Pages

Wednesday, July 18, 2012

சின்னக் கவலைகள்



இரவு முழுவதும் தூக்கமில்லை. அறைக் குளிரூட்டி வேலை செய்யவில்லை. ஒரு நாளா, இரண்டு நாளா? ஒரு மாதமாக இப்படித்தான் இருக்கிறது. கேட்டால் மின்னழுத்தக் குறைவு, பூஸ்டர் போட்டால் சரியாகி விடும் என்றார்கள். போட்டேன், 10 நாள் நன்றாக வேலை செய்தது. மீண்டும் பிரச்சினை. அழுத்தக் குறைவு பூஸ்டரின் சக்தியை விட அதிகமாகி விட்டதாம். ஒரு ஜெனரேட்டர் வாங்கிடுங்க, சார் என்று அலுங்காமல் சொல்லி விட்டுப் போய் விட்டார்கள். பணச் செலவு பற்றிய கவலை இல்லை. ஒரு மாதமாக, துணி துவைக்கும் யந்திரம், தொக்கா, சமையல் அறவைப் பொறி, கணினி என்று ஏகப்பட்ட கருவிகள் பழுதாகி தினமும் ஏதேனும் ஒரு தொழிலாளியைத் தேடிப் போக வேண்டிய நிலையில், புதிதாக ஒரு கருவி வாங்குவதற்கு முன் அதில் என்னென்ன பிரச்சினை வருமோ என்ற பயம் பிடித்து ஆட்டவே, முடிவெடுக்காமல் ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.
பிரச்சினைகள் தீர்வதில்லை. உருமாறிக் கொண்டிருக்கின்றன. 
நேற்று இரவு புழுக்கம் அதிகம். மின் விசிறி சுற்றினாலும் வெப்பக் காற்று தானே வருகிறது. வியர்வை வழிந்து ஓட ஓட எப்படித் தூக்கம் வரும்?
விடியற்காலையில் எழுந்து நாற்காலியை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குப் போனேன். ஆகா, எவ்வளவு இனிமையாகக் காற்று வீசுகிறது! முன் இரவிலேயே வநதிருக்கலாமோ? ஆனால் அங்கு வெறும் தரையில் பாயை விரித்துப் படுக்க முடியாது. சூடு ஏறும். கட்டிலை இங்கே கொண்டு போடுவது என்பதும் சாத்தியமான விஷயம் அல்ல. லேசான மடக்குக் கட்டிலாக இருந்தால் வசதியாக இருக்கும். ஆ...மா...ம், மேலே மேலே வசதி வசதி என்று பார்த்துப் பார்த்து பிரச்சினைகளைத் தான் வளர்த்துக் கொள்கிறோம். வள்ளுவர் சொன்னது சரிதான். எந்தெந்தப் பொருள்களிலிருந்து விலகுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அவற்றால் வரும் துன்பத்திலிருந்தும் விடுதலை பெறுகிறோம். தற்போது நாற்காலியில் சாய்ந்து கொண்டு இதை அனுபவிக்க வாய்ப்பு கிடைத்த வரை லாபம் என்று நினைத்துக் கொண்டேன்.
மனதுக்கும் உடலுக்கும் இதமான காற்று. இதமான குளிர். சூரியனை வரவேற்க பூமித் தாய் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தாள். நிலம் எங்கும் புத்துணர்ச்சி. மரங்கள், செடிகள் எல்லாமே ஆழ்ந்த தியானத்திலிருந்து கலைந்து நம்முடன் பேசுவதற்கு விரும்புவது போல் காணப்பட்டன. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாரதியுடன் பாட வேண்டும் போல் இருந்தது.
                இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமை யுடைத்து
                காற்றும் இனிது தீ இனிது நீர் இனிது நிலம் இனிது
                ஞாயிறு நன்று திங்களும் நன்று
                வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன
                மழை இனிது மின்னல் இனிது இடி இனிது
                கடல் இனிது மலை இனிது காடு இனிது
                ஆறுகள் இனியன
என்று பாரதி பாடியிருப்பது நினைவுக்கு வந்தது. ஏன் எப்பொழுதும் அவை இனிதாக இருப்பதில்லை? கத்தரி வெய்யிலில் மத்தியான்னம் 12 மணிக்கு ஞாயிறு நன்று என்று பாட முடியுமா?
