Pages

Thursday, February 20, 2014

குலதெய்வம்


      ரயில் சென்னையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சுந்தரேசனின் மனம் மும்பையின் நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் தான் எத்தனை மாற்றங்கள்!  இன்று ரயிலில் பயணம் செய்வோம் என்று நேற்று இந்நேரம் அவன் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. வலுக் கட்டாயமாக அல்லவா என்னை ரயில் அனுப்பி வைத்து விட்டாள். என் நலத்தை விரும்பித் தான் சொல்கிறாள். எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து தப்பினால் சரி என நினைத்துக் கொண்டான்.
      நேற்று ஜோதிடரைச் சந்தித்தது இவ்வளவு நீண்ட பயணத்தில் கொண்டு விடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. தொழில் மந்தம் என்பது தற்போது உலகில் எல்லா நாடுகளுக்கும் உள்ள பிரச்சனை. ஆனால் இவன் விஷயமே வேறு. தென்னை மரத்தில் தேள் கொட்ட, பனை மரத்தில் நெறி கட்டியது என்கிற மாதிரி அமெரிக்காவிலிருந்து இவனுடைய சிறு தொழிலுக்கு மூலப் பொருள் அனுப்பி வந்த கம்பெனி மூடப்பட, இவன் தொழில் படுத்து விட்டது. அதே பொருளை உள் நாட்டில் ஒரு நிறுவனத்தில் வாங்கப் போய் இவனுடைய சரக்கின் தரம் குறைந்தது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராகக் கழன்று விட்டனர். வங்கியில் முடிந்த அளவுக்குக் கடன் வாங்கியாகிவிட்டது. தொழிலாளர்களையும் வேலையை விட்டு நீக்க முடியவில்லை. அடுத்த மாதம் சம்பளம் கொடுக்க வழி இல்லை என்ற நிலையில், அந்தப் பாலக்காட்டு ஜோதிடரைப் பற்றி அவன் மனைவி சொன்ன போது அரை மனதாக ஒப்புக் கொண்டான். அவனுக்குப் பொதுவாக, ஜோதிடம் மாந்திரீகம் இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என்றாலும் துன்பம் மிகும்போது யார் எது சொன்னாலும் கேட்கக் கூடிய மன நிலைக்கு வந்து விடுகிறோம் அல்லவா?
      ஜோதிடர் சோழி போட்டுப் பார்த்து என்னென்னவோ கணக்குகள் போட்டு, நீங்கள் குல தெய்வத்தை மறந்து விட்டீர்கள். அதனால் தான் உங்களுக்கு இத்தனை தொல்லைகள் என்றார். அவனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. இவன் குல தெய்வத்தை மறந்ததனால் அமெரிக்கக் கம்பெனி மூடப்பட்டது என்பது அறிவுக்குப் பொருத்தமாக இல்லை. என்றாலும் எதிர் வாதம் செய்யும் மன நிலையில் அவன் இல்லை.
      குல தெய்வம் என்றால் என்ன?” சோதிடரைக் கேட்டான். உங்கள் குலத்துக்கு என்று ஒரு தெய்வம் இருக்கும். உங்கள் மூதாதையர் வணங்கி வந்திருப்பார்கள். வீட்டில் பெரியவர்கள் அல்லது உங்கள் தாயாதி பங்காளிகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொன்னார்.
      தெய்வம் ஒன்று தான், அதைப் பலரும் பல பெயர்களில் வணங்குகிறார்கள் என்பது தான் அவனுடைய கல்வி அவனுள் ஏற்படுத்தியிருந்த நிலைப்பாடு. இவர் ஏதோ உன்னுடைய குலத்துக்கு என்று ஒரு தனித் தெய்வம் இருக்கிறது என்கிறார். அப்படியே இருந்தாலும் வணங்காமல் விட்டு விட்டதால் அது துன்பம் கொடுத்துப் பழி வாங்குகிறது என்றால் அதைப் போய்த் தெய்வம் என்று எப்படி ஏற்றுக் கொள்வது? அவன் குழம்பிக் கொண்டிருந்தான்.
      அவன் மனைவிக்கு அந்தக் குழப்பம் எதுவும் இல்லை. வீட்டுக்கு வந்தவுடன் நம் குடும்பத்துக்குக் குல தெய்வம் எது?” என்று அவனுடைய அம்மாவிடம் கேட்டாள்.
