Pages

Saturday, September 17, 2011

பாவம் சிவன்


 சிவனுக்கு எத்தனை கண்? இது தெரியாதா? மூன்று கண் என்று உடனே பதில் சொல்பவர்கள் சற்றே மன்னிக்க வேண்டும். கவி காளமேகத்தின் கணக்குப்படி சிவனுக்கு உள்ளது அரைக் கண் தானாம். எப்படி? காளமேகம் சொல்கிறார். சிவனின் உடலில் சரி பாதி உமையம்மை பிடித்துக் கொண்டிருக்கிறாள். எனவே மூன்றில் பாதி ஒன்றரைக் கண் உமையுடையது. மீதி உள்ளதிலாவது சிவனுக்கு உரிமை உண்டா? இல்லையாம். அதிலும் ஒரு கண் கண்ணப்பனுடையது. மீதி அரைக் கண் தான் சிவனுககுச் சொந்தமானது என்று வாதிடுகிறார் அவர்.

முக்கண்ணன் என்றரனை முன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற் குள்ளது அரைக்கண்ணே-மிக்க
உமையாள்கண் ஒன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்று
அமையும் இதனாலென்று அறி.

காளமேகமாவது நகைச்சுவைப் புலவர் என்று பேர் வாங்கியவர். அப்பரடிகள் இருக்கிறாரே! அவர் இளமையில் சமணத்தில் இருந்து முதுமை வந்தபின் சைவத்தைச் சரணடைந்தவர். அவரது பாடல்களில் தன் பழைய வாழ்க்கை பற்றிய கழிவிரக்கமும் சிவபெருமானின் பெருமைகளும் தான் காணப்படும். அவர் கூட சிவனின் மூன்று கண்களை வைத்துக் கொண்டு கிண்டல் செய்கிறார். 

இன்றரைக் கண்ணுடை யாரெங்கு மில்லை யிமயமென்னும்
குன்றரைக் கண்ணன் குலமகட் பாவைக்குக் கூறிட்ட நா
ளன்றரைக் கண்ணுங் கொடுத்துமை யாளையும் பாகம்வைத்த
ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி யூருறை யுத்தமனே. (தேவாரம் 4-86-7)

உலகத்தில் எல்லோருக்கும் இரண்டு கண் தான் உண்டு. சில பேர் ஒரு கண் பார்வையை இழந்தவர்களாக இருந்தால் அவர்களை ஒற்றைக் கண்ணன் என்று சொல்வார்கள். ஆனால் ஒரு கண்ணும் இல்லாமல் இரண்டு கண்ணும் இல்லாமல் ஒன்றரைக் கண் உடையவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இதோ இருக்கிறார் பாருங்கள்.

அவருக்கு முதலில் மூன்று கண் தான் இருந்தது. இமயமலையின் அரசனான இமவானின் மகளை மணந்து கொண்டபோது தன் உடம்பில் பாதியை உமா தேவிக்குக் கொடுத்து விட்டார். அதனால் சிவனுக்கு ஒன்றரைக் கண் தான் மிச்சம் என்கிறார் நாவுக்கரசர்.

அண்மைக் காலப் புலவரான கோபால கிருஷ்ண பாரதி பாடுகிறார்,

 அந்தமில் நடனம் செய்யும் அம்பல வாணனே 
அருமையாகவே பெற்று ஒருமையுடன் வளர்த்த 
தந்தை தாய் இருந்தால் இவ்வுலகத்தில்
உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா

கல்லால் ஒருவன் கடந்தடிக்க உடல் பதைக்க
காலின் செருப்பால் ஒரு வேடன் எதிர்த்து உதைக்க
வில்லினால் ஒருவன் வந்தடிக்க
உமது திருமேனி என்னமாய் நொந்ததோ
கூசாமல் இடையன் கைக்கோடாரியால் வெட்ட
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா எனத் திட்ட
வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க
அந்த வேளை யாரை நினைந்தீரோ ஐயா
சீலமில்லாதொரு பெண் காரியுமிழலாச்சே
சேர்ந்தவளும் தலைமீதேற எளிதாய்ப் போச்சே
பாலகிருஷ்ணன் இதைப் பார்க்கும்படியாச்சே
பாருலகில் எங்கணும் பார்க்கில் இதுவே பேச்சே

 பாவம் சிவன். இந்தப் புலவர்கள் வாயில் அகப்பட்டுக் கிண்டலுக்கு ஆளாகி, தன் அரைக் கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்கிறார்.

No comments:

Post a Comment