடத்தில் என் காதில் விழுந்த செய்தி நான் கேட்ட கேள்விக்குப் பதிலாக இருந்தது.
இயற்கை நியதியைப் பின்பற்றி நடப்பவனுக்குக் காற்று இனியது, ஆறுகள் இனியன. செடி கொடிகள் இனியன. இரவு இனியது, பகல் இனிது. மண் இனிது, வானம் இனிது என்று வேதம் சொல்வதாக அவர் சொன்னார்.
ஆம், இயற்கை நியதியைப் பின்பற்றி நடப்பவனுக்குத் தான் எல்லாம் இன்ப மயம். நாம் இயற்கை நியதியைப் பின்பற்றுகிறோமா? நம் தட்ப வெப்பத்துக்குப் பொருந்தாத உடை, உணவு, வீடு முதலியவற்றை ஏற்படுத்திக் கொள்வதைத் தானே நாகரிகம் என நினைக்கிறோம். தேவைக்கு மேல் சம்பாதித்துவிட்டு அதைப் பாதுகாப்பதற்கென்று நாம் கட்டிக் கொள்ளும் இந்த இரும்புக் கோட்டை, வெப்பத்தை  வாங்கி வைத்துக் கொண்டு இரவு முழுவதும் அறையை வெம்மைப் படுத்துகிறது. இதை வீடு என்று சொல்ல முடியுமா? விடுதலை தருவது அல்லவோ வீடு!
இதோ வெளிச்சம் வந்து விட்டது. பறவைகள் இசை முழங்கத் தொடங்கி விட்டன. குயில், காக்கை, புறா, இன்னும் பெயர் தெரியாத பல பறவைகள் கா கா, குக்கூ, க்ர்ர்யா, ட்வீக் ட்வீக் என்று தத்தம் மொழியில் இயற்கை அழகைப் போற்றிப் பாடிக் கொண்டிருந்தன. என் அருகில் சில பறவைகள் வந்து உட்கார்ந்தன. நேற்று யாரோ உலர்த்தியதில் சிதறி விழுந்த தானியங்கள் அங்கே தரையில் கிடந்தன. அதைப் பொறுக்கித் தின்றன. நீர்க் குழாயின் மேல் உட்கார்ந்து அதில் சொட்டிக் கொண்டிருந்த நீரை தலையைச் சாய்த்துப் பருகின. ஆயிற்று, அவ்வளவு தான். வயிறு நிரம்பிவிட்டது. இனி நாள் பூராவும் பாட்டுப் பாடிக் கொண்டிருப்பது தான் வேலை. ஒன்றின் முகத்திலாவது துளிக் கவலை இருக்கவேண்டுமே. நாளைக்கு என்று சேர்த்து வைக்க விரும்பும்போது தான் கவலை துவங்குகிறது. கவலையிலிருந்தும்  துன்பத்திலிருந்தும் விடுதலை பெற்ற இந்த ஜன்மங்களைப் பார்த்துப் பாரதி விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவி போலே என்று பாடியதில் வியப்பில்லை.
உயிரினங்களிலேயே வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொண்டது மனிதன் மட்டும் தான். ஆறாவது அறிவு பெற்றவன் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் அறிவினால் படைத்த பொருள்கள் எல்லாம் நம்மைத் துன்பங்களில் தான் ஆழ்த்தியுள்ளன. அவற்றிலிருந்து மீள்வது எப்படி என்பதை இந்தத் தலைமுறை அறிவாளிகள் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காணும் விடை மேலும் பல புதிய துன்பங்களுக்கு வழிவகுக்கும். அதைத் தீர்க்க அடுத்த தலைமுறை அறிவாளிகள் சிந்திப்பார்கள்.
மொட்டை மாடியில் இவ்வளவு இன்பம் கொட்டிக் கிடக்க நான் ஏன் வீட்டுக்குள் இத்தனை காலம் சிறைப்பட்டுக் கிடந்தேன்?
நான் மாணவனாக இருந்தபோது வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருந்தது! கூரை வீடு தான். மின் வசதி இல்லை. ஆனால் கை விசிறிக்குக் கூட அங்கு அவசியம் ஏற்பட்டதில்லை. கோடையில் வீட்டு வாசலில் தான் அனைவரும் படுத்து உறங்குவோம். நாகரிக வாழ்வின் பெயரால் பெட்ரோல் புகையைச் சுவாசிக்கும் கொடுமை அப்போது இல்லை. வீடும் சரி, குளத்து நீரும் சரி, கோடையிலும் குளிர் காலத்திலும் உடலுக்கு ஏற்றவையாக இருந்தன. என்னவோ வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டு நாம் இயற்கை இன்பங்களை இழந்து செயற்கை இன்பங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியின் உதவியாளனாகப் பணி புரிந்து கொண்டிருந்தேன். என் மேலதிகாரி- அவரும் தமிழர் தான். என்னை விட ஒரு வயது மூத்தவர். பெயர் பார்த்தசாரதி. தன் குழந்தைகள் அமெரிக்கச் சூழலில் வளர்ந்தால் நம் நாட்டுக் கலாசாரத்திலிருந்து விலகி விடுவார்கள் என்ற எண்ணத்தால் நாடு திரும்ப விரும்பினார். விண்கல எரிபொருள் துறையில் இருந்த பல முதுநிலை விஞ்ஞானிகளில் அவர் தனித் திறமை வாய்ந்தவர். நாசா நிர்வாகம் அவரை இழக்க விரும்பவில்லை. இந்தியாவில் இருந்தபடியே ஆராய்ச்சி செய்ய அனுமதித்தனர். என் மேல் அன்பு கொண்ட அவர் என்னையும் சென்னைக்கு வருகிறாயா என்று  கேட்டபோது தயங்காமல் ஒப்புக் கொண்டேன். இந்திய மண்ணில் அமெரிக்கச் சம்பளம். கசக்குமா என்ன?
