காலையில் காப்பி
குடித்து விட்டு செய்தித் தாள் பார்த்துக் கொண்டிருந்த ராஜாராமின் முகம் சட்டென்று
இறுகியது. “கமலா .... ”. அவரது குரலில் இருந்த வழக்கத்துக்கு மாறான கடுமையால் அதிர்ச்சி அடைந்த அவரது
மனைவி ஓடி வந்தாள்.
“சோதனைச் சாலையின் சாவி உன்னிடம் தானே
இருக்கிறது, வேறு யாரிடமும் கொடுக்கவில்லையே? ” கோபத்துடன் அவர் கேட்டார்.
“இல்லையே. என்னைத் தவிர வேறு யாரும் அதில்
நுழையவில்லையே. என்ன ஆயிற்று? ” பதற்றத்துடன் கேட்டாள் கமலா.
“சரி, சோதனைச் சாலையைத் திற, பார்ப்போம்” என்று எழுந்த அவர்,
மனைவியைத் தொடர்ந்து அதில் நுழைந்தார். பூட்டப்பட்டிருந்த கம்பி வலைப் பெட்டியைத்
திறந்து அதனுள்ளிருந்த இன்னொரு கம்பி வலைப் பெட்டி, அதனுள் இன்னொன்று என்று மூன்று
பூட்டுகளைத் திறந்து ஒரு சிறு அலுமினியப் பெட்டியை எடுத்தார். அதை அப்படியே வாளித்
தண்ணீரில் முக்கி எடுத்து விட்டுத் திறந்தார்.
உள்ளே பெரிய
எறும்புகள் நிறைய இருந்தன. அவை தூங்கிக் கொண்டிருந்தன. ராஜாராம் அவற்றைத் தட்டில்
கொட்டி எண்ணினார். மொத்தம் 30 எறும்புகள் இருந்தன.
“சரியாகத் தான் இருக்கிறது. பின் அது எப்படி
நடந்தது? ” எனத் தனக்குள்ளேயே பேசிக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.
தந்தையின் கோபக்
குரலைக் கேட்டு விழித்துக் கொண்ட சுரேஷ் அப்படிக் கோபமூட்டிய விஷயம் என்னவாக
இருக்கும் என்று அவர் பார்த்துக் கொண்டிருந்த செய்தித் தாளை நோட்டம் விட்டான்.
மூன்றாவது பக்கத்தின் அடி மூலையில் இருந்த ஒரு செய்தி அவன் கவனத்தைக் கவர்ந்தது.
“பர்னிச்சர் கடையில் திருடர்கள் கைவரிசை.
நூற்றுக் கணக்கான பிளாஸ்டிக் நாற்காலி மேஜைகள் அபேஸ். பூட்டை உடைக்காமல் கொள்ளை
அடித்த மர்மம்” என்று தலைப்பிட்ட திருநெல்வேலிச் செய்தி ஒன்று இருந்தது.
“ரொக்கம், மரச் சாமான்கள் இரும்புச் சாமான்கள்
அப்படியே இருக்க பிளாஸ்டிக் சாமான்களை மட்டும் திருடர்கள் சூறையாடிச்
சென்றிருந்தனர். இந்தத் திருட்டு தினம் தோறும் நடைபெறுகிறது. போலீசார் இது பற்றிப்
புலன் விசாரித்து வருகின்றனர். ”
அப்பாவின்
பதற்றத்துக்கு இந்தச் செய்தி தான் காரணம் என்று அவனுக்குப் புரிந்தது.
யோசனையில் ஆழ்ந்திருந்த
ராஜாராம் திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவர் போல் எழுந்தார். உள்ளூர் காவல்
நிலையத்துக்குப் போன் செய்து திருநெல்வேலி காவல்துறைக் கண்காணிப்பாளரின் எண்ணைத்
தெரிந்துகொண்டு அவருடன் பேசத் தொடங்கினார்.
