Pages

Saturday, February 19, 2011

சாதிகள் இல்லையடி பாப்பா

இந்து சமயத்தைச் சாடுவோர் வேதத்தின் வர்ணாசிரம நெறி தான் சாதிப் பிரிவுகளை உண்டாக்கியது என்று கூறுவர். உண்மை அதுவல்ல. வேதம் சாதி பற்றி எதுவும் கூறவில்லை. வேத காலத்தில் சாதி இல்லை. வர்ணாசிரம முறை இருந்தது.

வர்ணாசிரமம் என்பதில் வர்ணம் ஆசிரமம் என்ற இரு சொற்கள் அடங்கியுள்ளன. இதில் ஆசிரமம் என்பது ஒரு தனி மனித வாழ்வின் வெவ்வேறு கால கட்டங்கைளக் குறிக்கும் – மாணவப் பருவம், இல்லறப் பருவம், காடு வாழ் பருவம், துறவுப் பருவம். இந்த ஆசிரம முறை பற்றிப் பாரதி எதுவும் கூறவில்லை. இளம் பருவத்தில் துறவு பூணும் முறை புத்த மதத்திலிருந்து இந்து மதத்திற்கு வந்து சேர்ந்த ஒரு கேடு என்று மட்டும் கூறுகிறார்.

ஆனால் வர்ண முறையைப் பாரதி பெரிதும் போற்றினார். வர்ணம் என்ற சொல் நிறம் என்ற பொருளுடையது. இது தொழில் அடிப்படையில் மனித சமூகத்தில் காணப்படும் பிரிவைக் காட்டுவது. ஒவ்வொரு சமூகத்திலும் நடைபெறும் தொழில்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். சிலர் அறிவுத் துறையில் (ஆசிரியர், ஆராய்ச்சியாளர்) ஈடுபடுகின்றனர். சிலர் நாட்டு மக்களைக் காக்கும் பணியிலும் (அரசு அதிகாரிகள், ராணுவத்தினர்), சிலர் வாணிபத்திலும், மற்றையோர் உற்பத்தித் தொழிலிலும் உள்ளனர். ஒரு சமூகம் சீராக இயங்க இந்த நான்கு குழுக்களும் தேவை. இவற்றில் எந்த ஒன்றும் உயர்ந்தது என்றோ தாழ்ந்தது என்றோ சொல்ல முடியாது. ஒரு யந்திரத்தின் நான்கு பாகங்கள் போல, இவை நன்கு பொருந்தி சீராக அமைந்தால் தான் சமூக யந்திரம் சிக்கலின்றி இயங்கும். இதைத் தான் பாரதி குறிப்பிடுகிறார்.

வேதமறிந்தவன் பார்ப்பான் - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டர் என்றோர் வகுப்பில்லை தொழில்
சோம்பலைப் போல் இழிவில்லை

நாலு வகுப்பும் இங்கொன்றே இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.

பகவத்கீதையில் நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன என்று கண்ணன் கூறுவதைப் பாரதி குறிப்பிடுகிறார்.

நாலு குலங்கள் அமைத்தான் அதை
நாசமுறப் புரிந்தனர் மூடர்

பாரதியாரின் ஞானரதம் அவரது கருத்தை மேலும் தெளிவுபடுத்துகிறது.

“பிறக்கும் போது மனிதர்கள் எல்லாம் மிருகங்களாகப் பிறக்கிறார்கள். பயிற்சியினாலும் குண கர்மங்களினாலும் வெவ்வேறு வர்ணத்தினராகிறார்கள். சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச: (நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன) எனப் பகவான் சொல்லியிருக்கிறார்.

