Pages

Thursday, November 22, 2012

பனங்காய் சுமக்கும் குருவி



சீக்கிரம் போவணும், சீக்கிரம் போவணும்
அடுத்த வீட்டுக்காரி முந்திக்கிட்டான்னா,
நம்ம பூ விக்காது.
எல்லாப் பூவும் வித்து,
பூக்காரருக்குக் கணக்குத் தீர்த்து,
அரிசி வாங்கியாந்து,
சோறாக்கணும்.
நேரமாச்சுன்னா,
அப்பா குடிச்சிட்டு வந்து,
அம்மாவை அடிக்கும்.
இனியும் அடிவாங்கினா,
அம்மா செத்துடும்.
சீக்கிரம் போவணும், சீக்கிரம் போவணும். 

காணிக்கை


            கோவில் உண்டியல் காணிக்கைக்குக்
            காசினை எடுக்கையில் அறிவு தடுத்தது
            பற்பல கோவிலில் உண்டியல் திருட்டு,
            அறங்காவலரால் ஆலயம் சூறை,
            என நிதம் படிக்கிறோம் செய்தித்தாளில்.
            நேரே  நல்லோர்க் கீவாய் என்றது.
           
            தீபத்தட்டுடன் குருக்கள் வந்தார்-
            வைரக்கடுக்கன் வகை வகை மோதிரம்
            “இவர்க்கேன் எந்தன் அற்பக்காசு?
            தனிகர்க் களித்தல் தருமம் அல்ல.”
           
            வறுமையின் உருவமாய் வந்தார் பணியாள்
            “ஐயகோ! இவனொரு குடியன் அன்றோ?
            ஆலயப் பணியின் புனிதம் மறந்து
            அறவழி பிறழும் இவனும் வேண்டாம்.”

            வெளியே பலபேர் பிச்சை எடுத்தனர்
            எஃகினைப்போன்ற உடலினைக் கொண்டோர்
            உழைக்கா துண்பதில் தனிச்சுகம் காண்போர்
            “இவர்க்கு ஈந்தால் சோம்பல் வளரும்,
     எனக்கோர் சமூகக் கடமையும் உண்டு.

தெருவில் இறங்கி நடந்தபோது
எதிரில் சுவரில் இருந்ததிவ் வாசகம்
கடமையைச் செய்யவே உனக்குளதுரிமை,
பலனை அலசுதல் மாபெரும் மடமை.”

காசினை அங்கே வைத்து நகர்ந்தேன்
கனமிலா மனத்துடன் இல்லம் வந்தேன்.