      கொட்டூர் ஐயனார்னு சொல்வாங்க. நானே ஒரு தடவை தான் கல்யாணம் ஆன புதுசில் போயிருக்கிறேன். இவனுடைய அப்பாவுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என் மாமனார் வற்புறுத்தி கல்யாணம் ஆன கையோடு அழைத்துப் போனார்.
                அது எங்கே இருக்கு?’
                மாயவரம் போய் பஸ்ஸிலே போனோம். எந்தப் பக்கம்னு தெரியல்லே.
      மணி பத்து ஆயிற்று. கால தாமதம் செய்யாமல் அவனது மனைவி தத்காலில் தாதர் எக்ஸ்பிரஸ்ஸில் சென்னைக்கு ஒரு டிக்கெட் புக் செய்தாள். கூகுள் ஆண்டவர் உதவியால் மாயூரம் என்ற மாயவரம் என்பது தற்போது மயிலாடுதுறை என்று அழைக்கப்படுகிறது என்பதையும் சென்னையிலிருந்து நாள் பூராவும் அடிக்கடி பஸ் போகிறது என்ற விவரத்தையும் தெரிந்து கொண்டாள். மயிலாடுதுறையில் இறங்கி கொட்டூருக்குப் போகும் வழியை விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். நான் நாளைப் பயணத்துக்கான ஆகாரம் தயார் செய்கிறேன் என்று உள்ளே போய்விட்டாள். இவனைப் பேசவே விடவில்லை.
      அவன் அம்மா முழு விவரத்தையும் தெரிந்து கொண்டு, போய்ப் பார்த்து விட்டு வா. எந்தத் தெய்வமாவது கண்ணைத் திறக்கட்டும் என்று சொன்னாள்.
      நம்பிக்கை இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லாததால் அவன் இதற்கு உட்பட்டான். இரவு தாதரிலிருந்து கிளம்பியாயிற்று. பன்னிரண்டு மணி நேரம் பயணம் பெரும்பாலும் தூக்கத்தில் போய் விட்டது. இன்னும் பன்னிரண்டு மணி நேரம் பகல் பொழுது போக வேண்டும். இதுவே சென்ற வருடமாக இருந்தால் அவன் ரயில் பயணத்தில் நேரத்தை வீணாக்கமாட்டான். விமானத்தில் வந்து போய் விடுவான். ஆனால் இன்று நிலைமை வேறு. விமானக் கட்டணத்துக்கு உள்ள காசில் ஒரு தொழிலாளிக்குச் சம்பளம் கொடுக்கலாம். பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டான்.
      காலையில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இறங்கி பல பேரை விசாரித்த பின் ஒரு நடத்துனர் சொன்னார், கொட்டூர் தானே? ஏறி உக்காருங்க.
      அரை மணி கழித்து, கொட்டூர் நிறுத்தத்தில் இறக்கி விட்டு விட்டு பேருந்து போய் விட்டது. இறங்கினவன் திரு திரு என்று விழித்தான். கண்ணுக்கெட்டியவரை வீடா வேறு கட்டிடங்களா காணப்படவில்லை. எங்கு பார்த்தாலும் பசுமையான வயல்கள் தான். இப்படி நடுக்காட்டில் இறக்கி விட்டுப் போய் விட்டார்களே, விசாரிக்கலாம் என்றால் ஒரு மனித ஜீவனைக் கூடக் கண்ணில் காணோமே என்று அலுத்துக் கொண்டான்.
      அங்கே ஒரு மண் சாலை பிரிந்து சென்றது. அதன் முகப்பில் ஒரு காங்கிரீட் முகப்பு வளைவு தென்பட்டது. அதில் கொட்டூர் ஐயனார் கோவில்  கும்பாபிஷேக விழா வளைவு என்று எழுதி இருந்தது. இந்தச் சாலையில் போக வேண்டும் போல் இருக்கிறது. எவ்வளவு தூரம் போக வேண்டுமோ, சரி போவோம். வந்தாயிற்று. எது வந்தாலும் அனுபவிக்கத் தான் வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நடந்தான்.
      ஊர் எல்லையிலேயே ஐயனார் கோவில் இருந்தது. பூட்டி இருந்தது. அங்கே விளையாடிக் கொண்டிருந்த பையன்களிடம் கேட்டான். இந்தக் கோவில் எப்போ திறப்பாங்க?’ 