“பாரத தேசத்தில் தான் வர்ணாசிரம பேதங்கள் இருப்பதாகச் சொல்வது பிழை. ஸகல தேசங்களிலும் உண்டு. ஆனால் பாரத தேசத்தில் தான் வர்ணாசிரம நெறி சீர் கெட்டுப் போயிருக்கிறது. பூர்வத்தில் பாரத தேசத்தில் வர்ணாசிரம நெறி நான் சொல்வது போலத் தான் இருந்தது. அதற்கு அந்நாட்டிலுள்ள வேதங்கள், உபநிஷத்துகள், புராணங்கள், இதிஹாஸங்கள் முதலிய ஸகல நூல்களும் ஸாக்ஷி. இப்பொழுது பாரதநாட்டைத் தவிர மற்றெல்லா நாடுகளிலும் பகவான் சொல்லிய முறை தான் நடைபெற்று வருகிறது. பாரத நாட்டில் அம்முறை தவறிவிட்டது. அது பற்றியே அந்நாட்டினர் வறுமை, நோய், அடிமைத் தனம் என்ற இழிவுகளிலே வீழ்ந்திருக்கிறார்கள்.”

இப்படி, விரிவாக வர்ண முறையை ஆதரித்த பாரதி, வர்ணங்களுக்குள்ளே உயர்வு தாழ்வில்லை, எத்தொழில் செய்தாலும் அனைவரும் சமம் என்பதைப் பல இடங்களிலும் வலியுறுத்துகிறார்.

சீலம் அறிவு தருமம் இவை
சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்

‘ஒற்றைக் குடும்பம் தனிலே பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை, மற்றைக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை, ஏவல்கள் செய்பவர் மக்கள்’ என்றிருப்பது போல, சமூகத்திலும் வெவ்வேறு தொழில் செய்வோர் ஒற்றுமையாக ஒரு குடும்பம் போல வாழ வேண்டும் என்பது அவர் கருத்து.

பாரதியின் பூனைக் குட்டிகள் பாட்டு அனைவரும் அறிந்தது.

வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை
பேருக்கொரு நிறமாகும்

சாம்பல் நிறமொரு குட்டி கருஞ்
சாந்தின் நிறமொரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும் அவை
யாவும் ஒரே தரமன்றோ
இந்த நிறம் சிறிதென்றும் இஃது
ஏற்றமென்றும் சொல்லலாமோ

வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில்
மானிடர் வேற்றுமை இல்லை

சாதி போல் அல்லாமல் வர்ணம் மாற்றிக் கொள்ளக் கூடியது என்பதை அவர் வலியுறுத்துகிறார். அவரது ஞானரதத்தில் தர்ம லோகம் என்ற பகுதியில் கதாநாயகன் கூறுகிறான்:–

“எனது பிதா க்ஷத்திரியர். நான் பிராமணன். என் மக்கள் பன்னிரண்டு பேர்களில் ஒருவனை மட்டுமே பிராமண காரியங்களுக்குத் தெரிந்தெடுத்திருக்கிறேன். மற்றவர்களை யெல்லாம் மற்ற மூன்று வர்ணங்களின் காரியங்களுக்கு அவரவர்களின் தகுதி, ஸ்வபாவம் முதலியவற்றைக் கருதி உரியவாறு பயிலுமாறு செய்திருக்கிறேன்.”

வர்ண முறையைப் போற்றிய பாரதி சாதி முறையைத் தீவிரமாக எதிர்த்தார். வர்ணம் என்பதும் சாதி என்பதும் ஒன்றல்ல என்ற உண்மையைப் பலர் அறிவதில்லை.

வர்ணம் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல. ஆனால் ஜாதி என்பது பிறப்பால் வருவது. பிறப்பின் காரணமாக ஏற்படும் பிரிவுகளைப் பாரதி அடியோடு வெறுத்தார்.

சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

மேலவர் கீழவரென்றே வெறும்
வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியை எல்லாம் இன்று
பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்

சாதிப் பிரிவுகள் சொல்லி அதில்
தாழ்வென்றும் மேலென்றும் சொல்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்

சாதிக் கொடுமைகள் வேண்டா அன்பு
தன்னில் செழித்திடும் வையம்.

மானிடச் சாதி என்ற ஒன்றைத் தான் அவர் ஒப்புக் கொள்கிறார்.

கூட்டி மானிடச் சாதியை ஒன்றெனக்
கொண்டு வைய முழுதும் பயனுறப்
பாட்டிலே அறம் காட்டு என்னும் ஓர் தெய்வம்.