விவசாயக் கூலித் தொழிலாளியின் மகனாகப் பிறந்து இன்று நான் அடைந்திருப்பது வளர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். புளியமரத்துப்பட்டி எங்கே, புளோரிடா எங்கே? எல்லாம் பார்த்தாகிவிட்டது. கிராமத்து சௌக்கியம் நகரங்களில் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு விட்டேன்.
ஏன், மீண்டும் கிராமத்துக்கே போனால் என்ன? இந்த வருமானம் வராது என்பது உண்மை தான். அடிப்படைத் தேவைகள், வசதிகள் நிறைவேறி, ஆடம்பரச் செலவு செய்யும் அளவுக்கு வருமானம் வருகிறது. ஆனால் வெறும் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? போதும். சம்பாதித்தது போதும். எனக்கு உண்மையான இயற்கை நியதியோடு பொருந்திய வாழ்க்கை இன்பம் வேண்டும்.
இந்த வீட்டை மட்டும் விற்றாலே கிராமத்தில் 10 ஏக்கர் நஞ்சை நிலம் வாங்கலாம். என் தந்தை நிச்சயம் இந்த யோசனையைக் கேட்டு மகிழ்வார். அரை ஏக்கர் நில உடமையாளராக இருந்து வருமானத்தின் பெரும் பகுதியைக் கூலி வேலை செய்தே சம்பாதித்த அவர் சொந்த ஊரில் பெரிய நிலச்சுவான்தாராகத் தலை நிமிர்ந்து நடப்பதை நிச்சயம் விரும்புவார்.
சிந்தனையில் ஆழ்ந்து கொண்டே தூங்கிவிட்டேன். வெய்யில் முகத்தில் சுள் என்று அடித்தபின் விழித்துக் கொண்டேன். தந்தையிடம் யோசனையைச் சொன்னேன். அவர் அளித்த பதில் நான் எதிர்பாராதது. வயசான காலத்திலே வியாதி வெக்கை வந்தா இங்கே தான் தம்பி வைத்திய வசதி எல்லாம் இருக்கு. எல்லாரும் கிராமத்தை விட்டு நகரத்துக்கு வரணும்னு ஆசைப்படறாங்க. நீ ஊரோட ஒத்துப் போகணும்பா.”
தாயிடம் சொன்னேன். நகரத்துக்கு வந்த பிறகு என் தாயும்  தந்தையும் காசி, ராமேச்சுரம், கேதார்நாத் என்று பல ஊர்களுக்கும் யாத்திரை சென்று வந்தனர். இதில் அவர்களுக்குப் பல நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். அவர்கள் மூலம் மேலும் பல தலங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு அவற்றுக்கெல்லாம் போகத் திட்டமிட்டிருந்தார் என் அன்னை. அஷ்ட லட்சுமி கோயில், வடபழனி, நங்கநல்லூர் என்று தினமும் ஏதேனும் ஒரு கோயிலுக்கு வாடகைக் கார் வைத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். வயசான காலத்திலே கோயில் குளம்னு போய் போற வழிக்குப் புண்ணியம் தேடிக்கிறோம்பா. கிராமத்துலே போனா இந்த வசதி எல்லாம் கிடைக்காது. இங்கேயே இருந்து விடுவோம்பா.  
மனைவி ஒப்புக் கொள்ள மாட்டாள் என்பது தெரியும். என்றாலும் கேட்டேன். என் குழந்தைகள் நல்ல பள்ளிக் கூடத்திலே படிக்கணும். நான் நகரத்தை விட்டு வரமாட்டேன். நீங்கள் வேண்டுமானால் போய் இருங்கள்.
நகரத்திலே படிச்சா தான் படிப்பா? புளியமரத்துப்பட்டியிலே படிச்சு நான் முன்னுக்கு வரவில்லையா?”
நீங்க நகரப் பள்ளியிலே படிச்சிருந்தீங்கன்னா இந்நேரம் நாசா தலைவராகவே ஆயிருப்பீங்க. இன்னமும் ஒரு இளநிலை விஞ்ஞானியாகக் கூட ஆகாமல் உதவியாளராகவே இருக்கீங்க.
ஒருவரும் என் கருத்தை ஒப்புக் கொள்ளப் போவதில்லை. என் மனைவியின் சம்பளத்தைக் கொண்டும் என்னுடைய சேமிப்புகளிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டும் இவர்கள் இங்கே வாழட்டும். இவர்களை விட்டு விட்டு நான் மட்டும் கிராமத்தில் போய் வசித்தால் என்ன? அங்கே கிடைப்பது எனக்குப் போதும்.
அன்று அலுவலகம் கிளம்பும்போது, பணியிலிருந்து விலகுவதாக ஒரு கடிதம் எழுதிப் பையில் வைத்துக் கொண்டேன். அலுவலக வாசலில் பார்த்தசாரதி எனக்காகவே காத்திருந்து நின்று கொண்டிருந்தார்.
வாங்க, மிஸ்டர் குமார். பாராட்டுகள். நாசா காலாண்டு இதழில் நீங்கள் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை விஞ்ஞானிகளின் ஒருமித்த பாராட்டுக்கு உள்ளாகி இருக்கிறது. உங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். பாருங்கள். விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