நேற்று அலுவலகத்திலிருந்து வரும்போது கார் அயோத்தியா மண்டபம் அருகில் போக்குவரத்து நெரிசலால் ஒரு நிமிடம் நின்றது. யாரோ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். எனக்கு அதற்கெல்லாம் நேரமும் இல்லை, அதில் ஈடுபாடும் இல்லை. ஆனால் நேற்று அந்த ஒரு நிமிடத்தில் என் காதில் விழுந்த செய்தி நான் கேட்ட கேள்விக்குப் பதிலாக இருந்தது.
இயற்கை நியதியைப் பின்பற்றி நடப்பவனுக்குக் காற்று இனியது, ஆறுகள் இனியன. செடி கொடிகள் இனியன. இரவு இனியது, பகல் இனிது. மண் இனிது, வானம் இனிது என்று வேதம் சொல்வதாக அவர் சொன்னார்.
ஆம், இயற்கை நியதியைப் பின்பற்றி நடப்பவனுக்குத் தான் எல்லாம் இன்ப மயம். நாம் இயற்கை நியதியைப் பின்பற்றுகிறோமா? நம் தட்ப வெப்பத்துக்குப் பொருந்தாத உடை, உணவு, வீடு முதலியவற்றை ஏற்படுத்திக் கொள்வதைத் தானே நாகரிகம் என நினைக்கிறோம். தேவைக்கு மேல் சம்பாதித்துவிட்டு அதைப் பாதுகாப்பதற்கென்று நாம் கட்டிக் கொள்ளும் இந்த இரும்புக் கோட்டை, வெப்பத்தை  வாங்கி வைத்துக் கொண்டு இரவு முழுவதும் அறையை வெம்மைப் படுத்துகிறது. இதை வீடு என்று சொல்ல முடியுமா? விடுதலை தருவது அல்லவோ வீடு!
இதோ வெளிச்சம் வந்து விட்டது. பறவைகள் இசை முழங்கத் தொடங்கி விட்டன. குயில், காக்கை, புறா, இன்னும் பெயர் தெரியாத பல பறவைகள் கா கா, குக்கூ, க்ர்ர்யா, ட்வீக் ட்வீக் என்று தத்தம் மொழியில் இயற்கை அழகைப் போற்றிப் பாடிக் கொண்டிருந்தன. என் அருகில் சில பறவைகள் வந்து உட்கார்ந்தன. நேற்று யாரோ உலர்த்தியதில் சிதறி விழுந்த தானியங்கள் அங்கே தரையில் கிடந்தன. அதைப் பொறுக்கித் தின்றன. நீர்க் குழாயின் மேல் உட்கார்ந்து அதில் சொட்டிக் கொண்டிருந்த நீரை தலையைச் சாய்த்துப் பருகின. ஆயிற்று, அவ்வளவு தான். வயிறு நிரம்பிவிட்டது. இனி நாள் பூராவும் பாட்டுப் பாடிக் கொண்டிருப்பது தான் வேலை. ஒன்றின் முகத்திலாவது துளிக் கவலை இருக்கவேண்டுமே. நாளைக்கு என்று சேர்த்து வைக்க விரும்பும்போது தான் கவலை துவங்குகிறது. கவலையிலிருந்தும்  துன்பத்திலிருந்தும் விடுதலை பெற்ற இந்த ஜன்மங்களைப் பார்த்துப் பாரதி விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவி போலே என்று பாடியதில் வியப்பில்லை.
உயிரினங்களிலேயே வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொண்டது மனிதன் மட்டும் தான். ஆறாவது அறிவு பெற்றவன் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் அறிவினால் படைத்த பொருள்கள் எல்லாம் நம்மைத் துன்பங்களில் தான் ஆழ்த்தியுள்ளன. அவற்றிலிருந்து மீள்வது எப்படி என்பதை இந்தத் தலைமுறை அறிவாளிகள் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காணும் விடை மேலும் பல புதிய துன்பங்களுக்கு வழிவகுக்கும். அதைத் தீர்க்க அடுத்த தலைமுறை அறிவாளிகள் சிந்திப்பார்கள்.
மொட்டை மாடியில் இவ்வளவு இன்பம் கொட்டிக் கிடக்க நான் ஏன் வீட்டுக்குள் இத்தனை காலம் சிறைப்பட்டுக் கிடந்தேன்?
