Pages

Tuesday, September 14, 2010

கொசுக்கடி

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே, முன்காலத்திலே கொசு எல்லாம் யானை சைஸுக்கு இருந்துதாம். இப்ப மட்டும் என்னவாம், எங்க ஆதம்பாக்கத்திலேவந்து பாருங்கோன்னு யாரோ முணுமுணுக்கறது காதிலே விழறது. கமெண்ட் அடிக்காம கதையை முழுக்கக் கேட்டுப் புண்ணியத்தைத் தேடிங்கோ.

            யானை சைஸுன்னு சும்மா வேடிக்கைக்குச் சொல்லல்லை, நிசமாவே யானை சைஸுக்கு இருந்ததுதாம். இதுக்கும் ஒரு தும்பிக்கை, ஷார்ப்பா இருந்துதாம். அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் என்னன்னா, அதுக்கு நாலு காலு, இதுக்கு ஆறு காலு, அவ்வளவு தான்.

            இந்தக் கொசு யானை என்ன பண்ணித்துன்னா, தன்னோட துதிக்கையாலே, தூங்கறவா ஒடம்புலே குத்தி கொடம் கொடமா ரத்தத்தை உறிஞ்சித்தாம்.

            மத்த பிராணிகள்ளாம் தடித்தோலு, ரோமம், ஓடுன்னு ஏதோ ஒரு கவசத்தைப் போத்திண்டு இந்தக் கொசு கிட்டேயிருந்து தப்பிச்சுண்டுடுத்தாம். ஊருக்கு எளைச்சவன் புள்ளயார் கோவில் ஆண்டிங்கறாப்பல, இதுலே பாதிக்கப்பட்டது மனுஷன் மட்டும் தானாம்.

            இந்த மனுஷன் என்ன பண்ணினான், கடவுள் கிட்ட பிரார்த்தனை பண்ணினானாம்.

கொசுக்கடி என்னும் பெரும் தொல்லையாலே
கொஞ்சம் கூட ராவிலே தூக்கம் இல்லே
கடவுளே கருணையை மறுக்கலாமோ
கதி ஒண்ணு காட்டியே அருள்வாயே.

ராவண சம்ஹார ரகுநாதா
இரணிய வதம் செய்த நரசிம்மா
உனக்கிது ஒரு பெரும் வேலையாமோ
என் துயர் தீர்த்தருள் பெருமாளே.....ன்னு கதறினானாம்.

            பகவான் பிரத்யட்சமானார். மந்தஹாஸமா சிரிச்சிண்டே சொன்னாராம், அடபோடா முட்டாள். உன்னைக் காப்பாத்திக்கிற சக்தியை உன் கிட்டயே வெச்சிருக்கேண்டா.

பாம்புக்கு பல்லை வெச்சேன்
பாய்புலிக்கு நகத்தை வெச்சேன்
மாட்டுக்குக் கொம்பை வெச்சேன்
மனுஷனுக்கு அறிவை வெச்சேன்
புத்தியைக் கொண்டு பொழச்சுக்கோடான்னு சொல்லிட்டு அந்தர்த்தானம் ஆயிட்டாராம்.

            மனுஷன் யோசனை பண்ண ஆரம்பிச்சான். இப்படி இருக்கச்சே ஒரு நாள்,  
இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
ஈட்டிகள் பல செய்திடுவீரே ன்னு ஒரு அசரீரி கொரல் காதிலே விழுந்துதாம். அது தான் சரின்னு அவன் நெறய ஈட்டிகள் பண்ணினான். ஆளாளுக்கு ஈட்டியை எடுத்துண்டு இந்தக் கொசு யானையைத் தொரத்திண்டு போறா. அதுகள் ஓட, இவா பின்னாடியே போய் ஈட்டியை விட்டெறிஞ்சு விட்டெறிஞ்சு ஒண்ணு ஒண்ணாக் கொன்னு தீத்தா. எல்லாக் கொசுவும் செத்துப் போச்சு. ஒண்ணே ஒண்ணு தான் மிச்சம். அது என்ன பண்ணித்துன்னா. ஓட்டமா ஓடிப்போய் ஒரு குகையிலே ஒளிஞ்சுண்டுடுத்தாம். வாசல்லே ஒரு பெரிய பாறாங்கல்லை வெச்சு மூடிண்டுடுத்தாம்.

            வெளியிலே மனுஷாள்ளாம் ஈட்டியும் கையுமா நிக்கறா. ஒரு நாளாச்சு, ரெண்டு நாளாச்சு, இப்படி வருஷக்ககணக்கா ஆயிடுத்து. கொசு அன்ன ஆகாரம் இல்லாமே, உள்ளேயே இருக்கு. அதுக்கு ஒடம்பு எளைச்சு மாடு சைஸுக்கு வந்து, அப்புறம் நாய் சைஸுக்கு வந்துதாம். படிப்படியா தேய்ஞ்சு எறும்பு சைஸுக்கு வந்துடுத்து. இன்னும் ரெண்டு நாள் பட்டினி கெடந்தா ப்ராணன் போயிடும்ங்கற நிலைலே தான் அதுக்கு பகவான் ஞாபகம் வந்துதாம்.

