Pages

Friday, December 24, 2010

பக்தி இயக்கத்துக்கு முன்னோடி அம்மையார்

இறை அருளை அடைதல் எல்லோர்க்கும் எளிது என்று அம்மையார் கூறினார். துன்பக் கடலிலிருந்து விடுபட விரும்புவோரை அவர் அழைத்து எண்தோளன் தாள் பணியுமாறு அறிவுறுத்தினார். வேத வல்லுநர்களையும் அறிவுத் திறம் மிக்கோரையும் அவர் அழைக்கவில்லை. மாறாக, அவர் தன் நெஞ்சுக்கு அறிவுறுத்துவது போல எளிய மக்களுக்கே உபதேசம் செய்கிறார். அதனால் எல்லாத் தரப்பு மக்களும் இறையன்பில் ஈடுபடலானார்கள். சிவநெறி மக்கள் இயக்கமாக மாறியது. பிற்காலத்தில் பல வேறு சாதி மக்களும் நாயன்மார் ஆவதற்கு அம்மையாரே வழி காட்டினார் எனலாம்.

இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும்
அன்றும் அளப்பரியன் ஆனானை- என்றும்ஒர்
மூவா மதியானை மூவே ழுலகங்கள்
ஆவானைக் காணும் அறிவு. (அ-19)

எளிய திதுவன்றே ஏழைகாள் யாதும்
அளியீர் அறிவிலீர் ஆஆ- ஒளிகொள்மிடற்
றெந்தையராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த
சிந்தையராய் வாழுந் திறம். (அ-46)

கீழா யினதுன்ப வெள்ளக்
கடல்தள்ளி உள்ளுறப்போய்
வீழா திருந்தின்பம் வேண்டுமென் பீர்
விர வார்புரங்கள்
பாழா யிடக்கண்ட கண்டன் எண்
தோளன்பைம் பொற்கழலே
தாழா திறைஞ்சிப் பணிந்துபன்
னாளுந் தலைநின்மினே. (தி-9)

உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்த மரமடுக்கித் தீயாமுன் உத்தமனாய்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து. (தி-20)

வட இந்தியாவில் புத்த மத எழுச்சியால் நலிவடைந்திருந்த வைதிக சமயம் மீண்டும் தழைக்க உதவியவை புதிதாக எழுதப்பட்ட புராணங்களே. மஹாராஷ்டிரத்தில் இஸ்லாம் மேலோங்கிய நிலையில் அங்கு தோன்றிய சான்றோர்களின் அபங்கங்களே இந்து சமயத்தை நிலை நிறுத்தின. அது போலத் தமிழ் நாட்டில் சமணத்துக்கு எதிராகச் சைவத்தைத் தூக்கி நிறுத்திய பெருமை தேவார திருவாசகங்களுக்கு உண்டு எனினும் அவற்றிற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவை அம்மையாரின் பாடல்களே.

அம்மையாரின் பாடல்களின் மொழியும் நடையும் சாதாரண மக்களின் அன்றாட அனுபவத்துக்கு ஒட்டி இருப்பதால் அது மக்களை விரைவாகக் கவர்ந்ததில் வியப்பு இல்லை.

பக்தி இலக்கியங்கள் இசை முதலிய கலைகளின் துணை பெறும்போது இவற்றின் தாக்கம் அதிகமாகிறது. அம்மையார் இசை நுணுக்கங்களைப் பற்றிக் கூறியிருப்பதால் அவர் இசை வல்லுநராக இருந்திருக்கக் கூடும். தனது படைப்புகளை அவர் இசையோடு பாடக் கேட்ட மக்கள் அவரைச் சூழ்ந்திருப்பர். அவரைப் பின்பற்றியே அப்பர் முதலானோர் மக்களை நல்வழிப்படுத்தத் தங்கள் பனுவல்களை இசையுடன் பாடும் வழக்கத்தை மேற்கொண்டனர். பதிகம் பாடும் முறை, கடைக்காப்பு பாடுதல் முதலியனவற்றையும் அம்மையாரிடமிருந்து பின்னர் வந்த சமயக் குரவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

சிவன் மாலுக்கும் அயனுக்கும் அளக்க முடியாதவன் என்று சொன்னார் அம்மையார். சோதி வடிவில் என் சிந்தனையில் சுழல்கின்றான் எனவும் கூறினார். அப்பரும் சம்பந்தரும் இவை இரண்டையும் இணைத்து மாலயன் அறிய முடியாமல் சோதி வடிவமாய் நின்றான் என விரித்தனர்.

அம்மையார் காட்டிய இறைவனின் சோதி வடிவத்தையும், கருணைப் பண்பையும் மிக அதிகமாகப் பெருமைப்படுத்தி மனமுருகினார் மணிவாசகர். அவரைத் தொடர்ந்து வள்ளலாரோ அருட் பெரும் சோதி தனிப் பெருங்கருணை என்பதை ஒரு மந்திரமாகவே உருவாக்கினார்.

பிறவா நிலை விரும்பத்தக்கது தான். ஆனால் இறைவனைப் போற்றிப் பாடும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றால் எத்தனை பிறவிகள் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று அம்மையார் கூறி இவ்வுலக வாழ்வை இடர் எனக் கருதும் சமண சாக்கிய சமயங்களின் கருத்தை மக்கள் மனதிலிருந்து அகற்றினார். அவரைப் பின்பற்றிய சம்பந்தர் சிவ பெருமானை வணங்குவோர் மண்ணிலும் நல்ல வண்ணம் வாழலாம், வானுலகில் நல்ல கதிக்கும் யாதும் ஓர் குறைவில்லை என்ற கருத்தைத் தன் பாடல்கள் முழுவதும் பாடியுள்ளார். அப்பரும் உன் திருவுருவத்தைக் காணும் வாய்ப்புக் கிட்டுமானால் பிறவியை வெறுக்காமல் ஏற்றுக் கொள்வேன் என்று இறைவனிடம் குழைகிறார்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணின் நல்லஃதுறும் கழுமல வளநகர்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
–சம்பந்தர்

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.
–அப்பர்
அவன் அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் என்ற அம்மையாரின் கருத்து பின்னர் வந்த அப்பர் பிரானின் வாக்கில் எதிரொலிப்பதைக் காண்கிறோம். ‘அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே’ என்கிறார் அவர். அவனருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகர் பாடியதிலும் அம்மையாரின் தாக்கத்தைக் காண்கிறோம்.

சுந்தரரின் முதல் பாடல் பித்தா என்று துவங்குகிறது. சிவனைப் பித்தன் என்று முதன் முதலாக அழைத்தவர் அம்மையாரே. (பதிகம் 2-4)

‘பலிக்குநீர்வரும் போது நுங்கையிற்
பாம்புவேண்டா பிரானிரே’
என்ற சுந்தரரின் திருப்பைஞீலி தேவார வரிகள்

‘நீயுலக மெல்லாம் இரப்பினும் நின்னுடைய
தீய அரவொழியச் செல்கண்டாய்- தூய
மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி
விடவரவம் மேல்ஆட மிக்கு’ என்ற அ-57ஐ நினைவூட்டுகிறது

‘கையோர் பாம்பு அரையார்த்தோர் பாம்பு
கழுத்தோர் பாம்பவை’ 7.36.10
என்ற சுந்தரரின் வரிகள் அம்மையாரின்

பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்
நாணாக மேல்மிளிர நன்கமைத்துக்- கோள்நாகம்
பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற்
கென்முடிவ தாக இவர்
என்ற அ-28 பாடலை நினைவூட்டுகிறது.

நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக என்ற கருத்து கல்வியின் மூலம் அவனை அடைய முடியாது என்று உறுதிப்படுத்துகிறது. நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந்தோர்கட்கே என்று அப்பர் கூறுவதன் கருத்து இதுவே. கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும் என்று இதையே மணிவாசகர் கூறுகிறார். அப்பர் தன் திருக்கழுக்குன்றப் பதிகத்தில் ‘சுடருருவில் என்பறாக் கோலத் தான்’ என்று அம்மையாரின் (அ2 பாடலின்) சொற்றொடரை அப்படியே எடுத்தாள்கிறார்.