..............................................ஆயிரம் சாதி
வகுப்பவர் வகுத்து மாய்க. நீரனைவரும்
தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம்
என்பவை போற்ற எழுந்திடும் வீரச்
சாதி ஒன்றையே சார்ந்தவராவீர்.

மானிடர் அனைவரும் ஒரே சாதி என்ற நிலையிலிருந்து இன்னும் ஒரு படி மேலே போய்ப் பிற உயிரினங்களையும் உயிரற்றவைகளையும் கூட ஒரே சாதிக்குள் அடக்குகிறார்.

“காக்கை குருவி எங்கள் சாதி
காடும் மலையும் எங்கள் கூட்டம்”
என்று அவர் பாடும்போது அத்வைத மாமேருவின் உச்சிக்கே போய் விடுகிறார்.

கீதை முன்னுரையில் அவர், “கண்ணபிரான் ஜாதி வேற்றுமையும் அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாது என்பது மட்டுமே அன்றி எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்வித வேற்றுமையும் பாராது இருத்தலே ஞானிகளுக்கு லட்சணம்” என்கிறார்.

“பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன், பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம். இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லட்சணம். எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம்.”

இவ்வாறு அவரது சமூகச் சமத்துவக் கொள்கையும் வேத அடிப்படையைக் கொண்டது என்பது தெரிகிறது.

Wednesday, February 16, 2011

சூழ்ந்ததெல்லாம் கடவுள்

கடவுள் எங்கே இருக்கிறார்? தூணிலும் உள்ளார், துரும்பிலும் உள்ளார் என்று சொல்கிறோம். அதற்குச் சான்றாகப் பிரகலாதன் கதையைக் கூறுகிறோம். இதை இக்கால இரணியர்கள் ஏற்றுக் கொள்வார்களா? புராணங்களைப் புளுகு என்று தள்ளும் காலம் இது. “தமிழா, தெய்வத்தை நம்பு. பயப்படாதே, உனக்கு நல்ல காலம் வருகின்றது..... வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்து கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்ளாதே” என்று அறிவுறுத்திய பாரதி பிரகலாதன் கதைக்குப் புதிய பொருள் தருகிறார்.

ஈசாவாஸ்ய உபநிடதம் கூறும் ‘இந்த எல்லாமே இறைவன் தான்’ என்ற கருத்தை அதில் காண்கிறார்.

சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே
சொல்லென்று இரணியனும் உறுமிக் கேட்க
நல்லதொரு மகன் சொல்வான் தூணிலுள்ளான்
நாராயணன் துரும்பிலுள்ளான் என்றான்
வல்லமைசேர் கடவுளில்லாப் பொருளொன்றில்லை
மகாசக்தி இல்லாத வஸ்து இல்லை
அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை
அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ

கேளப்பா சீடனே கழுதை ஒன்றை
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப் பார்த்திருகரமும் சிரமேற் கூப்பி
சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும்
கூளத்தினை மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடி நின்ற பொருனனைத்தின் கூட்டம் தெய்வம்
மீளத்தான் இதை மட்டும் விரித்துச் சொல்வேன்
விண் மட்டும் தெய்வமன்று மண்ணுமஃதே

யஜுர் வேதத்தின் ருத்ரம் என்னும் பகுதி உபநிடத மகா வாக்கியங்களின் விளக்கமாக உள்ளது. இது உலகம் முழுமையையும் ருத்திர வடிவமாக வணங்குகிறது.

மந்திரி, வணிகர், தேரோட்டி, வேடர், கள்வர், விராதன், [ஒழுக்கக் கேட்டால் புறம் தள்ளப்பட்டவர்], தச்சர், குயவர், செம்படவர் என்று பல வடிவங்களில் விளங்கும் ருத்திரருக்கு வணக்கம் தெரிவிக்கும் அது, சடைமுடியர், மொட்டைத் தலையர், நிற்பவர், நடப்பவர், தூங்குபவர், அருகில் இருப்பவர், தொலைவில் இருப்பவர் என்று எவரையும் மிச்சம் வைக்காமல் இறைவனாகக் கருதி வணங்குகிறது. மனிதர் மட்டுமல்ல, நாய், குதிரை ஆகிய விலங்குகள் வடிவத்திலும் ருத்திரன் விளங்குவதாகக் கூறப்படுகிறார். தேர், ஆற்று நீர், மரங்கள் போன்ற உயிரற்ற பொருள்களாகவும் அவர் இருக்கிறார். இந்த மனிதருக்குள்ளும், பிராணிகளிடத்திலும், பொருட்களுக்குள்ளும் ருத்திரன் வசிப்பதாகக் கூறாமல் அவர்களே, அவையே ருத்திரன் என்று கூறுவது கவனிக்கத்தக்கது.