ஆறு மாதம் முன்பு நடந்தது அது. ஒரு நாள் எனக்கு ஒரு புதிய கருத்து பளிச்சிட்டது. விண்கலத்தின் எரிபொருளுடன் ஒரு குறிப்பிட்ட ரசாயனப் பொருளைக் குறிப்பிட்ட வெப்ப நிலையில் கலப்பதன் மூலம் எரி பொருளின் திறனை இரு மடங்கு உயர்த்தலாம் என்பது தான் அது. அதைக் கணித சூத்திரங்கள் மற்றும் ரசாயன விதிகள் மூலம் நிரூபிக்க முடிந்தது. பார்த்தசாரதியிடம் தெரிவித்தேன். ஏற்றுக் கொண்டார். அதோடு மட்டுமல்லாமல் அதைக் கட்டுரை வடிவில் நாசாவுக்கு அனுப்பும்படியும் சொன்னார். என்னுடைய யோசனையைத் தன் யோசனை என்று தெரிவித்துப் பாராட்டுப் பெற விரும்பும் கீழ்மை இல்லாதவர் அவர்.
என் அறைக்குத் திரும்பினேன். பையில் பணி விலகல் கடிதம் உறுத்திக் கொண்டிருந்தது.
உங்கள் யோசனை விஞ்ஞானிகள் குழுவால் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதைச் சோதனைக் கூடத்தில் ஆய்ந்து நடைமுறையில் அது சாத்தியம் என்பதும் நிரூபிக்கப்பட்டது. இதனால் எரிபொருள் செலவு பாதியாகக் குறையும். வருங்காலத்தில் நடுத்தர மக்களும் விண்வெளிப் பயணம் மேற்கொள்ள முடியும். மனித குல அறிவு வளர்ச்சிக்கு நீங்கள் செய்த சேவையைப் பாராட்டவும் உங்களுடன் கலந்துரையாடவும் ஹூஸ்டனில் அடுத்த செவ்வாயன்று ஒரு கூட்டம் ஏற்பாடு ஆகியுள்ளது. வருவதற்கு ஆயத்தம் செய்து கொள்ளுங்கள் என்று ஒரு கடிதம்..
உங்களுக்கு முது நிலை விஞ்ஞானியாகப் பதவி உயர்வு தர விரும்புகிறோம். ஆனால் நீங்கள் இங்கேயே பணி புரிய வேண்டியிருக்கும். உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கவும் என்று மற்றொரு கடிதம்.
என் கட்டுரை மனித குல அறிவு வளர்ச்சிக்கு உதவியிருக்கிறதாம். நாசா விஞ்ஞானிகளின் ஒருமித்தப் பாராட்டு என்பது வசிஷ்டர் வாயால் பெறும் பாராட்டைப் போல.
எத்தனையோ பேர் மனித குல அறிவு வளர்ச்சிக்கு உதவியிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் அறிவு ஒவ்வொரு துறையில் சுடர் விடுகிறது. என்னுடையது இத்துறையில் தான் வளர்ந்துள்ளது. விண்கலம் செலுத்தும் அறிவு விவசாயத்துக்குப் பயன்படுமா? குறைந்த எரிபொருளைக் கொண்டு விண்கலம் செலுத்தும் வித்தையை நான் கண்டறிந்தது போல நாளை இன்னொருவர் குறைந்த அழுத்த மின்சாரத்திலேயே வேலை செய்யக் கூடிய கருவிகளைக் கண்டுபிடிக்கலாம். இந்த இன்னல்கள் எல்லாம் தீர்ந்து பொய்யாகும். அது வரை குளிரூட்டி வேலை செய்யவில்லை என்பது போன்ற சின்னக் கவலைகள் என்னைத் தின்ன விடமாட்டேன் என்று உறுதி செய்து  கொண்டேன்.
இதோ அமெரிக்கா அழைக்கிறது. என் திறமையை மதித்துப் போற்றும் நாடு. வாழ்க்கையை வசதிப்படுத்தும் மின்சார சாதனங்களை எத்தனை மிகுதியாக உற்பத்தி செய்துள்ளார்களோ அத்தனைக்கும் தேவையான மின்சாரத்தையும் தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யும் நிர்வாக அமைப்பு. புளோரிடா நில நடுக் கோட்டுப் பகுதி. கடும் வெய்யில் தான். ஆனால் மரங்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் வெப்பத்தை உள்ளே விடா. நாளைக்கென்று சேர்த்து வைக்காமல் இன்றைய நாள் மட்டுமே உண்மை என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட மக்கள். அறிவுத் திறத்தால் ஏற்படுத்தப்பட்ட செயற்கை இன்பங்கள் பல அங்கு உண்டு என்றாலும் இயற்கையை மறவாமல் புல் வெளிகளின் நடுவே வீடு, அலுவலகங்களைக் கட்டி மரங்களையும் பூஞ்செடிகளையும் போற்றும்  மக்கள். அங்கு நான் பணி புரிந்த அலுவலகமும், தங்கியிருந்த வீடும் கிராமியச் சூழலிலேயே இருந்தன. நினைத்தாலே நெஞ்சில் தென்றல் வீசுகிறது.
பையிலிருந்த கடிதத்தைக் கிழித்து எறிந்தேன். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. உங்கள் அழைப்பை ஏற்று அடுத்த வாரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்று ஒரு கடிதமும் முதுநிலை விஞ்ஞானியாகப் பதவி ஏற்று அமெரிக்காவில் பணி புரிய விருப்பம் தெரிவித்து மற்றொன்றும் மின்னஞ்சலில் தட்டினேன். 

