Pages

Tuesday, August 10, 2010

ஓதாது உணர்ந்த ஞானி


            வேதத்தின் சாரம் என்ன?   உள்ளது ப்ரம்மம் ஒன்றேஇந்தப் பிரபஞ்சமும் அதில் காணப்படும் உயிர் வகைகளும் பல் வகைப் பொருள்களும்  அதன் மாயத் தோற்றங்களே என்பது  ஆகும்.
           
இக்கருத்தை  விளக்கும்   ­ஸ்ரீருத்ரத்தின் சில பகுதிகளைப் பார்ப்போம்.

பச்சிலைகளைக்  கூந்தலாக உடைய  மரங்கள்  வடிவில் உள்ள    ருத்ரருக்கு நமஸ்காரம்.

மந்திரியாகவும்    வியாபாரியாகவும்  அடவிகளுக்குப் பதியாகவும்  உள்ள  ருத்ரருக்கு நமஸ்காரம்.
                       
வாளேந்தியவரும்   கள்வர்  தலைவரும் ஆகிய  ருத்ரருக்கு நமஸ்காரம்.

திருடுவதற்காக  இரவில் சஞ்சரிப்பவர்களாகவும்பிறரைக்  கொன்று பொருளை அபகரிப்பவர்களின்  தலைவர்களாகவும்   உள்ள  ருத்ரருக்கு நமஸ்காரம்.    

உட்கார்ந்து  கொண்டிருப்பவர்களும்  படுத்துக் கொண்டிருப்பவர்களும் தூங்குகிறவர்களும்  விழித்துக்  கொண்டிருப்பவர்களும் நின்றுகொண்டிருப்பவர்களும் ஓடுகிறவர்களும்  ஆகிய   ருத்ரருக்கு  நமஸ்காரம்.

குதிரைகளாகவும்   குதிரைச்  சவாரி  செய்பவர்களாகவும்  விளங்கும் ருத்ரருக்கு  நமஸ்காரம்.

தேர்களாகவும்   தேரின்   தலைவர்களாகவும்  தேர்   ஓட்டுகிறவர்களாகவும்   தேர் செய்கிறவர்களாகவும்    உள்ள ருத்ரருக்கு  நமஸ்காரம்.

குயவர்களாகவும்   கருமார்களாகவும்  வேடர்களாகவும் செம்படவர்களாகவும்   உள்ள ருத்ரருக்கு  நமஸ்காரம்.

நாய்களாகவும்  நாய்களை  ரட்சிப்பவர்களாகவும் விளங்கும் ருத்ரருக்கு  நமஸ்காரம்.

அருவி, வெள்ளம், அலைகள், அலையற்ற  அமைதியான  நீர்நிலை, தீ இவற்றில் விளங்கும்  ருத்ரருக்கு  நமஸ்காரம்.
           
இப்படி முந்நூறுக்கும் மேற்பட்ட உதாரணங்கள்   தந்து  இவை மட்டுமன்றி இவற்றில்  கூறப்படாத அனைத்துமே தெய்வம்   என்று குறிப்பால்  உணர்த்துகிறது வேதம்.

பாரதி ஒரு வரியில் கூறுகிறார் - சூழ்ந்ததெலாம் கடவுள் எனச் சுருதி சொல்லும். (நம்மைச் சூழ்ந்துள்ள அனைத்தும் கடவுள்.) வேறு ஒரு பாடலில் பாரதி மேலும் விரிவாகக் கூறுகிறார் .

உயிர்கள் எல்லாம் தெய்வம் அன்றிப் பிற ஒன்றில்லை
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்
கேளப்பா சீடனே  கழுதை  ஒன்றை
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப் பார்த்து  இருகரமும் சிரமேற் கூப்பி
சங்கர சங்கர எனப் பணிதல் வேண்டும்
பயிலும்  உயிர் வகை மட்டுமன்றி இங்குப்
பார்க்கிற பொருள் யாவும் தெய்வம்  கண்டீர்
வெயிலளிக்கும் இரவி மதி விண்மீன் மேகம்
மேலும்  இங்கே  பல் வகையாய்த்  தோற்றம் காட்டும்
இயலுகிற ஜடப்பொருள்கள்  அனைத்தும் தெய்வம்

            சூழ்ந்ததெல்லாம்  தெய்வம் என்றால் நான் எனப்படுவது யார்நானும் தெய்வமே. சூழ்ந்ததெல்லாம் தெய்வம் என்பதை உணர்ந்து விட்டால் நான் என்று ஒரு தனிப் பொருள் இராது. அதுவிரிந்து பிரபஞ்சத்தோடு ஐக்கியமாகிவிடும்.வேதங்களின் மகா வாக்யங்களான அஹம் ப்ரம்மாஸ்மி, தத்வமஸி    என்பவற்றின்   விளக்கமாகப்  பாரதி பாடுகிறார் கேட்போம்.

வானில் பறக்கும்  புள் எல்லாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான்
கானிழல் வளரும் மரமெல்லாம் நான் 
காற்றும் புனலும் கடலுமே நான்

வேதத்தைக் கற்று அறிந்து, அதில் ஈடுபாடு கொண்டபாரதி  அதன் சாரத்தைப் பலரும் அறியும் வண்ணம்   எளிய மொழியில்  பாடியுள்ளதில்  வியப்பு இல்லை. வேதங்களையோ சாஸ்திரங்களையோ   கற்றறியாத  அவதார   புருஷரான ராமகிருஷ்ண பரமஹம்சர்   வேத சாரமாகிய, மேலே கண்ட    கருத்துக்களை   உணர்ந்து   நடைமுறையில் வாழ்ந்து காட்டியவர். இந்தக் கருத்துகள்    எவ்வளவு எளிமையாக அவரது அமுதமொழிகளில் வெளிப்படுகின்றன பாருங்கள்.
           