“ஹலோ, நான் கோயம்புத்தூரிலிருந்து விஞ்ஞானி
டாக்டர் ராஜாராம் பேசுகிறேன். உங்கள் ஊரில் பிளாஸ்டிக் சாமான் திருட்டு என்று ஒரு
செய்தி பார்த்தேன். அதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இது போன்ற நிகழ்ச்சி வேறு
ஏதேனும் நடந்ததா ? ”
“வேறு எங்கும்
நடக்கவில்லை. ஒரு கடையில் மட்டும் தினம் தோறும் 10, 15 பிளாஸ்டிக் சாமான்கள்
காணாமல் போகின்றன. ”
“என்னால் உங்களுக்கு உதவ முடியும் என
நினைக்கிறேன். உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். நாளை பகல் 12 மணிக்குள் 10
கிலோ உடைந்த பிளாஸ்டிக் வேண்டும். பாலிதீன் பைகளாகவும் இருக்கலாம். பழைய சாமான்
கடைகளில் சொல்லி இதற்கு ஏற்பாடு செய்து விட்டு எனக்கு போன் செய்யவும். விபரம்
நேரில் சொல்கிறேன். நான் உடனே புறப்பட்டு வருகிறேன். ”
மறு நாள் காலை 9
மணிக்கு ராஜாராம் திருநெல்வேலி காவல் துறைக் கண்காணிப்பாளரின் முன் இருந்தார்.
தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபின், “பிளாஸ்டிக் சாமான்கள் மட்டும் காணாமல் போயிருந்தால் அது
திருட்டு அல்ல. அது ஒரு வகை எறும்புகளின் வேலை. நான் 15 வருடமாக ஆராய்ச்சி செய்து
ஒரு வகை எறும்பு – அதற்கு கொள்ளி எறும்பு என்று பெயர் வைத்துக் கொள்ளுங்கள் –
உருவாக்கி இருக்கிறேன். இதற்கு ஆகாரமே பிளாஸ்டிக் தான். ஒரு எறும்பு ஒரு நாளைக்கு
அரை கிலோ பிளாஸ்டிக் வரை சாப்பிடும். இதோ பாருங்கள். இந்தப் பெட்டியில் 30
எறும்புகள் உள்ளன. இதற்குத் தான் நான் பிளாஸ்டிக் குப்பை கேட்டேன். இது போன்ற
எறும்புகள் தான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும். ”
அவர் கூறியதை நம்ப
முடியாமல் கண்காணிப்பாளர் அவரை உற்றுப் பார்த்தார். ராஜாராம், “குப்பை இருக்கும்
இடத்துக்கு நாம் போவோம். அவை சாப்பிடும் வேகத்தைப் பார்த்தால் தான் நீங்கள்
நம்புவீர்கள். ”
அவரது திட்டப்படி
பத்தடிக்குப் பத்தடி ஒரு திட்டு அமைக்கப்பட்டு அதில் பிளாஸ்டிக் குப்பை
கொட்டப்பட்டது. அதைச் சுற்றிலும் ஒரு அடி அகலத்திற்கு தண்ணீரால் நனைக்கப்பட்டது.
ராஜாராம் தன்
சூட்கேசில் இருந்து ஒரு சிறு அலுமினியப் பெட்டியை எடுத்தார். அதைத் தண்ணீரில்
முக்கி விட்டுத் திறந்தார். மிகக் கவனமாகச் சிந்தாமல் சிதறாமல் எறும்புகளைத்
திட்டில் கொட்டினார். சிறிது நேரம் மயக்க நிலையில் இருந்த எறும்புகள் பின்னர் அசைய
ஆரம்பித்தன. திட்டில் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களைத் தின்னத் தொடங்கின.
என்ன வேகம்! ஒரு மணி நேரத்துக்குள் அத்தனை குப்பையும் காலி. எல்லோரும் திறந்த வாய்
மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ராஜாராம் ஒரு வாளித்
தண்ணீரைத் திட்டில் தெளித்தார். உடனே எறும்புகள் மயக்க நிலையை அடைந்தன. அவர்
அவற்றை ஒவ்வொன்றாக எண்ணிப் பெட்டியில் போட்டார். எண்ணிக்கையை உறுதி
செய்துகொண்டபின் பெட்டியைச் சூட்கேசில் பத்திரப்படுத்திவிட்டு நிமிர்ந்தார்.
கண்காணிப்பாளர்
ஆச்சரியம் தாங்காமல், “இது என்ன வகை எறும்பு ? எங்கிருந்து வந்தது ? உங்களிடம் மட்டும் தான் இருக்கிறதா ? ” என்று கேட்டார்.
