Pages

Wednesday, May 26, 2010

சோதிடம் தனை இகழ்

சோதிடரை நாடுவோர் யார்?

பிரச்சினை உள்ளவர் தாம் சோதிடரையும் சோதிடத்தையும் நாடிச் செல்கின்றனர். பிரச்சினை இல்லாதவர் யார்? எல்லோருக்கும் அவரவருக்கு ஏற்றபடி ஏதோ ஒரு பிரச்சினை இருக்கத் தான் செய்கிறது. ஆனால் எல்லோரும் சோதிடரை நாடுவது இல்லையே. பிரச்சினைகளுக்கு விடை நேரடியாகத் தேடத் தெரியாத மன வலிமை குறைந்தவர் தாம் சோதிடரை நாடுகின்றனர். நம்முடைய துன்பத்தை யாராவது தீர்த்து வைக்க மாட்டார்களா என்று ஏங்குபவர்கள் அவர்கள். அது மட்டுமல்ல, தங்கள் துன்பங்களுக்கு பிறர் மேல் பழியைப்போடும் மனோபாவம் உடையவர்கள்.

சோதிடரிடம் போனவுடனே, அவர் எந்த முறையைப் பின்பற்றுபவரானாலும் சரி, உங்களுக்கு இப்பொழுது மனதில் குழப்பமும் கவலையுமாக இருக்குமே என்று கேட்பார். ஆகா, நம் மனத்தை எப்படிப் படம் பிடித்தாற் போலச் சொல்கிறார் என்று நம் நண்பர் வியந்து சோதிடரிடம் சரண்டர் ஆகிவிடுவார்.

உங்கள் துன்பங்களுக்குக் காரணம் இந்தச் சனியும் செவ்வாயும் குருவும் என்று ஏதோ சொல்வார். நம்முடைய துன்பத்துக்குக் காரணமான வில்லனைக் கண்டுபிடித்தாயிற்று என்று இவர் சமாதானம் அடைவார்.

சோதிடமும் ஆன்மீகமும்

ஆன்மிகத் தொலைக் காட்சிகளிலும், ஆன்மிகப் பத்திரிகைகளிலும் சோதிடப் பகுதி தவறாமல் இடம் பெறுகிறது. ஆன்மிக வாதிகள், அதாவது கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் எல்லோரும் சோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்ற ஒரு மாயத் தோற்றம் ஏற்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. சோதிடத்துக்குத் தனித்து நிற்கத் தெம்பு இல்லாததால் ஆன்மிகத்தின் தோளைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறது.

இப்படிச் சிலர் சொல்லக் கூடும்- மனவலிமை இல்லாதவர்கள் தான் கடவுளை நம்புகிறார்கள், சோதிடத்தையும் நம்புகிறார்கள். இதுவும் உண்மை அல்ல. கடவுளை நம்புபவர்களுக்கு மன வலிமை அதிகரிக்கிறது. திருப்புகழ் படிப்பவர் சிந்தை வலுவாலே ஒருத்தரை மதிப்பதிலை உந்தன் அருளாலே என்று அவர்கள் மன திடத்தில் உயர்ந்து நிற்கிறார்கள். பெரிய அருளாளர்கள் எல்லோரும் சோதிடத்தை இகழ்ந்து தான் இருக்கிறார்கள். நாளென் செய்யும் , வினை தான் என் செய்யும், எனை நாடி வந்த கோளென் செய்யும் என்று கொக்கரிக்கிறார் அருணகிரிநாதர். ஞாயிறு முதலான ஒன்பது கோள்களும் அடியார்களுக்கு மிக நல்லவையாக உள்ளன என்று சம்பந்தர் ஆணையிடுகிறார்.

சோதிடத்தை நம்புபவர்களோ இன்று குருவுக்குப் பரிகாரம் செய்தால் நிம்மதி கிடைக்கும் என்று செய்வார்கள். பிரச்சினை தீரவில்லை எனில் இன்னும் பெரிய சோதிடர் யார் என்று தேடிப் போவார்கள். அவர் சனிக் கிரகத்துக்கு வழிபாடு செய்யச் சொன்னால் அதைச் செய்வார்கள். அடுத்த ஆண்டு வேறு பிரச்சினை வந்தால் மீண்டும் சோதிடர் வீட்டுக்கு ஒடுவார்கள். இவ்வாறு அஞ்சி அஞ்சியே வாழ்நாளைக் கழிப்பார்கள்.

