நிலம் வெடித்தது, பயிர்கள் காய்ந்தன
மக்கள் கதறினர் – “மழைத்தேவா கண் திறவாயோ”
கண் திறந்தான்-
காலை இளம் பொழுதில்
அவன் கருணை பிறந்தது.
பாலகர்கள் நனைந்தே பள்ளிக்கு விரைந்தனர்
“சே, என்ன மழை காலங்கார்த்தாலே
வேலைக்கு இடைஞ்சல்”
மறு நாள் பகலில் மழையவன் வந்தான்
“சே, என்ன மழை,
காயவைத்த பொருளெல்லாம் வீணாகிவிட்டனவே
கட்டுகின்ற சுவரெல்லாம் கரைந்து போயினவே”
அடுத்த நாள் அந்திப் போதில்
அவன் கருணை பிறந்தது
“சே என்ன மழை,
வேலை முடிந்தும் வீடு செல்ல முடியவில்லை”
எல்லோரும் உறங்கும் இரவினில் வந்தான்
ஓலைக்குடிசை, ஓட்டைகள் பலவுண்டு
உழைப்பாளிக் குடும்பம், உட்கார இடமில்லை
“வேறு சுகம் எதுவுமில்லை,
உறக்கமும் கூடாதா பாழும் கடவுளே”
மீண்டும் கண்களை மூடினான் மழைத்தேவன்
No comments:
Post a Comment