ஒரு குழந்தைக்கு நாம் ஒரு கதையைச் சொல்லிவிட்டால் அது அந்தக் கதையைத் திரும்பத் திரும்பச் சொல்லச் சொல்லிக் கேட்டு ஆனந்தப் படுகிறது. எத்தனை முறை கேட்டாலும் அதற்கு அலுப்பதில்லை. சொல்பவருக்கு அலுத்துவிடும்; ஆனால் குழந்தை அதை மீண்டும் கேட்கவே விரும்புகிறது.
அதே போல, குழந்தைக்கு ஏதேனும் ஒரு சொல் அல்லது சொல்தொடர் மனதில் பதிந்துவிட்டால் அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்கிறது. எத்தனை முறை தான் அலுக்காமல் சொல்கிறது என்று நாம் ஆச்சரியப்படுகிறோம்.
குரங்கையோ நாயையோ பூனையையோ பார்த்தால் மணிக்கணக்கில் பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பது குழந்தையின் இயல்பு. ஒரேவிஷயத்தைத் திரும்பத் திரும்பப் பார்ப்பதிலும் கேட்பதிலும் சொல்வதிலும் அது மகிழ்ச்சி கொள்கிறது.
வயதாக வயதாக நாம் இழந்துவிடும் இந்தப் பண்பை மேலும் சற்று ஆராய்வோம். குழந்தை முதன் முதலாக ஒரு கதையைக் கேட்கும்போது அதற்கு ஒன்றும் புரிவதில்லை. புரியவில்லை என்று சொல்லத் தெரியாவிட்டாலும் அது கதை கேட்பதில் ஆர்வம் காட்டுகிறது. உதாரணமாக, ஒரு மூன்று வயதுக் குழந்தைக்கு, காக்கா & நரி கதை சொல்வதாக வைத்துக் கொள்வோம். அது காக்கையை வேண்டுமானால் பார்த்திருக்கக் கூடும். நரி பற்றி அதற்குத் தெரியாது. நரி என்றால் ஒரு பிராணியா ஜடப் பொருளா அல்லது தின்பண்டமா என்ற விபரத்தைத் தெரிந்து கொண்டு தான் மேற்கொண்டு கதை கேட்பேன் என்று அது சொல்வதில்லை. காக்கை பாடியதும் வடை கீழே விழுந்தது என்று நாம் சொல்வதை அது அப்படியே கேட்டுக் கொள்கிறதே தவிர பாடினால் எப்படி வடை விழும் என்பதெல்லாம் அதற்குத் தெரியாது. ஆயினும் கதையில் ஆர்வம் காட்டித் திரும்பத் திரும்பக் கேட்பதன் மூலம் புரிந்து கொள்ள முயலுகிறது. பல முறை கேட்டபின் அதற்குக் கதையின் ஒரு அம்சம் மட்டும் புரியலாம். முழுக் கதையும் புரிவதற்கு அதற்குப் பல வருடங்கள் கூட ஆகலாம். அதுவரை குழந்தைக்குக் கதை மேல் ஆர்வம் குறைவதில்லை.
இதில் நாம் புரிந்து கொள்ளவேண்டிய கருத்து ஒன்று உள்ளது. வயதான நமக்கும் எந்த விஷயமும் புரிந்து கொள்ளும் வரை கவர்ச்சிகரமாக உள்ளது. புரிந்து கொண்டபின் அல்லது நாம் புரிந்கொண்டதாக நினைத்துக்கொள்ளும்போது நமக்கு அதில் அலுப்பு ஏற்படுகிறது.
எத்தனையோ முறை ராமாயணக்கதை கேட்டிருக்கிறோம். அலுப்பதில்லை, ஏன்? அதை நாம் முற்றிலுமாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதை உணருகிறோம்.
அவ்வளவு பெரிய தசரதச் சக்ரவர்த்தி, ஒரு நாட்டை ஆளும் நிர்வாகத் திறன் பெற்றவர் , ஆராயாமல் மனைவிக்குச் சத்தியம் செய்து கொடுத்தது ஏன்?
ராமன் மேல் அளவு கடந்த பாசத்தைக் கொட்டிய கைகேயி கண நேரத்தில் மந்தரையின் மந்திரத்துக்கு மசிந்தது ஏன்?
அறத்தின் நாயகனான ராமன் வாலியை மறைந்திருந்து கொன்றது ஏன்?
தவ வலிமையும் தோள் வலிமையும் கல்வி நலனும் பெற்ற ராவணன் தனக்குத் தகாது என்று தெரிந்தும் சீதையைச் சிறை பிடித்தது ஏன்?
இது போன்ற எத்தனையோ ஏன்கள் நம் உள்ளத்தில் விடை காணப்படாமல் இருக்கும் வரை நாம் தொடர்ந்து ராமாயணம் கேட்போம். எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது என்று நினைப்பவர்கள், என்ன இருக்கு ராமாயணத்தில், திரும்பத் திரும்ப அதே கதை தானே என்பார்கள் .
வாழ்க்கைப் பிரச்சினைகளிலும் இதே போன்ற அணுகுமுறையைக் காணலாம். வாழ்க்கைப் பிரச்சினைகளை உற்றுப் பார்த்து அதைப் புரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு வாழ்க்கை ஒரு சுவையான விஷயம்.
உணவுக்காக உழைப்பதும் உண்டு உண்டு உறங்குவதும் தான் வாழ்க்கை என்று அதை ஒரு எளிய பார்முலாவாக ஆக்கிக் கொள்பவர்களுக்கு இது ஒரு சுமை, அலுப்பு, துன்பம்.
குழந்தைகள் போல் கள்ளமற்ற மகிழ்ச்சி நம் வாழ் நாள் முழுவதும் நீடித்து நிற்கச் செய்ய முடியும்.
No comments:
Post a Comment