இறைவன் தன்னை ஆண்டு கொண்டு அருள் செய்ததை எண்ணிப் பெருமிதமாகச் சில பாடல்களிலும், எனக்கு எப்பொழுது அருள் செய்வானோ என்று ஏக்கமாக வேறு சில பாடல்களிலும் மணிவாசகர் பாடுவது, அம்மையாரைப் போல், தான் நற்கதி அடைந்தது போதாது, ஏனைய மக்களும் இறை அருள் பெறவேண்டும் என்ற எண்ணத்தினால் தான்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற திருமூலரின் கருத்துக்கு வேர் அம்மையாரின் பாடல்களில் இருப்பதை அவரது நெஞ்சறிவுறுத்தும் பாடல்களில் கண்டோம்.

அம்மையாரின் தாக்கத்தை இஸ்லாத்திலும் காணலாம். குர் ஆனின் முதல் வசனம், லா இலாஹ் இல்லில்லாஹ் என்பது, ஈசன் அவன் அல்லாது இல்லை என்ற அம்மையார் வாக்கின் (தி-2) நேர் மொழிபெயர்ப்பே. சங்க காலத்திலிருந்தே அராபிய வாணிகர்கள் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் வாணிகம் செய்து வந்தனர். அவர்கள் அம்மையாரைப் பற்றி அறிந்திருக்கக் கூடும். நான் அந்தந்த இன மக்களிடமும் அவரவர் மொழியிலேயே பேசுகிறேன் என்று குர் ஆனில் கூறப்பட்டுள்ளதால் அம்மையாரை ஈசன் அவன் அல்லாது இல்லை என்று பேச வைத்த இறைவனே நபிகள் நாயகத்திடமும் அக் கருத்தை அரபி மொழியில் கூறியதாகக் கொள்ளலாம்.

Thursday, December 2, 2010

அம்மையார் கால வழிபாட்டு முறை

இறைவனைக் கோவிலில் சென்று தான் வழிபட வேண்டும் என்ற வழக்கம் இக்காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. கோவில்கள் குறைவாக இருந்திருக்கக் கூடும். இருந்தவையும் மக்கள் நடமாட்டம் அற்று முட்புதர் மண்டி இருந்திருக்க வேண்டும். எனவே தான் பிற்காலத்தில் உழவாரப் பணி செய்து மக்களைக் கோவிலுக்கு ஈர்க்க வேண்டிய நிலை அப்பருக்கு ஏற்பட்டது. கண்ணுக்குப் புலனாகும் கந்து அல்லது லிங்கம் அல்லது வேறு உருவம் எதுவும் இல்லாமலே, சிவனைக் கருத்துருவாகவே அம்மையார் காட்டுகிறார்.

சங்க காலத்தில் தெய்வத்தை அதிட்டானிக்க ஆதாரமாகப் பயன்பட்ட பொருளைக் கந்து என்று அழைத்தனர். இது பொதுவாகக் கல் தூணாகவே இருந்தது. இதுவே பிற்காலத்தில் வளர்ந்து விக்கிரக வழிபாடாக மாறியது. அம்மையாரது காலத்தில் ஆடற்பெருமானை உலோகத்திலோ, கல்லிலோ சிற்பமாக வடித்து வழிபடும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை.

தேவாரக் காலத்தில் சிவன் ஆன் ஐந்தால் (பசுவின் பால், தயிர், நெய், சாணம், கோமயம்) அபிடேகம் செய்யப் பெறுபவனாகக் கூறப்படுகிறார். ஆனால் அம்மையார் சிவனை நெய்யாடி என்று வர்ணிப்பதிலிருந்து சிவனை அதிட்டானித்திருந்த கந்துக்குச் சங்க காலத்து நடுகற்களுக்குச் செய்தது போல் நெய் மட்டும் தடவும் வழக்கம் இருந்ததை அறிய முடிகிறது. மலர் தூவி வழிபடும் வழக்கம் இருந்தது.

உமையம்மை

இருவடிக்கண் ஏழை, உமையவள், குலப்பாவை, குலமங்கை, கொம்பு, கோல்வளை, சிலம்படியாள், செப்பேந்திளமுலையாள், பாகத்தாள், பெண், பொருப்பன்மகள், மலைப்பாவை, மலைமகள், மலைமங்கை, மலையான் மகள் எனப் பல பெயர்களால் குறிப்பிடப்படும் உமை இறைவனது பாகம் பிரியாமல் இருக்கிறாள். அவன் சுடலையில் ஆடும்போது மருண்டு நோக்குகிறாள். அவளைக் குறிப்பிடுகிறாரே தவிர அம்மையார் அவளை வணக்கத்திற்குரிய தெய்வமாகப் போற்றவில்லை. அம்மன் வழிபாடு குலோத்துங்கன் காலத்தில் தான் ஓங்கியது என்பதை வரலாறு கூறும்.

சிவகுமாரர்கள்

இன்று சிவகுமாரர்களாக வணங்கப்படும் கணபதி, முருகன் போன்ற தெய்வங்களையும் அம்மையார் குறிப்பிடவில்லை.

Sunday, November 21, 2010

மூச்சை நிறுத்திவிடு

            திருக்கடையூர்    அமிர்த  கடேசுரர்  சன்னிதியில்  நின்று  கொண்டிருக்கிறேன்.மாலையும்  கழுத்துமாகப்  பல  முதிய  தம்பதிகள் (சில  தனிக்கட்டைகளும்  கூடத்தான்)    நின்று கொண்டிருக்கின்றனர்.    ஒவ்வொருவரைச்  சுற்றியும்   ஒரு சிறு  கூட்டம்அறுபது  வயது  முடிந்தவர்கள்  தன்  சதாபிஷேகமும்  இதே  போல்  சிறப்பாக  நடக்கவேண்டுமென  வேண்டிக்  கொள்கின்றனர்எண்பது  முடிந்தவர்களோ     தான்     நூறாண்டு  வாழ  வேண்டுமென  வேண்டுகின்றனர்சுற்றியுள்ளவர்களும்   தாங்களும்  இதே  போல்  60, 80  எல்லாம்  கொண்டாடப்  போகும்  காலத்தை  மனக்கண்ணால்  கண்டு  மகிழ்கின்றனர்

            ஆனால்  நான்  மட்டும்  இறைவா  என்னை  விரைவில்  மரணமடையச்  செய்  என்று  வேண்டுகிறேன்.   நான்  ஏதோ  துன்பத்தில்   உழன்று  விரக்தியின்  காரணமாக  மரணத்தை  நாடுவதாக  எண்ண வேண்டாம்எனக்கு  வாழ்க்கையில்  எந்தக்  குறையும்  இல்லைஅவ்வப்போது  வரும்  சிறு  துன்பங்களையும்  எப்படிப்  பாசிடிவ்  ஆக  எடுத்துக்  கொள்வது  என்பதையும்  நான்  இளம்  வயதிலேயே  கற்றுக்  கொண்டு  விட்டேன்.   ஆனாலும்  நான்  ஏன்  சாக  விரும்புகிறேன் ?

            எந்த  வேலை  செய்தாலும்  ஒரு  குறிக்கோளுடன்  தான்  செய்கிறோம்.    ஆனால்  மிக  மிக  முக்கியமான தான   வாழ்க்கையின்  குறிக்கோள்  என்ன  என்ற  கேள்விக்கு   எனக்கு  விடை  தெரியவில்லை. கிட்டத்தட்ட  அரை  நூற்றாண்டு  காலமாக  நான்  இந்தக்  கேள்விக்கான  விடையைத்  தேடிக் கொண்டிருக்கிறேன்ஒவ்வொருவர்  ஒவ்வொரு  பதில்  சொன்னார்கள்எதுவும்  எனக்குத்  திருப்தி  அளிக்கவில்லைஇது  பற்றிப்  பேசுவதே  தவறு  என்று  தான்  பலரும்  கருதுகிறார்களே  அன்றி  எவரும்  இது  முற்றித்  தீவிரமாகச்  சிந்திப்பதாகத்  தெரியவில்லைஎன்  மனைவி  மக்களைக்  காப்பாற்றுவதற்காக  நான்  உயிர்  வாழ  வேண்டும்  என்று  தான்  பலரும்  புத்திமதி  சொன்னார்கள்நான்  தற்கொலை  செய்துகொள்ளப்  போகிறேன்  என்று  நினைத்து  என்னைப்  பாச  வலையில்  கட்டிப்  போட  அவர்கள்  செய்யும்  முயற்சி  இதுபாவம் ,   அவர்கள்  அறியாததுஎன்  மனதில்  தற்கொலை  எண்ணமே  தோன்றியதில்லை.    என்  கேள்வியேஎதற்காக  வாழ  வேண்டும்  என்று  தெரியாமல்  வாழ்ந்து   கொண்டிருக்கிறேனேஅப்படியும்  தற்கொலை  எண்ணம்    ஏன்  தோன்றவில்லை   என்பது  தான்.