கம்ப்யூட்டர் மண்வெட்டி



வாசலில் அழைப்பு மணி கேட்டது. எட்டிப் பார்த்தேன். கையில் மண்வெட்டியுடன் நின்று கொண்டிருந்த ஒருவர், சார் கம்ப்யூட்டர் மண்வெட்டி வேணுமா?” என்று கேட்டார்.
என்னப்பா நீ, கம்ப்யூட்டர் வியாபாரம் பண்ணுகிறாயா, இல்லை, மண்வெட்டி விற்க வந்தாயா?” என்று கேட்டேன்.
இது கம்ப்யூட்டர் இணைந்த மண்வெட்டி சார். பாருங்க. வாங்கணும்னு கட்டாயம் இல்லே என்றார்.
வேடிக்கை பார்க்கும் ஆவல் என்னைப் பற்றிக் கொண்டது. வந்தவர் என் காதுகளில் ஒரு ஹெட்போனை மாட்டிவிட்டார். கால் கட்டை விரல்களில் ஒரு உறையைச் செருகினார். மண்வெட்டியைக் கையில் கொடுத்தார். அது சாதாரண மண்வெட்டி தான். ஆனால் கை வைக்கும் இடத்தில் மட்டும் ஒரு ரப்பர் உறை போடப்பட்டு இருந்தது.
மண்வெட்டியைக் கையில் பிடித்ததும் ஹெட்போனில் ஒரு குரல் ஒலித்தது. நீங்கள் மிகவும் அழுத்திப் பிடிக்கிறீர்கள். இப்படிச் செய்தால் கை புண்ணாகி விடும்.
தளர்த்திப் பிடித்தேன்.
கையை மேலே தூக்குங்க சார்- இது விற்பனையாளரின் குரல்.
தூக்கினேன். காதுகளில் அந்த இனிய குரல், நான் தூக்கத் தூக்க 15, 30, 45,  60 என்று எண்ணிக் கொண்டு போயிற்று. வெட்டுவது போல பாவனை செய்தேன். காதுக்குள் அன்பான எச்சரிக்கை- மண்வெட்டி உங்கள் கால்களில் விழும் அபாயம் இருக்கிறது. முதுகைச் சற்று முன்புறம் வளைக்கவும். ஆகா, எவ்வளவு கரிசனம்! குனிந்தேன். மண்வெட்டி லேசாகத் தரையைத் தொட்டது, கம்ப்யூட்டர் கவனித்து விட்டது. 
இந்தத் தரையின் கடினத் தன்மைக்கு தற்போதைய வேகம் போதாது. அதிக வேகத்தோடு வெட்ட முயலவும்.
மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஹெட்போனையும் காலுறைகளையும் கழற்றி அவரிடம் கொடுத்து விட்டு, அது என்னப்பா எண்ணிக்கை 15, 30 என்று?” எனக் கேட்டேன்.
அது சார், மண்வெட்டி உயரத் தூக்கும்போது ஏற்படும் கோண அளவு. டிகிரி கணக்கில் வரும். தலைக்கு மேல் தூக்கி விட்டால் 180 டிகிரி ஆகிவிடும். அதற்கு மேல் போனால் பின்புறமாகச் சாய்ந்து விடுவீர்கள். இதற்கு மேல் தூக்காதீர்கள் என்ற எச்சரிக்கை 135 டிகிரியிலேயே ஒலிக்க ஆரம்பித்து விடும்.
இதிலே கம்ப்யூட்டர் எங்கே இருக்கிறது?”
நீங்கள் தலையில் மாட்டிக் கொண்டீர்களே அநத ஹெட்போன் பெல்ட்டிலேயே ஒரு மைக்ரோ சிப் உள்ளது. மண்வெட்டியிலும் கால் விரல் உறைகளிலும் சென்சார்கள் உள்ளன. இவை தான் உங்களுக்கு வர இருக்கும் ஆபத்துகளை உணர்ந்து எச்சரிக்கின்றன.
இந்த மண்வெட்டி ரொம்பப் பாதுகாப்பானது. தப்பித் தவறிக் காலில் விழும் அபாயம் இல்லை. பழக்கம் இல்லாதவர்கள், குழந்தைகள் உள்பட எல்லோரும் பயமில்லாமல் பயன்படுத்தலாம். உங்களுக்குப் பிடிச்சிருக்கா, சார்?”
என்னப்பா விலை இது?”
ரொம்ப இல்லை, சார். இருநூறு ரூபாய் தான். சாதாரண மண்வெட்டியே நூறு ரூபாய் ஆகிறது. இந்தப் பாதுகாப்புக்காக நீங்கள் அதிகமாகக் கொடுப்பது நூறு ரூபாய் தான். இதற்குப் பாட்டரி மாற்றத் தேவை இல்லை. உங்கள் உடம்பு சூட்டைப் பயன்படுத்தியே மின்சாரம் ஏற்றிக் கொள்ளும்.