ராஜாராம் பேசத்
தொடங்கினார். “நான் பூச்சி இனங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக ஆப்பிரிக்கா சென்றிருந்தேன்.
காங்கோ காட்டில் ஒரு இடத்தில் மரங்கள் பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அங்கே
ஒரு எறும்புக் கூட்டம் இருநதது. அவை ஒவ்வொன்றின் வாயிலும் ஒரு கரையான். பல நாள்
தொடர்ந்து கவனித்ததில் ஒரு உண்மை புலப்பட்டது. அந்த எறும்புகள் பயங்கரப் பசி
கொண்டவை. ஒரு கூட்டம் ஒரு நாளில் ஒரு மரத்தைத் தின்று விடும். ஆனால் அவற்றுக்கு
ஒரு விசித்திரமான குறைபாடு. ஈரம் அவற்றுக்குப் பகை. ஈர மரத்தை அவை நெருங்க
முடியாது. அதற்காக அவை ஒரு தந்திரம் செய்கின்றன. ஒவ்வொரு எறும்பும் ஒரு கரையான்
பூச்சியை வாயில் கவ்விக் கொண்டு மரத்தின் அடி வரை செல்கின்றன. கரையான்கள்
எறும்புகளின் கட்டளைக்கு இணங்க மரத்தின் அடிப்பகுதியில் குடைந்து மரம் பட்டுப்
போகச் செய்கின்றன. மரம் காய்ந்தபின் எறும்புகள் அதை உண்கின்றன.
“நான் அந்த எறும்புகள் சிலவற்றைப் பிடித்து
ஊருக்குக் கொண்டு வந்தேன். என்னுடைய ஆராய்ச்சிச் சாலையில் வைத்து மரபணு மாற்றம்
மூலம் ஒரு புதிய வகை எறும்பை உருவாக்கினேன். நீங்கள் பார்த்த இது தான் அது.
பிளாஸ்டிக் மட்டும் தான் சாப்பிடும். தண்ணீர் பட்டால் மயங்கிவிடும். என்னிடம் உள்ள
எறும்புகளை எப்போதும் ஈரத்திலேயே வைத்திருக்கிறேன். பகல் 12 மணிக்கு எழுப்பி பிளாஸ்டிக்
குப்பைகளை உணவாகக் கொடுத்துவிட்டு மறுபடியும் மயங்க வைத்து விடுவேன். அவை
விழித்திருந்தால் நாள் பூராவும் உணவு உண்டு கொண்டே இருக்கும். என்னுடைய ஆராய்ச்சி
இன்னும் முடியவில்லை. என்னுடைய கவலை என்னவென்றால் என் கட்டுப் பாட்டை மீறி
திருநெல்வேலியில் ஒரு எறும்புக் கூட்டம் உருவாகி இருக்கிறது. இதை இப்படியே
விட்டால் ஒரு வருடத்திற்குள் உலகம் முழுவதும் பரவி பிளாஸ்டிக் பொருட்களே இல்லாமல்
செய்து விடும். ”
“ஆம். இனிமேலும் இது பரவாமல் தடுக்க நீங்கள் தான்
வழி சொல்ல வேண்டும். ”
“உடனடியாக இந்தச் சம்பவம் நடந்த தெருவைச் சுற்றி
அகழி போல் தண்ணீரால் இடைவிடாது நனைத்துக்
கொண்டிருக்க வேண்டும். அங்கு உள்ள பிளாஸ்டிக் பொருட்களை எல்லாம் அகற்ற வேண்டும்.
இப்படி மூன்று நாள் அவைகளுக்கு ஆகாரம் கிடைக்காமல் பார்த்துக் கொண்டால் அவை ஒன்றை
ஒன்று தாக்கிக் கொன்றுவிடும். அப்பொழுது தான் நாம் பிழைக்கலாம்.
அரசாங்கத்திற்குச்
செய்தி பறந்தது. அனுமதி பெறப்பட்டது. பத்திரிகை, தொக்கா நிருபர்கள்
அழைக்கப்பட்டனர். ராஜாராம் சொன்னபடி போர்க்கால முனைப்புடன் வேலைகள் நடந்தன. நகரம்
முழுவதும் இதே பேச்சாக இருந்தது.