            பிரச்னை  என்னைப்  பற்றியது  மட்டுமல்லஎன்னைச்  சுற்றி  ஏராளமான  பேர்  எவ்வளவோ  துன்பங்களுக்கிடையிலும்  சாகவேண்டும்  என்று  நினைக்காமல்   வாழ  வேண்டும்  என்று   போராடுகிறார்களே,   ஏன்  ?

               பிள்ளைகள்  மற்ற  உறவினர்கள்  இருந்தும்   அவர்களால்  சுமையாகக்  கருதப்பட்டு  முதியோர்  இல்லங்களில்  மன  வேதனைகளை ச்  சகித்துக்கொண்டு  வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே   அவர்கள்  சார்பில்  கேட்கிறேன்.

              தீர்க்க முடியாத  நோய்களால்  பீடிக்கப்  பட்டு    மருத்துவ  விஞ்ஞானத்தின் புண்ணியத்தால்  செயற்கையாக  உயிர்  வாழ  வைக்கப்  பட்டு  மருத்துவர்களுக்குப்  புதிய  மருத்துவ  முறைகளைச்  சோதித்துப்  பார்க்கும்    களமாகவும்   வருவாய்  தரும்  கருவூலமாகவும்    உறவினர்க்குச் சுமையாகவும்    விளங்கும்  நோயாளிகள்  சார்பாகக்  கேட்கிறேன்

                        பிறவியிலேயோ , நோய்  அல்லது  விபத்தின்  காரணமாகவோ  உடல் உறுப்புக் குறை  ஏற்பட்டு  வேலை செய்யச்   சக்தி  இழந்து  பிச்சை  எடுத்து  உயிர்  வாழ  வேண்டிய  நிர்ப்பந்தத்திற்கு  உள்ளாக்கப்  பட்டிருக்கிறவர்கள்  சார்பாகக்  கேட்கிறேன்

            நாங்களெல்லாம்  தற்கொலைக்குத்  துணியாத  காரணம்  என்ன  ?  வாழ்க்கையில்  எங்களைக்  கட்டிப்  போட்டிருப்பது  எதுஅந்த  ஒன்றைத்  தான்  நானும்  அரை  நூற்றாண்டாகத்  தேடிக்கொண்டிருக்கிறேன்.

            தற்கொலை  செய்து  கொள்வது  கோழைத்தனம்  என்று  பலரும்  கூறுகிறார்களேநான்  கோழை  அல்ல  என்று   பிறரிடம்  நிரூபிக்க   ஆசையா?

            தற்கொலை  செய்துகொண்டால்  பேயாகப்   பிறப்பார்கள்  என்று  சிறு  வயதில்  சொல்லப் பட்டதை  இன்று  அறிவு  ஏற்றுக்    கொள்ளாவிட்டாலும்    பழைய  போதனையின்  வாசனை    போகாததாலா ?

            எவருமே  இது  பற்றிச்  சிந்திக்காத  போது     நான்  மட்டும்  சிந்தித்துப்  பைத்தியக்காரப்  பட்டம்    கட்டிக்  கொள்ள  வேண்டி இருக்குமே  என்ற  பயமா?

            துன்பத்தில்  உழலும்போது  மட்டுமல்லஇன்பத்தில்  ஆழ்ந்திருக்கும்  போதும்   இந்த  எண்ணம்  என்னை  விடாது  பற்றிக்  கொண்டிருந்தும்  என்னைச்  செயல்பட  விடாது  தடுப்பது  எது?

            இறைவாஎன்  தேகத்தைச் சாய்த்துவிடுஇன்றேல்  இது  போன்ற  சிந்தனைகளை  என் உள்ளத்தில்  தோன்றாது  மாய்த்து  விடு

Wednesday, November 3, 2010

குருவாய் வருவாய்

குருவாய் வந்தருள குகனை நான் வேண்டி நின்றேன்
குழந்தையாய் வந்தெனக்குக் கூறிட்டான் உண்மையினை

சென்றதைக் குறித்துக் குமையாதே, அது வேண்டாம்.
இன்றெது உன் கண் முன் உள்ளதோ அதைக் கவனி.
வருவது பற்றியொரு கவலை ஏன்? கற்பனை ஏன்?
இருப்பது இக்கணத்தில் இதனில் வாழ் என்றுரைத்தான்.

வாயால் உரைக்கவில்லை வார்த்தையிலாச் செய்தியது.
சேயாம் இவன் முகத்தில் தெரிந்திட்ட காட்சியது.

நேற்று வலித்ததை நினைவில் வைத்திருந்து
தேற்றுவார் தேடி தினமும் அழமாட்டான்.
பசி வரும் கணத்துக்கு முந்தியதோர் கணம் வரையில்
வசீகரப் புன்னகை மாறாமல் படுத்திருப்பான்.

சிறுவா உன் முன்னர் சிரம் தாழ்ந்து நிற்கிறேன்
ஒரு வார்த்தை உரையாமல் உபதேசம் தந்ததனால்.

Monday, October 25, 2010

சம்பந்தரின் ஒன்பதாவது பாடல்கள்

திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம் ஒவ்வொன்றிலும் ஒன்பதாவது பாடல், திருமால் அயன் இருவரும் பணிந்து வணங்கும் வகையில் சோதிப் பிழம்பாய் சிவபெருமான் தோற்றம் அளித்த நிகழ்ச்சியை வர்ணிக்கிறது. அந்தப் பாடல்களை மட்டும் இப்பொழுது ஆராய்வோம்.

கதை எல்லோருக்கும் தெரிந்தது தான். பிரமனும் மாலும் தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்பதில் முரண்பட்டனர். இந்த இருவர் அல்லாத மூன்றாமவர் தானே இதற்குத் தீர்ப்பு அளிக்க முடியும்! எனவே சிவனிடம் சென்றனர். சிவன் அவர்களுக்கு ஒரு எளிய சோதனை வைத்தார். என்னுடை அடியையோ முடியையோ யார் முதலில் கண்டு திரும்புகின்றனரோ அவரே பெரியவர் என்பது தான் அது.

‘இது ஒரு பெரிய வேலையா?’ என்ற தருக்குடன் இருவரும் புறப்பட்டனர். சிவன் ஒரு பெரிய தீப்பிழம்பாக உருவெடுத்து நின்றார். அவ்வெரியின் அடி மண்ணுக்குள் புதைந்து இருந்தது. முடி விண்ணுக்கு மேல் இருந்தது. மால் பன்றி உருவெடுத்து மண்ணைக் கிண்டிக் கீழ் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அயன் அன்ன வடிவெடுத்து மேல் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். நீண்ட காலம் ஆகியும் அவர்கள் இலக்கை அடைய முடியவில்லை. இறுதியில் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு சிவனிடம் இறைஞ்சிப் பணிந்தனர். தங்கள் இருவரையும் விடச் சிவனே பெரியவர் என்பதை உணர்ந்தனர்.

சொல்வளம்

ஞான சம்பந்தர் பதிகங்கள் மொத்தம் 386இல் 17 நீங்கலாக மற்றவற்றில் 380 முறை பேரழலாய் நின்ற பெம்மான் கதை பேசப்பட்டுள்ளது. ஒரே விஷயத்தைப் பல முறை சொன்னாலும், கூறியது கூறாமல் ஒவ்வொரு முறையும் புதிய சொற்களைப் பயன்படுத்தி இருப்பது அவரது சொல்வளத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

பொருள் சிறப்பு

ஒரே கருத்தைத் திரும்பத் திரும்பப் பதிகம் தோறும் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

11 பாடல் கொண்ட பதிகத்தில் நிறைவுப் பாடல் பதிகப் பலன் கூறுவது. பத்தாவது பாடல் சமண சாக்கியத்தைக் கண்டிப்பது. மற்ற ஒன்பது பாடல்களும் சிவபிரான் பெருமையைப் பேசுபவை.