Wednesday, October 17, 2012

கொள்ளி எறும்பு





காலையில் காப்பி குடித்து விட்டு செய்தித் தாள் பார்த்துக் கொண்டிருந்த ராஜாராமின் முகம் சட்டென்று இறுகியது. கமலா .... . அவரது குரலில் இருந்த வழக்கத்துக்கு மாறான கடுமையால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஓடி வந்தாள்.
சோதனைச் சாலையின் சாவி உன்னிடம் தானே இருக்கிறது, வேறு யாரிடமும் கொடுக்கவில்லையே? ” கோபத்துடன் அவர் கேட்டார்.
இல்லையே. என்னைத் தவிர வேறு யாரும் அதில் நுழையவில்லையே. என்ன ஆயிற்று? ” பதற்றத்துடன் கேட்டாள் கமலா.
சரி, சோதனைச் சாலையைத் திற, பார்ப்போம் என்று எழுந்த அவர், மனைவியைத் தொடர்ந்து அதில் நுழைந்தார். பூட்டப்பட்டிருந்த கம்பி வலைப் பெட்டியைத் திறந்து அதனுள்ளிருந்த இன்னொரு கம்பி வலைப் பெட்டி, அதனுள் இன்னொன்று என்று மூன்று பூட்டுகளைத் திறந்து ஒரு சிறு அலுமினியப் பெட்டியை எடுத்தார். அதை அப்படியே வாளித் தண்ணீரில் முக்கி எடுத்து விட்டுத் திறந்தார்.
உள்ளே பெரிய எறும்புகள் நிறைய இருந்தன. அவை தூங்கிக் கொண்டிருந்தன. ராஜாராம் அவற்றைத் தட்டில் கொட்டி எண்ணினார். மொத்தம் 30 எறும்புகள் இருந்தன.
சரியாகத் தான் இருக்கிறது. பின் அது எப்படி நடந்தது? ” எனத் தனக்குள்ளேயே பேசிக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.
தந்தையின் கோபக் குரலைக் கேட்டு விழித்துக் கொண்ட சுரேஷ் அப்படிக் கோபமூட்டிய விஷயம் என்னவாக இருக்கும் என்று அவர் பார்த்துக் கொண்டிருந்த செய்தித் தாளை நோட்டம் விட்டான். மூன்றாவது பக்கத்தின் அடி மூலையில் இருந்த ஒரு செய்தி அவன் கவனத்தைக் கவர்ந்தது.
பர்னிச்சர் கடையில் திருடர்கள் கைவரிசை. நூற்றுக் கணக்கான பிளாஸ்டிக் நாற்காலி மேஜைகள் அபேஸ். பூட்டை உடைக்காமல் கொள்ளை அடித்த மர்மம் என்று தலைப்பிட்ட திருநெல்வேலிச் செய்தி ஒன்று இருந்தது.
ரொக்கம், மரச் சாமான்கள் இரும்புச் சாமான்கள் அப்படியே இருக்க பிளாஸ்டிக் சாமான்களை மட்டும் திருடர்கள் சூறையாடிச் சென்றிருந்தனர். இந்தத் திருட்டு தினம் தோறும் நடைபெறுகிறது. போலீசார் இது பற்றிப் புலன் விசாரித்து வருகின்றனர்.
அப்பாவின் பதற்றத்துக்கு இந்தச் செய்தி தான் காரணம் என்று அவனுக்குப் புரிந்தது.
யோசனையில் ஆழ்ந்திருந்த ராஜாராம் திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவர் போல் எழுந்தார். உள்ளூர் காவல் நிலையத்துக்குப் போன் செய்து திருநெல்வேலி காவல்துறைக் கண்காணிப்பாளரின் எண்ணைத் தெரிந்துகொண்டு அவருடன் பேசத் தொடங்கினார்.
ஹலோ, நான் கோயம்புத்தூரிலிருந்து விஞ்ஞானி டாக்டர் ராஜாராம் பேசுகிறேன். உங்கள் ஊரில் பிளாஸ்டிக் சாமான் திருட்டு என்று ஒரு செய்தி பார்த்தேன். அதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இது போன்ற நிகழ்ச்சி வேறு ஏதேனும் நடந்ததா ? ”
      வேறு எங்கும் நடக்கவில்லை. ஒரு கடையில் மட்டும் தினம் தோறும் 10, 15 பிளாஸ்டிக் சாமான்கள் காணாமல் போகின்றன.
என்னால் உங்களுக்கு உதவ முடியும் என நினைக்கிறேன். உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். நாளை பகல் 12 மணிக்குள் 10 கிலோ உடைந்த பிளாஸ்டிக் வேண்டும். பாலிதீன் பைகளாகவும் இருக்கலாம். பழைய சாமான் கடைகளில் சொல்லி இதற்கு ஏற்பாடு செய்து விட்டு எனக்கு போன் செய்யவும். விபரம் நேரில் சொல்கிறேன். நான் உடனே புறப்பட்டு வருகிறேன்.
மறு நாள் காலை 9 மணிக்கு ராஜாராம் திருநெல்வேலி காவல் துறைக் கண்காணிப்பாளரின் முன் இருந்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபின், பிளாஸ்டிக் சாமான்கள் மட்டும் காணாமல் போயிருந்தால் அது திருட்டு அல்ல. அது ஒரு வகை எறும்புகளின் வேலை. நான் 15 வருடமாக ஆராய்ச்சி செய்து ஒரு வகை எறும்பு – அதற்கு கொள்ளி எறும்பு என்று பெயர் வைத்துக் கொள்ளுங்கள் – உருவாக்கி இருக்கிறேன். இதற்கு ஆகாரமே பிளாஸ்டிக் தான். ஒரு எறும்பு ஒரு நாளைக்கு அரை கிலோ பிளாஸ்டிக் வரை சாப்பிடும். இதோ பாருங்கள். இந்தப் பெட்டியில் 30 எறும்புகள் உள்ளன. இதற்குத் தான் நான் பிளாஸ்டிக் குப்பை கேட்டேன். இது போன்ற எறும்புகள் தான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும்.
அவர் கூறியதை நம்ப முடியாமல் கண்காணிப்பாளர் அவரை உற்றுப் பார்த்தார். ராஜாராம், குப்பை இருக்கும் இடத்துக்கு நாம் போவோம். அவை சாப்பிடும் வேகத்தைப் பார்த்தால் தான் நீங்கள் நம்புவீர்கள்.
அவரது திட்டப்படி பத்தடிக்குப் பத்தடி ஒரு திட்டு அமைக்கப்பட்டு அதில் பிளாஸ்டிக் குப்பை கொட்டப்பட்டது. அதைச் சுற்றிலும் ஒரு அடி அகலத்திற்கு தண்ணீரால் நனைக்கப்பட்டது.
ராஜாராம் தன் சூட்கேசில் இருந்து ஒரு சிறு அலுமினியப் பெட்டியை எடுத்தார். அதைத் தண்ணீரில் முக்கி விட்டுத் திறந்தார். மிகக் கவனமாகச் சிந்தாமல் சிதறாமல் எறும்புகளைத் திட்டில் கொட்டினார். சிறிது நேரம் மயக்க நிலையில் இருந்த எறும்புகள் பின்னர் அசைய ஆரம்பித்தன. திட்டில் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களைத் தின்னத் தொடங்கின. என்ன வேகம்! ஒரு மணி நேரத்துக்குள் அத்தனை குப்பையும் காலி. எல்லோரும் திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ராஜாராம் ஒரு வாளித் தண்ணீரைத் திட்டில் தெளித்தார். உடனே எறும்புகள் மயக்க நிலையை அடைந்தன. அவர் அவற்றை ஒவ்வொன்றாக எண்ணிப் பெட்டியில் போட்டார். எண்ணிக்கையை உறுதி செய்துகொண்டபின் பெட்டியைச் சூட்கேசில் பத்திரப்படுத்திவிட்டு நிமிர்ந்தார்.
கண்காணிப்பாளர் ஆச்சரியம் தாங்காமல், இது என்ன வகை எறும்பு ? எங்கிருந்து வந்தது ? உங்களிடம் மட்டும் தான் இருக்கிறதா ? ” என்று கேட்டார்.
ராஜாராம் பேசத் தொடங்கினார். நான் பூச்சி இனங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக ஆப்பிரிக்கா சென்றிருந்தேன். காங்கோ காட்டில் ஒரு இடத்தில் மரங்கள் பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அங்கே ஒரு எறும்புக் கூட்டம் இருநதது. அவை ஒவ்வொன்றின் வாயிலும் ஒரு கரையான். பல நாள் தொடர்ந்து கவனித்ததில் ஒரு உண்மை புலப்பட்டது. அந்த எறும்புகள் பயங்கரப் பசி கொண்டவை. ஒரு கூட்டம் ஒரு நாளில் ஒரு மரத்தைத் தின்று விடும். ஆனால் அவற்றுக்கு ஒரு விசித்திரமான குறைபாடு. ஈரம் அவற்றுக்குப் பகை. ஈர மரத்தை அவை நெருங்க முடியாது. அதற்காக அவை ஒரு தந்திரம் செய்கின்றன. ஒவ்வொரு எறும்பும் ஒரு கரையான் பூச்சியை வாயில் கவ்விக் கொண்டு மரத்தின் அடி வரை செல்கின்றன. கரையான்கள் எறும்புகளின் கட்டளைக்கு இணங்க மரத்தின் அடிப்பகுதியில் குடைந்து மரம் பட்டுப் போகச் செய்கின்றன. மரம் காய்ந்தபின் எறும்புகள் அதை உண்கின்றன.
நான் அந்த எறும்புகள் சிலவற்றைப் பிடித்து ஊருக்குக் கொண்டு வந்தேன். என்னுடைய ஆராய்ச்சிச் சாலையில் வைத்து மரபணு மாற்றம் மூலம் ஒரு புதிய வகை எறும்பை உருவாக்கினேன். நீங்கள் பார்த்த இது தான் அது. பிளாஸ்டிக் மட்டும் தான் சாப்பிடும். தண்ணீர் பட்டால் மயங்கிவிடும். என்னிடம் உள்ள எறும்புகளை எப்போதும் ஈரத்திலேயே வைத்திருக்கிறேன். பகல் 12 மணிக்கு எழுப்பி பிளாஸ்டிக் குப்பைகளை உணவாகக் கொடுத்துவிட்டு மறுபடியும் மயங்க வைத்து விடுவேன். அவை விழித்திருந்தால் நாள் பூராவும் உணவு உண்டு கொண்டே இருக்கும். என்னுடைய ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை. என்னுடைய கவலை என்னவென்றால் என் கட்டுப் பாட்டை மீறி திருநெல்வேலியில் ஒரு எறும்புக் கூட்டம் உருவாகி இருக்கிறது. இதை இப்படியே விட்டால் ஒரு வருடத்திற்குள் உலகம் முழுவதும் பரவி பிளாஸ்டிக் பொருட்களே இல்லாமல் செய்து விடும்.
ஆம். இனிமேலும் இது பரவாமல் தடுக்க நீங்கள் தான் வழி சொல்ல வேண்டும்.
உடனடியாக இந்தச் சம்பவம் நடந்த தெருவைச் சுற்றி அகழி போல்  தண்ணீரால் இடைவிடாது நனைத்துக் கொண்டிருக்க வேண்டும். அங்கு உள்ள பிளாஸ்டிக் பொருட்களை எல்லாம் அகற்ற வேண்டும். இப்படி மூன்று நாள் அவைகளுக்கு ஆகாரம் கிடைக்காமல் பார்த்துக் கொண்டால் அவை ஒன்றை ஒன்று தாக்கிக் கொன்றுவிடும். அப்பொழுது தான் நாம் பிழைக்கலாம்.
அரசாங்கத்திற்குச் செய்தி பறந்தது. அனுமதி பெறப்பட்டது. பத்திரிகை, தொக்கா நிருபர்கள் அழைக்கப்பட்டனர். ராஜாராம் சொன்னபடி போர்க்கால முனைப்புடன் வேலைகள் நடந்தன. நகரம் முழுவதும் இதே பேச்சாக இருந்தது. 
மறுநாள் வேறு எங்கும் இந்த மர்மத் திருட்டு நடக்கவில்லை. இப்படி 5 நாள் கழிந்தபின் தெரு மக்கள் தத்தம் பொருட்களை வீட்டுக்குக் கொண்டுவந்தனர்.
 திருநெல்வேலி நகரம் மட்டுமல்ல. உலகமே ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஆனால் டாக்டர் ராஜாராம் மட்டும் கவலையுடனேயே இருந்தார். தன்னுடைய ஆராய்ச்சி ரகசியம் யாராலோ திருடப் பட்டிருக்க வேண்டும் எனச் சந்தேகித்தார். குற்றவாளி சிக்காத வரை ஆபத்து நீங்கவில்லை என்பதைக் காவல் துறைக்குத் தெரிவித்தார்.
காவல் துறையினர் டாக்டர் ராஜாராம் வீட்டுக்கு வந்து உள்ளும் புறமும் சுற்றிப் பார்த்தனர். அவரது உறவினர்களையும் அயலார்களையும் அவரது வீட்டுக்கு வரும் பால்காரர் முதலானவர்களையும் துருவித் துருவி விசாரித்தனர். சாவி ராஜாராமின் மனைவியிடம் இருந்ததால் அவளைத் திரும்பத் திரும்பக் கேள்விகளால் துளைத்தனர்.
நன்றாக யோசனை செய்து பாருங்கள். கடந்த 15 வருடத்தில் ஒரு நாள் கூட சாவியை நீங்கள் வேறு யாரிடமும் கொடுத்தது கிடையாதா ? ”
கமலா ஆழ்ந்து யோசனை செய்தாள். ஆம். ஒரே ஒரு நாள், சென்ற வருடம், உடல் நலமில்லாமல் படுத்திருந்த போது வேலைக்காரியை விட்டு அந்த அறையைச் சுத்தம் செய்யச் சொன்னேன். அவள் என் கண் எதிரிலேயே கூட்டிக் குப்பையை வாசலில் கொட்டி விட்டு வந்து பூட்டி என்னிடம் சாவியைக் கொடுத்து விட்டாள்.
காவலர்கள் வேலைக்காரியை விசாரித்ததில் விஷயம் வெளிவந்தது. ஒரு தாடிக்காரர் அடிக்கடி அவளிடம் வந்து ராஜாராமின் சோதனைச் சாலையில் எழுதப்பட்ட நோட்டுகள் ஏதேனும் இருந்தால் எடுத்துத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தார். 5000 ரூபாய் தருவதாக ஆசை காட்டினார். நீண்ட நாட்களாகக் காத்திருந்த அவளுக்கு அன்று ஒரு வாய்ப்புக் கிடைத்தது. குப்பையை வாசலில் கொட்டப் போகும்போது அறையிலிருந்த டயரியையும் எடுத்துச் சென்றாள். அதன் பக்கங்களை பிரதி எடுத்துக் கொண்டு எடுத்தது தெரியாமல் வைத்து விட்டுப் பூட்டிச் சாவியைக் கொடுத்து விட்டாள்.
அவள் கொடுத்த தகவலின் பேரில் காவலர்கள் அந்தத் தாடிக்காரரை வலை வீசிப் பிடித்து விட்டனர். திருநெல்வேலி வாசியான அவர் ராஜாராமுடன் கல்லூரியில் எம்.எஸ்சி. படித்தவர் என்றும் தேர்வில் காப்பி அடித்ததற்காக தடை செய்யப்பட்டவர் என்றும் தெரிய வந்தது. எப்படியாவது வி்ஞ்ஞானி என்று பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் ராஜாராமின் சோதனை ரகசியங்களைத் தெரிந்து கொள்ளப் பாடு பட்டதாகச் சொன்னார்.
டயரியில் இருந்தபடி பிளாஸ்டிக் தின்னும் எறும்புகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றேன். ஆனால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் முறை அந்த டயரியில் இல்லை. எனவே அவை என் கையை மீறிச் சென்றுவிட்டன.
டாக்டர் ராஜாராம் மீண்டும் தன் ஆராய்ச்சியைத் தொடர்கிறார். அவரது முயற்சி விரைவில் வெற்றி பெற வாழ்த்துவோம்.