நான் மாணவனாக இருந்தபோது வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருந்தது! கூரை வீடு தான். மின் வசதி இல்லை. ஆனால் கை விசிறிக்குக் கூட அங்கு அவசியம் ஏற்பட்டதில்லை. கோடையில் வீட்டு வாசலில் தான் அனைவரும் படுத்து உறங்குவோம். நாகரிக வாழ்வின் பெயரால் பெட்ரோல் புகையைச் சுவாசிக்கும் கொடுமை அப்போது இல்லை. வீடும் சரி, குளத்து நீரும் சரி, கோடையிலும் குளிர் காலத்திலும் உடலுக்கு ஏற்றவையாக இருந்தன. என்னவோ வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டு நாம் இயற்கை இன்பங்களை இழந்து செயற்கை இன்பங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியின் உதவியாளனாகப் பணி புரிந்து கொண்டிருந்தேன். என் மேலதிகாரி- அவரும் தமிழர் தான். என்னை விட ஒரு வயது மூத்தவர். பெயர் பார்த்தசாரதி. தன் குழந்தைகள் அமெரிக்கச் சூழலில் வளர்ந்தால் நம் நாட்டுக் கலாசாரத்திலிருந்து விலகி விடுவார்கள் என்ற எண்ணத்தால் நாடு திரும்ப விரும்பினார். விண்கல எரிபொருள் துறையில் இருந்த பல முதுநிலை விஞ்ஞானிகளில் அவர் தனித் திறமை வாய்ந்தவர். நாசா நிர்வாகம் அவரை இழக்க விரும்பவில்லை. இந்தியாவில் இருந்தபடியே ஆராய்ச்சி செய்ய அனுமதித்தனர். என் மேல் அன்பு கொண்ட அவர் என்னையும் சென்னைக்கு வருகிறாயா என்று  கேட்டபோது தயங்காமல் ஒப்புக் கொண்டேன். இந்திய மண்ணில் அமெரிக்கச் சம்பளம். கசக்குமா என்ன?
விவசாயக் கூலித் தொழிலாளியின் மகனாகப் பிறந்து இன்று நான் அடைந்திருப்பது வளர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். புளியமரத்துப்பட்டி எங்கே, புளோரிடா எங்கே? எல்லாம் பார்த்தாகிவிட்டது. கிராமத்து சௌக்கியம் நகரங்களில் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு விட்டேன்.
ஏன், மீண்டும் கிராமத்துக்கே போனால் என்ன? இந்த வருமானம் வராது என்பது உண்மை தான். அடிப்படைத் தேவைகள், வசதிகள் நிறைவேறி, ஆடம்பரச் செலவு செய்யும் அளவுக்கு வருமானம் வருகிறது. ஆனால் வெறும் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? போதும். சம்பாதித்தது போதும். எனக்கு உண்மையான இயற்கை நியதியோடு பொருந்திய வாழ்க்கை இன்பம் வேண்டும்.
இந்த வீட்டை மட்டும் விற்றாலே கிராமத்தில் 10 ஏக்கர் நஞ்சை நிலம் வாங்கலாம். என் தந்தை நிச்சயம் இந்த யோசனையைக் கேட்டு மகிழ்வார். அரை ஏக்கர் நில உடமையாளராக இருந்து வருமானத்தின் பெரும் பகுதியைக் கூலி வேலை செய்தே சம்பாதித்த அவர் சொந்த ஊரில் பெரிய நிலச்சுவான்தாராகத் தலை நிமிர்ந்து நடப்பதை நிச்சயம் விரும்புவார்.
சிந்தனையில் ஆழ்ந்து கொண்டே தூங்கிவிட்டேன். வெய்யில் முகத்தில் சுள் என்று அடித்தபின் விழித்துக் கொண்டேன். தந்தையிடம் யோசனையைச் சொன்னேன். அவர் அளித்த பதில் நான் எதிர்பாராதது. வயசான காலத்திலே வியாதி வெக்கை வந்தா இங்கே தான் தம்பி வைத்திய வசதி எல்லாம் இருக்கு. எல்லாரும் கிராமத்தை விட்டு நகரத்துக்கு வரணும்னு ஆசைப்படறாங்க. நீ ஊரோட ஒத்துப் போகணும்பா.”