முதல் எட்டுப் பாடல்களில் சம்பந்தர் சிவனின் பல்வேறு தோற்றச் சிறப்புகளையும் அருஞ்செயல்களையும் விவரித்து விட்டு இறுதியாக ஒன்பதாவது பாடலில் மாலயன் காணா எரியாய் நிமிர்ந்தான் என்று அவர் சொல்வதற்கு ஏதாவது காரணம் இருக்கக் கூடுமா?

சிவனாரது தோற்றச் சிறப்புகளுக்கும், அருஞ்செயல்களுக்கும் சிகரம் வைத்தாற்போல இருப்பதை, அதாவது மாலையும் அயனையும் விட மேலானவராக எரி உருவமாக விளங்குவதை இந்த நிறைவுப் பாடலில் அவர் வைத்துள்ளார். முந்தைய பாடல்களில் வர்ணிக்கப்பட்ட தோற்றங்கள் எல்லாம் ஆரம்ப சாதகர்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ளத் தான், சிவனுடைய உண்மையான சொரூபம் பெருஞ் சோதி வடிவமே எனக் கூறுவதே போல அவர் 9வது பாடலில் சிவனது எரியாகி நீண்ட கோலத்தை முன் வைக்கிறார்.

வரலாற்றுப் பின்னணி

புராணக் கதைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அவற்றின் மெய்ப் பொருளை ஊகித்து அறிவது வரலாற்று ஆய்விற்கு உதவும். இந்தப் புராணக் கதையின் பின்னணி என்னவாக இருக்கக் கூடும்?

திருமால் என்பவர் தமிழ் மண்ணின் பழமையான தெய்வம். தொல்காப்பியர் காலத்தில் முல்லை நிலக் கடவுளாக இருந்தவர். சிவன் வழிபாடு மேலோங்குவதற்கு முன்பு முல்லை நிலத்தில் மட்டுமன்றிப் பிற இடங்களிலும் பரவி இருந்தது அவரது வழிபாடு. பிரமன் என்பவர் வேதத்தில் குறிப்பிடப்பட்ட தெய்வம்.

சங்க காலத் தமிழகத்தில் மால் வழிபாடும் ஆலமர் கடவுள் (சிவன்) வழிபாடும் செல்வாக்குப் பெற்றிருந்தன. பிரமன் வழிபாடு அந்தணர் இயற்றிய வேள்விகளில் மட்டும் இருந்திருக்கக் கூடும். முழுமுதல் கடவுள் என்ற கோட்பாடு அதற்கு முன் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் சிவனை முழுமுதற் கடவுளாக்கும் போக்கு நிலவி வந்ததற்கான அடையாளங்களைச் சிவனுக்கு அளிக்கப்பட்ட முது முதல்வன், தொல் முது கடவுள் என்ற அடைமொழிகளிலிருந்து அறிகிறோம். சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவன் மாலின் பிரசாதத்தை விடச் சிவனுடைய பிரசாதத்திற்குச் சிறப்பிடம் தந்தது கூறப்பட்டுள்ளது.

பிரமன், மால் ஆகிய இந்த இரண்டு தெய்வங்களின் வழிபாடும் அருகிச் சிவன் முழுமுதற் கடவுளாக மேலோங்கிய நிலையைத் தான் இப்புராணக் கதை குறிப்பதாகக் கொள்ளலாம். அம்மையார் காலத்திலேயே சிவன் சிறப்பிடம் பெற்று விட்டார் என்பது அவரது பாடல்களிலிருந்து தெரிகிறது. வேத தெய்வமான பிரமன் வழிபாடு அருகியது என்றால் சிவன் வழிபாடு வேதத்துக்கு விரோதமானது என்பது பொருள் அல்ல. வேதமும் சிவனும் இணைபிரியாதவை என்று புறநானூறும் அம்மையாரும் கூறுவதை ஒட்டிச் சம்பந்தரும் சுமார் 1000 தடவைகள் சிவனை வேதத்துடன் தொடர்பு படுத்திக் கூறுகிறார்.


வேதமும் புறச்சமயங்களும்

வேத வழிபாட்டு முறையில் அக்கினி முக்கிய இடம் பெறுகிறது. மற்றத் தெய்வங்களுக்கு அளிக்கப்படும் ஆகுதியை எல்லாம் சுமந்து செல்பவன் அக்கினி. அவனைச் சில இடங்களில் வேதம் ருத்ரனாகவே குறிப்பிடுகிறது. ஆனால் அக்கினியை அந்தணர் மட்டும் வேள்வி செய்து தான் வழிபட முடியும் என்ற நிலை இருந்தது.

அந்தணர்கள் வேள்வி இயற்றியது யாவும் மனித சமுதாய முழுமையின் நலனுக்காக மட்டுமன்றி, பிற உயிரினங்களின் நலனுக்காகவும் சேர்த்தே. “மித்திரனும், வருணனும் எங்களுக்கு நல்லவர்களாக இருக்கட்டும்”, “இரண்டு கால் பிராணிகளுக்கும் நான்கு கால் பிராணிகளுக்கும் நலம் உண்டாகட்டும்”, “எங்களைப் பகைவர்களிடமிருந்து காப்பாற்று”, “எங்களுடைய பசுக்களையும் குழந்தைகளையும் காப்பாற்று”, “எங்களுக்குச் செல்வம் கொடு”, “எங்களுக்கு மழை பொழிவி” என்று சமுதாய நலனையே வேண்டுகின்றன வேத மந்திரங்கள். புகழ் பெற்ற காயத்ரி மந்திரம் கூட, “எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என்று பன்மையில் தான் வேண்டுகிறது. ‘எனக்குக் கொடு’ என்று கேட்கும் சமகம் போன்ற மந்திரங்கள் சில வேதத்தில் இருந்தாலும் அவையும் சமுதாய நலனுக்குரிய வேள்வி செய்யத் தேவையானவற்றை எனக்குக் கொடு என்று தான் கேட்கின்றன.

சமண சாக்கிய நிறுவனர்கள் தனி மனிதன் வாழ்வில் அனுபவிக்கும் துயரங்களாகிய பிணி, மூப்பு, சாக்காடு என்பவற்றால் உந்தப்பட்டு அவற்றிலிருந்து விடுபடப் புது வழி காண முனைந்தவர்கள். வாழ்வு என்றால் துன்பம் தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த பின், பிறவியே இல்லாத ஒரு நிலையில் துன்பங்களே இரா என்று கற்பனை செய்தனர். துன்பங்களுக்கு ஆசையே காரணம் என்றும், அறநெறி வாழ்வின் மூலம் ஆசையை ஒழித்து விட்டால் பிறவியே அழிந்து போகும் என்றும் கூறினர்.

பிணி, மூப்பு, சாக்காட்டை ஒழிப்பதில் அவர்கள் வெற்றி பெறாததை மறைப்பதற்காக, தனிப்பட்ட மனிதன் முத்தி நிலை அடைய வேண்டும் என்பதையே குறிக்கோளாகப் பிரசாரம் செய்தனர் அவர்கள். இதனால் அவரவரது உயர்வுக்கு அவரவரே முயல வேண்டும் என்னும் கொள்கையும், வேள்வி என்பது செய்பவருக்கு மட்டும் தான் பலன் தரும், மற்றவருக்கு நன்மை இல்லை என்ற தவறான கருத்தும் பரவின. வேள்வி மந்திரங்கள் மறு உலகம் பற்றிக் கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் வேள்வி செய்யாதாரும் பக்தியின் மூலம் இறைவனின் அருளுக்கு ஆளாகிச் சிவகதி என்னும் பிறப்பிலா நிலை அடைய முடியும், அப்படி மீண்டும் பிறக்க நேர்ந்தாலும் இறைவனின் திருவடிகளைத் தொழும் இன்பத்தின் முன் உலகியல் துன்பங்கள் ஒரு பொருட்டல்ல என்னும் வழியை முதன் முதலில் எடுத்துக் காட்டினார் காரைக்கால் அம்மையார்.

அம்மையாரின் வழி நின்ற சம்பந்தர், அக்கினியும் சிவனும் வேறல்ல, சிவனை நீரும் மலரும் கொண்டு போற்றியும் வழிபடலாம் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காகவே எரியுருவான சிவன் என்ற கருத்தை 9வது பாடல் தோறும் வைத்துள்ளார் எனக் கருத முடிகிறது. இவ்வாறு வேதத்தின் அக்கினி வழிபாட்டைச் சாதாரண மக்களுக்காக எளிமைப்படுத்துவதே அவரது நோக்கமாகத் தெரிவிக்கின்றன இந்த ஒன்பதாவது பாடல்கள்.