      பூசாரியார் வீட்டுக்குப் போய்க் கேளுங்க. வாங்க அழைச்சிட்டுப் போறேன்.
      பூசாரி வீடு மண் குடிசை. முன்னும் பின்னும் தோட்டம். கொல்லையில் மாட்டுக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த பூசாரி சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தார்.
      வாங்க, எங்கேருந்து வரீங்க?’
      மும்பையிலிருந்து. இந்த ஐயனார் எங்களுக்குக் குல தெய்வம்னு சொன்னாங்க. பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்.
      நீங்க இது வரைக்கும் இங்கே வந்ததில்லையே? யாரு வீடுன்னு தெரியல்லியே. உங்க அப்பா பேரு என்ன?”
                ராமநாதன்.
                ராமநாதனா? தெரியல்லியே. உங்க தாத்தா பேரு?’
                சாம்பசிவம்.” 
                ஓகோ, நம்ம சாம்பசிவம் ஐயா பேரனா நீங்க? ரொம்ப வருஷத்துக்கு முந்தி உங்க அப்பா ஒரு தடவை வந்துட்டுப் போனாரு. ரொம்ப நாளா குல தெய்வத்தை மறந்துட்டீங்க. பரவாயில்லே. இப்பவாவது நினைச்சுக்கிட்டு வந்தீங்களே. இந்த ஐயனார் ரொம்ப சக்தி வாய்ஞ்சவருங்க. ஒரு நடை வந்துட்டுப் போய்ட்டால் நினைச்ச காரியம் நடக்கும். நடத்திக் குடுத்துடுவாரு.
      அபிஷேகம் பண்ணணும். எவ்வளவு ஆகும்?”
      காசு கிடக்குங்க. வீட்டிலே மாடு கறக்குது. பால் எடுத்துக்கலாம். கொல்லையிலே தென்னை மரம் இருக்கு. இளநீ பறிச்சுக்கலாம். நல்லெண்ணை மட்டும் கால் லிட்டர் வாங்கினாப் போதும். அதுக்குள்ள காசைக் குடுங்க. அப்புறம் காசு இருந்தா எனக்கு ஏதாவது தட்சிணை கொடுங்க. உங்க தாத்தா வருஷம் தவறாமே வந்துட்டுப் போவாரு. அவரு இந்நேரம் போயிருப்பாருன்னு நினைக்கிறேன். இருந்தா வராம இருக்க மாட்டாரு. உங்க அப்பா அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா?”
      அப்பா போய் இருபது வருஷம் ஆவுது. அம்மா மும்பையிலே என்னோட இருக்காங்க.
      சரி. பல் விளக்கீட்டிங்களா?”
      இல்லே. மயிலாடுதுறையிலே பஸ் ஏறி நேரே இங்கே தான் வரேன்.
      சரி. பையை இங்கே வைங்க. பையனை அனுப்பறேன். தோப்புக்குப் போய்ட்டு வாங்க. அங்கேயே குளத்திலே பல் விளக்கிட்டு வாங்க. வந்ததும் டீயைக் குடிச்சிட்டு கோவிலுக்குப் போகலாம். கோவில் கிணத்திலேயே குளிச்சிடலாம். மத்தியானம் ஒரு மணிக்குள்ளே பூசை முடிஞ்சு பிரசாதம் வாங்கிக்கலாம். இந்த ஊரிலே ஓட்டல் கீட்டல் கிடையாது. அதனாலே இந்தப் பிரசாதம் தான் மதியத்துக்கு உங்களுக்கு. திரும்ப மும்பை தான் போறீங்களா, இங்கே பக்கத்திலே வேறே வேலை இருக்கா?”
      இன்னிக்கி சாயங்காலம் மயிலாடுதுறைலே பஸ் ஏறி நாளைக் காலைலே ஏழு மணிக்கு சென்னையிலே ரயிலைப் பிடிக்கணும். 
      பூஜைகள் எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. பத்து மணிக்கு நாளைய தாதர் எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் புக் செய்யலாம் என்று நினைத்திருந்தான். அங்கே சுற்றுவட்டாரத்தில் ப்ரௌசிங் சென்டர் என்று எதுவும் இல்லை என்பது தெரிந்தது. சரி, பரவாயில்லை. நாளை அன்ரிசர்வ்டில் போக வேண்டியது தான் என்று தீர்மானித்துக் கொண்டான்.