மறுநாள் வேறு எங்கும்
இந்த மர்மத் திருட்டு நடக்கவில்லை. இப்படி 5 நாள் கழிந்தபின் தெரு மக்கள் தத்தம்
பொருட்களை வீட்டுக்குக் கொண்டுவந்தனர்.
திருநெல்வேலி நகரம் மட்டுமல்ல. உலகமே ஒரு
நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஆனால் டாக்டர் ராஜாராம் மட்டும் கவலையுடனேயே
இருந்தார். தன்னுடைய ஆராய்ச்சி ரகசியம் யாராலோ திருடப் பட்டிருக்க வேண்டும் எனச்
சந்தேகித்தார். குற்றவாளி சிக்காத வரை ஆபத்து நீங்கவில்லை என்பதைக் காவல்
துறைக்குத் தெரிவித்தார்.
காவல் துறையினர்
டாக்டர் ராஜாராம் வீட்டுக்கு வந்து உள்ளும் புறமும் சுற்றிப் பார்த்தனர். அவரது உறவினர்களையும்
அயலார்களையும் அவரது வீட்டுக்கு வரும் பால்காரர் முதலானவர்களையும் துருவித் துருவி
விசாரித்தனர். சாவி ராஜாராமின் மனைவியிடம் இருந்ததால் அவளைத் திரும்பத் திரும்பக்
கேள்விகளால் துளைத்தனர்.
“நன்றாக யோசனை செய்து பாருங்கள். கடந்த 15
வருடத்தில் ஒரு நாள் கூட சாவியை நீங்கள் வேறு யாரிடமும் கொடுத்தது கிடையாதா ? ”
கமலா ஆழ்ந்து யோசனை
செய்தாள். “ஆம். ஒரே ஒரு நாள், சென்ற வருடம், உடல் நலமில்லாமல் படுத்திருந்த போது
வேலைக்காரியை விட்டு அந்த அறையைச் சுத்தம் செய்யச் சொன்னேன். அவள் என் கண்
எதிரிலேயே கூட்டிக் குப்பையை வாசலில் கொட்டி விட்டு வந்து பூட்டி என்னிடம்
சாவியைக் கொடுத்து விட்டாள். ”
காவலர்கள்
வேலைக்காரியை விசாரித்ததில் விஷயம் வெளிவந்தது. ஒரு தாடிக்காரர் அடிக்கடி அவளிடம்
வந்து ராஜாராமின் சோதனைச் சாலையில் எழுதப்பட்ட நோட்டுகள் ஏதேனும் இருந்தால்
எடுத்துத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தார். 5000 ரூபாய் தருவதாக ஆசை காட்டினார்.
நீண்ட நாட்களாகக் காத்திருந்த அவளுக்கு அன்று ஒரு வாய்ப்புக் கிடைத்தது. குப்பையை
வாசலில் கொட்டப் போகும்போது அறையிலிருந்த டயரியையும் எடுத்துச் சென்றாள். அதன்
பக்கங்களை பிரதி எடுத்துக் கொண்டு எடுத்தது தெரியாமல் வைத்து விட்டுப் பூட்டிச்
சாவியைக் கொடுத்து விட்டாள்.
அவள் கொடுத்த தகவலின்
பேரில் காவலர்கள் அந்தத் தாடிக்காரரை வலை வீசிப் பிடித்து விட்டனர். திருநெல்வேலி
வாசியான அவர் ராஜாராமுடன் கல்லூரியில் எம்.எஸ்சி. படித்தவர் என்றும் தேர்வில்
காப்பி அடித்ததற்காக தடை செய்யப்பட்டவர் என்றும் தெரிய வந்தது. எப்படியாவது
வி்ஞ்ஞானி என்று பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் ராஜாராமின் சோதனை
ரகசியங்களைத் தெரிந்து கொள்ளப் பாடு பட்டதாகச் சொன்னார்.
“டயரியில் இருந்தபடி பிளாஸ்டிக் தின்னும்
எறும்புகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றேன். ஆனால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள்
வைத்திருக்கும் முறை அந்த டயரியில் இல்லை. எனவே அவை என் கையை மீறிச் சென்றுவிட்டன. ”
டாக்டர் ராஜாராம்
மீண்டும் தன் ஆராய்ச்சியைத் தொடர்கிறார். அவரது முயற்சி விரைவில் வெற்றி பெற
வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment