Pages

Wednesday, May 19, 2010

கணபதி

    மனதின்  இயல்பு  அலை பாய்தல். எண்ண ஓட்டம் இல்லாமல் ஒரு  விநாடி  நம்மால் இருக்க முடிகிறதா? கடல் அலை ஓய்ந்தாலும்  ஓயலாம், மனதின்  எண்ண  அலைக்கு ஓய்வில்லை. மனம்  ஒன்றையே  பற்றி  அசையாமல்   குவிந்திருந்தால்  தானே  தியானம்  செய்ய முடியும்சரண  கமலாலயத்தை  அரை நிமிஷ  நேரமட்டில்  தவமுறை   தியானம் வைக்க  அறியாத  மூடன் என்று அருணகிரிநாதர்  தன்னை  இகழ்ந்து  கொள்கிறார். இது நம் போன்ற  சாமானியர்களுக்காகச்  சொன்னது தான்.

            எண்ணங்கள் வெறுமனே வந்து போனால் பரவாயில்லை. ஒவ்வொரு  எண்ணத்துடனும்  அது தொடர்பான  உணர்ச்சிகளும் தோன்றி நம் மனத்தை அசைத்துவிட்டுச்  செல்கின்றன. இதில் மகிழ்ச்சி  தரும் உணர்ச்சிகளும் உண்டு, வேதனை  தரும் உணர்ச்சிகளும் உண்டு. கணக்கெடுத்துப்  பார்த்தால்  மகிழ்ச்சியை  விட  வேதனையே  மிகுதியாக இருப்பது  தெரியவரும்.

            நேற்றைய வலியின்  சுமையான நினைவுகள்,  நாளைய கவலைகள்    இவற்றிலிருந்து  விடுபட்டு மனதில் சலனமில்லாத  நிலையை விரும்புகிறோம்.

       சலனமில்லாத நிலையில் இருவகை உண்டுஒன்று தவ சிரேஷ்டரின் மோன நிலைமற்றது   பைத்தியக்காரனின் பிரமை பிடித்த நிலை. வெற்றிடத்தை வெறித்துப்  பார்த்துக் கொண்டிருக்கும் பிரமை பிடித்தவன் மனது சலனமில்லாதது போல் தோன்றுகிறது. ஆனால் அவனது மதியில் இருள் கவிந்துள்ளது. அறிவில் தெளிவு இல்லை. இத்தகைய சலனமின்மையை நாம் விரும்ப மாட்டோம். நாம் விரும்புவது சுய நினைவுடன், அறிவுடன்  சலனமில்லாமல் இருப்பது. இது தான் மகிழ்ச்சியான உயர்நிலை.

            மனம்  அடங்கினால்   புலன்களும்  ஒடுங்கும், பேச்சும் ஒடுங்கும், அறிவு பெருகும். எல்லா அறிவும்   அமைதியான  மனதிலிருந்து   தான்   தோன்றுகிறது   என்கிறார்   விவேகானந்தர். மோனம் என்பது ஞானவரம்பு என்பது பழமொழி. இந்த மோனம் என்பது வலுக்கட்டாயமாக  வாயை மூடிக்கொண்டு    உள்ளே   மனத்தை   அலைய விடுவது   அல்ல. உள்ளும் புறமும் சலனமில்லாத ஞான நிலை. இந்த நிலையை அடைவது எப்படி?

             இத்தகைய நிலை அடைந்த ஒருவரை முன் உதாரணமாக, ஆதர்சமாகக் கொண்டு அவரைத் தரிசித்து, வணங்கி, தியானித்தால் நாமும் அந்நிலையை அடையலாம். மோனத் தவத்தில் இருக்கும் முனிவரை எந்த மலைக்  குகையில் போய்த் தேடுவது? கவலை வேண்டாம். ஊர் தோறும், வீதி தோறும், வீடு தோறும் கோயில் கொண்டுள்ள விநாயகப் பெருமான் திருவுருவை உற்று நோக்குங்கள். எவ்வளவு பெரிய உடல். அசையாமல் அசைக்கப்படமுடியாமல் அமர்ந்துள்ளதுஅவரது கண்களைப் பாருங்கள், அவரது மனதின் சலனமின்மை அவற்றின் அமைதியான பார்வையில் வெளிப்படுகிறது. அது பிரமை பிடித்தவனின் அமைதி அல்ல. தெளிந்த அறிவின் விளைவான அமைதி. அத் திருவுருவம்  வாய் திறந்து பேசுவதில்லை. மோனத்தவம் செய்யும் நிலையில் அது காணப்படுகிறது. இந்த ஞான விநாயகனைத் தியானித்தால்   நமக்கு மோன நிலை  சித்திக்கும். மனதில் சலனமும் மதியில் இருளும் நீங்கிய மெளனநிலை பெறவேண்டும் என்ற வேண்டுதலுடன் இவரை வணங்குவோம் என்கிறார் பாரதியார்.

            எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி
            மனதிற் சலனமில்லாமல் மதியில் இருளே தோன்றாமல்
            நினைக்கும்போது நின் மவுன நிலை வந்திட நீ அருள் செய்வாய்
            கனக்கும் செல்வம் நூறுவயது இவையும் தர நீ கடவாயே.                                             

No comments:

Post a Comment