Pages

Thursday, August 19, 2010

வைகறைப் பொழுது

பொழுது புலர்கிறது. இரவு மெல்ல விடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சூரியன்உதிக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னரே கீழ்வானில் வெளிச்சம் பரவி விட்டது. மானிடர் மட்டுமன்றி எல்லா உயிரினங்களும் உறங்கி எழுந்து விட்டன. நேற்றைய உடல் வலிகள், மன வேதனைகள் யாவும் மறைந்து உடலிலும் உள்ளத்திலும் புத்துணர்ச்சி தோன்றியுள்ளது. எல்லோரும் புதிய நாளை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

      இது போன்ற எத்தனையோ வைகறைகளை நாம் கடந்து வந்துள்ளோம். இனி நம் வாழ்நாளில் எத்தனையோ காணப்போகிறோம். சர்வ சாதாரணமான தினசரி நிகழ்ச்சி, ஆனாலும் வேத ரிஷி ஒவ்வொரு விடியலையும் புதிதாகக் காண்கிறார். அவரது உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சியை கவிதையாக்கித் தருகிறார். கீழே வருவது ரிக் வேதம் முதல் மண்டலம் 113வது சூக்தம். குத்ஸ ஆங்கிரஸர் என்பவர் யாத்தது.

      வைகறைப் பொழுது இனியது. ஆனந்தம் தருவது. அழகானது. அழகானவற்றை எல்லாம் பெண்ணாகவும் ஆற்றலோடு கூடியவற்றை எல்லாம் ஆணாகவும் உருவகிப்பது வேத ரிஷிகள் துவக்கிய கவிதை மரபு. இதோ இந்த விடியல் நேரம், உஷை (உஷா, உஷஸ்) என்னும் பெண்ணாகக் காட்டப்படுகிறது.

      இன்னும் இரு பெண்கள் உள்ளனர். இரவு ஒரு பெண், பகல் ஒரு பெண். இருவர்க்கும் என்ன உறவு? சோதரிகளாகத் தான் இருக்க வேண்டும். இரவு கறுப்பாகவும், பகல் வெள்ளையாகவும் இருக்கின்றன. ஆனால் அச் சோதரிகள் தங்களுக்குள் சண்டையிடுவதில்லை. ஒரே பாதையில் ஒருவரைத் தொடர்ந்து மற்றவர் செல்வது என்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஒரு கணமும் தடைபட்டு நிற்காமல், அவர்களது இந்தப் பயணம் தொடர்கிறது. பகல் முழுமையாகத் தோன்றிவிட்டால் அதில் ஒரு உக்கிரம் காணப்படுகிறது. அதற்கு  முன் வரும் வைகறைப் பொழுதோ உக்கிரம் இல்லாத, அமைதியான, ஆனந்தமான, இனிய சூழலை ஏற்படுத்துகிறது. இந்த வைகறை பிறக்க ஒரு பிரசவ அறை அமைத்து விட்டு இரவு என்னும் நங்கை தன் இல்லம் நோக்கித் திரும்புவதாகக் கவிஞரின் கற்பனை விரிகிறது.

      இப்படி நாள் தவறாமல் இரவும் பகலும் மாறி மாறி வருவது எப்படி? கவிஞர் வியக்கிறார். ஒரு இயற்கை நியதி உள்ளது, அதில்  தோன்றியவை தான் இவை யாவும், அந்த இயற்கை நியதிக்குக் கட்டுப்பட்டுத் தான் இவை அனைத்தும் செயல் புரிகின்றன என்பதை உணர்கிறார். வேதக் கவிதைகளில் எங்கும் இழையோடும் மையக் கருத்தே இது தான். ருதம் என்ற பெயரால் குறிக்கப்பட்ட இந்த நியதி தான் கடவுள் கொள்கையாகப் பிற்காலத்தில் பரிணாம வளர்ச்சி பெற்றது.

      வைகறைப் போதில் ஒவ்வொரு உயிரும் விழிப்புப் பெறுகிறது. இறந்தோர் மட்டுமே விழிப்பதில்லை. அவரவர் அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பி விடுகின்றனர். அரசனாக இருந்தால் செங்கோல் ஓச்சுவது தொடர்பான கடமைகள் அவனுக்காகக் காத்திருக்கின்றன. பொருள் தேடப் புறப்படுவோர் சிலர். புகழ் நாடிச் செயல் புரியத் தொடங்குவோர் சிலர். தேவ பூசனைக்கு ஆயத்தமாவோர் சிலர். பொழுது புலரவில்லையெனில் தேவர்க்கு உணவளிப்பார் எவரும் இரார் என்கிறார் கவிஞர்.

      பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மை அதிதி என்னும் பெண்ணாக உருவகிக்கப்படுவது வேத மரபு. தேவர்களாகக் கூறப்படும் இயற்கைச் சக்திகள் யாவும் அதிதியின் மக்களாகக் கருதப்படுகின்றனர். மக்கள் தேவ பூசை செய்யவும், தேவர்களுக்கு உணவளிக்கவும் வழி செய்வதால் உஷை தேவர்களின் தாயாகவும் அதிதியின் வடிவினளாகவும் கருதப்படுகிறாள்.   

      எத்தனை காலமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என வியக்கிறார் கவிஞர். நம்முடைய எண்ணற்ற முன்னோர்கள் எத்தனையோ விடியல்களைப் பார்த்து விட்டு மறைந்து விட்டனர். இன்று நாம் பார்த்து மகிழ்கிறோம். இனி எத்தனையோ எண்ண முடியாத வைகறைகள் வரப்போகின்றன. நம் சந்ததியர் அதைக் கண்டு களிப்பர். இதன் துவக்கத்தையோ முடிவையோ யார் அறிவார்? இந்த மாபெரும் காலப் பெரு வெள்ளத்தில் தான் ஒரு சின்னஞ்சிறு திவலை என்பதை உணர்ந்து அடக்கம் கொள்கிறார் ரிஷி.
     
      மேற் சொன்ன வேதக் கவிதையின் தமிழாக்கத்தைக் கவிதைகள் என்னும் தலைப்பில் காண்க. 
         

No comments:

Post a Comment