Pages

Tuesday, September 14, 2010

கடவுளின் நிறம் கறுப்பா. வெள்ளையா?

        
 ஐயமும் திகைப்பும் தொலைந்தன ஆங்கே
அச்சமும் தொலைந்தது சினமும்
பொய்யுமென்றினைய புன்மைகளெல்லாம்
போயின உறுதி நான் கொண்டேன்
வையமிங்கனைத்தும் ஆக்கியும் காத்தும்
மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத்
துய்ய வெண்ணிறத்தாள் தனைக் கரியவளைத்
துணையெனத் தொடர்ந்தது கொண்டே
     பாரதி பராசக்தியை வர்ணிக்கும் போது தூய்மையான வெள்ளை நிறத்தவள் என்று கூறிவிட்டு, உடனேயே கரியவள் என்றும் கூறுகிறார். இது நமக்கு முரண்பாடாகத் தோன்றுகிறது.
     உண்மையில் பராசக்தியின் நிறம் தான் என்ன? வெள்ளையா,  கறுப்பா?
     பாரதி அதை நிர்ணயம் செய்யமுடியாமல் குழம்புகிறாரோ என்று நாம் நினைக்கிறோம். ஆனால் ஐயம், திகைப்பு, அச்சம், பொய் இவை தன்னிடமிருந்து நீங்கியபின்  பாடுவதாக உள்ள பாடல் இது. இப்பொழுது குழப்பம் நமக்குத் தான்.
     பாரதி மட்டுமல்ல, மணிவாசகரும் வியாசரும்  இன்னும் பலரும் கூட இதே போலப் பேசி இருக்கிறார்கள்.
      திருவாசகத்தில் மணிவாசகர் இதே மாதிரி சில முரண்பாடான அடைமொழிகளைப் பயன் படுத்தி இறைவனை வர்ணிக்கிறார். சோதியனே என்று கூறிவிட்டு உடனேயே துன்னிருளே என்கிறார். வெய்யாய், தணியாய் என்றும் சேயாய், நணியானே என்றும் இன்பமும் துன்பமும் இல்லானே, உள்ளானே என்றும்   மாறுபட்ட அடைமொழிகளை அடுத்தடுத்து அவர் பயன்படுத்துகிறார்.
     வியாச பாரதத்தின் ஒரு பகுதியான விஷ்ணு ஸஹஸ்ர நாமமும் இதே போல்  இறைவனை அணு ப்ருஹத் க்ருச ஸ்தூலோ குணணப்ருன் நிர்குணோ என்று வர்ணித்துக் கொண்டு போகிறது. அணு போல் மிக நுண்ணியவர், மிகப் பெரியவர், மெலிந்தவர், பருத்தவர், குணங்கள் நிறைந்தவர், குணமே இல்லாதவர் என்பது இதன் பொருள்.
     அருணகிரிநாதர் இதையே எதிர்மறைச் சொற்களால் வெளிப்படுத்துகிறார்.
     உருவன்று அருவன்று  உளதன்று இலதன்று
     இருளன்று ஒளியன்று என நின்றதுவே

     இவர்களுக்கெல்லாம் மூல ஆதாரமான வேதமே இது போல முரண் தொடைகளால் இறைவனைப் போற்றுகிறது. யஜுர் வேதத்தின் ருத்ரம் என்னும் பகுதியிலிருந்து சில உதாரணங்கள் பார்ப்போம்.
4.1 மஹத்ப்ய க்ஷுல்லகேப்யஸ் ச வோ நமோ நமோ
   ரதிப்யோ அரதேப்யஸ் ச வோ நமோ நமோ
பெரியவரும்  அற்பரும் ஆகிய உங்களுக்கு நமஸ்காரம்.
ரதம் உடையவரும் இல்லாதவரும் ஆகிய உங்களுக்கு நமஸ்காரம்
5.4 நம கபர்தினே ச வ்யுப்தகேசாய ச
சடைமுடியரும் கேசம் மழிக்கப் பெற்றவரும் ஆகிய உங்களுக்கு நமஸ்காரம்.
5.8 நமோ ஹ்ரஸ்வாய ச வாமனாய ச
    நமோ ப்ருஹதே ச
குட்டை வடிவினரும் மிகக் குறுகிய வடிவினரும் மிகப் பெரிய வடிவினரும் ஆகிய உங்களுக்கு நமஸ்காரம்.
6.1 நமோ ஜ்யேஷ்டாய ச கனிஷ்டாய ச   
   நம பூர்வஜாய ச அபரஜாய ச
   நமோ மத்யமாய ச அபகல்பாய ச
பெரியவராகவும் சிறியவராகவும், முன்னர் பிறந்தவராகவும் பின்னர் பிறந்தவராகவும், நடுவயதினராகவும் பக்குவமடையாத இளம் வயதினராகவும் உள்ள உங்களுக்கு நமஸ்காரம்.
7.2 நமோ வர்ஷ்யாய ச அவர்ஷ்யாய ச
மழை நீரில் இருப்பவரும் மழை இல்லாத இடத்தில் இருப்பவருமான உங்களுக்கு நமஸ்காரம்.

     இது போல் ஆயிரக் கணக்கான உதாரணங்கள் காட்டமுடியும்.
     இந்த முரண் கூற்றுகளின் மூலம் வேத ரிஷிகளும் பின்னர் வந்த மகான்களும் நமக்கு உணர்த்த முயல்வது என்ன?
     உருவத் தொடர்புடைய சொற்களை இவர்கள் பயன்படுத்திய போதிலும் அவை உருவத்தைக் குறிக்கவில்லை. இறைப் பேராற்றலைத் தங்கள் மனக் கண்ணால் கண்டு உணர்ந்த அவர்கள் தங்கள் அனுபூதியை விவரிக்க வார்த்தைகள் கிடைக்காமல் தவிப்பது நமக்குப் புரிகிறது. எப்படிச் சொன்னாலும் அது உள்ளதை உள்ளபடி மற்றவர்க்கு உணர்த்திய நிறைவு அவர்களுக்கு ஏற்படுவதாக இல்லை. அதனால் தான் பல விதமாக மாற்றி மாற்றிச் சொல்லிப் பார்க்கிறார்கள்.
          இது தொடர்பாக நாவுக்கரசர் கூறுவது கவனிக்கத் தக்கது.
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே
    
     இறை அருளால் நாம் அந்த அனுபூதி அடைந்தால் தான் அதை உணர முடியும். அது வாக்குக்கும் புலன்களுக்கும் மனதுக்கும் அப்பாற்பட்டது என்பதை உணராதவர்கள்  சொற்களின் அடிப்படையில் சண்டை இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


No comments:

Post a Comment