அற்புதம் விளைவிக்கும் அதிசய மூலிகைகள்


சில ஆண்டுகளுக்கு முன்பு, அற்புதம் விளைவிக்கும் அதிசய மூலிகைகள் என்ற தலைப்பில் தாவர இயல் பேராசிரியர் திரு பாலு என்பவர் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தில் நிகழ்த்திய உரையிலிருந்து சில பகுதிகள். கீழ்க் கண்டவற்றில் *குறியிட்டவை அவர் செயல் முறை விளக்கத்துடன் காட்டியவை.
*நார்த்தாமலையில் கிடைக்கும் ஒரு அரிய மரத்தின் இலை புறாத் தழை. இதில் ஒன்றை எடுத்துக் கசக்கிப் பிழிந்து அந்தச் சாற்றை பாலில் விட்டால் அது உடனே  தயிர் ஆகிவிடும்.
*கட்டுக் கொடி என்று ஒரு மூலிகை. இதில் 3 வகை உண்டு. ஒன்று விஷமுடையது. மற்ற இரண்டுக்கும் ஒரு குணம் உண்டு. இதைப் பிழிந்து வரும் சாற்றைத் தண்ணீரில் கலந்தால் தண்ணீர் அல்வா போல, கெட்டியாகவும் இனிப்புச் சுவையுள்ளதாகவும் மாறும்.
சதுரக் கள்ளி என்றொரு செடி. இதன் பாலை ஈர அரிசியுடன் கலந்து வைத்தால் அரிசி வெந்து சாதமாகிவிடும். ஆனால் இது உண்பதற்கு உரியது அல்ல.
நீரைக் கொண்டு விளக்கு எரிக்க முடியுமா? சித்தர்கள் செய்வதாகச் சொல்கிறார்கள். நாமும் சித்தராகலாம். சதுரக் கள்ளிப் பால், அத்திப் பால், ஆலம்பால் இவற்றில் ஒன்றை நீருடன் கலந்து திரியிட்டுக் கொளுத்தினால் விளக்கு எரியும்.
*தேத்தாங்கொட்டையை அறைத்துத் தண்ணீரில் கலக்கினால் தண்ணீரில் உள்ள அசுத்தங்கள் அடியில் தங்கி விடும். அதிகமாகச் சேர்த்தால் தண்ணீரின் நிறம் பால் போல மாறிவிடும். வெய்யிலில் வைத்தால் மீண்டும் இயற்கை நிறம் வரும்.
*தாமரை விதையைப் பொடி செய்து பாலில் கலக்கினால் தண்ணீர் போல ஆகிவிடும். வெய்யிலில் வைத்தால் இயற்கை நிறம் வரும். அன்னப் பறவை பாலையும் நீரையும் பிரிப்பதாகச் சொல்லப்படுவதற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ?
*அவல் வாயில் போட்டவுடன் ஊறிக் கரைந்து விடுகிறது அல்லவா? நெய்யுடன் கலந்து உண்டு பாருங்கள். லேசில் கரையாது.
*மணலைக் கயிறாகத் திரிக்க முடியுமா? முடியும் என்கிறார் திரு பாலு. நீர்முள்ளி விதைப் பொடியைத் திருநீற்றுடன் கலந்து அதைக் கொண்டு ஈர மணலைக் கயிறாகத் திரிக்கலாம்.
*இதே பொடியைக் கொண்டு நீரில் கரைந்த மஞ்சள் பொடியை மீண்டும் திரட்டி உருட்ட முடியும்.
இந்தப் பொடியை ஒரு முறை உண்டால் ஒரு மாதத்திற்கு பசிப்பிணி இல்லாமல் வாழமுடியும்.
*சிறுகண்பூளை, நத்தைசூரி, நாயுருவி இவற்றில் ஒன்றை வாயிலிட்டு நன்றாக மென்றபின் பானை ஓடு, கண்ணாடி போன்றவற்றைப் பல்லால் கடித்து அரைக்கலாம். வாயில் ரத்தம் வராது.
*நத்தைசூரியை மென்றுகொண்டே கண்ணில் மணலைக் கொட்டிக் கொண்டால் கண்ணில் எந்தவித உறுத்தலும் இராது.
கோபுரம் தாங்கி, விழுதி இலை, திருநீற்றுப் பச்சிலை இவை மூன்றையும் அல்லது இவற்றில் ஒன்றை இடுப்பில் கட்டிக் கொண்டால் அதிக சுமை தூக்க முடியும். அதி வேகமாக ஓடவும் வலிமை கிடைக்கும்.
சோற்றுக் கற்றாழையின் சோறு, வெங்காயச் சாறு, விளக்கெண்ணெய் இவற்றைச் சம அளவு கலந்து கையில் தடவிக் கொண்டு பழுக்கக் காய்ந்த இரும்பைத் தொடலாம்.


தியானப் பயிற்சி



சுகமான கனவு. சட்டென்று கலைந்தது. ஊதுபத்தி அணைந்த பின்னும் அதன் மணம் அறையில் சூழ்ந்திருப்பதைப் போலக் கனவு கலைந்த பின்னும் அதன் ஆனந்தம் மனம் முழுவதும் நிறைந்திருந்தது. கண்களைத் திறக்காமலேயே சில நொடிகள் அதை அனுபவித்தேன். பகல் கனவின் சுவையே தனி தான்.
பிரக்ஞை வந்தது. நான் எங்கிருக்கிறேன்? உட்கார்ந்திருக்கிறேனே? அடேடே, தியான வகுப்பில் அல்லவா உட்கார்ந்திருக்கிறேன்? ஆண்களும் பெண்களுமாக 70 பேர் கொண்ட வகுப்பு. சே, என்ன அவமானம்! சுற்றிலும் 69 ஜோடிக் கண்கள் நான் கண் திறந்தவுடன் கொல்லென்று சிரிக்கத் தயாராகி என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போல உள்ளுணர்வு. எல்லோரும் கட்டாயமாக மௌனம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதி இருப்பதால் சத்தம் வரும்படியாகச் சிரிக்க மாட்டார்கள். என்றாலும் அத்தனை பேருடைய இதழ் ஓரங்களில் ஒரு பரிகாசப் புன்னகை தோன்றி மறைவதை என்னால் தாங்க முடியுமா?
என்ன செய்வது? வருவதை எதிர்கொள்ளத் தான் வேண்டும். கண்ணைத் திறக்கிறேன். அப்பாடா, யாரும் என்னைப் பார்க்கவில்லை. அனைவரும் கண்களை மூடியிருந்தனர். உற்றுப் பார்த்ததில் அவர்களும் உறங்குவதாகத் தெரிந்தது. சிலர் குறட்டை கூட விட்டுக் கொண்டிருந்தனர். மேடை மேல் அமர்ந்திருந்த தியான ஆசிரியரின் தலையும் தொங்கலிட்டிருந்தது. நான் தான் முதலில் விழித்திருக்கிறேன்.
பத்து நாள் முகாம். அங்கேயே தங்கி உணவு உண்டு நாள் பூராவும் யாருடனும் பேசாமல் தியானம் ஒன்றே வேலையும் பொழுதுபோக்குமாக இருக்க வேண்டும்.  அமைப்பாளர்களைப் பாராட்டவேண்டும். இலவசம் என்பதற்காக ஏனோ தானோ என்று உணவளிக்கவில்லை. பத்து நாளும் மூன்று வேளையும் வித விதமான வட இந்திய தென் இந்திய உணவு வகைகளைச் செய்து போட்டு அசத்தினர்.
வாய்க்கு ருசியாக வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு வேறு வேலை இல்லாமல் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் தியானத்தில் உட்கார்ந்தால் தூக்கம் வராமல் என்ன செய்யும்?
முகாம் பயனற்றது என்று சொல்லலாமா? கூடாது. 12 மணி நேரத்தில் அவ்வப்போது சில வினாடிகள் உறக்கமும் விழிப்பும் கனவும் அல்லாத ஒரு நிலை ஏற்பட்டது உண்மை. இதைத்தான் துரிய நிலை என்கிறார்களோ?
என்ன செய்வது? ஒரு வைரக் கல்லைக் கண்டுபிடிக்க டன் கணக்கில் தானே மண்ணைப் புரட்ட வேண்டியிருக்கிறது?  