“நீயே கார்த்திகை நட்சத்திரமாகவும் அக்னியாகவும் உள்ளாய். நீயே அக்னியின் சுவாலை, பிரஜாபதியின் ஒளி, சோமரசத்தின் பிரகாசம். நீயே ரோகிணி நட்சத்திரமாகவும் பிரஜாபதியாகவும் உள்ளாய். நீயே ஆதிரை, நீயே ருத்திரன், நீயே புனர்வஸு, நீயே அதிதி, நீயே பூசம், நீயே பிரகஸ்பதி, நீயே ஆயில்யம், நீயே பாம்புகள், நீயே மகம், நீயே பித்ருக்கள்...” என்று நீளும் மற்றொரு யஜுர் வேதப் பகுதி [யஜுர் 4.4.10] விண்ணிலுள்ள நட்சத்திரங்கள், தேவர்கள் எல்லாவற்றையும் ஒரு பரம்பொருளின் பல தோற்றங்களாகக் காண்கிறது.

இந்தக் கருத்தைப் பாரதி பின்வருமாறு பாடினார்.

சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்;
சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,
வித்தையிலாப் புலையனுமஃதென்னும் வேதம்;

பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்
நித்த நுமதருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்துவீரே?

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டுமன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;

வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்
[பாரதி அறுபத்தாறு 15, 17, 18]

மனிதர்க்குக் கோபம் வருவதற்கான காரணத்தை ஆராய்கிறார் பாரதி. நம்மைச் சூழ்ந்தது எல்லாம் கடவுள், நாமும் கடவுள் என்ற எண்ணம் எப்பொழுதும் நமக்கு இருக்குமானால் நமக்குக் கோபம் வராது அல்லவா? நம்மிலும் வேறான ஒரு பொருளிடம் தானே நாம் கோபித்துக் கொள்ள முடியும். அப்படி ஒரு பொருள் எதுவும் இல்லை என்ற வேதக் கருத்தைச் சுருக்கமாக, மூன்று வார்த்தைகளில் தருகிறார். சூழ்ந்தது எல்லாம் கடவுள்.

சூழ்ந்ததெலாம் கடவுள் எனச் சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்தலாலே
சேருவதே மானிடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.

தன் வசன கவிதையில் பாரதி இக் கருத்தை மேலும் விளக்குகிறார்.
இவ்வுலகம் ஒன்று
ஆண், பெண், மனிதர், தேவர்,
பாம்பு, பறவை, காற்று, கடல்,
உயிர், இறப்பு இவை அனைத்தும் ஒன்றே
ஞாயிறு, வீட்டுச் சுவர், ஈ, மலை, அருவி,
குழல், கோமேதகம் இவ்வனைத்தும் ஒன்றே
இன்பம், துன்பம், பாட்டு,
வண்ணான், குருவி, மின்னல், பருத்தி
இஃதெல்லாம் ஒன்று
மூடன், புலவன்,
இரும்பு, வெட்டுக்கிளி
இவை ஒரு பொருள்
வேதம், கடல்மீன், புயற் காற்று, மல்லிகை மலர்
இவை ஒரு பொருளின் பல தோற்றம்
உள்ளதெல்லாம் ஒரே பொருள் ஒன்று
இந்த ஒன்றின் பெயர் - தான்
தானே தெய்வம்
தான் அமுதம் இறவாதது

பாரதி இக்கொள்கையைப் பின்பற்றினார். அத்வைத நிலையின் உச்ச கட்டத்தில் நின்று அவர் பாடுகிறார்.