            ‘ஆண்டவனே, கல்லுக்குள்ளே இருக்கிற தேரைக்கும் கர்ப்பத்திலே இருக்கற உயிருக்கும் நீ ஆகாரம் கொடுத்துக் காப்பாத்தறதா சொல்றாளே, குகைக்குள்ளே கெடக்கற எனக்குப் பசி தீர்க்க மாட்டியான்னு சொல்லிக் கெஞ்சித்தாம். பகவான் ப்ரத்யட்சமாகி, ஒன்னைக் காப்பாத்திக்கற சக்தியை ஒனக்குள்ளேயே வெச்சிருக்கேன்னு சொல்லிட்டு மறைஞ்சுட்டாராம்.

      கொசு யோசனை பண்ணித்து. அட ஆமாம். ஒடம்பு லேசா இருக்கு. கொஞ்சூண்டு சக்தியிலே அதிக தூரம் நகர முடியறது. அட, எனக்கு ரெக்கை கூட இருக்கே, என்னாலே பறக்க முடியறதேன்னுதாம். வாசல்லே இருக்கற இடுக்கு வழியா ஹேப்பி, இன்று முதல் ஹேப்பின்னு பாடிண்டே வெளியிலே பறந்து போயிடுத்தாம்.

            அப்புறம் என்ன, மத்தப் பிராணிகளை விட்டு, நேரே மனுஷா இருக்கற எடத்துக்கு வந்துதாம். பாவிகளா, என்னை ஈட்டியாலேயா கொல்ல வந்தீங்கன்னு சொல்லிப் பழிவாங்க ஆரம்பிச்சுதாம். சீக்கிரமே அதுக்குப் புத்திர பௌத்திராதிகள் ஏற்பட்டு எல்லாருமா சேர்ந்து மனுஷாளைப் புடுங்க ஆரம்பிச்சுதுகளாம்.

            இப்ப மனுஷனுக்குப் பிரச்சினை. புத்தியைக் கொண்டு பொழச்சுக்கோன்னு பகவான் சொல்லிட்டதாலே அவன் யோசனை பண்ண ஆரம்பிச்சான்.

            தலைக்கு மேலே வேகமா விசிறியைச் சுழலவிட்டான். முதல்லே பயந்த கொசுவெல்லாம் இப்ப பழகிப்போய் சுழல் காத்திலேயே மிதந்து வந்து கடிக்க ஆரம்பிச்சுதாம். அல்லெத்ரின்னு ஒரு வெஷத்தை நெருப்பிலே பொகைய விட்டான். வழக்கம் போல மொதல்லே நாலு கொசு செத்துப் போச்சு. மத்ததெல்லாம் மாத்து மருந்தைத் தின்னுட்டு வந்து இந்த வெஷம் எங்களை என்ன செய்யும்னு நிக்கறதுகள். ஒரு வலைக்குள்ளே பூந்துண்டு தூங்கலாம்னு பாத்தான். கொசு என்ன பண்ணித்துன்னா, ஸுரஸா வாயிலே புகுந்த ஹனுமான் மாதிரி ஒடம்பை சின்னதா ஆக்கிண்டு உள்ளே வந்து, எனக்கு இது ஒரு தடை ஆமோ?’ன்னு காது கிட்டே வந்து பாட்டுப் பாடறது.

            இப்படி அவன் தடுக்கிலே பூந்தா, அது கோலத்திலே பூர்றது. இப்பத்தான் மனுஷனுக்கு ஞானம் வந்துதாம். நான் கேவலம் அல்ப சக்தன். அந்த பகவான் தான் காப்பாத்தணும்னு திரௌபதி மாதிரி ரெண்டு கையையும் மேலே தூக்கிண்டு கதறறான்.

            பகவானானா, ஆனந்தமா பள்ளி கொண்டிருக்கார். கொசு அவரைக் கடிக்கல்லே. அவர் எழுந்துட்டார்னா மனுஷனுக்கு ஒத்தாசை பண்ணிடப்போறாரேன்னு கொசு அவரை விட்டு வெச்சிருக்கு. பகவான் தானாக் கண் தெறந்தாத் தான் இந்தக் கஷ்டத்துக்கு விமோசனம்னு சொல்லிண்டு மனுஷாள்ளாம் பிங்கர்ஸைக் கிராஸ் பண்ணிண்டு ஒக்காந்திருக்காளாம்.

      இந்தக் கதையெ சொன்னவா கேட்டவா எல்லாருக்கும் ஸர்வ மங்களமும் உண்டாகும்னு பாகவதம் சொல்றது. அத்தோட, ஆல்அவுட், குட்நைட், மார்ட்டீன், ஓடோமாஸ், ஹிட், நெட்லான் இன்ன பிற வஸ்துக்கள் உற்பத்தி பண்றவாளும் பரம க்ஷேமமா இருப்பாங்கற சேதியையும் சொல்லி பூர்த்தி பண்ணிக்கிறேன். 

No comments:

Post a Comment