என்னுடைய பத்துக்குப் பத்து தோட்டத்தில் ஒரு துளசிச் செடியும் நாலைந்து பூச்செடிகளும் இருந்தன. எப்பொழுதாவது மண்ணைக் கொத்திவிட வேண்டி இருந்தால் அடுத்த வீட்டில் இரவல் வாங்கிக் கொள்வோம். நமக்கென்று ஒன்று வாங்க வேண்டியது தான் என்று கொஞ்ச நாட்களாகவே நினைத்துக் கொண்டிருந்தேன். இதோ வீடு தேடி வந்திருக்கிறது. விலையும் அதிகமில்லை. என் மனைவி குழந்தைகள் உள்பட யார் வேண்டுமானாலும் பயமில்லாமல் பயன்படுத்தலாம்.
பணத்தை வாங்கிக் கொண்டு அவர் போய்விட்டார். உடனே வீட்டுக்குள் வந்து என் புதிய கருவியின் பெருமையைக் காண்பித்தேன். வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொருவராக ஹெட்போன், விரலுறைகளை அணிந்து கொண்டு சோதனை செய்து பார்த்துக் கொண்டிருந்தனர்- நடுக் கூடத்தில் தான்.
ஆகா, எவ்வளவு சரியாகச் சொல்கிறது!” என் பையன் வேண்டுமென்றே அதைத் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்து பின்புறமாக விழுந்து விடுவீர்கள், எச்சரிக்கை என்ற அபாய அறிவிப்பை அடிக்கடி ரசித்துக் கொண்டிருந்தான்.
என் மனைவியும் இதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தாள். அவளுக்கு எப்பொழுதுமே என் திறமை மேல் அவநம்பிக்கை அதிகம். நல்ல பொருளாகப் பார்த்து வாங்கத் தெரியாது உங்களுக்கு, அப்படி வாங்கினாலும் ஒட்டிக்கு இரட்டி விலை கொடுப்பீர்கள் என்பாள்.
இன்று அந்தப் புதிய கொள்முதலை அவள் பாராட்டாவிட்டாலும் மனதுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டு இருப்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.
சரி, நடுக் கூடத்தில் மண்வெட்டியைப் பரீட்சை செய்தது போதும். துளசிச் செடிக்குச் சுற்றிலும் தண்ணீர் தேங்குகிறாற்போல் ஒரு பாத்தி கட்டுங்கள் என்று உத்தரவிட்டாள் இல்லத்தரசி.
மிகுந்த உற்சாகத்தோடு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு தோட்டத்துக்கு வந்தேன். கவச குண்டலங்களைத் தரித்துக் கொண்டேன். விண்வெளியில் சாதனை நிகழ்த்தப் போகும் காஸ்மோநாட் போல என்னைப் பாவித்துக் கொண்டு வேலையை ஆரம்பித்தேன். தேனினும் இனிய அந்தக் குரலின் அன்பான வர்ணனையைச் சங்கீதம் போல மெய்மறந்து கேட்டுக் கொண்டே பாத்தி கட்டினேன்.
திடீரென்று ஒரு அதட்டல் கேட்டது. என்ன காரியம் செய்து விட்டீர்கள்?  பூஜைக்கென்று இவ்வளவு காலமாகப் பாதுகாத்து வந்த துளசிச் செடியை வீச நாழிகையில் வெட்டிவிட்டீர்களே!”
அப்போது தான் சுய நினைவுக்கு வந்து கீழே பார்த்தேன். பாத்தி என்னவோ அழகாகத் தான் அமைந்திருந்தது. துளசிச் செடி வேரருகில் வெட்டப்பட்டு தலை சாய்ந்து கிடந்தது. சே என்ன மடத்தனம். ஏதோ நினவில் இப்படி ஒரு தவறைச் செய்துவிட்டேனே!
எனக்கு அப்பவே தெரியும் அந்தக் கம்ப்யூட்டர் பொம்மனாட்டி குரல்லே மயங்கித் தான் இதை வாங்கி இருக்கிறீர்கள். அதிலே மெய்மறந்து போனதிலே உங்களுக்குக் கண் தெரியாமல் போச்சு.
அடுத்த நிமிஷம் அந்தக் கவச குண்டலங்களைக் கழற்றிக் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு ஒட்டிக்கு இரட்டி விலை கொடுத்து வாங்கிய அந்த மண்வெட்டியை உள்ளே கொண்டு வைத்தேன்.

குளம்


நகர மயமாதல் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. முன்னாள் கிராம மற்றும் சிற்றூர் வாசிகள், தாங்கள் சிறுவயதில் அனுபவித்த இன்பங்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லையே என ஏங்குவது இயல்பு. அத்தகைய இன்பங்களில் ஒன்று ஆற்றிலும் குளத்திலும் குளித்தல். இன்றுள்ள அடுக்கு மனைக் கலாசாரத்தில் குளத்தில் குளிக்க விரும்பினால் நடக்குமா? நடக்க வாய்ப்பு உண்டு. எப்படி என்று பார்ப்போம்.

கட்டிடம் கட்டி விற்பவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகளைக் கட்டுதல் வழக்கமாகி விட்டது. இத்தகைய பெரிய வளாகங்களில் ஒரு குளத்தை ஏன் உருவாக்கக் கூடாது?

தற்போது சிலர் நீச்சல் குளம் அமைத்து வருகிறார்கள். ரசாயனப் பொருட்கள் சேர்ந்த நீரை நிரப்புகிறார்கள். இந்த நீச்சல் குளத்தைச் சற்றே மாற்றிக் குளியல் குளமாக ஆக்கலாம்.

150 அடி நீளம் 150 அடி அகலம் 6 அடி ஆழம் கொண்ட ஒரு குளம் அமைக்க வேண்டும்.  நான்கு புறமும் 10 அடி அகலமுள்ள நடைபாதையும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட வேண்டும். இதில் தேங்கக் கூடிய நீரின் அளவு 40,50,000 லிட்டர். இதில் மீன்கள் வளர்க்கப்பட வேண்டும். குளத்தைச் சுற்றிலும் நிழல் தரும் மரங்கள் வளர்க்க வேண்டும். இதில் ஒரே நேரத்தில் குறைந்தது 150 பேர் குளிக்கலாம். 400 அல்லது 500 குடியிருப்புகள் கொண்ட பகுதிக்கு இந்த அளவு குளம் போதுமானதாக இருக்கும்.

1100 பேர் தலைக்கு ஒரு நாளைக்கு 10 லிட்டர் வீதம் ஒரு ஆண்டு குளிப்பதற்கு இந்த அளவு நீர் ஆகும். குளியலறையில் பயன்படுத்திய நீர் வீணாகக் கழிவு நீராகப் போகிறது. மேற் சொன்ன அளவுள்ள குளத்தில் நீர் தேக்கி வைக்கப்பட்டால், 2000 பேர் ஆண்டு முழுவதும் குளிக்கலாம். குளிப்பதனால் குறைவு படாமல் நீர் அப்படியே இருக்கும். மேலும் பல ஆண்டுகளுக்கு இதைப் பயன் படுத்த முடியும்.

பல பேர் குளிப்பதால் நீர் அழுக்காகாதா? ஆகாது. இந்தக் குளத்தில் மீன் வளர்ப்பதால் மீன் அழுக்கை உண்டு விட்டு நீரைத் தூய்மைப்படுத்தி விடும். அசைவம் உண்பவர்களுக்கு மீன் உணவாகும். தினமும் இந்த நீர் சூரிய வெப்பத்தில் காய்வதால் நோய்க் கிருமிகள் தொற்றும் அபாயம் இல்லை. இதற்கு ரசாயனப் பொருள் சேர்க்க வேண்டும் என்பதில்லை. ரசாயனப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் தவிர்க்கப்படுகின்றன. மேலும் நீச்சல் குளத்தில் நீந்தியபின் மீண்டும் நல்ல நீரில் குளிக்க வேண்டியிருக்கிறது. அதற்காக நீர் மேலும் செலவாகிறது. நாம் சொல்லும் குளத்தில் அந்த அவசியம் இல்லை.