தாயிடம் சொன்னேன். நகரத்துக்கு வந்த பிறகு என் தாயும்  தந்தையும் காசி, ராமேச்சுரம், கேதார்நாத் என்று பல ஊர்களுக்கும் யாத்திரை சென்று வந்தனர். இதில் அவர்களுக்குப் பல நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். அவர்கள் மூலம் மேலும் பல தலங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு அவற்றுக்கெல்லாம் போகத் திட்டமிட்டிருந்தார் என் அன்னை. அஷ்ட லட்சுமி கோயில், வடபழனி, நங்கநல்லூர் என்று தினமும் ஏதேனும் ஒரு கோயிலுக்கு வாடகைக் கார் வைத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். வயசான காலத்திலே கோயில் குளம்னு போய் போற வழிக்குப் புண்ணியம் தேடிக்கிறோம்பா. கிராமத்துலே போனா இந்த வசதி எல்லாம் கிடைக்காது. இங்கேயே இருந்து விடுவோம்பா.  
மனைவி ஒப்புக் கொள்ள மாட்டாள் என்பது தெரியும். என்றாலும் கேட்டேன். என் குழந்தைகள் நல்ல பள்ளிக் கூடத்திலே படிக்கணும். நான் நகரத்தை விட்டு வரமாட்டேன். நீங்கள் வேண்டுமானால் போய் இருங்கள்.
நகரத்திலே படிச்சா தான் படிப்பா? புளியமரத்துப்பட்டியிலே படிச்சு நான் முன்னுக்கு வரவில்லையா?”
நீங்க நகரப் பள்ளியிலே படிச்சிருந்தீங்கன்னா இந்நேரம் நாசா தலைவராகவே ஆயிருப்பீங்க. இன்னமும் ஒரு இளநிலை விஞ்ஞானியாகக் கூட ஆகாமல் உதவியாளராகவே இருக்கீங்க.
ஒருவரும் என் கருத்தை ஒப்புக் கொள்ளப் போவதில்லை. என் மனைவியின் சம்பளத்தைக் கொண்டும் என்னுடைய சேமிப்புகளிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டும் இவர்கள் இங்கே வாழட்டும். இவர்களை விட்டு விட்டு நான் மட்டும் கிராமத்தில் போய் வசித்தால் என்ன? அங்கே கிடைப்பது எனக்குப் போதும்.
அன்று அலுவலகம் கிளம்பும்போது, பணியிலிருந்து விலகுவதாக ஒரு கடிதம் எழுதிப் பையில் வைத்துக் கொண்டேன். அலுவலக வாசலில் பார்த்தசாரதி எனக்காகவே காத்திருந்து நின்று கொண்டிருந்தார்.
வாங்க, மிஸ்டர் குமார். பாராட்டுகள். நாசா காலாண்டு இதழில் நீங்கள் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை விஞ்ஞானிகளின் ஒருமித்த பாராட்டுக்கு உள்ளாகி இருக்கிறது. உங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். பாருங்கள். விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
ஆறு மாதம் முன்பு நடந்தது அது. ஒரு நாள் எனக்கு ஒரு புதிய கருத்து பளிச்சிட்டது. விண்கலத்தின் எரிபொருளுடன் ஒரு குறிப்பிட்ட ரசாயனப் பொருளைக் குறிப்பிட்ட வெப்ப நிலையில் கலப்பதன் மூலம் எரி பொருளின் திறனை இரு மடங்கு உயர்த்தலாம் என்பது தான் அது. அதைக் கணித சூத்திரங்கள் மற்றும் ரசாயன விதிகள் மூலம் நிரூபிக்க முடிந்தது. பார்த்தசாரதியிடம் தெரிவித்தேன். ஏற்றுக் கொண்டார். அதோடு மட்டுமல்லாமல் அதைக் கட்டுரை வடிவில் நாசாவுக்கு அனுப்பும்படியும் சொன்னார். என்னுடைய யோசனையைத் தன் யோசனை என்று தெரிவித்துப் பாராட்டுப் பெற விரும்பும் கீழ்மை இல்லாதவர் அவர்.
என் அறைக்குத் திரும்பினேன். பையில் பணி விலகல் கடிதம் உறுத்திக் கொண்டிருந்தது.