Wednesday, October 20, 2010

பேயார் - காரைக்கால் மேய குலதனம் - அம்மையார்

எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் எல்லாச் சமயங்களிலும் பேய் என்னும் கருத்துரு உண்டு. ஆனால் இது இடத்துக்கு இடம் காலத்துக்குக் காலம் மாறுபடுகிறது.

ஆசை நிறைவேறாமல் அற்ப ஆயுளில் இறந்தவர்களும் தற்கொலை, விபத்து இவற்றால் இறந்தவர்களும் பேயாக மாறி உலவுகின்றனர் என்பதும், இப் பேய்கள் உருவம் இல்லாதவை என்பதும், இவை பெண்களையும் பலவீனமானவர்களையும் பிடித்துத் துன்புறுத்துகின்றன என்பதும் இன்றைய தமிழ்நாட்டு நம்பிக்கை. ஆனால் அம்மையார் கூறும் பேய்கள் வேறு வகையானவை. அவரது மூத்த திருப்பதிகம் பேய்களைப் பற்றிக் கூறும் விவரங்களைப் பார்ப்போம்.

இறந்தவர்கள் பேயாவதில்லை. மாறாக, பேய்கள் என்பவை மனிதர் போன்ற உருவமும் அழகற்ற தோற்றமும் உடைய தனி உயிரினம். வற்றிய கொங்கை, புடைத்த நரம்பு, ஆழமான கண், வெண் பல், ஒட்டிய வயிறு, சிவந்த தலை மயிர், இரு கோரைப் பற்கள், உயரமான புறங்கால், நீண்ட கணுக்கால் கொண்டவை பேய்கள். இவற்றில் சில வாயி்ல் தீயும், சில கண்ணில் தீயும் கொண்டவை. இவற்றில் கூளி என்ற ஒரு வகை உண்டு. இவை மற்றப் பேய்களிலிருந்து எவ்வாறு மாறுபட்டவை என்பது தெரியவில்லை.

இவை சுடுகாட்டில் வாழ்கின்றன. அங்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றன. அவற்றிற்குப் பெயரும் இடுகின்றன. மனிதர்களைப் போலவே தாய்ப் பாசம் உள்ளவை இவை. குழந்தைக்குத் தாய்ப்பாலும் நிணமும் ஊட்டிப் பேணி வளர்க்கின்றன. குழந்தையின் முகத்தில் உள்ள புழுதியைத் துடைக்கின்றன. அது தூங்கும்போது சிறிது நேரம் தாய்ப் பேய் வெளியில் செல்கிறது. விழித்து எழுந்த குழந்தை தாயைக் காணாது அழுதுவிட்டுப் பின் உறங்குகிறது. பிள்ளைப் பேய்களை இருட் காலத்தில் அன்புடன் தடவிக் கொடுக்கின்றன தாய்ப் பேய்கள். அவை குறும்பு செய்யாமல் இருப்பதற்காக அவற்றை அச்சுறுத்தி “கொள்” என்று இசை பாடுகின்றன.

விழுது நிணத்தை விழுங்கி யிட்டு
வெண்தலை மாலை விரவப் பூட்டிக்
கழுதுதன் பிள்ளையைக் காளி யென்று
பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்
புழதி துடைத்து முலைகொ டுத்துப்
போயின தாயை வரவு காணா
தழுதுறங் கும்புறங் காட்டில் ஆடும்
அப்ப னிடம்திரு ஆலங் கா டே (பதிகம் 1-5)

குண்டை வயிற்றுக் குறிய
சிறிய நெடிய பிறங்கற்பேய்
இண்டு படர்ந்த இருள்சூழ்
மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய்
கொண்டு குழவி தடவி
வெருட்டிக் கொள்ளென் றிசைபாட
மிண்டி மிளிர்ந்த சடைகள்
தாழ விமலன் ஆடுமே (பதிகம் 2-10)

நம்முடைய கண்ணோட்டத்தில் தான் பேய்கள் அழகற்றவை. அவை தாம் அழகாக இருப்பதாகத் தான் கருதுகின்றன போலும். அவை மனிதப் பெண்களைப் போலவே தம்மை ஒப்பனை செய்து கொள்வதில் நாட்டம் கொண்டவை. கூந்தலைக் காய வைக்கிறது ஒரு பேய். மற்றொன்று கள்ளி மரத்தின் கிளைகளிடையே காலை நீட்டிக் கொண்டு ஒய்யாரமாகப் படுத்திருக்கிறது. எரிந்து அணைந்த கொள்ளிக் கட்டையை மசிய அரைத்து உண்டாக்கிய மையைக் கண்ணில் பளிச்சென்று தெரியும்படியாக தீட்டிக் கொள்கிறது அது.

.....................................சுடலையுள்
ஒயும் உருவில் உலறு
கூந்தல் அலறு பகுவாய
பேய்கள் (பதிகம் 2-8)

கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக்
கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை
விள்ள எழுதி .................................
(பதிகம் 1-2)

அவற்றிற்கும் நம்மைப் போலவே கோபம், பயம், மகிழ்ச்சி முதலான உணர்ச்சிகள் உண்டு. மரத்தில் உட்கார்ந்திருக்கும் ஒரு பேய் திடீரென்று ஏதோ சத்தம் கேட்டதும் பயந்து குதிக்கிறது. அங்கு பிணஞ்சுடு தீச் சுட்டுவிடவே, கோபித்து புழுதியை அள்ளி தன்னைச் சுட்ட தீயை அவிக்கிறது என்பதையும் மேற்கண்ட பாடலின் மூலம் அறிகிறோம்.

பேய்களுக்கும் துன்பம், வறுமை எல்லாம் உண்டு. ஊரில் யாரும் இறக்காத நாளில் அவை, பாவம், பட்டினி் தான். கிடைத்த நாட்களிலும் அவை நரி, கழுகு முதலானவற்றுடன் போட்டி போட வேண்டி இருக்கிறது. இறுதிக் கடன் செய்து மனிதர் விட்டுப் போன சோற்றை நரி தின்னும்போது இதை முன்பே பார்க்கவில்லையே, பார்த்திருந்தால் நரிகளை வெருட்டித் தின்றிருக்கலாமே என்று கோபத்துடன் பேய்கள் கையைத் தட்டிக் கொண்டு வட்டமாகச் சென்று ஆடி, இசை கூட்டுகின்றன. துணங்கைக் கூத்தினை ஆடுகின்றன. வலிய பேய்கள் ஒன்றை ஒன்று அடித்து ஒரு சேரக் கூச்சலிடுகின்றன.

குண்டில்ஓ மக்குழிச் சோற்றை வாங்கிக்
குறுநரி தின்ன அதனை முன்னே
கண்டிலோம் என்று கனன்று பேய்கள்
கையடித் தொ டிடு காட ரங்கா
மண்டலம் நின்றங் குளாளம் இட்டு,
வாதித்து, (பதிகம் 1-4)

நொந்திக் கிடந்த சுடலை
தடவி நுகரும் புழுக்கின்றிச்
சிந்தித் திருந்தங் குறங்குஞ்
சிறுபேய் சிரமப் படுகாட்டின் (பதிகம் 2-7)

ஒப்பினை யில்லவன் பேய்கள் கூடி
ஒன்றினை ஒன்றடித் தொக்க லித்து
பப்பினை யிட்டுப் பகண்டை பாட (பதிகம் 1-11)

பிணங்களை உண்டு களிக்கும் அவை உயிருள்ள மனிதர்களை ஒன்றும் செய்வதில்லை. உண்மையில் அவை மனிதர்களிடம் அஞ்சுகின்றன. ஒரு பிணத்தை உயிருள்ள மனிதன் என்று தவறாக நினைத்த ஒரு பேய் பயந்து போய் ஊரைக் கூட்டிய செய்தியை அம்மையார் நகைச்சுவையோடு விவரிப்பதைக் காண்கிறோம்.