      முப்பத்தைந்து வருடமாகத் தன்னை வந்து பார்க்கவில்லை என்பதற்காக எப்படி எல்லாமோ காய்களை நகர்த்தித் தன்னை இங்கு வரவழைத்த அந்த ஐயனாரைத் தரிசனம் செய்து கொண்டான். கோவிலிலேயே சாப்பிட்டுவிட்டுக் கிணற்றங்கரையில் கை கழுவி விட்டு வரும்போது தான் ஐயனாருக்கு இன்னும் கோபம் தணியவில்லை என்பது தெரிந்தது. படி தடுக்கிக் கீழே விழுந்து விட்டான். கையை ஊன்றி எழுந்திருக்க முயலும்போது கையில் பயங்கர வலி.
      பதறிக் கொண்டு ஓடி வந்தார் பூசாரி. படி இருக்கு, பார்த்து வரக்கூடாதா? சம தரையிலேயே நடந்து பழகி இருப்பீங்க போல. மெதுவா எழுந்திரிங்க.
      எழுந்தான். தாங்க முடியாத வலி. கையைத் தூக்க முடியவில்லை. பூசாரி பார்த்தார். கை எலும்பு முறிஞ்சிருக்குங்க. அது தான் இந்த வலி வலிக்குது. வலது கையாச்சே. ரொம்பக் கஷ்டமா இருக்குமே. வாங்க வீட்டுக்குப் போவோம். மருந்து போட்டுக்கலாம்.
                இங்கே பக்கத்திலே டாக்டர் யாராவது இருக்காங்களா?”
      டாக்டரா, மயிலாடுதுறைக்குத் தாங்க போகணும். எலும்பு முறிவுக்கு டாக்டர் கிட்டே போய்ப் பிரயோஜனமில்லீங்க. நல்ல வேளை, நாளைக்குப் புதன் கிழமை. தென்னமரக்குடி வைத்தியரு இருப்பாரு. நீங்க இங்கே தங்கிடுங்க. காலையிலே நான் அழைச்சி்ட்டுப் போறேன்.
      நடந்தாலே கை அதிருது. ஒரு சைக்கிள்  கிடைச்சுதுன்னா என்னை மெதுவா பஸ் ஸ்டாப்பு வரைக்கும் கொண்டு விட்டிருங்க. நான் பஸ் புடிச்சு மயிலாடுதுறையிலே டாக்டர் யார் கிட்டேயாவது காட்டிக்கிறேன்.
      தம்பி, நான் உங்களுக்கு நல்லதுக்குச் சொல்றேன். டாக்டர் கிட்டே போனீங்கன்னா கையைக் கோணல் மாணலா வெச்சு மாவுக் கட்டு போட்டுடுவாங்க. அப்புறம் ஆயுசுக்கும் கை வளைஞ்சே இருக்கும். அப்புறம் உங்க சௌகரியம்.
      அதற்குள் வீடு வந்து சேர்ந்தது. மும்பைக்காரருக்கு கை முறிஞ்சு போச்சுங்கிற தகவல் கிடைச்சு தெரு வாசிகள் அனைவரும் கூடிவிட்டார்கள். எல்லோரும் ஒரு முகமாக, டாக்டர் கிட்டே போகாதீங்க தம்பி. எந்தெந்த ஊரிலே இருந்தோ இங்கே தென்னமரக்குடிக்கு வராங்க. டாக்டர் கிட்ட போய் கையைக் கோணலாக்கிக்கிட்டவங்க இங்கே வந்து சரி பண்ணிட்டுப் போறாங்க. இந்த வட்டாரத்திலே விவரம் தெரிஞ்சவங்க இங்கே தான் வருவாங்க என்று உரிமையோடு உபதேசம் செய்தார்கள்.
      வேறு வழி இல்லை. பதினெட்டாம் நூற்றாண்டின் மூட நம்பிக்கைகளிலேயே  வாழும் இந்த ஊரில் மாட்டிக் கொண்டு விட்டோம். இந்த மக்களின் தயவு இல்லாமல் இங்கே எதுவும் நடக்காது. இவர்கள் சொன்னதைக் கேட்டுத் தான் ஆகவேண்டும்.
      பூசாரி கையில் ஏதோ எண்ணையைத் தடவி விட்டு ஒரு பழைய துணியைக் கொண்டு கட்டுப் போட்டார். கையை அசைக்காமல் இருக்க கழுத்திலே சேர்த்துக் கட்டிவிட்டார். வீட்டுத் திண்ணையில் ஒரு கயிற்றுக் கட்டிலைப் போட்டு, இதிலே படுத்துங்க. காலைலே பொழுது விடிஞ்சதும் போகலாம் என்றார்.
      மறுநாள் காலையி்ல் பூசாரி அவனைச் சைக்கிளில் பின்புறம் உட்கார வைத்து பஸ் நிறுத்தத்துக்கு அழைத்து வந்தார். மூன்று பஸ் மாறி மெதுவாகத் திருப்புகலூர் வந்தார்கள். ஒரு ஆட்டோ பிடித்து தென்னமரக்குடியை நோக்கிப் போனார்கள். போகிற வழியில் திருப்புகலூர் பாடல் பெத்த தலங்க. அப்பர் முத்தி அடைஞ்ச ஊரு. இதோ வருது பாருங்க, திருக்கண்ணபுரம். சௌரிராஜப் பெருமாள். கோவிலும் பெரிசு. பாருங்க. குளமும் பெரிசு. தென்னமரக்குடி வைத்தியம் என்று பல ஊர்களில் பல பேர் வைத்தியம் செய்றாங்க. அது எல்லாம் போலி. இப்போ நாம போற இடம் தான் உண்மையான பரம்பரை வைத்தியர் என்று ஏதேதோ சொல்லிக் கொண்டு வநதார் பூசாரி. இவனுக்கு அதை எல்லாம் கேட்கக் கூடிய மன நிலை இல்லை.
      ஒரு வாய்க்கால் கரையில் ஆட்டோ நின்றது. இரண்டே வீடுகள் தான் அங்கே. ஒரு வீட்டு வாசலில் ஆளோடியில் மக்கள் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். பலர் வெளியில் நின்று கொண்டும் அடுத்த வீட்டில் இருந்த டீக்கடையில் டீ குடித்துக் கொண்டும் இருந்தார்கள்.
      சட்டை அணியாத வைத்தியர் வந்து ஆளோடியில் தரையில் உட்கார்ந்தார். நோயாளிகளும் உதவிக்கு வந்தவர்களும் அவரைச் சுற்றி இருந்தார்கள். அந்த சூழ்நிலையைப் பார்த்தால் அது வைத்திய சாலை என்ற எண்ணமே ஏற்படவில்லை அவனுக்கு.
      ஒவ்வொருவராகப் பார்த்து வெளியேற வெளியேற கூட்டம் உட்கார்ந்தபடியே முன் நோக்கி நகர்ந்தது.          இவரிடம் வைத்தியம் செய்து என்ன ஆகப் போகிறதோ என்று பயம் ஏற்பட்டது. பூசாரிக்குத் தெரியாமல் பஸ் ஏறி மயிலாடுதுறை போய் விடலாமா என்று தோன்றியது.
      இவனுடைய முறை வந்தது. கையை அமுக்கிப் பார்த்துவிட்டு, எலும்பு ஒடஞ்சிருக்குங்க. சிம்பு வெச்சுக் கட்டுப் போடறேன். பெசல் எண்ணை தரேன். கட்டின் மேலேயே எண்ணையை தினம் மூணு வேளையும் போட்டு வாங்க. அடுத்த புதன்கிழமை வாங்க. வரும் போது ஒரு கோழி முட்டையும், கொஞ்சம் உளுத்தம்மாவும் கொஞ்சம் வெள்ளைத் துணியும் கொண்டு வாங்க என்றார். மூங்கில் சிம்புகளை வைத்துக் கட்டுப் போட்டார்.
      எண்ணை எவ்வளவு வேணும் என்று வைத்தியர் கேட்டதற்கு அம்பது ரூபாய்க்குக் குடுங்க என்றார் பூசாரி. ஃபீஸ் என்று இழுத்தான். எண்ணைக்கு மட்டும் தாங்க காசு வாங்கறது என்றார் வைத்தியர்.