பாதாள சாக்கடை




தினந்தோறும் மாலை 5, 5 1/2 மணிக்கு மேல் வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு சுற்றிலும் நாற்றம். இது 10 நிமிடத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரை நீடிக்கிறது. எங்கிருந்து தோன்றுகிறது என்பது தெரிந்தால் தானே அதை நிவர்த்திக்க வழி தேட முடியும். சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் புகார் கொடுத்தும் பயனில்லை. இதைப் போல நூற்றுக் கணக்கான புகார்கள் தினமும் வருகின்றன. அவர்கள் எதை என்று கவனிப்பார்கள் ?      
அந்தி நேரத்தில் வீட்டில் அடைந்து கிடக்காதே. கோவிலுக்குப் போ என்று இறைவன் தடுத்தாட் கொள்வதாக எடுத்துக் கொண்டு அருகிலுள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றேன். கோவில் வாசலில் ஒரு திறப்பிலிருந்து நாற்றம் பெருமளவில் வந்து கொண்டிருந்தது. ஜகன்மாதாவின் இருப்பிடம் தான் நாற்றத்திற்கும்  பிறப்பிடமா? உலகிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவள் அன்னை காமாட்சி என்பதற்குப் புதிய விளக்கம் கிடைத்தது.
மறுநாள், சற்றுத் தொலைவிலுள்ள சொர்ணபுரீஸ்வரர் கோவிலுக்குச் சென்றேன். கோயில் வாசலில் பாதாள சாக்கடையின் இரும்பு மூடியைத் தூக்கிக் கொண்டு துர்நாற்ற வாயு வெளியேறிக் கொண்டிருந்தது. அடுப்பின் மேல் வைக்கப்பட்ட வெந்நீர்ப் பாத்திரத்தின் மூடி படபடவென்று அடித்துக் கொள்வது போல அந்தக் கனமான மூடி மூடுவதும் திறப்பதுமாக இருந்ததை ஜேம்ஸ் வாட்டோ, ஜார்ஜ் ஸ்டீவன்ஸனோ பார்த்திருந்தால் அந்த வாயுவைக் கொண்டே மெட்ரோ ரயிலை ஒட்டுவதற்கான திட்டம் தீட்டியிருப்பார்கள்.
அம்மையும் அப்பனுமே நாற்றத்தின் பிறப்பிடமாகவும் நாற்றத்தைச் சகித்துக் கொள்பவர்களாகவும் இருக்கும் போது நாமும் இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதும் ஸ்திதப் ப்ரக்ஞனாக இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை.       
என் வீட்டைச் சுற்றியுள்ள பகுதி தான் நாறுகிறது என்று முதலில் நினைத்தேன். ஒரு முறை நகர் வலம் வந்த பிறகு தெரிந்தது, சிங்காரச் சென்னை நகரின் எல்லாப் பகுதிகளும் அப்படித்தான். சென்னை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எல்லா நகரங்களின் நிலையும் அது தான் என்பதும் அந்தந்த ஊர்ப் பேருந்து நிலையங்களில் நிற்கும்போது தெரிய வந்தது.
என்ன காரணம்? மக்களின் தூய்மை உணர்வுக் குறைவும், கழிவுகளை அகற்றுவதில்  நகர நிர்வாகங்கள் போதிய முனைப்புக் காட்டாமையும் தான். நிர்வாகத்தையும், மற்ற மக்களையும் குறை கூறுவதைத் தவிர இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேறு என்ன செய்யலாம்?
குப்பைகளும் நாற்றத்துக்குக் காரணம் என்றாலும் நாற்றத்தின் பெரும் பகுதி பாதாள சாக்கடைகளிலிருந்து தான் என்பதை அறியலாம். ஆரோக்கிய வழியாகப் பேசப்பட்ட இது நோய்க்குக் காரணமாக அமைந்து விட்டது. கொசுக்களின் பிறப்பிடமே இந்தப் பாதாள சாக்கடைகள் தாம். குடிநீர்க் குழாய்களும் கழிவுநீர்ப் பாதைகளும் நிலத்தடியில் ஒன்றை ஒன்று ஊடுருவிச் செல்வதால் குடிநீரும் அடிக்கடி கெட்டுவிடுகிறது. இந்தத் திட்டம் எதற்காகக் கொண்டுவரப்பட்டதோ அதில் முழுமையாகத் தோற்றுவிட்டது.
கழிவுப் பிரச்சினை உள்பட எல்லாப் பிரச்சினைகளையும்   ஆங்காங்கு சிறுவட்டங்களில் தீர்ப்பதற்குப் பதிலாக பெரிய வட்டத்தில் மையப்படுத்துகிறோம். நகரங்கள் பெரிதாகப் பெரிதாகப் பிரச்சினைகளின் அளவும் சிக்கலும் பெரிதாக வளர்ந்து கொண்டு வருகின்றன.
நகரங்கள் பரப்பளவில் மட்டுமன்றி உயரத்திலும் வளர்ந்துகொண்டு வருகின்றன. ஒரு குடும்பம் இருந்த இடத்தில் ஒருவர் தலை மேலே ஒருவராக நான்கு குடும்பங்கள் வாழ்கின்றன. நாற்றமும் நெரிசலும் வாகனப் புகைகளும் இரைச்சலும் பழைய அமைதியான கிராம வாழ்க்கையை எண்ணி ஏங்க வைக்கின்றன. காந்தி சொன்னபடி இனியாவது கிராமங்களை உயர்த்தலாம், மேலும் நகரங்கள் பூதாகாரமாக வளர்வதைத் தடுக்கலாம். உருவாகிவிட்ட நகரங்களைச் சிறியதாக ஆக்க முடியாது. இந்தச் சாக்கடைப் பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி? காந்திய வழி இதற்குப் பயன்படுமா?
விடை தேடுமுன் என்னுடைய பழைய அனுபவம் ஒன்றைச் சொல்வதற்காக ஒரு சிறிய இடைவேளை.
1970 இல் வேலை நிமித்தம் ஒரு கிராமத்தில் குடியேற நேர்ந்தது. 25 ரூபாய் வாடகையில் ஒரு புது பங்களா வாடகைக்குக் கிடைத்தது. வீட்டைத் திறந்து காட்டிய உரிமையாளரிடம் கேட்டேன், வீட்டை ஆடம்பரமாகக் கட்டி இருக்கிறீர்கள். கழிவறை எங்கிருக்கிறது? கண்ணில் படவில்லையே? ” என்றேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்தார். ஓ நீங்கள் நகர வாசியா? அது தான் உங்களுக்குத் தெரியவில்லை. நாற்றத்தை வீட்டுக்குள் பாதுகாக்கும் அநாகரிகம் கிராமங்களில் கிடையாது என்றார்.
பின் என்ன வழி? ”
தெருக் கோடியில் உள்ள சவுக்கைத் தோப்பு ஆண்களுக்கானது. எதிர்த் தரப்பில் உள்ளது பெண்களுக்கானது. தெரு மக்கள் எல்லோரும் அங்கு தான் செல்வார்கள்.
எங்கள் வீட்டுப் பெண்களுக்கு இது சரிப்பட்டு வராது. எனவே காந்திய முறைக் கழிவறை ஒன்று கட்டத் தீர்மானித்தேன். அருகில் நின்று கொண்டிருந்த ஒரு மாணவன் உதவ முன் வந்தான். பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு போய் எங்கிருந்தோ 100 பனை மட்டைகளை வாங்கிக் கொண்டு போட்டான். வேலிக்காலில் இருந்த ஒதிய மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி நட்டான். மட்டைகளை வரிசையாக அமைத்துக் கட்டினான். உள்ளே ஒரு அடி ஆழம் முக்கால் அடி அகலத்தில் நீளமாக ஒரு பள்ளம் வெட்டச் செய்தேன். அவனுக்குக் கொடுத்த அன்பளிப்பு உள்பட 15 ரூபாயில் ஒரு மணி நேரத்தில் பத்துக்கு எட்டடி  அளவில் கழிப்பறை தயார். இதை நாங்கள் அங்கிருந்த ஆறு ஆண்டுக் காலம் பயன்படுத்தினோம். கழிவுகளை உண்டு வாழும் ஒரு வகை வண்டுகள் மறு நாளுக்குள் அதை மண்ணாக்கிவிடும். இம்முறை நிலத்தை வளப்படுத்தக் கூடியது. நிலத்தடி நீரைக் கெடுக்காதது.   
ஒரு துளசிச் செடி வைக்கக் கையளவு மண் கூட இல்லாத நகரக் கட்டிடங்களில் இந்தக் காந்திய வழி சரிப்படுமா? கூகுளாண்டவரைக் கேட்டதற்கு மாற்று வழி உண்டு என்று சொன்னார்.
எகோசான் என்பது காந்தியத்தின் 21 ஆம் நூற்றாண்டு அவதாரம். இதில் ஒரு பிளாஸ்டிக் வாளியில் மலம் சேகரிக்கப்படுகிறது. சிறு நீரும் கழுவும் நீரும் வேறு வேறு பாதைகளில் செல்கின்றன. வாளியின் மேல் ஒரு ஓட்டையுள்ள ஸ்டூல் நாம் அமர்வதற்காக வைக்கப்படுகிறது. வாளியில் சேரும் மலத்தின் மீது உடனே சாம்பல் தூவ வேண்டும். இதனால் நாற்றம்  வெளிவராமல் தடுக்கப்படுவதோடு அது உடனே மக்கவும் தொடங்குகிறது. இப்படி வாளி நிரம்பும் வரை, எத்தனை நாள் வேண்டுமானாலும், வைத்திருக்கலாம். அதன்பின் அடுத்த வாளியை வைக்க வேண்டும். இரண்டாவது வாளி நிரம்புவதற்குள் முதல் வாளியில் உள்ளது மடித்து மண்ணாகி விடும். அப்போது (சுகாதாரத் துறையிலோ கிராம முன்னேற்றத் துறையிலோ) செயலராக இருந்த சாந்தா ஷீலா நாயர் அந்த மண்ணைக் கையால் எடுத்து முகர்ந்து பார்ப்பதை பத்திரிகைகளில் படத்துடன் வெளியிட்டிருந்தார்கள். நாற்றம் இருக்காது. தொற்று நோய்க் கிருமிகள் இரா. மண்ணைச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். நம் வீட்டில் பயன்படுத்த முடியவில்லை எனில் தேவைப்படுவோருக்கு விற்கலாம். வாளியை மீண்டும் கழிவறையில் பயன்படுத்தலாம்.
எல்லா வீடுகளிலும் காஸ் அடுப்பு வந்து விட்ட நிலையில் சாம்பலுக்கு எங்கே போவது? கவலை வேண்டாம். அரிசி அறவை ஆலைகளில் எரி பொருளாகப் பயன்படுத்திய உமியின் சாம்பல் மலையாகக் குவிந்து கிடக்கும். அதை இலவசமாகவே கொடுப்பார்கள் அல்லது குறைந்த விலைக்கு வாங்கலாம். சுமை கூலி தான் செலவு. பத்துப் பேர் சாம்பல் தேவை என்று கேட்க ஆரம்பித்து விட்டால் தெரு முனைக் கடைகளில் தற்போது தண்ணீர்க் குடுவைகள் விற்பது போல சாம்பல் மூட்டைகளும் விற்கத் தொடங்கி விடுவார்கள். சாம்பலுக்குச் செய்யும் செலவை உர விற்பனை மூலம் சரிக்கட்டி விடலாம்.  
இம்முறை அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கும் ஏற்றது. இதனால் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் சுமை குறையும், நாற்றம் நீங்கும். கொசுத் தொல்லை குறையும். ஒரு குடும்பம் ஆண்டு ஒன்றுக்கு 50 லிட்டர் கழிவை ஏற்படுத்துவதாகவும் இதை பாதாள சாக்கடையில் கொண்டு சேர்க்க 15000 லிட்டர் நீர் செலவாகிறது என்றும் ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இந்தத் தண்ணீர்ச் செலவு கணிசமாகக் குறையும். எல்லாவற்றையும் விட முக்கியமாக, நிலத்தடி வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பைச் சரி செய்வதற்காக அந்த அசுத்த நீரில் ஒரு மனிதனை முழுக வைக்கிறோமே அந்தக் கொடுமை நீங்கும்.
பாதாள சாக்கடை இல்லாத ஊர்களில் நிலத்தடி அறைகளில் சென்றடையும் கழிவு நீர் சுற்றுப்புறத்தில் நிலத்தடி நீரைக் கெடுத்து விடுகிறது. எகோசான் முறையைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தத் தொல்லை நீங்கும்.
இதே போல, சிறுநீரைப் பத்துப் பங்கு நீருடன் கலந்து சிறந்த உரமாக்க முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை வீட்டளவில் எப்படிச் செய்வது என்பதைப் பின்னர் திட்டமிடலாம்.  