ஆலயங்களில் சோதிடத்தின் ஆக்கிரமிப்பு


11 ஆம் நூற்றாண்டு தொடங்கி ஆலயங்களில் சோதிடம் ஆக்கிரமித்துக் கொண்டு வருகிறது. அதற்கு முன் ஆலயங்களில் நவக்கிரக வழிபாடு இருந்ததில்லை. பின்னர் ஒவ்வொரு கோவிலாக நவக்கிரகப் பிரதிஷ்டை ஏற்படலாயிற்று. இதனால் முழு முதற் கடவுளின் சிறப்பு மங்கத் தொடங்கியது. இன்னமும் சில பழமையான கோயில்கள் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்துத் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு சோழ அரசனுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அவன் மஹாலிங்க சுவாமியைத் தரிசனம் செய்வதற்காகத் திருவிடை மருதூர் சென்றான். பெருமானின் சன்னிதியில் நிற்க இயலாத தீவினை அவனை விட்டு விலகி கோபுர வாயிலில் ஓரத்தில் ஒதுங்கி நின்றது. அவன் திரும்பி வரும்போது பிடித்துக் கொள்ளலாம் என்பது அதன் எண்ணம். இதை அறிந்த அரசன் கிழக்குக் கோபுர வாயில் வழியாகத் திரும்பாமல் வேறு வழியில் திரும்பிவிட்டான். பிரம்மஹத்தி. இன்னமும் கிழக்குக் கோபுர வாயிலில் காத்துக் கொண்டு இருக்கிறது. இன்றைக்கும் திருவிடைமருதூரில் வழிபடுபவர்கள் கிழக்குக் கோபுரவாயில் வழியாகத் திரும்புவதில்லை. மஹாலிங்க சுவாமிக்கு அவ்வளவு ஏற்றம்.

கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு கதை நளன் விஷயமாகச் சொல்லப்படுகிறது. சனியால் (கலியால்) பிடிக்கப்பட்ட நளன், திருநள்ளாறு சென்றான். தர்ப்பாரண்யோசுவரர் சன்னிதியில் நிற்க இயலாத சனி கோபுர வாயிலில் ஒதுங்கிக் கொண்டது. சிவன் அருளால் நளன் கலி தீர்ந்து நலம் பெற்றான்.

ஆனால் இன்று தர்ப்பாரண்யேஸ்வரர் சன்னிதியை விட சனி சன்னிதியில்தான் கூட்டம் மிகுதியாக உள்ளது. இங்கு தான் வழிபாடுகள் அதிகம் நடைபெறுகின்றன. கலி தீர்த்த பெருமானை விட கலிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

திருநள்ளாறில் இருப்பது சனியா முருகனா?


நவக்கிரகம் உள்ள கோவில்களில் பொதுவாக சனிக் கிரக விக்கிரகம் மேற்குப் பார்க்கத் தான் நின்று கொண்டிருக்கும். தனியாக சனி விக்கிரகம் இருந்தால் அது கீழ் பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் மேற்குப் பார்க்க வைக்கப்பட்டிருக்கும். ஆனால் திருநள்ளாறில் உள்ள சனி கிழக்கு நோக்கி உள்ளது.

பொதுவாக, சிவாலயங்களில் கோபுர வாயில் அருகே கிழக்கில் விநாயகரும், மேற்கில் முருகனும் தான் கோஷ்ட தேவதையாக இருப்பது வழக்கம். திருநள்ளாறில் கோபுர வாயில் அருகே கிழக்குப் புறம் விநாயகர் இருக்கிறார். மேற்கில் முருகன் சிலை தானே இருக்க வேண்டும். அந்த விக்கிரகம் தான் இன்று சனி என்ற பெயரில் வணங்கப்படுகிறது.

சனி பகவானுக்கு உரிய காக்கை வாகனம் காணப்படுவதால் அது சனியே என்கின்றனர். ஒரு அடி உயரம் உள்ள சிலையில் வாகனத்தின் தலை ஒரு அங்குலம் தான் இருக்கும். அந்த சிறிய இடைவெளியில் காக்கை போல் தெரியாமல், மயிலாக வேறுபட்டுத் தெரியவேண்டும் என்ற சிரத்தையுடன் சிற்பம் செதுக்குவதற்கு மிக அதிகமான திறமை வேண்டும். முருகனை வடித்த அந்தச் சிற்பிக்கு அவ்வளவு திறமை இல்லாததால் அது காக்கை போல் தோற்றமளிக்க முருகன் சனியாக மாற்றப்பட்டார்.