      இன்னும் ஒரு வாரம் இங்கே தங்கணுமா? போச்சு. எல்லாத் திட்டங்களும் மண். தொழிற்சாலை ஏற்கெனவே தள்ளாடிக் கொண்டு இருக்கிறது. நானும் இல்லாவிட்டால் சர்வநாசம் தான். ஐயனார் மேல் கோபம் கோபமாக வந்தது. வந்து பார்க்கவில்லை என்று தண்டனை. வந்து பார்த்ததற்கும் தண்டனையா? கை வலியை விட மன வலி தான் பெரிதாக இருந்தது.
      பூசாரி வீட்டுக்கு அழைத்து வந்தார். கைதி போல உணர்ந்தான். இன்னும் ஒரு வாரம் நீங்க என் வீட்டிலேயே தங்கிடுங்க. ஊருக்குப் போன் போட்டுச் சொல்லிடுங்க. ஒண்ணும் யோசனை பண்ணாதீங்க. உங்க தாத்தா குடும்பமும் எங்க தாத்தா குடும்பமும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணா இருந்தவங்க. சந்தோஷமா இருங்க. ஐயனாரு கை விட மாட்டாரு.
      என்ன சொல்வது என்று தெரியவில்லை. வீட்டுத் திண்ணையில் கட்டிலே கதியாகக் கிடந்தான். முடிந்த போது ஐயனார் கோவிலில் போய் உட்கார்ந்தான். ஊர் மனிதர்கள் அடிக்கடி வந்து நலம் விசாரித்து விட்டுப் போனார்கள். இந்தக் கிராம வாசிகளுக்குத் தான் எத்தனை பாசம். நான் இவர்களுக்கு என்ன செய்தேன் என்று நினைக்கிறான். ஏதேனும் செய்தால் தான் பாசம் காட்ட வேண்டும் என்ற வணிகக் கலாசாரத்தில் வளர்ந்தவன் அவன்.
      பூசாரி கோவில், வயல் வேலைகளுக்குப் போன நேரம் போக மீதி நேரத்தில்  இவனை நன்றாகக் கவனித்துக் கொண்டார். வேளா வேளைக்கு அவரது மனைவி சாப்பாட்டை ஒரு கிண்ணத்தில் போட்டு ஸ்பூனுடன் கொடுத்தாள். இடது கையால் சாப்பிடப் பழகிக் கொண்டான்.
      பொழுது போக வேண்டுமே.
      வீட்டிலே டீவி இருக்குங்க. கரண்ட் தான் கிடையாது. ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம் தான் வரும். அதுவும் எப்ப வரும்னு சொல்ல முடியாது.
      அவனுக்கு ஒரே பொழுது போக்கு பூசாரியின் மகனும் அவனுடைய நண்பர்களும் தான். இவனுடைய இளமைப் பருவம் சென்னை நகரில் கழிந்தது. கிராமப் புறங்களைப் பார்க்கவோ அந்த வாழ்க்கை முறையைப் பற்றி அறியவோ அவனுக்கு வாய்ப்புக் கிட்டியதில்லை. இப்பொழுது வாய்ப்பும் கட்டாய ஓய்வும் கிடைத்து, சிறுவர்கள் மாமரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடுவதையும் கிட்டிப் புள், கோலி, பம்பரம் விளையாடுவதையும், சிறுமிகள் பாண்டி விளையாடுவதையும், ஆலாப் பொறுக்கி, ஆரோட சேத்தி என்று நீளமாகப் பாட்டுப் பாடிக் கொண்டே கற்களை விட்டெறிந்து பிடிக்கும் விளையாட்டையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். 
      அவ்வப்போது பூசாரி வந்து தன் குடும்பக் கதையைச் சொல்வார். எனக்கு நாலு பசங்க. இங்கே இருக்கிறவன் தான் கடைசி. பெரியவன் டிரைவிங் கத்துக்கிட்டான். இப்போ துபாயிலே இருக்கான். ரெண்டாவது பையன் ஃபிட்டர் தொழில் கத்துகிட்டு கும்மாணத்திலே வேலை  பாக்கிறான். மூணாவது பய அங்கேயே இஞ்சினீரிங் காலேஜிலே படிக்கிறான். பெரியவன் அனுப்பற பணத்திலே தாங்க அவன் படிப்பு நடக்குது. இப்ப பெரியவனுக்குக் கல்யாணம் ஆயிடிச்சின்னா அவன் தம்பிக்குப் பணம் அனுப்பறது நின்னு போயிடும். ஒரு நல்ல எடம் வந்திருக்கு. தம்பி படிப்புக்காக அவனுடைய கல்யாணத்தை ஒத்திப் போடறதும் சரியில்லே. பார்ப்போம். ஐயனாரு ஏதாவது வழி காட்டுவாரு.
