Pages

Sunday, May 30, 2010

திருவாசகத் தேன்- நான் கெட்டவா பாடி



எப்படி இருக்கிறது என் வீடு?’
                ‘மிக அருமையாக இருக்கிறது. யார் இதற்குப் பிளான் போட்டது?’
நான் தான் போட்டேன்.
இது நான் கஷ்டப்பட்டுச் சம்பாதித்துக் கட்டிய வீடு. இதில் என் இஷ்டம் போல் நடக்கக் கூடியவர்கள் மட்டுமே இருக்கலாம். மற்றவர்களுக்கு இங்கு இடமில்லை
நான் மட்டும் அந்த இடத்தில் இல்லை என்றால், அங்கு பெரிய சண்டை ஏற்பட்டு கொலையே நடந்திருக்கும். நான் சமாதானம் செய்ததால் அமைதி ஏற்பட்டது.
நான் என் திறமையினால் உழைத்தேன், சௌகரியமாக இருக்கிறேன். நான் ஏன் என் சகோதரனுக்கு உதவி செய்யவேண்டும். வேண்டுமானால் அவனும் உழைக்கட்டுமே. அவனை யார் தடுக்கிறார்கள் ?’

      நம்முடைய வாழ்க்கையில் இந்த நான் எப்படி எல்லாம் வேலை செய்கிறது ! நம் ஒவ்வொருவரிடமும் இந்த அஹங்காரம் இருக்கிறது. இது இல்லாதவர் இல்லை. இந்த நான் என்னும் எண்ணத்தை ஏற்படுத்தியவன் இறைவன் தான். யான், எனது என்று அவரவரைக் கூத்தாட்டுகின்ற உன்னை எப்படி வாழ்த்துவேன் என்று இறைவனைக் கேட்கிறார் மணிவாசகர்.    

      நம் ஒவ்வொருவரிடமும் இறைவன் இருக்கிறான். அதனால் நமக்கு நானே இறைவன் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அஹம் ப்ரம்மாஸ்மி (நான் பிரம்மமாக இருக்கிறேன்) என்று சொன்ன வேதம் தத்வமஸி (நீயும் அதுவே) என்றும் சொல்கிறது என்பதை நாம் மறந்து விடுகிறோம்.  

இது இறைவனின் திருவிளையாடல். நம் கண்களை, மாயையால் கட்டிப் போட்டு, எல்லாப் பொருள்களிலும் இறைவன் இருப்பதைக் காண முடியாதபடி செய்திருக்கிறான். நாம் நமது முயற்சியால், இந்த மாயையிலிருந்து விடுபட்டு, இந்த அஹங்காரத்தை விட்டு, எப்பொழுது எல்லாவற்றையும் இறைவனாகப் பார்க்கிறோமோ அப்பொழுது தான் நமக்கு முக்தி.

சிஷ்யன் கேட்டான், குருவே, நான் தங்களிடம் நீண்ட நாட்களாகப் பணி புரிந்து வந்திருக்கிறேன். நான் நற்கதி அடையுமாறு உபதேசம் செய்யமாட்டீர்களா ?

குரு சொன்னார், நான் செத்த பிறகு  தான்  உனக்கு உபதேசம்.’

ஐயா, தாங்கள் இறந்த பிறகு, எனக்கு யார் உபதேசம் செய்வார்கள் ?’
உன் குரு இறந்த பிறகு அல்ல, உன்னிடமுள்ள நான் என்னும் அஹங்காரம் இறந்தால் தான் உபதேசம் பெறும் தகுதியை நீ அடைவாய்.’

இறைவன் எப்படிப்பட்டவன் ?

வான், மாருதம், அழல், நீர், மண் என்ற பஞ்ச பூதங்களும் தன் நிலை மாறிக் கெட்டாலும் கெடலாம். ஆனால் இறைவன் தன் நிலை கெடமாட்டான்.

நான் எப்படிப் பட்டவன்?

     நான் என்னும் எண்ணம் எளிதில் அழியாதது. முதுமை வர வர உடல் உறுப்புகள் தன் செயல் திறமையை இழக்கும் ஊன் கெடும். உயிர் உடலை விட்டு வெளிக் கிளம்ப நேரம் பார்த்துக் கொண்டிருக்கும். உயிர் கெடும். வெட்கம், மானம், ரோஷம் போன்ற உணர்வுகள் விடைபெற்றுக் கொள்ளும். உணர்வு கெடும். இளம் வயது முதல் நம்முடைய அனுபவங்களைச் சுமந்து வந்திருக்கிற உள்ளம் தன் நினைவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும். உள்ளம் போகும். அது வரையில் இந்த அஹங்காரம் போகாது. கடைசியில் தான் அது போகும்.

எல்லாம் போனபிறகு நான் போனால் என்ன, போகாவிட்டால் என்ன ?

வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல் நீர் மண் கெடினும்
தான் கெட்டல் இன்றிச் சலிப்பு அறியாத் தன்மையனுக்கு
ஊன் கெட்டு உயிர் கெட்டு உணர்வு கெட்டு என் உள்ளமும் போய்
நான் கெட்டவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ

நாம் நன்றாக இருக்கும்போதே நான் என்னும் உணர்வை மறந்து வாழப் பழகிக் கொண்டோமானால், நமக்கு முத்தி எளிது.

அதற்கு என்ன வழி ?

மணிவாசகர் சொல்வதை மீண்டும் கவனிப்போம். அவன் சலிப்பறியாத் தன்மையன். அதாவது அசைதல் இல்லாதவன்.

ஒரு பந்து, அறையின் கிழக்கு மூலையில் உள்ளது. அது மேற்கு மூலையில் இல்லை. எனவே அது கிழக்கிலிருந்து மேற்கே அசைய முடியும்.

காற்று எங்கும் இருந்தாலும் வெவ்வேறு வகையான அழுத்தத்தோடு இருப்பதால் அசைகிறது.

எல்லா இடத்திலும் ஒரே வகையான தன்மையோடு நிரம்பி இருக்கும் இறைவன் எப்படி அசைய முடியும் ?

அவன் இல்லாத இடம் இல்லை என்றால், அவன் என்னிடத்தில் மட்டுமல்லாமல், என்னைச் சுற்றி உள்ள எல்லா மனிதரிடத்தும், எல்லாப் பிராணிகளிடத்தும், எல்லாப் பொருள்களிடத்தும் இருக்கிறான். இதை நாம் உணர்ந்து கொண்டு விட்டால் நம்முடைய அஹங்காரம் அழியும்.

நம்முடைய செயல்களும் எதிராளியின் செயல்களும் எல்லாச் செயல்களுமே இறைவனின் செயல்களன்றி வேறு இல்லை என்பதை உணர்ந்தால் உள்ளத்தில் பொறாமை, கோபம், பகைமை, பயம், வருத்தம் ஆகிய எந்தத் தீவினையும் இரா. என்றும் இன்பமே.

நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே என்ற மணிவாசகத்தை நெஞ்சில் இருத்தி நல்லது நடந்தாலும் தீது நடந்தாலும் எல்லாம் அவன் செயல், இது நான் செய்தது அல்ல என்று எப்பொழுதும் நினைவுபடுத்திக் கொண்டிருப்போமாக. 

No comments:

Post a Comment