செத்த பிணத்தைத் தெளியா
தொருபேய் சென்று விரல்சுட்டிக்
கத்தி உறுமிக் கனல்விட்
டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்
பத்தல் வயிற்றைப் பதைக்க
மோதிப் பலபேய் இரிந்தோடப் (பதிகம் 2-4)

பேய்கள் பற்றி அம்மையார் கூறியவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது மனித மாமிசம் தின்னும் வழக்கம் உடைய மனிதர்களைத் தான் அக்காலத்து மக்கள் பேய் எனக் கருதினார்கள் எனத் தோன்றுகிறது. அம்மையார் காலத்தில் உண்மையில் அத்தகைய மனிதர்கள் இருந்தார்களா? இருந்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. காரணங்களை ஆராய்வோம்.

பரிணாம வளர்ச்சிப் படிகளில் கீழ்நிலையில் உள்ள மீன் போன்ற சில தவிர, ஏனைய உயிரினம் எதுவும் தன் இனத்தாரின் புலாலை உண்பதில்லை. கொடிய புலி கூட மற்றொரு புலியைத் தின்பதில்லை. வளர்ச்சி நிலையில் மேல் படியில் உள்ள மனிதனுக்கு தன் இனத்தாரின் மாமிசம் இயல்பான உணவு அல்ல. வக்கிர புத்தி உடைய சிலர் எப்பொழுதேனும் அவ்வாறு உண்டிருக்கலாம். மற்ற மனிதர்களுக்கு இது அதிர்ச்சியும் ஆச்சரியமும் பயமும் தரும் செய்தியாக இருக்கும். எனவே அவர்கள் இதைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருப்பர். செவி வழிச் செய்தியாக இது பரவும்போது சொல்பவரின் கற்பனையும் அதில் கலந்து பரவும். அதனால் இது பற்றிய கதைகள் இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன.

டேனியல் டேபோ எழுதிய ராபின்சன் குரூசோ என்னும் புகழ் பெற்ற கதையில் கன்னிபல் எனப்படும் காட்டுமிராண்டி ஆண்கள் தங்களில் ஒருவனை அவ்வப்பொழுது கொன்று தின்பதாகக் கூறுகிறார். இது கதை எழுதியவரின் நாட்டில் அக்காலத்தில் நிலவிய நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது எனக் கொள்ளலாம்.

பிணம் தின்பதால் அதீதமான வலிமை பெற்ற மந்திரவாதிகள் பற்றிய கதைகள் பல நாடுகளில் காணப்படுகின்றன. அவர்கள் பெண்களாகவே இருக்கக் காண்கிறோம்.

சங்கத் தமிழ் இலக்கியங்களில் பேய் மகளிர் பிணம் தின்பதாகப் பல குறிப்புகள் உள்ளன. இங்கு ஆண் பேய்கள் கிடையாது. இந்தப் பேய் மகளிர் அஞ்சுவதற்குரியவராக வர்ணிக்கப்பட்டாலும் அவர்கள் ஊருக்குள் புகுந்து மனிதரைத் தூக்கிச் சென்று கொன்று தின்பதாகச் சொல்லப்படவில்லை. சுடுகாட்டில் கொண்டு வைக்கப்படும் பிணங்களை மட்டுமே அவர்கள் தின்பராம். துணங்கை என்னும் கூத்தினை ஆடி மகிழ்வராம்.

அம்மையார் தான் முதன் முதலில் பேய்களின் செயல்களை எல்லாம் விவரமாக வர்ணித்தவர். பிற்காலத்தில் பேய்களைக் கதா பாத்திரங்களாக்கிப் புனையப்பட்ட பரணி என்னும் சிற்றிலக்கிய வகைக்கு வழிகாட்டியவர் அம்மையாரே.

அம்மையார் கூறும் பேய்களும் பெண்களே. ஒரு ஆண் பேய் கூடக் குறிக்கப் படவில்லை. குழந்தைப் பேய் என்னும் ஒரு புதிய வகையை உருவாக்கிய அம்மையார், சங்க காலத்திலிருந்து தொடர்ந்து வந்த பிணம் தின்னும் பேய் மகளிர் என்னும் கருத்துருவுக்குத் தன் கற்பனை மூலம் தாய்ப் பாசம், பயம் ஆகிய உணர்ச்சிகளைப் படைத்து விரிவுபடுத்தினார் என்பது பெறப்படுகிறது. அம்மையாரைப் பின்பற்றியே பிற்காலத்தில் வந்த ஜயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியில் குழந்தைப் பேய்களை அறிமுகப்படுத்துகிறார்.

119 கொல்வா யோரி முழவாகக் கொள்ளி வாய்ப்பேய் குழவிக்கு
நல்வாய்ச் செய்ய தசைதேடி நரிவாய்த் தசையைப் பறிக்குமால்.

அம்மையார் கொண்ட பேய்வடிவம் சுடலைப் பேய்களுக்கு உண்டான அருவருக்கத்தக்க தோற்றமும் செயல்களும் உள்ளதல்ல. மாறாக, வனப்பு நின்ற தசைப் பொதி கழிந்து, எற்பு உடம்பே ஆன, எல்லோரும் வணங்கும் பெருமை சேர் வடிவமாக இருந்தது. இறைவனின் அருகாமையை விரும்புவதில் மட்டும் தான் இவர் பேயுடன் ஒன்றுகிறார். ஈசன் பேய்களுடன் நடனமாடுகிறார் என 24 முறை கூறும் இவர் தன்னைப் பேய் என 4 முறை கூறிக் கொள்கிறார்.

அவர் தம்மைப் பேய் எனச் சொல்லிக் கொள்ள வேண்டிய நிலை எப்படி ஏற்பட்டது?

பரமதத்தன் சமணச் செல்வாக்குக்கு உட்பட்ட நாத்திகனாக இருந்திருக்கக் கூடும். கடற் பயணத்தில் இடையூறு வந்து விட்டால் என்ன செய்வது என்று அஞ்சி, புறப்படும்போது கடல் தெய்வத்தை வணங்குகிறான். அவன் வேறு வழிபாடு எதுவும் செய்ததாகச் சேக்கிழார் குறிப்பிடவில்லை. அச்சமே கீழ்களது ஆசாரம் என்றபடி இவனுக்கு எதெது அச்சம் தருமோ அதை மட்டுமே வணங்கும் வழக்கம் உடையவன் என அறிகிறோம். அம்மையார் செய்த அதிசயச் செயலைப் பார்த்த பின் இவனுக்கு அவர் பால் அச்சம் ஏற்படுகிறது. இவர் வேறு ஒரு அணங்கு என அவன் கருதியதாகச் சேக்கிழார் குறிப்பிடுகிறார். அணங்கு என்ற சொல்லுக்குப் பெண் என்றும், தீண்டி வருத்தும் தெய்வம் என்றும் பொருள் உண்டு. வேறு ஒரு அணங்கு என்றதால், இரண்டாவது பொருளில், அதாவது மந்திர சக்தி உள்ள பேய் மகள் என்ற கருத்தில் தான் பயன்படுத்தி இருக்கிறான் என்பது தெரிகிறது. பேய் மகள் பற்றிய கதைகள் பன்னெடுங்காலமாகச் சமுதாயத்தில் உலவி வந்த போதிலும் எவரும் நேரில் பார்த்ததில்லை. இப்பொழுது இவன் நேரில் பார்த்து விட்டான். அதனால் தான் அவன் உடனே அவரை விட்டு நீங்கும் கருத்து உடையவனாக அவருடன் தொடர்பு இல்லாமல் சிறிது காலம் வாழ்ந்தான். விட்டு நீங்கும் எண்ணம் அவனுக்கு உடனே தோன்றி விட்ட போதிலும் மற்றவர்க்குச் சொல்லாமல் தருணத்தை எதிர்நோக்கி இருந்தான்.

இவன் கடவுள் ஒருவர் உண்டு என்றும் அவர் எல்லாம் வல்லவர் என்றும் நம்பிக்கை கொண்டவனாக இருந்திருந்தால் அம்மையார் மூலம் இறைவன் இயற்றிய அந்த அதிசயச் செயல் பற்றி மற்றவரிடம் வியந்து கூறி இருப்பான்.