Wednesday, August 29, 2012

சம்பந்தரும் சமணரும்



      வேதநெறி தழைக்க, சைவத்துறை விளங்க அவதரித்த திருஞானசம்பந்தர் தன் ஒவ்வொரு பதிகத்திலும் பத்தாவது பாடலில் வேதநெறிக்குப் புறம்பான சமண சாக்கியர்களைச் சாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பதிகத்தின் பதினோராவது பாடல் திருக்கடைக்காப்பு எனப்படுகிறது. அதில் தன் பெயரைப் பதிவு செய்வதோடு இப் பதிகத்தைப் பாடுவதால் என்ன பலன் கிடைக்கும் என்றும் கூறுகிறார். எனவே பத்தாவது பாடலே இறைவனைப் பற்றிய பாடல் தொகுதியின் நிறைவுப் பாடலாக அமைகிறது. இறைவியிடம் ஞானப்பால் உண்டவுடன் அவர் பாடிய தோடுடைய செவியன் என்ற முதல் பதிகத்தில் பத்தாவது பாடல் சமண சாக்கியர்களுக்கு எதிராக அமைந்தது திட்டமிடாதது அல்லது இறைவன் செயல் எனக் கூறலாம். ஆனால் மற்றப் பதிகங்களிலும் அதே பாணியைப் பின்பற்றியது இறைவன் வகுத்துக் கொடுத்த அமைப்பை ஒட்டிச் செல்லவேண்டும் என்று அவர் திட்டமிட்டே செய்ததாகத் தோன்றுகிறது.

      ஒன்பது பாடல்களில் இறைவனின் சிறப்புகளைப் பலபடப் புகழ்ந்துவிட்டுப் பத்தாவது பாடலில் புறச்சமயத்தாரைச் சாடி நிறைவு செய்திருப்பதைப் பார்க்கும்போது முழுப்பதிகத்தின் நோக்கமே புறச்சமயத்தின் ஆதிக்கத்தை வீழ்த்திவிட்டுச் சைவத்தை அரியணை ஏற்றுவது தான் என்பது புலப்படுகிறது. அத்தகைய சமண சாக்கிய எதிர்ப்புப் பாடல்களை மட்டும் இப்பொழுது ஆராய்வோம்.

      சம்பந்தர் பாடிய பதிகங்களின் எண்ணிக்கை (கல்வெட்டுகளின் மூலம் கிடைத்தவை உள்பட) 385. அவற்றில் பெரும்பாலானவை கடைக்காப்பு உள்பட 11 பாடல்களைக் கொண்டவை. சில பதிகங்களில் 12 பாடல்களும், ஒன்றில் மட்டும் 10 பாடல்களும் உள்ளன. இந்த 385 இல் 19 பதிகங்களில் புறச்சமய எதிர்ப்பு வெளிப்படையாகக் காட்டப் பெறவில்லை. 5 பதிகங்களில் 10வது பாடல் கிடைக்கவில்லை. இந்த 24 நீங்கலாக மீதி அனைத்திலும் சமண சாக்கியங்கள் இகழப்பட்டுள்ளன. பெரும்பாலான பதிகங்களில் பத்தாவதாகவும், ஐந்தில் ஒன்பதாவது பாடலாகவும், ஏழில் 11வது பாடலாகவும் இது அமைந்துள்ளது. 47 அடிகள் கொண்ட தொடர்நிலைச் செய்யுளான திருவெழுகூற்றிருக்கையில் 36, 37வது அடியாக இக்கருத்து அமைந்துள்ளது. மதுரையில் பாடிய பதிகங்களில் நான்கில் எல்லாப் பாடல்களிலுமே புறச்சமயத்தைத் தாக்குவது காணப்படுகிறது.
சமணம் சாக்கியம் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிக் கொள்கை உடையவை. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்ற கர்மாக் கொள்கை, மறுபிறவிக் கொள்கை, உண்மை, அகிம்சை, புலனடக்கம், புலால் மறுப்பு, இறை மறுப்பு இவை அவற்றின் பொதுக் கொள்கைகள். பௌத்தத்தை விடச் சமணம் இவற்றை அளவு கடந்து வலியுறுத்தியது என்பது தான் அவற்றிற்கு இடையேயுள்ள வேறுபாடு. எனவே தமிழகத்தைப் பொறுத்தவரை அவை இரண்டும் ஒன்றாகவே கூறப்படுகின்றன. சம்பந்தரும் தன் பாடல்களில் அவ்விரண்டையும் சேர்த்தே பேசுகிறார். ஆனாலும் சமண சாக்கியர்களின் தனிப்பட்ட பழக்க வழக்கங்களைத் தனித்தனியாகவே குறிப்பிடுகிறார்.

மிகுதேரர் எனக் குறிப்பிடப்படுவதால் பௌத்தர்கள் எண்ணிக்கையில் மிகுந்தவர் எனத் தெரிகிறது. ஆனால் சாக்கியத்தை விடச் சமணமே அன்றைய தமிழ்நாட்டில் சைவத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது என்பது சம்பந்தர் அதிகமாகச் சமணத்தைப் பற்றிக் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம். சாக்கியரைப் பற்றிக் குறிப்பிடாத பதிகங்கள் உண்டு. ஆனால் சமணரைப் பற்றிக் குறிப்பிடாதவை இல்லை.

இனி, அக்காலச் சமண சாக்கியப் பழக்க வழக்கங்களைச் சம்பந்தர் கூறும் வகையில் காண்போம்.

உணவு
சமண சாக்கியத் துறவிகள் மனைதோறும் பிச்சை எடுத்து வாழ்ந்தனர். சமணர் கையில் உணவை வாங்கி நின்றுகொண்டே உண்ண, சாக்கியர்களோ மண்டை எனப்படும் பாத்திரத்தில் உணவைப் பெற்று அமர்ந்து உண்டனர். இரு வகையினரும் குண்டிகை எனப்படும் சுரைக் குடுக்கையில் அருந்துவதற்கு நீர் வைத்திருந்தனர். அதை உறிகட்டித் தூக்கிச் சென்றனர். சமணர்கள் காலையில் தூங்கி விழித்தவுடன் கண் கழுவுமுன்னே உணவு உண்டதாகச் சம்பந்தர் குறிப்பிடுகிறார். சாக்கியர்கள் அந்த அளவுக்கு உணவுக்குப் பறக்கவில்லை என்பது தெரிகிறது. அவர்கள் காலையில் உணவு உண்டாலும் அது போதுமான அளவில் கிடைக்கவில்லை என்பது, யானைத் தீ எனப்படும் கொடும்பசி வரும் அளவும் உண்ணாமல் உச்சி வேளையில் மிகுதியாக உண்டனர் என்று சொல்லப்படுவதால் தெரிகிறது. இருவகையினரும் ஒரு நாளில் இருமுறை, காலையிலும் பகலிலும் மட்டும், உணவு கொண்டனர். இரு வகையினரும் நீர்நிலைகளிலுள்ள மீன்களைக் கவர்ந்து உண்டதாகக் குறிப்பிடுகிறார் காழியார்.
     
      பௌத்தம் என்றாலே அகிம்சை என்றும் புலால் இல்லாத உணவு என்றும் கேட்டுப் பழகி வந்த நமக்கு அவர்கள் மீன் உண்டார்கள் என்ற செய்தி வியப்பை அளிக்கிறது. ஆனால் சாக்கியம் என்றுமே புலால் உணவை முழுமையாகக் கண்டித்ததில்லை. புத்தரே ஒரு அடியவர் கொடுத்ததை மறுக்கக்கூடாது என்பதற்காகப் பன்றி ஊன் கலந்த உணவை உண்டு அதனால் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக அறிகிறோம். ஊன் உண்ணல் நன்று எனச் சாக்கியரும் தீது எனச் சமணரும் வாதம் புரிந்து கொண்டிருப்பதாகச் சம்பந்தர் கூறுகிறார்.
     
      ஆனால் சமணரையும் இதே போன்று மீன் உண்பவர் என்று அவர் வர்ணித்திருப்பது மிக அதிகமான வியப்பை அளிக்கிறது. ஏனெனில் சமணர்கள் அகிம்சையை அளவு கடந்து பின்பற்றியவர்கள். நடக்கும்போது புழு பூச்சிகள் மிதிபட்டு இறந்துவிடப் போகிறதே என்பதற்காக மயில் தோகையால் பாதையை நீவிக்கொண்டே நடப்பர் என்று அறிந்திருக்கிறோம். அவர்கள் கையில் மயில் தோகை வைத்திருப்பதைச் சம்பந்தரும் குறிப்பிடுகிறார். இவ்வளவு அகிம்சைக் கொள்கையுள்ளவர்கள் மீன் பிடித்து உண்டிருப்பரா என்பது ஐயமாக இருக்கிறது.

      மீன் உண்ணும் வழக்கமுடையவர்கள் சமண மதத்தில் சேர்ந்த பின்னும் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியாதிருந்ததையும் அதை மற்றவர்கள் பார்த்துவிடப் போகிறார்களே என்று அஞ்சி, பள்ளி அருகே உள்ள ஆற்றில் மீன்களைப் பிறர் அறியாமல் கவர்ந்து உண்டதையும் இதிலிருந்து ஊகிக்கிறோம். அதனால் தான் அவர்களது நோன்பைப் பொய்ம்மை நோன்பு என்று சம்பந்தர் எள்ளுகிறார் போலும்.
     
      சமண சாக்கியர் இருவருமே கஞ்சி உண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. கஞ்சி என்பது இன்று நாம் வழங்கும் பொருளில் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. பொதுவாக எல்லா மக்களும் உண்ணும் பொருளாக இருந்தால் அதை ஒரு இகழ்ச்சிக்குரியதாகச் சம்பந்தர் குறிப்பிட்டிருக்க மாட்டார். கண் கழுவு முன்னே ஓடிக் கலவைக் கஞ்சியை உண்டவர்கள் என்ற தொடரிலிருந்து இரவில் உணவு கொள்ளாத அவர்கள் அதிகாலையிலேயே பிச்சைக்குக் கிளம்பிவிட்டிருப்பது தெரிய வருகிறது. அவ்வளவு அதிகாலையில் இல்லறத்தார் நொய் அல்லது மாவு கொண்டு இந்த யாசகர்களுக்காகக் கஞ்சி தயாரித்து இருப்பரா என்பது ஐயத்துக்கு உரியது. மேலும் சமணர் கையில் உணவை வாங்கி நின்ற நிலையிலேயே உண்டவர் எனக் கூறப்படுவதால் அது திரவ வடிவிலுள்ள கஞ்சியாக இருக்க வாய்ப்பு இல்லை. எனவே கஞ்சி என்பது பழைய சோற்றைக் குறிப்பதாக இருக்கலாம். மீந்து போன சோற்றைத் தண்ணீரில் ஊறவைத்துக் காலையில் வரும் யாசகருக்குப் படைத்திருப்பர் எனக் கருதலாம். மேலும் புளித்தட்டையர் என்ற சொல்லுக்குப் புளித்த கஞ்சியை உண்பவர் என்று பொருள் சொல்லப்படுவதால் அது புளித்த பழைய சோறாகத் தான் இருக்க வேண்டும்.

முன்கூறு, பின் கூறு மூடிய சீவரத்தர் முன்கூறு உண்டு ஏறுதலும் பின்கூறு உண்டு காடி தொடு சமண் என்ற தொடர் (திருக்குறும்பலாப் பதிகம்) ஆராயத் தக்கது. மூடிய சீவரத்தர் ஆகிய புத்தர்கள் முன்கூறு உண்டு வெளியேறிய பின்னர், பின்கூற்றை உண்டு காடியை அருந்திய சமணர் என்று இதைப் பொருள் கொள்ளலாம். முன்கூறு பின்கூறு என்பது என்ன? இது சாதாரணமாகப் பொதுமக்கள் உண்ணும் உணவின் முற்பகுதியான குழம்புச் சோற்றையும் பிற்பகுதியான மோர்ச் சோற்றையும் குறிப்பதாக இருக்கலாம். புத்தர்கள் குழம்புச் சாதத்துடன் நிறுத்திக் கொண்டனர், சமணர்கள் மோர் சாதம் மட்டும் சாப்பிட்டனர் என்று கொள்வது தவறாகாது. மற்றொரு இடத்தில் அறுவகைத் தேரர் என்பதற்கு அறுசுவையுடன் கூடிய உணவு உண்ணும் புத்தர் என்று பொருள் கூறப்படுவதால் (1.128 திருவெழுகூற்றிருக்கை தருமை ஆதீன உரை) அவர்கள் அறுசுவையும் அடங்கிய குழம்பு போன்ற பொருளை உண்டிருப்பர் என்றும் சமணர்கள் அறுசுவை அற்ற மோர்ச் சோற்றை மட்டுமே உண்டிருப்பர் என்பதும் வலுப்படுகிறது. உலக இன்பங்களைத் துய்த்தல் ஆகாது என்னும் சமணக் கொள்கையில் உணவின்பமும் அடங்குவதால் இவ்வாறு ஊகிக்கிறோம்.

சாக்கியரும் புளிப்பேறிய காடியைத் தட்டில் இட்டு உண்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்தக் காடி என்பது என்ன? அரிசிச் சோற்றை நீரில் பல நாட்கள் ஊறவைத்துப் புளிக்கவிட்டுத் தயாரிக்கப்படும் பானம் இது. இதை உண்டால் வரும் போதை மயக்கம் போன்ற மனநிலை தியானத்துக்கு ஏற்றது என்ற நம்பிக்கை அண்மைக் காலத் துறவிகளிடமும் உண்டு.

சமணர்கள் கடுக்காய், சுக்கு இவற்றைத் தின்றது கூறப்பட்டுள்ளது. உடலில் காம உணர்வு தோன்றக் கூடாது என்பதற்காக இதைப் பயன்படுத்தி இருக்கலாம். இதே நோக்கத்துடன் கடுக்காயும் எட்டிக்காயும் சேர்த்து உண்ணும் வழக்கம் அண்மைக் காலத் துறவிகளிடமும் உண்டு.  

       உடை
சமணர்கள் ஆடை அணியாமல் இருந்ததும் அவர்கள் அதை நாணுதற்குரிய செயலாகக் கருதவில்லை என்பதும் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓரிடத்தில் மட்டும் (சாய்க்காட்டுப் பதிகம்) நான்கு விரல் அகலமுள்ள கோவணம் அணிந்த குறிப்பு காணப்படுகிறது. அரிதாக ஓரிருவர் இவ்வாறு கோவணம் அணிந்திருக்கலாம். எல்லாச் சமணத் துறவிகளும் ஓலையால் முடையப்பட்ட தடுக்கு ஒன்றைக் கையில் ஏந்தி உடலை மறைத்தனர். உட்காரும்போது தடுக்கின் மேல் அமர்ந்தனர்.

சாக்கியர்கள் துவராடை அணிந்திருந்தனர். ஆடையில் காவி வண்ணம் ஏற்றுவதற்கு மருத மரத்தின் இலையையோ, காவிக் கல்லையோ, செம்மண்ணையோ பயன்படுத்தினர். அவ்வாடை சீவரம் எனப்பட்டது. இவர்கள் உடல் முழுதும் உடையால் போர்த்தி இருப்பர். நீண்ட போர்வையர் என்றும் இணைப் போர்வையர் (இரு போர்வை போர்த்தியவர்) என்றும் அவர்கள் கூறப்படுகின்றனர்.

கலிங்கமுடை பட்டைக் கொண்டார் என்ற தொடரிலிருந்து சாக்கியர்கள் கலிங்கம் எனப்படும் பட்டாடையை உடுத்தியதை அறிகிறோம். அது கலிங்க நாட்டுப் பட்டாடையாகவும் இருக்கலாம்.

உறைவிடம்
இரு வகையினரும் தத்தம் பள்ளிகளில் தங்கினர். சமணர்கள் மட்டும் பாழிகளில் தங்கியது கூறப்பட்டுள்ளது. அது தவம் புரியும் இடமாக இருக்கலாம். தம் உடலைச் சுற்றிப் புற்றேறும்படி கடுமையாகத் தவம் செய்தனர் என்பதும் தெரிகிறது.

உடல் தோற்றம்
இருவகையினரும் கருநிறத்தவர் எனக் கூறப்படுவதிலிருந்து அவர்கள் பகல் முழுவதும் வெய்யிலில் உணவுக்காக அலைந்ததால் கருத்திருந்தது  பெறப்படுகிறது. சமணர்களைப் பற்றிக் குளித்துணாச் சமணர், ஊத்தை வாய்ச் சமண் என்று கூறப்படுவதால் அவர்கள் குளிப்பதில்லை என்றும் பல் கூடத் துலக்க மாட்டார்கள் என்றும் தெரிகிறது. உடம்பினை இழுக்கு என்று கருதுவது அவர்களது கொள்கை போலும். இதனால் உடலில் வியர்வை தோன்றி அழுக்கேறி அவரது உடலில் முடைநாற்றம் எப்பொழுதும் வீசிக் கொண்டிருந்ததையும், அவர்கள் இகழத்தக்க உருவுடையோராக இருந்ததையும் ஆளுடைய பிள்ளை கூறுகிறார். மாறாகச் சாக்கியர்கள் நீரில் பலகாலும் மூழ்கிக் குளித்துத் தூய்மை செய்து கொண்டது சொல்லப்பட்டுள்ளது. சமணர்கள் கடுக்காய்ப் பொடியை உடல் முழுவதும் பூசிக் கொண்டதும் சாக்கியர்கள் மருதமரப் பூவை அரைத்துப் பின்பக்கத்தில் பூசி உடலை மறைத்ததும் குறிக்கப்பட்டுள்ளது. இது எதற்காக என்பது தெரியவில்லை.  

குறைந்த அளவே உணவு கொள்கின்ற சமணரைக் குண்டர் என்று சம்பந்தர் அடிக்கடி குறிப்பிடுகிறார். அது உடல் பருமனைக் குறிக்காமல் கீழ்மையைக் குறிப்பிடுவதாக உரையாசிரியர்கள் சொல்கின்றனர். சாக்கியர்களைப் பொறுத்தவரை குண்டர் என்ற சொல் உடற் பருமனையே குறிப்பதாகும். அவர்கள் உடல் பருத்தவர்கள் என்று தெளிவாகவே குறிப்பிடுகிறார் கவுணியர் கோன்.  