உங்கள் யோசனை விஞ்ஞானிகள் குழுவால் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதைச் சோதனைக் கூடத்தில் ஆய்ந்து நடைமுறையில் அது சாத்தியம் என்பதும் நிரூபிக்கப்பட்டது. இதனால் எரிபொருள் செலவு பாதியாகக் குறையும். வருங்காலத்தில் நடுத்தர மக்களும் விண்வெளிப் பயணம் மேற்கொள்ள முடியும். மனித குல அறிவு வளர்ச்சிக்கு நீங்கள் செய்த சேவையைப் பாராட்டவும் உங்களுடன் கலந்துரையாடவும் ஹூஸ்டனில் அடுத்த செவ்வாயன்று ஒரு கூட்டம் ஏற்பாடு ஆகியுள்ளது. வருவதற்கு ஆயத்தம் செய்து கொள்ளுங்கள் என்று ஒரு கடிதம்..
உங்களுக்கு முது நிலை விஞ்ஞானியாகப் பதவி உயர்வு தர விரும்புகிறோம். ஆனால் நீங்கள் இங்கேயே பணி புரிய வேண்டியிருக்கும். உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கவும் என்று மற்றொரு கடிதம்.
என் கட்டுரை மனித குல அறிவு வளர்ச்சிக்கு உதவியிருக்கிறதாம். நாசா விஞ்ஞானிகளின் ஒருமித்தப் பாராட்டு என்பது வசிஷ்டர் வாயால் பெறும் பாராட்டைப் போல.
எத்தனையோ பேர் மனித குல அறிவு வளர்ச்சிக்கு உதவியிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் அறிவு ஒவ்வொரு துறையில் சுடர் விடுகிறது. என்னுடையது இத்துறையில் தான் வளர்ந்துள்ளது. விண்கலம் செலுத்தும் அறிவு விவசாயத்துக்குப் பயன்படுமா? குறைந்த எரிபொருளைக் கொண்டு விண்கலம் செலுத்தும் வித்தையை நான் கண்டறிந்தது போல நாளை இன்னொருவர் குறைந்த அழுத்த மின்சாரத்திலேயே வேலை செய்யக் கூடிய கருவிகளைக் கண்டுபிடிக்கலாம். இந்த இன்னல்கள் எல்லாம் தீர்ந்து பொய்யாகும். அது வரை குளிரூட்டி வேலை செய்யவில்லை என்பது போன்ற சின்னக் கவலைகள் என்னைத் தின்ன விடமாட்டேன் என்று உறுதி செய்து  கொண்டேன்.
இதோ அமெரிக்கா அழைக்கிறது. என் திறமையை மதித்துப் போற்றும் நாடு. வாழ்க்கையை வசதிப்படுத்தும் மின்சார சாதனங்களை எத்தனை மிகுதியாக உற்பத்தி செய்துள்ளார்களோ அத்தனைக்கும் தேவையான மின்சாரத்தையும் தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யும் நிர்வாக அமைப்பு. புளோரிடா நில நடுக் கோட்டுப் பகுதி. கடும் வெய்யில் தான். ஆனால் மரங்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் வெப்பத்தை உள்ளே விடா. நாளைக்கென்று சேர்த்து வைக்காமல் இன்றைய நாள் மட்டுமே உண்மை என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட மக்கள். அறிவுத் திறத்தால் ஏற்படுத்தப்பட்ட செயற்கை இன்பங்கள் பல அங்கு உண்டு என்றாலும் இயற்கையை மறவாமல் புல் வெளிகளின் நடுவே வீடு, அலுவலகங்களைக் கட்டி மரங்களையும் பூஞ்செடிகளையும் போற்றும்  மக்கள். அங்கு நான் பணி புரிந்த அலுவலகமும், தங்கியிருந்த வீடும் கிராமியச் சூழலிலேயே இருந்தன. நினைத்தாலே நெஞ்சில் தென்றல் வீசுகிறது.
பையிலிருந்த கடிதத்தைக் கிழித்து எறிந்தேன். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. உங்கள் அழைப்பை ஏற்று அடுத்த வாரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்று ஒரு கடிதமும் முதுநிலை விஞ்ஞானியாகப் பதவி ஏற்று அமெரிக்காவில் பணி புரிய விருப்பம் தெரிவித்து மற்றொன்றும் மின்னஞ்சலில் தட்டினேன். 

No comments:

Post a Comment