சம்பந்தர்
தேவாரத்தில் ஒவ்வொரு பதிகத்தின் எட்டாவது பாடலும் ராவணன் பற்றிய குறிப்பைக்
கொண்டுள்ளது. இந்தப் பாடல்களின் திரண்ட கருத்தைத் தொகுத்துக் காண்போம்.
இலங்கையை மூதூர்
எனச் சிறப்பிக்கிறார் சம்பந்தர். அது உயர்வும் அழகும் பொருந்தியது. இங்குக் குன்றின்
உச்சி மேல் கொடியுடன் கூடிய நீண்ட மதில் சூழ்ந்த நகர் உண்டு. இது மாட வீதிகளால்
அழகு பெறுவது. தேசு குன்றாத் தெண்ணீர் கொண்டது, வாசங் கமழும் பொழில் சூழ்ந்தது.
இத்தகைய பெருமை வாய்ந்த இலங்கை நகர்க்கு இறைவன் ராவணன்
என்னும் அரக்கன். அவனும் பெருமைகள் பல பொருந்தியவன். கதிரவன் போன்ற ஒளியுடைய நீண்ட மகுடங்களைச் சூடிய பத்துத்
தலைகளும் இருபது தோள்களும் கொண்டவன்,
வியர்வை தோன்றும் மலை போன்ற
திரண்ட தோள்களை உடையவன், பெரும்
வீரம் கொண்டவன். எண்திசைகளிலும் காவல் காத்து நிற்கும் யானைகளோடு மோதும்போது அவற்றின் கொம்புகள் அவனது மார்பில் குத்தி உடைந்தன. அவன் தன் வீரத்தைப் பறை சாற்றும் விதமாக அந்தப்
புண்களைச் சுற்றிப் பூண்கள் அமைத்துக் கொண்டான். வாய்ந்த
புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்து அமர் செய்யும் தொழில் கொண்ட அவனது படை வீரர்களாகிய அரக்கர்கள் மயங்கு மாயம் வல்லவர்கள். வானிலும் நீரிலும் இயங்கும் ஆற்றல் கொண்டவர்கள். அவனுடைய தரைப்
படையோடு கப்பற் படையும் வலிமை
உள்ளதாக இருந்தது.
இத்தகைய பெருமை
பொருந்திய ராவணனின் மறுபக்கத்தைப் பார்ப்போம். அவன் தொன்மையான அறவுரைகளைச் சிந்தை
செய்யாதவன், சித்தத் தெளிவு
அற்றவன், போரில் முறையற்ற செயல்களைச் செய்யும் தூர்த்தன். இவன் தவம்
செய்து அயன் அருளால் மிகுந்த வலிமை பெற்றுச் செருக்குக் கொண்டான். அதனால்
இறைவனிடம் கூட மனம் பொருந்தாது போயினான்.
இவனது தேர்
செல்லும் வழியில் இறைவன் வீற்றிருக்கும் கைலாய மலை தடுத்தது. அது இறைவன் நல்லிடம்
என்றறியான், பெருவரையின் மேலோர் பெருமானும்
உளனோ என வெகுண்டான், வள்ளல் இருந்த மலையதனை வலஞ்செய்தல் வாய்மையென உள்ளங் கொள்ளாது
கொதித்தெழுந்தான். வரும் விளைவை எண்ணாதவனாக, வாளமர் வீரத்தை மட்டுமே நினைந்து,
இந்த மலை எனக்கு எம்மாத்திரம் என்று கருதிப் பெயர்த்தெடுத்தான். மலை நிலை குலைந்தது,
விண் அதிர்ந்தது, உமை அம்மை அஞ்சி நடுங்கினாள்.
இது கண்ட இறைவன் தனது
திருவடியின் அழகிய பவழம் போன்ற விரலை ஊன்றி மலையை அழுத்தினார். விரலை ஊன்றக் கூட
இல்லை, நகத்தை சற்றே
ஒற்றினார். மலை அதனிடத்தில் அமர்ந்தது. நசுக்கப்பட்டான் ராவணன். பத்து வாய்களாலும்
கதறினான். அவனது ஆற்றல், ஆண்மை, புகழ், செருக்கு யாவும் அடங்கின. ராவணனுக்குக்
கிடைத்த தண்டனையால் அளகாபுரிக்கு இறைவனாகிய குபேரன் மகிழ்ந்தான். ராவணவனது
வலிமையால் ஒடுக்கப்பட்டவன் அல்லவா அவன்?