இறைவனே ஆத்திகர், இறைவனே நாத்திகர். அவரே   நல்லவர்   அவரே தீயவர். அவரே உண்மை, அவரே  உண்மையற்றவர். உறக்கம், விழிப்பு ஆகிய நிலைகளும் அவருடையதே. மேலும் அவர் எல்லா நிலைகளையும் கடந்தவர். இந்த    உண்மையை அறிந்துகொண்டால்  எல்லாக்  குழப்பங்களும் தீர்ந்துவிடும்.

எல்லா   உயிர்களிலும், எறும்பில்  கூட இறைவனைக்  காணும்  நிலையும் சில வேளைகளில் எனக்கு வருவதுண்டு.இந்த  நிலையில் ஏதாவது  ஒரு  பிராணி இறப்பதைக் கண்டால்  அதன் உடல் தான் அழிந்தது  என்று ஆறுதல் ஏற்படுகிறது. ஆன்மாவிற்குப்   பிறப்பு  இறப்பு இல்லை.

இறைக்காட்சி பெற்றுவிட்டால்  அவரே    உயிர்களாகவும்    உலகமாகவும்  ஆகியுள்ளது புரியும். தாமே எல்லாமாக  ஆகி இருப்பதை  என்   அன்னை   ஆதி பராசக்தி  எனக்குக் காளி கோவிலில்   காட்டி அருளினாள். எல்லாமே   உணர்வு மயம் என்பதைக்   காட்டி அருளினாள். எல்லாம் ரசத்தில், சச்சிதானந்த ரசத்தில் மூழ்கி இருப்பது  போல் தோன்றியதுகாளி கோயிலின் அருகில்  ஒரு   துஷ்டனைக்  கண்டேன். அவனுள்ளும் தேவியின் சக்தி சுடர் விடுவதைக் கண்டேன்அதனால் தானே  தேவிக்குப் படைக்க வேண்டிய பூரியைப் பூனைக்குக் கொடுத்தேன். தேவியே   பூனை  வரை எல்லாமாக   ஆகியிருப்பதை அப்போது கண்டேன்.

இத்தகைய   உணர்வு நிலையில் குருதேவர்  தன்னையே  காளியாக  எண்ணிக்  காளிக்குச் சமர்ப்பிக்க வேண்டிய புஷ்பங்களைத் தன் தலையில் போட்டுக் கொள்வாராம்.

எல்லாம் இறைவனின் ரூபங்கள் என்றாலும் கொடிய விலங்குகளாகவும் கொலைகாரர்களாகவும் அவன் வெளிப்படும்போது நமக்கு மனதில் அச்சமும்  வருத்தமும் உண்டாகின்றன.           அதனால் ருத்ரம் இறைவனை கோரமான வடிவங்களை மறைத்துக் கொண்டு இனிமையான வடிவங்கள் மூலம் மகிழ்விக்குமாறு வேண்டுகிறது.
           
மனிதர்கள் வெறி கொண்டு   ஒருவரை   ஒருவர்  தாக்கி மடியும்போது   தெய்வம் தெய்வத்தைக்  கொல்கிறது என்ற கொள்கையை நமது அறிவு ஒப்புக்கொள்வதில்லை.வேதாந்தம்   கூறும்   உபதேசங்களை நமது அறிவுக்கு முரண்பாடு இல்லாத வகையில் புரிந்துகொள்ள  வேண்டும் என்பதைக் குருதேவர் எவ்வளவு எளிமையாகக்   கூறுகிறார் பாருங்கள். புலியிலும் நாராயணன் இருக்கிறார்அதற்காக யாரும் புலியைக் கட்டித்  தழுவிக் கொள்ள முடியாது. இதை   விளக்க  அவர்  அடிக்கடி சொல்லும்  கதை  இது.

மதயானை  ஒன்று ஓடி வந்து கொண்டிருந்தது. வேதாந்தத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாத  ஒருவன்  ஓடிப் போங்கள்  என்று  காவலர்கள்   சொல்வதைக்  காதில் வாங்காது  யானையும்  ப்ரம்மமே  என்று  நின்று  கொண்டிருந்தான். அடிபட்டு விழுந்தவனுக்குக் குரு  அறிவுறுத்தினார். யானை மட்டும் ப்ரம்மம் அல்ல, ஓடிப் போங்கள்  என்று கத்திய காவலர்களும் ப்ரம்மம் தான் .     

அருளாளர்கள் அடைந்த இந்த இறைக்காட்சி நிலையை நாம் அடையமுடியுமா?
           
தண்ணீருக்குள் அழுத்தப்பட்டவன் வெளிவர முயல்வதைப் போன்ற தீவிரத்துடன் விடாது முயன்றால் முடியும்  என்கிறார்  குருதேவர். வேதங்களையும்  சாஸ்திரங்களையும்  வெறுமனே மனப்பாடம் செய்து ஒப்பிப்பதால்   இந்த  நிலையை  ஒரு போதும்  அடைய முடியாது.  

No comments:

Post a Comment