      பூசாரி மட்டுமல்ல, அந்த ஊர் ஆண்கள் ஒவ்வொருவரும் இவனிடம் வந்து தங்கள் சொந்தக் கதை முழுவதையும் சொல்லிக் கொண்டார்கள். இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்கிறார்கள், கேட்டு எனக்கு என்ன உபயோகம் என்று நினைத்தாலும் வேறு வழி இல்லாமல் கேட்டுக் கொண்டான்.
      அதே போல, இவனைப் பற்றியும் ஒவ்வொருவரும் குடைந்து குடைந்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அடுத்தவருடைய சொந்த விஷயங்களில் தலையிடுவது தவறு என்ற நாகரிகம் தெரியாத காட்டு வாசிகள் என்று நினைத்தான். முதலில் தன்னைப் பற்றி அரை குறைத் தகவல்களை மட்டுமே வெளியிட்டவன் பின்னர் மனம் மாறி இவர்கள் தங்களைப் பற்றி முழுமையாகச் சொல்லிக் கொள்வது போல என்னிடமும் எதிர்பார்க்கிறார்கள். சொல்வதில் என்ன தவறு என்று நினைத்து எல்லாவற்றையும் சொல்லிவிட்டான், தனது தொழிற்சாலை தள்ளாட்டத்தில் இருப்பது உள்பட.
      ஒருநாள் பூசாரியின் பையன், வித்தை காட்டறேன் பாருங்கடா என்று அக்கம் பக்கத்துப் பையன்களைக் கூட்டி வந்தான். ஒரு நூலில் ஒரு சிறு கல்லைக் கட்டி நூலின் மறு முனையை ஒரு குச்சியில் தொங்க விட்டான். மற்ற பையன்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்து அந்த நூலில் வைத்தான். நூல் எரிந்தது. அதில் கட்டப்பட்டிருந்த கல் கீழே விழுந்தது. இது தான் வித்தையாக்கும் என்று பையன்கள் கேலி செய்தார்கள். இருங்கடா, இன்னும் இருக்குடா என்று சொல்லி விட்டு வேறு ஒரு நூலை எடுத்தான். அதில் ஏதோ பச்சிலைச் சாற்றைத் தடவினான். சற்று நேரம் காய வைத்து விட்டு முன்பு போல் அதில் கல்லைக் கட்டித் தொங்க விட்டான். இப்பொழுது அதைப் பற்ற வைத்தான். நூல் எரிந்தது. கரியாயிற்று. ஆனால் கல் விழவில்லை. மற்றப் பையன்கள் வாயைப் பிளந்தார்கள்.
                எப்படிடா? டேய் எனக்குச் சொல்லிக் குடுடா.
                மூணு நாள் பட்டினி கிடக்கிறியா, அப்ப தான் சொல்லித் தருவேன்.”
      இதைப் பார்த்துக் கொண்டிருந்த போது சுந்தரேசனுக்கு மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல் தோன்றியது. மூலப் பொருள் தரக் குறைவைச் சரி செய்ய ஒரு வழி புலப்பட்டு விட்டது. ஒரு வருஷமாக மூளையைக் கசக்கிக் கொண்டபோது கிடைக்காத திட்டம் ஒரு வாரமாக அதைப் பற்றிச் சிந்திக்காத போது தோன்றியது.
      தம்பி, இங்கே வா, எனக்கு அந்த வித்தையைச் சொல்லிக் குடு, நான் மூணு நாள் பட்டினி கிடக்கிறேன் என்றான்.