இறைவனது ஊன்றலில்
சினம், கருணை
ஆகிய இருவகைக் குறிப்பும் காணப்பட்டன. அடர்த்ததோடு மட்டுமன்றி இன்னருளும் செய்தார்
அவர். மலையின் கீழ் நசுங்கிக் கொண்டிருந்த ராவணன் தன் பிழையை உணர்ந்து நல் உரைகளால்
இயன்ற பாடல்களைப் பாடத் தொடங்கினான். நிமலா போற்றி என்று வேத கீதங்கள் இசைத்தான்.
இசை கேட்டு இறைவன் மகிழ்ந்தார், இரங்கினார். சந்திரனின் பெயர் உடைய வலிமை மிகுந்த வாள்
ஈந்தார், முக்கோடி வாழ்நாளும் கொடுத்தார். அன்று முதல் தான் அவன் அழுபவன் என்று
பொருள் கொண்ட ராவணன் எனும் பெயரைப் பெற்றான்.
சம்பந்தர் இந்த நிகழ்ச்சியைப்
பதிகம் தோறும் பாட வேண்டிய அவசியம் என்ன? இதனை 353 தடவை வலியுறுத்துவதன் மூலம் அவர் நமக்கு
உணர்த்தும் செய்தி என்ன?
சிவபெருமானிடம்
முரண் கொண்டவர்கள் பிழைப்பது இல்லை. அவரது கண் பார்வையால் எரித்துச்
சாம்பலாக்கப்பட்ட காமன் மற்றையோர் காணுமாறு மீண்டும் தன் உரு பெறவில்லை. தக்கன்,
சலந்தரன் ஆகியோர் அழிந்தே போயினர். திரிபுர அவுணர்களும் இருந்த இடம் தெரியாமல்
போய்விட்டனர். இவரை எதிர்த்து வந்த யானை, புலி முதலானவை உயிரிழந்து இவருக்கு ஆடையாக
மாறிவிட்டன. இவரது கோபத்துக்கு ஆளாகி மீண்டவர் இருவரே. ஒருவன் யமன். அவன்
மார்க்கண்டன் என்னும் அடியாரின் உயிரைக் கவர வந்ததால் சிவனால் உதையுண்டான் எனினும்
பின்னர்ப் பணிந்ததால் மன்னிக்கப்பட்டான். ராவணன் ஆணவம் கொண்டு சிவனைப்
புறக்கணித்தான். ஆயினும் தன் பிழையை உணர்ந்ததால் மன்னிக்கப்பட்டான். மன்னித்தது
மட்டுமல்ல, அவனுக்கு முக்கோடி வாணாளும் கூர்வாளும் கொடுத்து இன்னருளும் செய்தார்
இறைவன்.
எனவே
முரண்பட்டாரை அழிப்பதும், பணிந்தாரை, அவர்கள் தவறே செய்திருப்பினும், காப்பதும்
இறைவனின் பண்பு என்பதை இது உணர்த்துகிறது.
சங்க காலத்தில்
சிவன் காய்கடவுள் என்று அழைக்கப்பட்டார். அவரது கோபத் தோற்றம் தான் முதன்மைப்
படுத்தப்பட்டது. இன்று சிவ வழிபாட்டில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் வேத
மந்திரமாகிய ருத்ரம், “ருத்திரனே உன் கோபத்துக்கு நமஸ்காரம்” என்று தான் தொடங்குகிறது. இந்நிலையை மாற்றி அஞ்சுதலுக்கு உரியவராக இருந்த
சிவனை அன்புக்கு உரியவராகச் சித்தரித்த அம்மையார் முதன் முதலில் சிவனது கருணை
வடிவை வெளிப்படுத்தினார். பணிந்து விட்டால் இறைவன் என்ன தான் கொடுக்க மாட்டான்
என்று அவர் வியக்கிறார்.
