வாசலில்
அழைப்பு மணி கேட்டது. எட்டிப் பார்த்தேன். கையில் மண்வெட்டியுடன் நின்று
கொண்டிருந்த ஒருவர், “சார் கம்ப்யூட்டர் மண்வெட்டி வேணுமா?” என்று கேட்டார்.
“என்னப்பா நீ,
கம்ப்யூட்டர் வியாபாரம் பண்ணுகிறாயா, இல்லை, மண்வெட்டி விற்க வந்தாயா?” என்று கேட்டேன்.
“இது
கம்ப்யூட்டர் இணைந்த மண்வெட்டி சார். பாருங்க. வாங்கணும்னு கட்டாயம் இல்லே” என்றார்.
வேடிக்கை
பார்க்கும் ஆவல் என்னைப் பற்றிக் கொண்டது. வந்தவர் என் காதுகளில் ஒரு ஹெட்போனை
மாட்டிவிட்டார். கால் கட்டை விரல்களில் ஒரு உறையைச் செருகினார். மண்வெட்டியைக்
கையில் கொடுத்தார். அது சாதாரண மண்வெட்டி தான். ஆனால் கை வைக்கும் இடத்தில்
மட்டும் ஒரு ரப்பர் உறை போடப்பட்டு இருந்தது.
மண்வெட்டியைக்
கையில் பிடித்ததும் ஹெட்போனில் ஒரு குரல் ஒலித்தது. “நீங்கள்
மிகவும் அழுத்திப் பிடிக்கிறீர்கள். இப்படிச் செய்தால் கை புண்ணாகி விடும்.”
தளர்த்திப் பிடித்தேன்.
“கையை மேலே தூக்குங்க சார்”- இது விற்பனையாளரின் குரல்.
தூக்கினேன்.
காதுகளில் அந்த இனிய குரல், நான் தூக்கத் தூக்க 15, 30, 45, 60 என்று எண்ணிக் கொண்டு போயிற்று. வெட்டுவது
போல பாவனை செய்தேன். காதுக்குள் அன்பான எச்சரிக்கை- “மண்வெட்டி
உங்கள் கால்களில் விழும் அபாயம் இருக்கிறது. முதுகைச் சற்று முன்புறம் வளைக்கவும்.” ஆகா, எவ்வளவு கரிசனம்! குனிந்தேன்.
மண்வெட்டி லேசாகத் தரையைத் தொட்டது, கம்ப்யூட்டர் கவனித்து விட்டது.
இந்தத் தரையின்
கடினத் தன்மைக்கு தற்போதைய வேகம் போதாது. அதிக வேகத்தோடு வெட்ட முயலவும்.
மிகவும்
ஆச்சரியமாக இருந்தது. ஹெட்போனையும் காலுறைகளையும் கழற்றி அவரிடம் கொடுத்து விட்டு,
“அது என்னப்பா எண்ணிக்கை 15, 30 என்று?” எனக் கேட்டேன்.
“அது சார்,
மண்வெட்டி உயரத் தூக்கும்போது ஏற்படும் கோண அளவு. டிகிரி கணக்கில் வரும். தலைக்கு
மேல் தூக்கி விட்டால் 180 டிகிரி ஆகிவிடும். அதற்கு மேல் போனால் பின்புறமாகச்
சாய்ந்து விடுவீர்கள். இதற்கு மேல் தூக்காதீர்கள் என்ற எச்சரிக்கை 135
டிகிரியிலேயே ஒலிக்க ஆரம்பித்து விடும்.”
“இதிலே கம்ப்யூட்டர் எங்கே இருக்கிறது?”
“நீங்கள்
தலையில் மாட்டிக் கொண்டீர்களே அநத ஹெட்போன் பெல்ட்டிலேயே ஒரு மைக்ரோ சிப் உள்ளது.
மண்வெட்டியிலும் கால் விரல் உறைகளிலும் சென்சார்கள் உள்ளன. இவை தான் உங்களுக்கு வர
இருக்கும் ஆபத்துகளை உணர்ந்து எச்சரிக்கின்றன.”
“இந்த மண்வெட்டி
ரொம்பப் பாதுகாப்பானது. தப்பித் தவறிக் காலில் விழும் அபாயம் இல்லை. பழக்கம் இல்லாதவர்கள்,
குழந்தைகள் உள்பட எல்லோரும் பயமில்லாமல் பயன்படுத்தலாம். உங்களுக்குப்
பிடிச்சிருக்கா, சார்?”
“என்னப்பா விலை இது?”
“ரொம்ப இல்லை, சார். இருநூறு ரூபாய் தான். சாதாரண மண்வெட்டியே
நூறு ரூபாய் ஆகிறது. இந்தப் பாதுகாப்புக்காக நீங்கள் அதிகமாகக் கொடுப்பது நூறு
ரூபாய் தான். இதற்குப் பாட்டரி மாற்றத் தேவை இல்லை. உங்கள் உடம்பு சூட்டைப்
பயன்படுத்தியே மின்சாரம் ஏற்றிக் கொள்ளும்.”
என்னுடைய
பத்துக்குப் பத்து தோட்டத்தில் ஒரு துளசிச் செடியும் நாலைந்து பூச்செடிகளும்
இருந்தன. எப்பொழுதாவது மண்ணைக் கொத்திவிட வேண்டி இருந்தால் அடுத்த வீட்டில் இரவல்
வாங்கிக் கொள்வோம். நமக்கென்று ஒன்று வாங்க வேண்டியது தான் என்று கொஞ்ச நாட்களாகவே
நினைத்துக் கொண்டிருந்தேன். இதோ வீடு தேடி வந்திருக்கிறது. விலையும் அதிகமில்லை.
என் மனைவி குழந்தைகள் உள்பட யார் வேண்டுமானாலும் பயமில்லாமல் பயன்படுத்தலாம்.
பணத்தை
வாங்கிக் கொண்டு அவர் போய்விட்டார். உடனே வீட்டுக்குள் வந்து என் புதிய கருவியின்
பெருமையைக் காண்பித்தேன். வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொருவராக ஹெட்போன்,
விரலுறைகளை அணிந்து கொண்டு சோதனை செய்து பார்த்துக் கொண்டிருந்தனர்- நடுக் கூடத்தில்
தான்.
“ஆகா, எவ்வளவு சரியாகச்
சொல்கிறது!” என் பையன் வேண்டுமென்றே அதைத் தலைக்கு
மேல் உயர்த்திப் பிடித்து ‘பின்புறமாக விழுந்து
விடுவீர்கள், எச்சரிக்கை’
என்ற அபாய அறிவிப்பை அடிக்கடி ரசித்துக் கொண்டிருந்தான்.
என் மனைவியும்
இதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தாள். அவளுக்கு எப்பொழுதுமே என் திறமை மேல் அவநம்பிக்கை
அதிகம். “நல்ல பொருளாகப் பார்த்து வாங்கத் தெரியாது
உங்களுக்கு, அப்படி வாங்கினாலும் ஒட்டிக்கு இரட்டி விலை கொடுப்பீர்கள்” என்பாள்.
இன்று அந்தப்
புதிய கொள்முதலை அவள் பாராட்டாவிட்டாலும் மனதுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டு இருப்பதை
என்னால் ஊகிக்க முடிந்தது.
“சரி, நடுக் கூடத்தில் மண்வெட்டியைப் பரீட்சை செய்தது போதும். துளசிச்
செடிக்குச் சுற்றிலும் தண்ணீர் தேங்குகிறாற்போல் ஒரு பாத்தி கட்டுங்கள்” என்று உத்தரவிட்டாள் இல்லத்தரசி.
மிகுந்த உற்சாகத்தோடு
மண்வெட்டியை எடுத்துக் கொண்டு தோட்டத்துக்கு வந்தேன். கவச குண்டலங்களைத் தரித்துக்
கொண்டேன். விண்வெளியில் சாதனை நிகழ்த்தப் போகும் காஸ்மோநாட் போல என்னைப்
பாவித்துக் கொண்டு வேலையை ஆரம்பித்தேன். தேனினும் இனிய அந்தக் குரலின் அன்பான
வர்ணனையைச் சங்கீதம் போல மெய்மறந்து கேட்டுக் கொண்டே பாத்தி கட்டினேன்.
திடீரென்று ஒரு
அதட்டல் கேட்டது. “என்ன காரியம் செய்து விட்டீர்கள்? பூஜைக்கென்று இவ்வளவு
காலமாகப் பாதுகாத்து வந்த துளசிச் செடியை வீச நாழிகையில் வெட்டிவிட்டீர்களே!”
அப்போது தான்
சுய நினைவுக்கு வந்து கீழே பார்த்தேன். பாத்தி என்னவோ அழகாகத் தான் அமைந்திருந்தது.
துளசிச் செடி வேரருகில் வெட்டப்பட்டு தலை சாய்ந்து கிடந்தது. சே என்ன மடத்தனம்.
ஏதோ நினவில் இப்படி ஒரு தவறைச் செய்துவிட்டேனே!
“எனக்கு அப்பவே
தெரியும் அந்தக் கம்ப்யூட்டர் பொம்மனாட்டி குரல்லே மயங்கித் தான் இதை வாங்கி
இருக்கிறீர்கள். அதிலே மெய்மறந்து போனதிலே உங்களுக்குக் கண் தெரியாமல் போச்சு.”
அடுத்த நிமிஷம்
அந்தக் கவச குண்டலங்களைக் கழற்றிக் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு ஒட்டிக்கு
இரட்டி விலை கொடுத்து வாங்கிய அந்த மண்வெட்டியை உள்ளே கொண்டு வைத்தேன்.
No comments:
Post a Comment