சாக்கியர்கள் வழக்கமான முறையில் தலையை மொட்டை அடித்துக் கொண்டதும் சமணர்கள் பறிதலைக் கையினராக இருந்ததும் கூறப்பட்டுள்ளது.

கொள்கைகள்
சமணர்கள் தெய்வம் ஒன்று உண்டு என்பதை முற்றிலுமாக மறுத்தனர். தங்கள் சமய குருவாகிய மகாவீரரின் சின்னமான அசோக மரத்தைப் புனிதமாகக் கருதினர். துன்பங்களைத் தாங்குதலே தவத்தின் அடையாளம் எனக் கருதினர். கடுமையான தவத்தால் உடம்பை வாட்டினர். வெய்யிலில் அலைதல், முடியைக் கையினால் பறித்துத் தலையை முண்டிதமாக்கிக் கொள்ளுதல், பல வகை உண்ணா நோன்புகள் ஆகியவற்றின் மூலம் தம் உடலைத் துன்புறுத்திக் கொண்டனர்.

      சாக்கியர்கள் பிடகத்தை வேதமாக உரைத்தனர். இறை மறுப்பைப் பொறுத்தவரை அவர்கள் சமணர்களைப் போல் முழு நாத்திகர்களாக இல்லாமல் சற்றுத் தடுமாற்றமான கொள்கைகளைக் கொண்டிருந்தனர். தெய்வம் இருக்கட்டும் அல்லது இல்லாமல் போகட்டும், அது பற்றிக் கவலைப்படாமல் மனிதனின் துன்பங்களைப் பற்றிச் சிந்திக்க என்னும் புத்தரின் அறிவுரைப்படி, கடவுள் உண்டு, இல்லையென்று குழப்பமாகக் கூறினர். எட்டுத் திக்கிலும் இல்லாத தெய்வம் ஒன்று உள்ளது என்று சாக்கியர்கள் கூறுகிறார்களே, அதனால் என்ன பயன் உள்ளது?” என்று சம்பந்தர் வினவுகிறார். குணங்களும் அறிவும் நிலையில்லாதன எனவும், காணப்படும் உலகப் பொருள்களும், உரைக்கும் உரையால் உணர்த்தப் படும் ஏனைய பொருள்களும் அவ்வாறே அழிந்து தோன்றுமியல்பின எனவும் அவர்கள் கணபங்க வாதம் புரிவதாக அவர் கூறுகிறார். சாக்கியர்கள் போதி எனப்படும் அரசமரத்தைப் புனிதமாகக் கருதினர்.

      இரு சமயத்தாரின் இயல்புகளையும் சம்பந்தர் மிக ஆவேசமாகத் தாக்குகிறார். உணவையை பெரிதாகக் கருதுபவர், வஞ்சகர், நற்குணங்கள் இல்லாதவர், நீதியறியாதவர், அறிவற்றவர், நெறியற்ற கீழ்மக்கள், இழிதொழில் புரிபவர், தந்திரசாலிகள், மயக்க அறிவினர், குற்றங்களையே பலகாலும் சொல்லித் திரிபவர், அஞ்சத் தகுந்த சிரிப்பு உடையவர், தம் தவறான கொள்கையில் வழுவார், நாவிற்கு வெறுப்பை உண்டாக்கும் பொய்ம்மொழி பேசுபவர், நேயமற்றவர், பித்தர், ஒன்றுமுணரா ஊமர், நல்லதை அறியாதவர், வாதுசெய்பவர், நல்வினை நீக்கிய வல்வினையாளர், ஓதியுங் கேட்டும் உணர்வினையிலாதார், உள்கலாகாததோர் இயல்பினையுடையார், குறிக்கோள் இல்லாதவர், பேய் போன்றவர், செருக்குடையவர், ஒரு பயனும் அறியாதவர், முரட்டுத்தன்மை உடையவர், சான்றோர் நெறி நில்லாதவர், தம் மனதுக்கு ஒத்தது மட்டும் சொல்பவர், போலியான தவம் செய்பவர், பொருளல்லாதன பேசுபவர், ஆசி மொழியாதவர், ஏசுபவர், ஈரமிலாதன பேசுபவர், குணமல்ல கூறுவார், போதிய பயிற்சியின்றித் தொடக்க நிலையில் உள்ளவர், குற்றப்பட்ட சமயநெறியை உடையவர், பெருக்கப் பிதற்றுவோர், தடுமாற்றமுறுபவர், அற்பமானவர், அழிதலில் வல்லவர், வாய்த்திறனால் புறங்கூறுபவர், பல்வகை விரதங்களை மேற்கொள்பவர், கைகூப்பி வணங்காதவர், வம்பு செய்யும் இயல்பினர், வீண் தவத்தர், புண்ணியப் பேறு இன்மையால் அன்பு செய்து வழிபாட்டில் நிலைத்திரார், கேட்பவர்க்குத் தெளிவு ஏற்படாதவாறு, பொருள் இது அன்று, அதுதான் என்று வாய்க்கு வந்தபடி காரணம் கூறுபவர், பூமியின் கண் நுகரத் தகுவன நுகராதே, துன்பத்தைத் தாமே தேடிக்கொண்டு வருந்துபவர்கள் என்று பல இகழ்மொழிகளால் தூற்றுகிறார்.

      சமண சாக்கியர்களின் புற ஒழுக்கங்களைச் சம்பந்தர் கடுமையாகத் தாக்குவதற்குக் காரணம் என்ன? சமணர்கள் ஆடை இல்லாதிருப்பதையும் சிலர் நால்விரல் கோவணம் அணிந்திருந்ததையும் ஏசும் சம்பந்தர் சிவனின் நக்கத் தோற்றத்தையும் துன்னம் சேர் கோவணத்தையும் மட்டும் புகழுவது ஏன்? சிவன் பலி ஏற்றுத் திரிவதைப் போற்றுதலுக்கு உரிய பண்பாகப் பேசும் அவர் சமண சாக்கியர்களின் பிச்சை எடுத்துண்ணலைக் குறை கூறுவது ஏன்? காரணம் அவர்களது நாத்திக வாதம் தான். அவர்கள் சிவனை அறியார். இறைவன் பாதம் வணங்கல் அறியார். சிவனைக் கண்டு நடுக்கம் உறுவர். வேதவேள்வியை நிந்தனை செய்துழல்வர். ஆதமில் (அறிவற்ற) அவுணரது பொய் உரைகளைக் கேட்காதீர், அவர்களோடு பேசவும் செய்யாதீர், தர்க்க சாத்திரத்தவர் சொல் இடுக்கண்வரு மொழி, அவர்களுடைய உரைகளைக் கொள்ளாதீர், இவர்களுடன் பெரியோர் நட்புக் கொள்ளார், உண்மை நெறியல்லாத புறச்சமயிகளின் அடையாளங்களைக் கருதாதீர், அவர்கள் கூறும் சமய நெறிகளும் அறவுரைகளும் வஞ்சனை மார்க்கத்தை வகுப்பன, மக்களைத் துன்பநெறியில் செலுத்தும், பழிக்கத்தக்க இவ்வாழ்க்கை நீங்கத் தவம் செய்ய விரும்புவோர் இவர்களது ஞானம் நீங்கிய பொய்மொழிகளைத் தெளியாது இறைவன் இறைவியோடு பொருந்தி வாழும் கோலத்தை வணங்குவீர்களாக, அறியாமை வயப்பட்ட சாத்திரங்களை ஓதும் புத்தர்களும், இழிந்த சமணக் குண்டர்களும் ஊழிக்காலம் வரை உணராது வாழ்நாளைப் பாழ் போக்குவர், அவர்கள் கூறும் மடமையை விரும்பி மயங்கியோர் கானல் நீரை முகக்கக் குடத்தை எடுத்துச் செல்வார் போன்றவராவர், அவ்வாறு சென்றவர் செல்லட்டும், ஏனையோர் விழிப்புப் பெறுக என்று அறிவுறுத்தும் சம்பந்தர் அவர்களை அவ்வாறு புறச்சமயத்தில் இருத்திவைப்பவனும் தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவனும் சிவனே என்று கூறி இறைவனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றெனக் குறிப்பால் உணர்த்துகிறார்.
     
மாற்றுக் கருத்துகளைச் சகித்துக் கொள்வதும் ஏற்றுக் கொள்வதும் வேதத்தின் அடிப்படைப் பண்பு. அப்படி இருக்க வேதநெறியில் வந்த சம்பந்தர் சமண சாக்கிய சமயங்களை ஏன் பகைமை பாராட்டி வேரறுத்தார்?

இச்சமயங்களின் சிறந்த கொள்கைகளாகிய கர்மாக் கொள்கை, மறுபிறப்புக் கொள்கை, அஹிம்சை ஆகியவற்றை வைதிக சமயம் ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் அதை அவர்களை விடத் தீவிரமாகக் கடைப்பிடித்தது. ஏனெனில் அவை வேதத்தில் கூறப்படாதிருப்பினும் அதன் அடிப்படைக்கு மாறானவை அல்ல. ஆனால் இறை மறுப்பு என்பது வேதநெறிக்கு முரணானது. இறைவன் இருப்பதை ஒப்புக் கொண்டு அவருடைய தன்மை இத்தகையது என்று புது வகையான விளக்கம் கொடுத்திருக்குமானால் சமண சாக்கிய சமயங்களும் வைதிக சமயத்தின் உட்பிரிவாக ஆகியிருக்கும். திருமாலும் பிரமனும் சிவனை வணங்குவதாகப் புராணங்கள் தோற்றுவித்ததைப் போலச் சாக்கியக் கடவுளும் சிவனைப் போற்றுவதாகக் கதைகள் எழுந்திருக்கும். சிவலிங்கத்தின் மேல் கல் எறிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் சாக்கியர் ஒருவர். இதுவும் ஒரு வகையான வழிபாட்டு முறை என்று ஏற்றுக் கொண்ட மக்கள் அவரை நாயனாராக ஆக்கியதை நோக்குக.