என்னாக வையான்தான் எவ்வுலகம்
ஈந்தளியான்
பன்னாள் இரந்தாற் பணிந்து. (அற்புதத்
திருவந்தாதி 78)
சிவன் தன்னைப்
பகைத்தோரிடம் கடுமை காட்டினாலும் அவரது உண்மையான சொரூபம் கருணையே என்பதனால்
சிவனின் தனிப் பெருங் கருணை வடிவை மக்கள் மனதில் பதிய வைக்கவே சம்பந்தர் பதிகம்
தோறும் இதை வைத்தார் என்று கொள்ளலாம்.
இதை
மற்றொரு கோணத்திலும் காணலாம். ராவணன் பிறப்பால் அந்தணன். ஆம். புலஸ்திய ரிஷியின்
மகன் விஸ்ரவசுக்கும் கேகசி என்ற அரக்கிக்கும் பிறந்த அவன் இளம் வயதில் வேதம்
கற்றான். பராசரர் என்ற முனிவருக்கும் சத்தியவதி என்ற மீனவப் பெண்ணுக்கும் பிறந்த வியாசர்
அந்தணராக ஏற்றுக் கொள்ளப்பட்டது போல ராவணனும் அந்தணனாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்க
வேண்டும். ஆனால் இல்லை. ஏனெனில் அவன் அந்தணருக்கு உரிய கடமைகளை விடுத்து
அரசர்க்குரிய நடத்தைகளைப் பின்பற்றினான். அதனால் சம்பந்தர் எல்லாப் பாடல்களிலும்
அவனை அரக்கன் என்று கூறுகிறாரே அன்றி ஓரிடத்தில் கூட அவனது பிறப்பு பற்றிய விபரம்
சொல்லவில்லை. வேதநெறி தழைக்க வந்த சம்பந்தர் இவ்வாறு பிறப்பொழுக்கம் குன்றியவனை
எவ்வாறு அந்தணனாக ஏற்றுக் கொள்வார்? அவன் மலையின் கீழ் நசுங்கிய நிலையில், தான் இளமையில்
கற்ற வேதத்தை நினைவுபடுத்திக் கொண்டு அதை இசைக்க, இறைவன் மகிழ்ந்தார் என்று கூறிச்
சம்பந்தர் வேதியர் வேதம் ஓதுதலின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
பதிகம் பாடும்
முறைக்கு வழிகாட்டியவர் அம்மையார். அடுத்து
வந்த திருநாவுக்கரசர் தன் பதிகங்களில் சிலவற்றில் மட்டும் ஒன்பதாவது
பாடலில் எரியுருவான ஈசன் என்னும் கருத்தையும் பத்தாவது பாடலில் ராவணனை
அடர்த்தியதையும் குறிப்பிடுகிறார். அதை மேலும் விரிவு படுத்திய சம்பந்தர் தன்
பெரும்பாலான பதிகங்களில் 8, 9, 10 பாடல்களுக்கு ஒரு திட்டமான அமைப்பைக் கொடுத்துத்
தன் பாடல்களின் நோக்கம் என்ன என்பதைப் புலப்படுத்துகிறார்.
எட்டாவது பாடலில்
ராவணனைப் பற்றிக் குறிப்பிட்டதன் மூலம் வேதம்
ஓதுதலை விடாமற் செய்க, தீ ஓம்புக என்று அந்தணர்க்கு அறிவுறுத்துகிறார். ஒன்பதாவது
பாடலில் மாலயன் காணாச் சோதி வடிவைக் கூறி அச்சோதியே கோவிலில் சிவலிங்கமாக உள்ளது.
அதனை நீரும் மலரும் கொண்டு வழிபடுக என்று ஏனையோருக்கு வழிகாட்டுகிறார். பத்தாவது
பாடலில் சாக்கிய சமணரின் இழிவைப் பாடி இறைவன் இல்லை என்று கூறும் சமண சாக்கியரின்
தீயுரைகளை விட்டு விலகுக. எப்படிப்பட்ட வழிபாட்டு முறை ஆனாலும் இறைவன் ஓருவன்
உண்டு என்பதை ஓப்புக் கொண்டு அவருக்குப் பணிதல் நம் கடன் என்பதை உணர்த்துகிறார்.
No comments:
Post a Comment