இந்த குருவுக்குப் பதிலாக அந்த குரு

குரு என்ற வடசொல்லுக்கு பெரிய என்பது பொருள். கௌரவம் என்ற சொல் அதிலிருந்து தோன்றியது, பெருமை என்னும் பொருள் உடையது. கோள்களில் அளவில் பெரியதாக இருப்பதால் வியாழன் குரு எனப்படுகிறது.

வயதில் பெரிய தாய் தந்தையரைக் குரு என அழைப்பது இன்றைக்கும் வட மாநிலங்களில் வழக்கத்தில் உள்ளது. அறிவில் மூத்த ஆசிரியரும் குரு எனப்படுகிறார்.

சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு ஆசிரியராக (குருவாக) இருந்து உபதேசித்த கோலம் தக்ஷிணாமூர்த்தி எனப்படுகிறது. வியாழன் கிரகத்துக்கும் தக்ஷணாமூர்த்திக்கும் தொடர்பு இந்த குரு என்ற சொல் மூலம் தான்.

வியாழன் கிரகம் தரும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற விரும்புவோர் இன்று தக்ஷிணாமூர்த்திக்கு வழிபாடு செய்வது எந்த வகையில் பொருந்தும் என்பது தெரியவில்லை.

சிவபெருமான் முழுமுதல் கடவுள். எனவே கோள்களால் ஏற்படும் துன்பத்தை நீக்க வல்லவர் என்று சொன்னால் சனிப் பெயர்ச்சிக்கும் ஆலமர் கடவுளுக்கு அர்ச்சனை செய்ய வேண்டுமே. அவ்வாறு செய்வது இல்லை.

பெயர் ஒற்றுமையை மட்டும் வைத்துக் கொண்டு இவ்வாறு வழிபாடு ஆற்றுதல் எப்படி இருக்கிறது என்றால் வெங்கடராமன் என்ற பெயருடைய ஒருவர் நோபல் பரிசு வாங்கினால் நம் ஊரில் உள்ள ஒரு வெங்கடராமனுக்குப் பாராட்டு விழா நடத்துவது போல இருக்கிறது.

சனி என்று சொல்லட்டும், குரு என்று சொல்லட்டும். எந்தப் பெயரைச் சொல்லியாவது மக்கள் கோவிலுக்கு வருகிறார்களே, கடவுள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்களே என்று திருப்தி அடைகிறார்கள் நம் மதத் தலைவர்கள்.

சோதிடமும் வேதமும்

பாடல் பெற்ற தலங்கள் எல்லாம் இன்று பரிகாரத் தலங்களாக மாறி உள்ளன. பவரோக வைத்தியநாதப் பெருமாளை விட அங்குள்ள செவ்வாய் அதிக சக்தி உள்ளவர் என்றும் வெண்காட்டுறை ஈசனை விட அங்குள்ள புதன் எளிதில் அருள் புரியக் கூடியவர் என்றும் மக்கள் கருதும் நிலை வந்துள்ளது. இவ்வாறு, சோதிடம் கோவில்களில் உட்புகுந்து முழுமுதற் கடவுளுக்கு உள்ள பெருமையை விட அதிகப் பெருமையைக் கோள்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது.

தனித்து நிற்கச் சக்தியில்லாத சோதிடம் வேதத்தையும் தனக்குத் துணை சேர்த்துக் கொண்டு இது வேதத்தின் ஒரு அங்கம் என்ற மாயையைத் தோற்றுவித்துள்ளது. வேதத்தின் அங்கமாகக் கூறப்படும் ஜ்யோதிஷம் முழுக்க முழுக்க வானியலே. வேத கால ரிஷிகள் வானத்தை உற்று நோக்கினர். அங்கு காணப்பட்ட நட்சத்திரக் கூட்டங்களுக்கும் கோள்களுக்கும் பெயரிட்டனர். கோள்களின் அசைவைக் கணக்கிட்டனர். சடங்குகள் செய்வதற்கு உரிய நாட்களைத் தேர்ந்தெடுக்க வகை செய்யும் அதில் வருங்காலம் உரைக்கும் சோதிடம் இடம் பெறவில்லை.

கோள்களின் அமைப்பைக் கொண்டு, வருவது உரைக்கும் சோதிட முறை கிரேக்கத்திலிருந்து வந்தது. வேதங்கள், அதன் அங்கங்கள் ஏற்பட்ட காலத்திற்கு மிகப் பிந்திய காலத்தது இது.

ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கோளின் பெயரை இட்டு அத்தகைய ஏழு நாட்கள் கொண்ட தொகுதியை வாரம் என்று அழைக்கும் முறை வேத காலத்தில் இல்லை. தமிழ் இலக்கியங்களைப் பார்த்தால் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் எதிலும் இந்த வார நாட்கள் பற்றிய குறிப்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மாதக் கணக்குகளும் ஆண்டுக் கணக்குகளும் மதத்திற்கு மதம் வேறுபடுகின்றன. நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஆனால் வாரக்கணக்கு மட்டும் எல்லா மதங்களிலும் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதிலிருந்து இது உலகளாவிய வாணிகம், போக்குவரத்து ஏற்பட்ட பின் பரவி இருக்க வேண்டும் என்பது தெரிகிறது.

நாடி சோதிடம்

பிறப்பு நேரத்தை அடிப்படையாகக் கொண்ட ஜாதக முறைச் சோதிடத்தையாவது ஓரளவுக்கு ஒத்துக் கொள்ளலாம். நாடி ஜோஸ்யம் எனப்படுவது முற்றிலும் நமது நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஏமாற்று வித்தை. இது ஏதோ முக்காலமும் உணர்ந்த ரிஷிகளின் வாக்கு என்று நம்புபவர்கள் இதில் காசையும் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருப்பது பரிதாபகரமானது.

உலகத்திலுள்ள அத்தனை மக்களின் ஜாதகமும் தன்னிடம் இருப்பதாக நாடி ஜோதிடர் கூறுகிறார். அது சாத்தியமல்ல. உலகில் இப்பொழுது 700 கோடி மனிதர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒருவருக்கு ஒரு ஓலை என்றால் கூட அவரது சிறிய வீடு அல்லது அலுவலகத்திற்குள் இவ்வளவு ஓலைகளை வைத்திருப்பது இயலாதது. ஒரே ஊரில் பல நபர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் நாட்டின் பல ஊர்களிலும் பல வேறு பெயர்களில் நாடிகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. இத்தகைய ஆயிரக் கணக்கான சோதிடர்கள் ஒவ்வொருவரிடமும் இத்தனை கோடிக்கணக்கான ஓலைகள் இருப்பது என்பது சாத்தியமே இல்லை. ஒரு தந்தைக்கு நான்கு மகன் இருந்தால் தந்தைக்குப் பிறகு நான்கு பேரும் தனித்தனியே தொழில் நடத்துவதையும் பார்க்கிறோம். அத்தனை ஓலைகளையும் பிரதி எடுப்பது என்பது நடவாத செயல்.

நாடி சோதிடரிடம் சென்றால் அவர் நம்மைப் பற்றிய பாதி விபரங்களை நம்மிடமிருந்தே தெரிந்து கொண்டு விடுகிறார். பிறகு அவர் சேர்க்க வேண்டிய சொந்தச் சரக்கு சிறிதளவே.

நாடி சோதிடர் தேடி எடுக்கும் நம்முடைய ஓலையில் ஏதோ கிறுக்கப்பட்டிருக்கிறது. அதைப் படிப்பதற்கு நம்மால் முடியாது. அவரே தான் படித்துச் சொல்ல வேண்டும். அவர் சொல்வது நூற்றுக்கு நூறு சரியாக இருக்கிறதே, நாம் சொல்லாத விபரங்களையும் துல்லியமாகச் சொல்கிறாரே என்று சிலர் கேட்கலாம். அதற்கு விடை பின்னால் வரும்.

ஒருவர் நாடி சோதிடரிடம் போகிறார். தனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்று கேட்கிறார். சோதிடர் ஒரு ஓலையைக் கொண்டு வந்து வாசித்து இன்னும் 6 மாதங்களில் நடக்கும் என்று நம்பிக்கை தருகிறார். இது எல்லோருக்கும் பலிப்பதில்லை. மீண்டும் சோதிடரிடம் போனால் உங்களுடைய பூர்வ ஜன்மப் பாவங்கள் தடுக்கின்றன போலும், பூர்வ ஜன்மக் காண்டத்தைத் தேடி எடுக்க வேண்டும் என்று சொல்லி அதற்குத் தனியாகக் கட்டணம் பெற்றுக் கொண்டு ஏதோ சொல்லி அனுப்புகிறார். அதுவும் பலிக்கவில்லை என்று போனால் சர்ப்ப தோஷ சாந்தி செய்ய வேண்டும் அது இது என்று சொல்லிக் கணிசமான தொகை கறந்து விடுகிறார். அந்த சாந்திகளைச் செய்தும் பலிக்கவில்லை என்றால் நம் நண்பர் வெறுத்து ஒதுங்கி விடுகிறார். இப்படிப் பல முறை சோதிடர் வீட்டுக்கு நடந்து ஏமாந்தவர்கள் பலர் உண்டு.