காக்கைச் சிறகினிலே நந்தாலா -நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா- நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா- நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத்
தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா

உலகனைத்துமாக வியாபித்து நிற்கும் பிரமம் நானே என்ற உபநிடதக் கருத்து எவ்வளவு எளிய சொற்களில் வெளிப்படுகிறது பாருங்கள்.

வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்
மண்ணில் திரியும் மரமெல்லாம் நான்
கானிழல் வளரும் மரமெலாம் நான்.
காற்றும் புனலும் கடலுமே நான்,

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
மண்ணில் கிடக்கும் புழுவெல்லாம் நான்
வாரியிலுள்ள உயிரெலாம் நான்.

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உருவெலாம் நான்,
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில் நகர் கோபுரம் யாவுமே நான்

இன்னிசை மாதரிசையுளேன் நான்
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்,
புன்னிசை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

மந்திரங் கோடி இயக்குவோன் நான்
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்
தந்திரங் கோடி சமைத்துளேன் நான்,
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்ட பல சக்திக் கணமெலாம்நான்,
காரணமாகிக் கதித்துளோன் நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர் வானில் செல்லுவோன் நான்,
ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்கு முதற் சோதி நான்.

Saturday, February 12, 2011

வாயுதேவன் புலம்பல்

வெப்பம் மிகுந்த இடம் நோக்கி
விரைந்து செல்லும் இயல்புடனும்
சூடு என் மேல் பட்டவுடன்
சுர்ரென மேலெழும் இயல்புடனும்
இறைவா என்னைப் படைத்துவிட்டாய்
இவ்விதி மாற்றல் எளிதாமோ

வீடுகள் தோறும் கூரையினில்
விதவிதப் பெயருடன் தொங்கிடுவார்
முக்கரம் விரத்துச் சுழன்றிடும் இச்
சக்கரத்தாழ்வார் செயல் காணீர்

தலைவா உன்னை மறந்துவிட்டு
தானே விதியெனத் தருக்குகிறார்
மக்கள் உடலைக் குளிர்வித்து
மற்றவர் வெப்பம் நான் பெற்று
மேலே செல்ல முயலுகையில்
மிகுந்த எதிர்ப்புக் காட்டுகிறார்
கழுத்தைப் பற்றித் திருகுகிறார்
தரையில் தள்ளி மோதுகிறார்
குனிய வைத்துக் குட்டுகிறார்
கொடுமை அந்தோ நான் சகியேன்
இறைவா உன்னை வேண்டுகிறேன்
இனிப் படமுடியாது இத்துயரம்
சக்கரத்தாழ்வார் செயும் கொடுமை
சற்றே மாற்ற மாட்டீரோ

அன்ன தாதா ஸுகீ பவ

வயிறு முட்டப் பாலை அருந்தி
வாயை விலக்கித் தாய்முகம் பார்த்து
இனிய வாயை இதமாய்த் திறந்து
கனிவும் மகிழ்வும் கண்களில் காட்டி
சின்னக் குழந்தை சிரிப்பதன் பொருள் என்?
அன்னம் இட்டவர் நலமுடன் வாழ்க

ஏதும் இல்லா ஏழை மெலிந்து
காதம் நடந்து வேற்றூர் ந்ண்ணி
வருத்தும் பசியினால் வயிறு சுருங்கி
அறத்திடு பிச்சை இரந்து பெற்றது
உப்பும் நீரில் ஊறிய சோறும்
தொப்பை குளிரத் தொலைந்தது துன்பம்.
உண்டபின் ஈந்தவன் முகத்தினை நோக்கி
கண்களில் நன்றிக் கண்ணீர் துளிர்க்க
சொன்ன செய்தி எதுவெனக் கேளீர் !
அன்னம் இட்டவர் நலமுடன் வாழ்க.