பாண்டி நாட்டில் அவனைத் தேடி உறவினர் புடை சூழ அவர் வந்த பின், அவன் ‘இவர் தாம் மானுடம் அல்லர்’ என்கிறான். அவரிடம் அச்சம் கொண்டு, அவரால் துன்பம் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவரது பெயரைத் தன் மகளுக்கு வைக்கிறான், அவர் காலடியில் வீழ்ந்து வணங்குகிறான். (அணங்கினால் துன்பம் வராமல் இருக்க அணங்கின் படத்தை வீட்டு வாசலில் எழுதி வைக்கும் வழக்கம் இருந்ததாகச் சங்க இலக்கியங்களில் காணப்படும் செய்தியை ஒப்பிடுக.) அப்பொழுது தான் அம்மையாருக்கும் உறவினர்களுக்கும் பரமதத்தன் விட்டு நீங்கியதன் உண்மையான காரணம் புலப்படுகிறது. எனவே புனிதவதியாரை முதன் முதலாகப் பேய் எனக் கருதியது அவரது கணவன் தான் என்பது தெரிகிறது.

அதுவரையில் அம்மையாருக்கு வாழ்வைத் துறக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை. கணவனோடு சேர்ந்து இல்லறம் நடத்த விரும்பித் தான் அவர் அவனை நாடிப் பாண்டி நாட்டுக்குச் செல்கிறார். இப்பொழுது அவன் கருத்துத் தெரிந்தவுடன் உறவினர்களும் கணவன் பேச்சைக் கேட்டு ‘இது என் கொல்’ என்று வியந்தார்களே அன்றி இவரை வாழ்விக்க முயற்சி செய்யவில்லை என்ற நிலையில் பேயாகவே ஆகிவிடுவோமே என்று விரும்புகிறார் அவர். தொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் என்று சேக்கிழார் கூறுவதிலிருந்து அவருடைய உறவினர்களும் அம்மையாரின் பெருமையையும், அவருக்குச் சிவபெருமான் செய்துள்ள அருளையும் உள்ளவாறு உணரவில்லை என்பதை அறிகிறோம். தனித்து விடப்பட்ட அவர் செல்லும் வழியில் அவரைக் கண்டவர்களும் வியப்புற்று அஞ்சி அகன்று ஓட, ‘அண்ட நாயகனார் என்னை அறிந்தவராக இருக்கும்போது, வாய்மை அறியாத மற்ற மக்களுக்கு யான் எவ்வுருவானால் என்ன’ என்று கருதுகிறார் அவர். அவரைக் கண்டு அஞ்சி ஓடாதவர்களும் இருந்தனர். அத்தகையோர் மூலமாகத் தான் அவரது பாடல்கள் மற்றவரிடையே பரவின.

தன்னை அவர்கள் பேய்மகள் எனக் கருதுகிறார்கள் என்பதை இவர் ஒரு அவமதிப்பாகக் கருதாமல் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டார். தன்னைச் சங்கரனின் பேய்க் கணங்களில் ஒன்றாகக் கருதிக் கொண்டார். தன் அந்தாதி, இரு பதிகங்கள் ஆகிய மூன்றின் கடைக்காப்பிலும் புனிதவதி என்ற தன் இயற் பெயரைக் கூறாமல் காரைக்கால் பேய் என்றே கூறிக் கொள்கிறார்.

அப்பரும் சம்பந்தரும் அம்மையாரைப் பற்றி எந்தக் குறிப்பும் தரவில்லை. தமக்கு முன்னும் தங்கள் காலத்திலும் வாழ்ந்த பல சிவனடியார்களைக் குறிப்பிட்ட அவர்கள் காரைக்காலுக்கு மிக அருகில் உள்ள திருத்தெளிச்சேரி, திருநள்ளாறு ஆகிய தலங்களில் பாடப்பட்ட பாடல்களில் கூட அம்மையாரைக் குறிப்பிடவில்லை. அம்மையார் முத்தியடைந்த இடம் என்பதால், திருவாலங்காட்டில் சம்பந்தர் நடக்கவே தயங்கினாராம். அந்த ஊரில் பதிகம் பாடுகையில் பழையனூர் நீலியின் கதையைச் சொல்கிறாரே அன்றி அம்மையாரைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை. இது ஆய்வுக்குரிய செய்தியாகும். அக்காலம் வரை பெரும்பாலான மக்கள் அம்மையாரின் சிறப்பை உணராமல் அவரைப் பேய் மகள் என்று கருதி ஒதுக்கி வைத்திருந்தனர் என்று தான் கருத வேண்டி உள்ளது.

சுந்தரமூர்த்தி நாயனார் தான் முதன் முதலாக அவரைச் சிவனடியாராக ஏற்றுக் கொண்டவர். அவரும் தன் திருத்தொண்டத் தொகையில் இவரைப் பேயார் என்றே குறிப்பிடுகிறார். காலம் செல்லச் செல்ல, அம்மையாரின் சிறப்புக்குப் பரமதத்தன் கொடுத்த இந்த இழிபெயர் தகாது என்ற கருத்து வளர்ந்தது என்பதைப் பிற்கால நூல்களில் இவர் பேயார் என்று கூறப்படாததிலிருந்து அறிகிறோம். நம்பியாண்டார் நம்பி தன் திருத்தொண்டர் திருவந்தாதியில் இவரைக் காரைக்கால் மேய குலதனம் என்று கூறுகிறார். சேக்கிழார், அம்மையார் என்று மட்டும் சொல்கிறார்.

Monday, October 18, 2010

அம்மையாரின் ஆலங்காட்டுப் பயணம்

கணவனாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்ட அம்மையார் பாண்டிய நாட்டிலிருந்து கைலைக்குச் சென்றதாகவும் பின் அங்கிருந்து திருவாலங்காடு வந்து முத்தி அடைந்ததாகவும் சேக்கிழார் கூறுகிறார். அவர் கைலைக்குச் சென்றதாகக் கூறுவது ஒரு உபசார வழக்காக இருக்கக் கூடும். ஏனெனில் அம்மையார் கைலையை இறைவனின் இருப்பிடமாகக் கூறவும் இல்லை, கைலையைக் காண வேண்டும் என்று அவர் விரும்பியதற்கான அடையாளங்களும் அவரது பாடல்களில் இல்லை. பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்டு வடக்கு முகமாகச் சென்றதைத் தான், கைலை நோக்கிச் சென்றதாகச் சேக்கிழார் கூறியதாகக் கொள்ள வேண்டும்.

அவர் கால் போன போக்கில் அலைந்து, செல்லும் இடங்களில் எல்லாம் இறைவன் புகழை வாய் ஓயாது உரைத்திருப்பார் என்பதை ஊகிக்கலாம். பலர் அவரைப் பேய் எனக் கருதி அஞ்சி ஓடினாலும் அவரைப் போற்றி ஆதரித்தோரும் இருந்திருக்க வேண்டும். அவர்கள் மூலமாகத் தான் அவரது பாடல்கள் இன்று நமக்குக் கிடைத்துள்ளன.

இறைவன் ஆலமரங்களிடையே நடனமாடுகிறான் என்ற அவரது கருத்து மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றுப் பரவியதால் பல ஊர்கள் ஆலங்காடு என்று பெயரிடப்பட்டன. அத்தகைய இடங்களில் அவர் அதிக நாட்கள் தங்கி இறை வழிபாடு செய்திருப்பார். அங்கு அவரால் தாக்கம் பெற்றுச் சமணம் துறந்து சைவ நெறியை மேற்கொண்டோர் தொகை மிகுதியாக இருக்க வேண்டும். அவ்வகையில் இந்த ஆலங்காடுகள் சைவத்தின் நாற்றங்காலாகப் போற்றத் தக்கன.

இந்தக் கருதுகோளுக்கான ஆதாரம், தலை ஆலங்காடு என்ற ஊர்ப் பெயர் தான். இவ்வூர் திருவாரூருக்கு அருகில் உள்ளது. இது அப்பர் தேவாரம் பெற்ற தலம். இங்கு இறைவன் நடனபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தமிழ்ப் பெயர்களை ஸம்ஸ்கிருதத்தில் மாற்றும்போது நேருக்கு நேராகத் தான் மொழிபெயர்ப்பது வழக்கம். அவ்வகையில் இரு திருவாலங்காடுகளும் வடாரண்யம் என்று கூறப்படுகின்றன. (வட- ஆல், அரண்யம்- காடு) ஆனால் தலையாலங்காடு நர்த்தனபுரி என்று கூறப்படுகிறது. எனவே தலை ஆலங்காடு என்று பெயரிடப்பட்டது இறைவனின் ஆடற்கோலத்தை நினைவு கொண்டே என்ற முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. தலை என்ற அடைமொழி இது அம்மையாரின் பாடலை ஒட்டிப் பெயர் பெற்ற முதல் ஊராக இருக்கக் கூடும் என்பதைத் தெரிவிக்கிறது. மற்ற ஆலங்காடுகளிலிருந்து வேறுபடுத்துவதற்காக இது தலை ஆலங்காடு என்று பெயரிடப் பட்டிருக்கலாம்.