எண்ண வாசிப்பு Thought Reading

பிறர் மனதில் தோன்றும் எண்ணங்களை அவர் வாயால் உரைக்காத போதும் தெரிந்து கொள்ளுதல் எண்ண வாசிப்பு எனப்படுகிறது. இத்திறமை நம் எல்லோரிடமும் ஓரளவு இருக்கிறது. நம் எதிரில் இருப்பவர் கோபமாக இருக்கிறாரா, மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்பதை அவர் சொல்லாமலேயே தெரிந்து கொண்டு விடுகிறோம். சிலரிடம் இத்திறமை இயற்கையிலேயே மிகுதியாக இருக்கிறது. சிலர் இதைப் பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொ்கின்றனர். இதை வளர்த்துக் கொண்டால் நம் எதிரில் உள்ளவருடைய அனைத்து எண்ணங்களையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

மை போட்டுப் பார்ப்பவர், அனுமார் முதலான தெய்வங்களை உபாசிப்போர், எண் சோதிடர், குறி சொல்வோர், கைரேகை வல்லுநர், ஜாதகம் பார்ப்போர் முதலான எல்லா வகையான சோதிடர்களும் இத்திறமையை மிகுதியாகப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, நாடி சோதிடர்கள் இதை முழுவதுமாகச் சார்ந்திருக்கிறார்கள். அதனால் தான் நாம் போன உடனேயே நமது பெயர், ஊர், நமது உறவினர்களின் பெயர்கள், நமது வீட்டின் அமைப்பு போன்ற விபரங்களைச் சொல்லி நம்மை அசத்துகிறார்கள். அவர்கள் தேடிக் கொண்டு வரும் ஏடு சும்மா பெயருக்குத் தான். அவர்கள் நம் மனதில் உள்ளதை, நமது பிரச்சினையை அப்படியே “புட்டுப் புட்டு” வைக்கிறார்கள்.

நம் மனதில் உள்ளதைத் தான், அதாவது பழைய நிகழ்வுகளைத் தான், அவர்களால் சொல்ல முடியும் என்பதைக் கவனிக்கவும். வருங்காலம் பற்றி அவர்கள் கூறுவது எல்லாம் ஒரு ஊகத்தின் பேரில் தான். அவற்றில் சில பலிக்கலாம், சில பலிக்காமல் போகலாம்.

எண்ண வாசிப்புக் கலையை வளர்த்துக் கொள்வது எப்படி? தெய்வ உபாசனை மூலம் அல்லது ஏதேனும் ஒரு பொருளில் ஆழ்ந்து கவனம் செலுத்துவதன் மூலம் இதைப் பெறலாம். ஆனால், வேண்டாம். மற்றவர் எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்க இடம் கொடுத்தால் நமது நிம்மதி போய் விடும்.

சோதிடம் பொய்யா, சோதிடர் பொய்யா

சோதிடம் பொய்யல்ல. முழுநிலவு நாளில் மன நோயாளிகளின் மன நிலை பாதிக்கப்படுவதிலிருந்து கோள்களுக்கும் நம் மனதுக்கும் தொடர்பு இருப்பதை அறிகிறோம். வாழ்க்கையின் பிற விஷயங்களும் இவ்வாறே பிற கோள்களால் பாதிக்கப்படுவது சாத்தியமே.

இதில் ஏதோ அறிவு பூர்வமானது இருக்கிறது என்பதை அறிந்து தான் கிரேக்கத்திலிருந்து வந்த இதை நம் முன்னோர்கள் ஆழ்ந்து கற்றனர், ஆராய்ச்சி செய்தனர். தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை நூல்களாக எழுதி வைத்தனர். இந்நூல்கள் அவர்களது தற்காலிகக் கற்பிதக் கொள்கையே (hypotheses) அன்றி முடிந்த முடிவுகள் அல்ல. அதனால் தான் இந்த நூல்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவை ஒத்துப் போகும் இடங்களில் கூட அந்த முடிவுகள் இன்று அனைவருக்கும் பொருந்துவதாக இல்லை. எனவே முன்னோர்களின் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தவேண்டியது இன்றைய சோதிட மாணவர்களின் பொறுப்பு.