வேதனைக்கு நன்றி

செலுத்துகிறேன் நன்றி சேர்ந்திட்ட வேதனைக்கு
இதயத்தைக் கனமாக்கி எனைக் கவிஞன் ஆக்கியதால்.
உலகெல்லாம் பெருவெள்ளம், ஊரெங்கும் பால் வெள்ளம்
எந்தன் குடிசையிலே இருப்பதுவோ சிறு கலயம்
அதனில் இருப்பதுவோ அழுக்கடைந்த நீராகும்
தாகமும் தீர்ப்பதில்லை, தாபமும் தணிப்பதில்லை.
பொங்கு வரும் பாலாற்றில் மொண்டுவந்து ஒருகுவளை
விடாய் தீர்த்துக் கொள்ள விதி எனக்குப் பணிக்கவில்லை
அடுத்தவரைப் பார்த்து அழுக்காறு கொள்கின்றேன்
அவலாசைப் படுகின்றேன், ஆற்றாமை உணர்கின்றேன்.
விதியென்னும் தத்துவத்தை மனிதர்க்குரைத்தவனை
வியந்து பாராட்டி விடுகின்றேன் பெருமூச்சை

நரகத்தைத் தேடி நான் எங்கும் செல்லவில்லை
எனைத் தேடி வந்தஃது இயற்றியது ஓர்அரங்கை.
அரங்கின் பொருள் யாவும் ஆக்கியவன் யானே
என் செயலின் விளைவான இழிவான நரகிற்கு
விதியையோ நோவேன், வீழ்ந்து விட்ட மதியையோ நோவேன்

ஊரெங்கும் கொண்டாட்டம் உல்லாசம் களியாட்டம்
ஆற்றிடை நந்தி போல் அசையாமல் நிற்கின்றேன்
தனைமறந்து எல்லோரும் தமருடனே களிக்கையிலே
எனை மறக்க இயலாமல் எனக்குள்ளே குமைகின்றேன்

யான் என்பவன் எனக்கோர் பெரும்புதிர்
தன்னைப் புரிந்து கொள்ளத் தான் அனுமதிப்பதில்லை.
ஊரோடும் உறவில்லை, உறவோடும் ஒட்டில்லை.
வேலையிலும் ஓய்வினிலும் விளையாட்டு வேளையிலும்
தன்னைப் பற்றியே தான் மூழ்கி இருத்தலால்.
காணும் பொருள் யாவும் காட்டுவது என் குறையை
இந்த முட்செடி என்னால் தோன்றியது
அந்தப் பெரும்பள்ளம் ஆக்கியவன் நானே
இறைந்திருக்கும கற்களெல்லாம் இறைத்ததும் யானே
என் வாழ்வு என் துன்பம் யான் அடையத் துணிந்தேன்
எனை நாடி வந்தோர்க்கும் ஏனளித்தேன் துயரம்
அன்பால் எனை அணைத்து ஆறுதலாய் ஒரு வார்த்தை
நீயுரைப்பாய் என்று நிலையாக உனை நம்பி
அடைக்கலம் புகுந்த எனை ஆதரிப்பாயே.
கருணைக் கடலன்றோ, கவினுறு மலையன்றோ
சொல்லாமற் சொலவல்ல சூக்குமப் பரம்பொருளே
கேட்காமற் கொடுக்கின்ற கேடிலா வள்ளல் நீ.
உன்னை அடைந்தோர்க்கு உண்டோ ஒரு துன்பம்.

நகர வருணனை – நாகை 1970

கனவு

பளபளத்த கருமையுடன் பரவி நிற்கும் தார் ரோடு
சளசளத்த மழையினிலும் சகதியிலாத் தன்மையது
குண்டு குழிகளின்றிக் குறைகள் ஏதுமின்றி
வண்டுறை குளத்தில் வாலன்னம் மிதத்தல் போல்
செல்லும் ஊர்திகளைச் சீராகத் தாங்குவது
கொல்லும் புழுதியிலை, குப்பையிலை, கூளமிலை
வீடு கழித்த குப்பையென விரல் நீளச் சிறுதுரும்பும்
போடுதற்குக் கூச்சம் தரும் புனிதம் நிரம்பியது
அகலத்திற் குறைவுமிலை, அதிலேயோர் நெளிசலிலை
பகலென்ன இரவாக்கும் பாங்கான ஒளிக்குழல்கள்.
உருண்டிடும் ஊர்திகளில் ஒன்றேனும் புகை கக்கா
மருண்டிடும் அளவுக்கு மாவிரைச்சல் போடாதாம்.
உண்டிங்கே நடைபாதை ஓரங்கள் இருபுறத்தும்
வண்டிகளின் தடையின்றி மக்கள் நடப்பதற்கே
மற்று அவரன்றி மாடு நாய் முதலான
சிற்றறிவுயிரினங்கள் சிலவேனும் காண்கிலேன்.