அம்மையார் தன் முதல் பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் திருவாலங்காடு என்னும் இடத்தைக் குறிப்பிடுகிறார். தேவார ஆசிரியர்களும் பிறரும் ஒரு ஊரை வர்ணிக்கும் போது அந்த ஊரின் சிறப்பு அம்சமாக- அருகிலுள்ள ஆற்றின் பெயர், மலை, கடல், சோலைகள், மாட மாளிகைகள், அந்தணர்கள் மிகுதியாக வாழ்வது- இப்படி ஏதேனும் ஒன்றைக் குறிப்பிடுவது வழக்கம். சுடுகாட்டுச் சூழலை வர்ணித்து விட்டு இத்தகைய திருவாலங்காட்டில் எங்கள் அப்பன் ஆடுகிறான் என்று அம்மையார் காட்டும் காட்சிகள் எல்லா ஊர்ச் சுடலைகளுக்கும் பொருந்துவதாக உள்ளன. அவர் எந்தச் சுடலைக்கும் சென்றதில்லை என்பதும் மக்கள் பேசிக் கொள்வதை வைத்துத் தான் அவர் அதை விவரிக்கிறார் என்பதும், ‘நீ இரவில் தீயாடும் இடத்தை எனக்கு ஒரு நாள் காட்டுதியோ’ என்று கேட்பதிலிருந்து அறியலாம்.

மாங்காடு, மாங்குடி, புளியங்குடி, வேலங்குடி, ஆலங்குடி என்று அந்தந்த ஊரில் மிகுதியாக உள்ள மர வகையின் அடிப்படையில் ஊருக்குப் பெயரிடுவது வழக்கம் தான் என்றாலும் ஆலங்காடு எனப் பெயரிடப்பட்ட ஊர்கள் அமைந்திருக்கும் வரிசை அமைப்பைப் பார்த்தால் அவை மரத்தின் காரணமாகப் பெயரிடப்பட்டிராமல் அம்மையாருடன் தொடர்பு கொண்டமையால் அப்பெயர் பெற்றிருக்கலாம் என்று நினைக்க இடம் ஏற்படுகிறது. நான் அறிந்தவரை தமிழ்நாட்டில் ஆலங்காடு என்று பெயர் பெற்ற ஊர்கள் 7 உள்ளன. அவையாவன-

ஆலங்காடு 1- அதிராம்பட்டினத்திற்கு மேற்கில் 30 கி.மீ. தொலைவில் புதுக்கோட்டை சாலை அருகில் உள்ளது. இவ்வூரில் சிவன் கோவில் இல்லை. 5 கி.மீ. தொலைவில் ஆலங்குடி என்னுமிடத்தில் உள்ளது. இது முன்னாட்களில் பாண்டிய நாட்டின் பகுதியாக இருந்திருக்கலாம்.

ஆலங்காடு 2- முத்துப்பேட்டை- திருத்துறைப்பூண்டி சாலையில் கடற்கரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு அண்மைக் காலத்திய சிவன் கோவில்கள் இரண்டு உள்ளன.

ஆலங்காடு 3- தலையாலங்காடு. நாகப் பட்டினத்திலிருந்து 30 கி.மீ. மேற்கில் திருவாரூர்- கும்பகோணம் சாலையில் உள்ளது. அப்பர் பாடல் பெற்றது.

ஆலங்காடு 4- தரங்கம்பாடியிலிருந்து 30கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் உள்ளது. கோவில் மூன்றாம் குலோத்துங்கன் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. முன்னர் அரச ஆதரவு பெற்றிருந்ததாலும், தற்போது திருவாவடுதுறை ஆதீனத்தால் பராமரிக்கப்படுவதாலும் நல்ல நிலையில், அளவிலும் பெரியதாக உள்ள இக்கோவில் திரு என்ற அடைமொழியுடன் கூடியதாக உள்ளது.

ஆலங்காடு 5- காரைக்கால்- சீர்காழி சாலையில் கருவிழந்தநாதபுரம் அருகில் உள்ளது. அங்கு ஒரு சிவன் கோவில் இருந்தது. இன்று அது பற்றி ஊர் மக்களில் எவரும் அறியவில்லை. ஓய்வு பெற்ற ஆசிரியர் ரத்தினசாமி என்ற முதியவர் மட்டுமே இவ்வூர் இங்குள்ள சிவன் கோவிலை ஒட்டியே ஆலங்காடு எனப் பெயரிடப்பட்டது என்பதை அறிவித்தார். அவரது உறவினராகிய வேல்முருகன் என்ற இளைஞருக்குச் சொந்தமான கருப்பங் கொல்லையின் நடுவில் ஒரு சிவலிங்க பாணம் மட்டும் உள்ளது. அங்கு கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் புதையுண்டு இருப்பதாகக் கூறுகிறார்.

ஆலங்காடு 6- சீர்காழி– பழையார் பாதையில் உமையாள் பதிக்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில் இறைவன் பெயர் அவுட்டீஸ்வரர் எனச் சொல்லப்படுகிறது. ஆலங்காட்டீஸ்வரர் என்பதன் மருவாக இருக்கலாம்.

ஆலங்காடு 7- சென்னைக்கு மேற்கில் 60 கி.மீ. தொலைவில் அரக்கோணம் சாலையில் உள்ளது. இதுவும் திரு என்னும் அடைமொழி பெற்றது. அம்மையார் இந்தத் தலத்தில் முத்தி அடைந்ததாகச் சேக்கிழார் கூறுகிறார். பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்ட அம்மையார் மேற்கண்ட வரிசைப்படியான தலங்கள் வழியாகப் பயணம் செய்து இறுதியாக இங்கு வந்து சேர்ந்ததாகக் கருதலாம்.

மேற்கண்ட ஏழு ஊர்களில் ஐந்தாவது ஆறாவது நீங்கலாக மற்ற ஐந்தும் வரைபடத்தில் கிட்டத்தட்ட ஒரு நேர்கோட்டில் அமைந்திருப்பதைப் பார்க்கும்போது இது அம்மையார் கடந்து வந்த பாதையாக இருக்கலாம் என்ற எண்ணம் வலுப்படுத்துகிறது. அந்த இரண்டு மட்டும் ஏன் ஒதுங்கி உள்ளன என்பது தெரியவில்லை.

அம்மையாரின் பயணப் பாதையாக இதைக் கருதுவதில் மேலும் ஒரு தடை உள்ளது. இவற்றில் முதல் ஆறு தலங்களும் சோழ மண்டலக் கடற்கரை அருகில் அமைந்துள்ளன. அவை ஒன்றுக்கொன்று அருகாமையில்- ஓரிரு நாள் நடைப் பயணத்துக்கு உட்பட்டதாக- உள்ளன. ஆறாவதாகச் சொல்லப்பட்ட ஆலங்காட்டிற்கும் ஏழாவதாகச் சொல்லப்பட்ட திருவாலங்காட்டிற்கும் இடையே சுமார் 200 கி.மீ. உள்ளது. சோழ மண்டலத்து மக்கள் அம்மையாரை வரவேற்று உபசரித்துத் தங்கள் ஊர்களுக்கு ஆலங்காடு எனப் பெயரிட்டுக் கொண்ட அளவுக்கு வடக்கே உள்ள மக்கள் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை.

இதற்கு ஒரு காரணம் சொல்லலாம். இவ்விடங்கள் பல்லவர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருக்கக் கூடும். பல்லவர்கள் அப்பரால் போதிக்கப்படு முன் சமணர்களாகவே இருந்தனர் என்பது அறிந்த விஷயம். இங்கெல்லாம் சமணம் மிக அதிகமாக வேரூன்றி இருக்கக் கூடும்.

இந்தச் சோழநாட்டுத் திருவாலங்காட்டுக்கும் பல்லவ நாட்டு திருவாலங்காட்டுக்கும் இடையில் அமைந்துள்ள தில்லை தான் ஆடற்பெருமானின் தலைநகரமாக அம்மையாருக்குப் பின் விளங்கியது.