இன்று சோதிடம் பிழைப்புக்கான ஒரு தொழிலாக இருக்கிறதே அன்றி அதில் உண்மையான ஆராய்ச்சி நடப்பதாகத் தெரியவில்லை. பல்கலைக் கழகங்களில் சோதிடத்தில் முனைவர் பட்டம் வாங்குபவர்கள் கூட அறிவியல் விதிகள் போன்று அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய எந்த ஒரு உண்மையையும் கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை.

வளரும் நிலையில் உள்ள இந்த சோதிட விஞ்ஞானத்தில் இது வரை ஆராய்ச்சியாளர்கள் அறிவில் தோன்றிய கற்பிதக் கொள்கைகளை முடிந்த முடிவாக ஏற்று அதை நம்பி வாழ்க்கையை நடத்துவது பொருத்தமாகத் தெரியவில்லை.

சோதிடம் அரைகுறையாக ஆராயப்பட்ட நிலையில் இரு்ந்தாலும் சோதிடரால் சமூகத்துக்கு ஒரு நன்மையும் உண்டு. துன்பங்களில் சிக்கி உழலும் மனிதனுக்கு உங்கள் துன்பத்துக்கு கோள்கள் தாம் காரணம். அவை இடம் நகர்ந்துவிட்டால் உங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று சொல்லும்போது அவனுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி நம்பிக்கை உற்சாகம் பிறக்கிறது. அவ்வகையில் சோதிடர்கள் மன நல ஆலோசகர்களாகச் செயல்படுகிறார்கள்.

எனவே சோதிடமும் பொய்யல்ல. சோதிடர்களும் பொய்யல்ல. ஆயினும் துன்பங்களை எதிர்கொள்ளச் சிறந்த வழி நம் மனத்தை வலுப்படுத்திக் கொள்வது தான். எனவே பாரதி கூறியபடி, சோதிடத்தை இகழ்ந்து 'எல்லாம் புரக்கும் இறை நமையும் காக்கும்' என்ற நம்பிக்கையுடன் இறைவனைச் சரணடைவது ஒன்று தான் நம் மனத்துக்கு வலிமை தந்து எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறனைத் தரும் என்பது என் கருத்து.

1 comment:

  1. சோதிடத்தின் அடிப்படை நான்கு. (1) ஒவ்வொன்றும் 30 பாகை கொண்ட 12 இராசிகளைக் அடங்கிய சக்கரம். (2) சக்கரத்தில் காணப்படும் 12 வீடுகள். (3) 27 நட்சத்திரங்கள். (4) நிழல் கோள் உட்பட 9 கோள்கள். ஒரு குழந்தை பிறக்கும் போது எந்த இராசி அடிவானத்தில் எழுகிறதோ அதுவே ஒருவனது இலக்கினம். அந்த நேரத்தில் சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ அதுதான் ஒருவனது ஜென்ம நட்சத்திரம். அந்த ஜென்ம நட்சத்திரம் நின்ற இராசிதான் ஜென்மராசி. ஒருவர் பிறந்த நேரத்தை வைத்தே சாதகம் கணிக்கப்பட்டு பலன் சொல்லப்படுகிறது. பிறந்த நேரம் எது என்பதில் சோதிடர்களிடம் ஒத்த கருத்தில்லை. இந்த இராசிகள் ஒவ்வொன்றும் சரியாக 30 பாகையில் இல்லை. உண்மையான இராசி மண்டலங்கள் 30 பாகைக்கு அதிகமாகவும் அதற்கு குறைவாகவும் இருக்கின்றது. சனி கருப்பு நிறம் கெட்ட கிரகம் என்பதற்கு ஆதாரம் இல்லை. அதே போல் செவ்வாய் போர்க்கடவுளாக நினைப்பதும் ஆதாரமற்றவை. இராசிகள், கோள்களை ஆண், பெண், அலி, பிராமணன், சத்திரியன், வைசிகன், சூத்திரன் எனப் பாகுபடுத்தியுள்ளார்கள். இதற்கான அடிப்படை இல்லை. ஒரே நேரத்தில் இரண்டு - நான்கு வித்தியாசத்தில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளின் கல்வி, திருமணம், பொருள் ஒன்றாக இருப்பதில்லை. இதனால் சோதிடம் ஒரு போலி அறிவியல் என வானியலாளர்கள் சொல்கிறார்கள்.


    ReplyDelete