ஓரத்தே வீடுகள் உயரத்திற் பெரியனவாய்
சீரொத்த பான்மைையதாய் சிறப்புமிகு தூய்மையதாய்
இடமகன்ற மாளிகைகள் இவை ஒளியிற் குறைவில்லா
தடமகன்ற தன்மையினால் தங்காத வளியுடைய.
குடிமக்கள் என்பாரோ கோலமிகு வனப்புடையார்
மிடியில்லார் நோயில்லார் மிகவான பகையில்லார்
நகரெங்கும் சென்றேன் நானிதுவே கண்டேன்
அகமெங்கும் மகிழ்ச்சியால் ஆகா நான் நிரம்பிட்டேன்.

நனவு

தாங்கிடும் பெயரால் தாமரைக் குளமெனவே
ஓங்கரும் புகழ் படைத்த ஒரு நீர் நிலையுண்டு
பாசியும் வெறுக்கும் பாவத் தீர்த்தமிது
நாசிக்கும் விழிகளுக்கும் நரகமெனத் தோன்றுமால்.
தூம்பொன்று வடித்து நிற்கும் துர்நாற்றச் சாக்கடை நீர்
ஆம்பலுடன் தாமரையும் அல்லியும் இதில் வாழா.
பண்டுமுதல் இந்நீரால் பயன் பெறுவது கிருமிகளே.
உண்டிங்கே மீன்கள். ஓரத்தே இருந்து அவற்றைத்
தூண்டிலிட்டுத் தூக்கித் தொழில் செய்வோர் சிலராவர்.

குளத்தின் கரையெனிலோ கோடி தொழிற்கூடம்
பொறுக்கி வந்த சாணத்தைப் போராய்க் குவித்ததனை
வரட்டி தட்டி விற்கும் வனிதையரும் ஆங்குண்டு

குளத்தின் கரையோரம் குடிசைகள் பல உளவாம்
குடிசையிலே வாழ்கின்ற குழந்தையர்க்குக் கழிவிடமாய்
பன்றிகளும் நாய்களும் பக்கக் கண் காக்கைகளும்
இரை தேடிப் பெறுகின்ற இன்பக் களஞ்சியமாய்
குளிர் தாங்கா மூதாட்டி குளிர் காயும் நல்லிடமாய்
அழுக்கினையே அன்றி ஆடை பிற அணியாத
சிறுவர் விளையாடச் சீரான ஆட்டிடமாய்
குடிசைவாழ் மக்கள் தம் குப்பைகளின் நிலைக்களனாய்
அவ்விடத்தின் பயன் கூற ஆயிரம் நா வேண்டும்

தார் போட்ட ரோடுண்டு தாமரைக் குளக்கரையில்
தார் பிரிந்து விட்டதனால் தனிப் பிரிந்த கல்லுண்டு.
கோணலோ சொல்லப் போனால் கோடி கோடி ஆகிடாதோ
குழிகளில் விழுந்தேறிக் குலுங்கியே செலும் வண்டி

அச்சாலையை அடுத்து அமைந்ததோர் சிறு குப்பம்.
குப்பத்து மக்கள் தாம் குறைவில்லாச் சண்டையினர்
ஒரு வீட்டு வாசலிலே ஒடுங்கி நிற்கும் ஒரு சொறிநாய்
மறு வீட்டில் உயிருக்கு மன்றாடும் ஒரு கிழவன்
சூரியனும் சந்திரனும் சோவென்னும் பெருமழையும்
கூரையினைத் தாண்டிக் குடிசையினுள் செல்லும்.