      உங்களுக்குச் சொல்லித் தரேண்ணே. நீங்க பட்டினி எல்லாம் கிடக்க வேண்டாம். வேறே ஒண்ணும் இல்லீங்க. முருங்கை இலைச் சாறு அது
      அடுத்த புதன் கிழமை வந்தது. தென்னமரக்குடிக்கு அழைத்துப் போனார் பூசாரி. வைத்தியர் கட்டைப் பிரித்தார். கையில் ஒவ்வொரு இடமாக அழுத்திப் பார்த்துக் கொண்டே வந்தார். குறிப்பிட்ட ஓரிடத்தில் கட்டை விரலால் பலமாக அழுத்தினார். வலி தாங்காமல் ஆ என்று அலறினான் அவன். அடுத்த கணம் வலி மாயமாக மறைந்தது. எட்டு நாட்களாக கையில் இருந்த கனம் குறைந்தது. கை என்று ஒன்று இருப்பதான உணர்வே இல்லை. வைத்தியர் முட்டையையும் உளுத்தம் மாவையும் குழைத்துக் கை முழுவதும் பற்றுப் போட்டார். ஒரு வெள்ளைத் துணியை வைத்துக் கட்டினார்.
      நாளைக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு கட்டை அவுத்துட்டு வெந்நீரை விட்டுக் கழுவி துன்னூத்தைப் பூசுங்க. ஒரு வாரத்துக்கு எண்ணெயைத் தடவிங்க. நீங்க உங்க ஊருக்குப் போகலாம்.
      வெளியில் வந்ததும் பூசாரி சொன்னார், ஒரு வாரம் எண்ணை போட்டதிலே எலும்பு தசை எல்லாம் இளகி ரப்பர் கணக்கா ஆயிருச்சு. இப்போ அது தன் இடத்திலே சரியா ஒக்காந்துகிச்சு. டாக்டர் கிட்ட போனீ்ங்கன்னா, அன்னிக்கே சேத்து வைச்சுக் கட்டுப் போடுவாங்க. தசை விறைப்பா இருக்கறப்போ எலும்பைப் பொருத்தினா அது முசிறிக்கிட்டுத் தான் இருக்கும். அதிலே ஒரு சின்னப் பிசிறு இருந்தாலும் கை கோணிப் போயிடும். இப்படி இளக்கிக் கட்டறது தான் இயற்கையான நிலைக்குக் கொண்டாரும் என்றார்.    
      இதுவே மும்பையிலே இருந்தா எக்ஸ்ரே, ஆப்பரேஷன், ஸ்டீல் பிளேட் வைக்கறதுன்னு அம்பதாயிரம் ரூபாய் செலவு வெச்சுடுவாங்க. நீங்க வெறும் அம்பது ரூபாயிலே முடிச்சுக் குடுத்துட்டீங்க. ரொம்ப நன்றிங்க. இன்னிக்கு சாயங்காலம் பஸ்ஸிலே சென்னைக்குப் போறேன் என்றான்.
      எங்களை எல்லாம் நெனப்பிலே வெச்சுங்க என்றார்.
      உங்களை மறக்க முடியுமா? உங்க பையனையும் மறக்க முடியாது. இந்த ஒரு வாரம் ஓய்வு எடுத்ததிலே எனக்கு ஒரு புது வழி புலப்பட்டிருக்கு. ஐயனார் அருளாலே, அது வெற்றிகரமா முடிஞ்சுதுன்னா, என் தொழில் நிமிர்ந்துடும். அப்புறம் உங்க பையனோட காலேஜ் படிப்பை நான் பார்த்துக்குவேன் என்றான்.
      எல்லாம் நல்லபடியா நடக்கும் ஐயனாரு கை விடமாட்டாரு. போய்ட்டு வாங்க.
      மூன்று மாதம் கழித்து பூசாரிக்குப் போன் வந்தது. தொழில் நல்லா நடக்குது. உங்க மூணாவது பையன் ஃபோன் நம்பரைக் குடுங்க. அவன் காலேஜ் ஃபீஸ் எவ்வளவு, யார் பேருக்குப் பணம் அனுப்பணும்கிற தகவலை வாங்கிக்கிறேன், அத்தோட உங்க சின்னப் பையனுக்கும் என் நன்றியைச் சொல்லுங்க என்றான் சுந்தரேசன்.
      நன்றி ஐயனாருக்குத் தாங்க சொல்லணும். வருசா வருசம் வந்துட்டுப் போங்க என்றார் பூசாரி.

3 comments:

  1. சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

    (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    ReplyDelete
  2. அருமை , உண்மையாகத்தான் இருக்க வேண்டும் , இன்றும் கிராம மக்கள் பாசம் வேறு எங்கும் கிடைக்காது

    ReplyDelete