சமணர்களுடன் சம்பந்தர் செய்த வாதம் தான் எத்தகையது? அவர் தன் கொள்கையாக வலியுறுத்தியது இறைவன் உண்டு என்னும் கருத்தை மட்டுமே. திரும்பத் திரும்ப சிவபெருமானின் விந்தைச் செயல்களை மட்டுமே துணையாகக் கொண்டு வாதம் புரியும் அவரது கூற்றை நாத்திகர்களாகிய சமணர்கள் எப்படி ஏற்றுக் கொண்டிருக்க முடியும்? இவை எல்லாம் புராணப் புளுகுகள், கட்டுக் கதைகள் என்று அவர்கள் தள்ளியிருக்கக் கூடும். அனல் வாதமும் புனல் வாதமும் அறிவுக்குப் பொருத்தமான வாத முறைகள் அல்ல. பின் எப்படி அவர் வாதத்தில் வென்றதாக அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்? நடுநிலையோடு தீர்ப்பு வழங்க வேண்டிய அரசனோ, பார்வையாளர்களான பொது மக்களோ இதை எப்படி ஒப்புக் கொண்டார்கள்?

உண்மை என்னவெனில் சைவர்களும் வைணவர்களும் பிற சிறு தெய்வ வழிபாட்டினரும் தனித்தனியே பிரிந்து புராணக் கதைகளின் அடிப்படையில் ஒருவரை ஒருவர் தாழ்த்திக் கொண்டிருந்த நிலையில் இவர்களின் முரண்பாடுகளைக் காட்டியே இவை அனைத்தும் பொய் என்று நிரூபித்து வந்த சமண சாக்கியர்களுக்கு எதிராக மக்களை ஒன்று படுத்தினார் சம்பந்தர். புராணக் கதைகள் ஒவ்வொரு தெய்வத்தை உயர்த்தியும் ஒவ்வொன்றைத் தாழ்த்தியும் பேசுகின்றன. சிவனை உயர்த்தும் புராணக் கதைகளை அவர் போற்றினாலும் வேதம் ஒன்றே இவை அனைத்தையும் ஒன்று படுத்தும் என்பதால் வேத நெறியையே அதிகம் வலியுறுத்துகிறார்.

சாக்கிய, சமணக் கொள்கைகள் தான் வடநாட்டிலிருந்து வந்தனவே தவிர இங்கு அதைப் பின்பற்றியவர்கள் யாவரும் தமிழர்களே. அவர்களில் பிராமணரும் உண்டு. இவ்விரண்டு சமயங்களும் தர்க்க வாதத்தின்  அடிப்படையில் அமைந்ததால் அவர்களை வாதத்தில் தோற்கடிப்பது எளிதல்ல.  உங்கள் வேதத்தில் சிவனைப் பற்றிய குறிப்பே இல்லையே, எந்த அடிப்படையில் நீங்கள் சிவனை வேத முதல்வன் என்று புகழ்கிறீர்கள்?” என்று அவர்கள் வாதம் செய்திருக்கக் கூடும். எப்பெயரிட்டு அழைப்பினும் இறைவன் ஒன்றே என்ற வேதக் கருத்தை முன் வைத்துத் தான் ஞானசம்பந்தர் அவர்களிடம் எதிர்வாதம் புரிந்திருக்க வேண்டும்.

திருவாழ்கொளிபுத்தூர் பதிகத்தில் சம்பந்தர் முடியும் ஆயிரம் உடையார், கண்ணும் ஆயிரம் உடையார், வடிவும் ஆயிரம் உடையார், பெயரும் ஆயிரம் உடையார் என்று கூறுவது ருக் வேதம் 10 ஆவது மண்டலம் புருஷ சூக்தக் கருத்தே. அதே பதிகத்தில் சாகை ஆயிரம் உடையார், சாமமும் ஓதுவது உடையார் என்று கூறித் தன் கருத்துகளுக்கு வேத ஆதாரம் உண்டு என்பதைப் புலப்படுத்துகிறார்.

வேள்விகளைப் பொறுத்தவரை சமண சாக்கியர்களின் குற்றச்சாட்டு, அவை உயிர்க் கொலையைக் கொண்டுள்ளன என்பதே. வேதத்தில் பல பகுதிகள் இரண்டு கால் பிராணிகள் நலமாக வாழட்டும், நான்கு கால் பிராணிகள் நன்றாக வாழட்டும் என்று வேண்டுகிறது. அப்படி இருக்க, ஏன் பிராணிகளைப் பலி கொடுத்து வேள்வி இயற்றினர்? பலி இடப்பட்ட பிராணிகள் நற்கதி அடையும் என்று நம்பியதால் தான். புத்த மதப் பிரசாரம் நடைபெற்ற காலத்தில் அவர்களது அறிவு தூண்டப்பட்டது.  உயிர்ப் பலியைத் தவிர்க்க வேண்டி வேள்விகளையே புறக்கணிக்கத் தேவை இல்லை, உயிர்ப் பலி இல்லாமலும் வேள்விகள் செய்ய முடியும் என்பதை உணர்ந்தனர். மற்றவர் கூறும் குற்றச்சாட்டுகளின் நியாயத்தை உணர்ந்து அதற்கேற்பத் தன்னைத் திருத்திக் கொள்ளும் வைதிகப் பண்பு சைவத்தில் இயல்பாகவே இருந்தபடியால் புறச் சமயத்தாரின் தாக்குதல் வலுவிழந்து போயிற்று.

இவ்வாறு சைவத்தின் எழுச்சியும் புலால் மறுப்புக் கொள்கையும் ஒரே காலத்தில் தோன்றியதால் மரக்கறி உணவு தமிழ்நாட்டில் சைவ உணவு என்று பெயர் பெறலாயிற்று. வட இந்தியாவில் வைணவக் கொள்கையுடன் பரவியதால் அது அங்கு வைணவ உணவு எனப்படுகிறது.
     
மக்கள் சம்பந்தரின் கருத்துகளை ஏன் ஏற்றுக் கொண்டார்கள்? நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறிய சமண சாக்கியர்கள் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்த அளவுக்கு உணர்ச்சிக்கு இடம் கொடுக்கவில்லை. மனித வாழ்வு என்பது அறிவு உணர்ச்சி இரண்டின் கலவை அன்றோ? உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் வறட்டுத்தனமான தர்க்க ரீதியாக வாழ்க்கைப் பிரச்சினைகளை அணுகிய சமண சாக்கியர்களின் போக்கினால் அலுப்படைந்திருந்த மக்களுக்கு அம்மையாரின் வழிநின்ற ஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரின் உணர்ச்சிமயமான அணுகுமுறை ஆறுதல் அளிப்பதாக இருந்தது. அன்றாடம் சிறிது நேரம் அறிவைப் புறத்தே ஒதுக்கி வைத்து விட்டு புராணக் கதைகளை நம்பி இறைவனை நினைந்து காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்குதல் மக்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. அது ஆறுதலாகவும் இன்பமாகவும் இருந்தது. அதனால் தான் அவர்கள் புறச் சமயங்களைப் புறக்கணித்துச் சைவத்துக்குத் திரும்பினர். சம்பந்தரின் இசைத் திறனும் அதில் முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும்.  பயமறியாச் சிங்கக் கன்று போன்ற இந்தச் சிவக்கன்றின் காட்டமான தாக்குதலும் அவருடைய இளமையும் மக்களைப் பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும்.

சமணர்களால் அழிய இருந்த சைவம் இவரால் புதிய வலுவுடன் வீறுநடை போடத் தொடங்கியது. எனவே தான் சம்பந்தர் சைவசமயக் குரவர்களில் முதலானவராகப் போற்றப்படுகிறார். 

புத்தரும் மகாவீரரும் வகுத்த கொள்கைகள் சம்பந்தர் வர்ணித்தது போன்ற நாகரிகமற்ற வாழ்க்கை முறையைப் போதிக்கவில்லை. சமுதாயக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு மனம் போன போக்கில் வாழ விரும்பிய சிலர் இச்சமயங்களைப் போர்வையாகப் பயன்படுத்தி அவ்வாறு நடந்து கொண்டிருக்க வேண்டும். உழைக்க விருப்பம் இன்றிப் பிச்சை எடுத்து உண்பதும், ஆடையின்றித் திரிவதும், உடல் தூய்மை பற்றிக் கவலைப்படாமல் இருப்பதும், தவம் என்ற பெயரில் காடியைக் குடித்து விட்டு மயங்கிக் கிடப்பதுமான குறிக்கோள் இல்லாத வாழ்க்கை அண்மைக் காலத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட ஹிப்பி இயக்கத்தைப் போன்று இருப்பதை அறிய முடிகிறது. சமணத்தில் சில காலம் உழன்ற அப்பர் குறிக்கோள் இலாது கெட்டேன் என்று வருந்தியதை நினைவு கூர்க. இந்தக் கலாசாரம் பரவினால் சமுதாயம் முழுமையும் நாகரிகத்தில் பின்னடைவு கொள்ளும் அல்லவா? எனவே இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டியது ஒரு சமுதாயக் கட்டாயமாக இருந்தது. சமயத்தின் பெயரால் ஏற்பட்ட இந்தத் தவறுகளை மற்றொரு சமயத்தின் பெயரால் ஒழித்துக் கட்டிய சம்பந்தர் ஒரு சமூக சீர்திருத்தக்காரராகவும் விளங்கினார். அமெரிக்காவில் ஹரே கிருஷ்ணா இயக்கமும் யோகமும் பரவிய பின்னர் ஹிப்பிக் கலாசாரம் அழிந்ததை நாம் அறிவோம்.