குளிப்பதாலும் சூரிய வெப்பத்தால் ஆவியாவதாலும் எப்படியும் சிறிதளவு நீர் குறையத் தான் செய்யும். அவ்வப்போது பெய்யும் மழையால் இந்த இழப்பு ஈடு செய்யப்படுவது மட்டுமல்லாமல் தண்ணீர் புதுப்பித்தலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும். இதனால் மீன்களுக்குத் தேவையான உயிர் வளியும் குறைவுபடாமல் கிடைக்கும்.

வளாகத்தில் பெய்யும் மழை நீரை இந்தக் குளத்தில் வடியுமாறு செய்யலாம். இதனால் மழைநீர் சேகரிப்புக்கென்று தனியே ஆழ்துளை வடிகால் அமைக்கும் செலவு மிச்சம்.

குளிப்பதால் வெளியேறும் நீரே வீடுகளின் கழிவு நீரின் பெரும்பகுதி. குளம் அமைப்பதால் இந்தக் கழிவு நீரின் அளவு குறையும். எனவே கழிவு நீர் மறு சுழற்சி செய்வதற்கான செலவும் குறையும்.

வளாகத்தில் உள்ள அத்தனை பேரும் இதில் குளிப்பது என வழக்கம் வைத்துக் கொண்டால் இரு குளியல் அறைகள் உள்ள வீட்டில் ஒரு குளியல் அறை, அதுவும் அவசர காலங்களுக்கென்று, அமைத்தால் போதுமானது.

இந்த நாற்பது லட்சம் லிட்டர் நீரை மேல் நிலைத் தொட்டிக்கு ஏற்றுவதற்கான மின்சாரம் மிச்சம்.

சமூக உறவுகள் மேம்படும். நான்கு சுவர்களுக்குள் முடங்கி அடுத்த பிளாட்டில் குடியிருப்போர் யார் என்று கூட அறியாமல் இருக்கும் கூட்டுப்புழு மனோபாவத்துக்கு இது முடிவு கட்டும். குளத்தில் குளிக்க வருபவர்கள் ஒருவரோடொருவர் கலந்து பழகி உரையாட இது வாய்ப்புக் கொடுக்கும். ஒற்றுமை ஓங்கும்.

இந்த நீரின் தூய்மையைப் பாதுகாக்க இதற்கென்று தனியே காவலர் நியமிக்கப்படத் தேவை இல்லை. பெரும் குடியிருப்புகளில் எப்படியும் ஒரு காவல்காரர் இருப்பார். அவரே இதையும் பார்த்துக் கொள்ளலாம். குடியிருப்போர் சங்கப் பொறுப்பாளர்கள் தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம்.

பெண்கள் இதில் குளிக்க முடியுமா? குளிக்கலாம்.  சிற்றூர்களில் பெண்களுக்கென்று தனித் துறைகள் இருப்பது போல இங்கும் சில பகுதிகளைப் பெண்களுக்கென்று ஒதுக்கலாம். அல்லது முஸ்லீம் கிராமங்களில் செய்வது போல பெண்கள் குளிக்கும் துறையின் நான்கு புறங்களிலும் மறைப்பு ஏற்படுத்தலாம்.

சிறுவர்களும் பெரியவர்களும் இதில் நீந்திப் பழகலாம். நீச்சல் நல்ல உடற்பயிற்சி. தோள்பட்டை, மார்பு விரிவடையும்  சுவாச நோய்கள் வராது. குளத்து நீரில் குளிப்பதால் சளி பிடிக்கும் என்ற பயம் அனாவசியமானது. குளத்து நீர் கோடைக் காலத்தில் மேல் பகுதி சூடாக இருந்தாலும் அடியில் ஜில்லென்று உடம்புக்கு இதமாக இருக்கும். குளிர்காலத்தில் குளிருக்குப் பயந்து கொண்டு கரையில் நடுங்கிக் கொண்டிருப்பவர் துணிந்து ஒரு முழுக்குப் போட்டுவிட்டால் குளிர் போய்விடும். கீழ்ப்பகுதி நீரின் இதமான வெப்பம் குளித்துக் கொண்டே இருக்கச் சொல்லும்.

கோடைக்காலத்தில் வெப்பம் தாங்காமல் மீன்கள் செத்துவிடும் என்று பயந்து கோடை துவங்குமுன் அவற்றை வலை போட்டுப் பிடிக்கும் வழக்கம் சில ஊர்களில் உள்ளது. அவ்வாறு வலை போடப்பட்ட குளம் நாறத் தொடங்கி விடும். ஆழமான குளங்களில் இந்தப் பிரச்சினை இல்லை. அடிப்பகுதி நீர் எப்பொழுதும் குளிர்ச்சியாகவே இருக்கும். மேலும் குளத்தைச் சுற்றி மரங்கள் வளர்ப்பதால் நீரின் ஏதேனும் ஒரு பகுதியில் நிழல் இருக்கும். வெய்யில் நேரத்தில் மீன்கள் அங்கு சென்று பதுங்கி விடும். வெய்யில் தணிந்த பிறகு எல்லா இடங்களிலும் சஞ்சரிக்கும். மாதத்தில் ஒரு நாள் தூண்டில் போட அனுமதிப்பதன் மூலம் மீன்களின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்படும். விரும்புவோர்க்கு உணவும் ஆகும்.

குளத்தைச் சுற்றியுள்ள நடைபாதை மாலை நேரத்தில் உலாச் செல்வதற்கு ஏற்ற இடமாக இருக்கும்.

செலவு நிறைய ஆகுமோ? ஆகாது. மேற்சொன்ன அளவுள்ள குளத்திற்குத் தேவையான நிலம் 170*170- 28900 சதுர அடி. இது பெரும் குடியிருப்புகளில் அமைக்கப்படும் நீச்சல் குளங்களை விடச் சற்றே பெரியது. இந்த அளவு தான் அமைக்க வேண்டும் என்பதில்லை. அந்தந்த வளாகத்தின் வசதிப்படி தேவையான அளவில் அமைத்துக் கொள்ளலாம். தண்ணீர்ச் செலவு, அதிகப்படியான குளியலறை கட்டுதற்கான செலவு, மின்சாரச் செலவு முதலானவற்றைக் கணக்கிட்டால் குளியல் குளம் அமைப்பதால் பெரும் செலவு ஏற்படப் போவதில்லை.

பெரும் வளாகங்கள் கட்டுபவர்கள் கவனிப்பார்களா? அரசாங்கம் அவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் விதிமுறைகள் ஏற்படுத்துமா? பொது மக்களாகிய நாம் ஒரு பொதுக் கருத்தை உருவாக்கிவிட்டால் எதுவும் நடைபெறும்.

Tuesday, May 22, 2012

கண்ணால் வாசனை அறிய முடியுமா?




ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்து விகமே ஆக
இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப் பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார். 
(பெரியபுராணம் திருமலைச் சருக்கம் 252)

சுந்தரர் இந்து வாழ் சடையானின் தனிப் பெருங் கூத்தைக் காண்கிறார்.  பேரின்பம் தரும் காட்சி அது. அதைக் காண இரு கண்கள் போதுமா? போதவில்லை.

இது போன்ற நிலைகளை வர்ணிக்கும்போது  புலவர்கள் ஆயிரம் கண் வேண்டும் என்று சொல்வது வழக்கம். சேக்கிழார் சற்றே வித்தியாசமாகச் சொல்கிறார். செவி, தோல், நா, மூக்கு ஆகிய பிற பொறிகளின் சக்தியையும் இரவல் வாங்கி கண்கள் தம்மை வலுப்படுத்திக் கொண்டு அந்தக் காட்சியைக் காண்கின்றனவாம். பிற பொறிகள் சக்தி இழந்து, செயல் இழந்து நிற்க, கண்கள் மட்டும் ஆனந்த நடனத்தை அள்ளிப் பருகினவாம்.

ஒரு பொறியின் சக்தியை மற்றொரு பொறி பெற்றுக் கொள்ள முடியுமா அல்லது இது புலவரின் கற்பனையில் மட்டுமே சாத்தியமாகக் கூடியதா? நமக்குத் தெரியாது.

ஆனால் ஒரு பொறியின் வேலையை மற்றொரு பொறி செய்வது சாத்தியம் என்று அறிவியல் கூறுகிறது.  1-3-2012 இந்து நாளிதழில் வந்த இந்த செய்தியைப் பாருங்கள். மூளையில் கண்ணுக்கு என்று உள்ள பகுதியைத் தூண்டினால் கண்ணே வாசனை அறியும் சக்தியையும் பெறுகிறதாம்.

 Smelling the roses with one's eyes
A new study reveals for the first time that activating the brain's visual cortex with a small 

amount of electrical stimulation actually improves our sense of smell. The finding was 

published in the Journal of Neuroscience.

“In particular we wanted to test the idea that activation of brain regions primarily dedicated 

to one sense might influence processing in other senses.

We found that electrically stimulating the visual cortex improves performance on a task 

that requires participants to identify the odd odour out of a group of three.”

“This study shows that on a basic level the brain structures involved in different senses 

are really quite interconnected in everyone.

This ‘cross-wiring' of senses is found in people with synesthesia, a condition in which 

people see the colour of numbers or smell words, or hear odours for example,” says Dr. 

Johan Lundstrom at Monell Chemical Senses Center.

TMS (transcranial magnetic stimulation) was directed towards the visual cortex to improve 

visual perception. Since TMS alters brain activity in a targeted area, it provides a powerful 

test of the hypothesis that visual cortex activation changes olfactory perception.