Monday, February 7, 2011

கண்ணீர்

என்னருமைக் கண்ணீரே,
இன்னலிலே என் தோழா,
உன்னருமை நானறிவேன்
ஒன்றுரைப்பேன் கேளாய் நீ

நலிந்தார்க்கு நற்றோழா நானறிவேன் நின் திறமை
வலிமையுள்ள நின் முன்னே வாள் திறனும் சிறிதாகும்
ஞாலத்தின் முழுமையிலும் நீ தூண்டி நடத்திட்ட
கோலப் பெருஞ்செயல்கள் கோடி கோடி ஆகுமையே

வாயினால் வடித்திடவே வார்த்தையிலாச் செய்தியெலாம்
நீயாக உரைத்திடுவாய் நீள் விழியினில் நின்று.
பேசவொணாப் பெருஞ்செய்தி இதயத்தில் உளதெல்லாம்
நேசமுடை நெஞ்சத்தில் நீயே உரைத்திடுவாய்.

உள்ளத்துச் சோகத்தை உன்னி உன்னி நின்னை பெரு
வெள்ளம் போல் பெருக்கிவிட வேட்கை பிறக்குதையே.

ஆனால்

பத்துப் பேர் என்னைப் பார்த்து நிற்கும் போது
முத்துப் போல் நீ வந்து முகம் காட்டி நிற்கிறாய்
பிறரறியாது உன்னைப் பேணி மறைக்கிறேன்
ஊரறிய அழுவதிலே உண்டாமோ ஆறுதலும்

அருகில் யாருமே இல்லாத நேரம் நீ
பெருகி வரவேண்டுமெனப் பிடித்து வைக்கிறேன்.
தனிமையிலே நின்றுன்னை ஆறாய்ப் பெருக்குவதே
மனச்சுமை குறைத்திடும் மார்க்கம் ஆகுமே.

Sunday, February 6, 2011

அவன் வாழ்ந்தது கனவா, மாண்டது கனவா

இவர்கள் ஏன் அழுகின்றனர்?
நானும் தான் விம்முகிறேன்
எதற்காக?
என் மகன் இறந்துவிட்டானா
இல்லை, இருக்க முடியாது.
அவனுக்கென்ன நோயா, நொடியா?
கிழமா, கட்டையா?
இது யாரோ பரப்பிய பொய்.

அவனைப் பற்றிய செய்தி வந்ததும்
கனலிடை அவனுடல் மடுத்ததுவும்
கடலினில் அஸ்தி கரைத்ததுவும்
எல்லாமே கனவுத் தோற்றங்கள்.

அய்லநாடு சென்றுளான் என் மகன்
அடுத்த வாரம் வருவான்
அவனிடம் இக்கனவைச்சொல்வேன்
கைதட்டிச் சிரிப்பான்
கண்டு நான் மகிழ்வேன்

***************************

ஒரு சுகமான நீண்ட கனவு.
ஓடிய ஆண்டு முப்பத்தைந்து

முருகனே எனக்கு மகனாய்ப் பிறந்ததும்
குழந்தையாய் வளர்ந்து குதூகலம் தந்ததும்
தாய் தந்தையரைத் தாங்கிடும் விழுதாய்
பொங்கும் இளமையில் பூரித்து நின்றதும்
மெச்சியே அவனை ஊரார் புகழ்கையில்
மேனி சிலிர்த்து நாங்கள் நின்றதும்

எல்லாமே கனவுகள்,
இன்று முடிந்தன.

கனவு கலைந்ததற்காக
வருந்துவார் உண்டோ?
பின் ஏன் இவர்கள் அழுகின்றனர்,
நானும் தான் விம்முகிறேன்?

அவன் வாழ்ந்தது கனவா, இல்லை மாண்டது கனவா?









சுமை

தாய் உனைச் சுமந்தாள் வயிற்றில்
முன்னூறு நாளில்
அதற்கு ஒரு மகிழ்ச்சியான முடிவு.
நீ பிறந்தாய். 

நாங்கள் உனைத் தோளில் சுமந்தோம்
அதற்கு ஒரு மகிழ்ச்சியான முடிவு
நீ நடக்கத் தொடங்கினாய்.

இன்று
முன்னூறு நாளாக்
நான் உனை நெஞ்சில் சுமக்கிறேன்.
இதற்கு எது முடிவு?