Pages

Thursday, August 1, 2013

வேதம் புதுமை செய்




இடைக்காலம் வரை ஒரு சிலரிடம் மட்டுமே முடங்கிக் கிடந்த வேதங்களை மேலை நாட்டவர் கண்டுபிடித்து மிகுந்த முயற்சியுடன் கற்று மற்றவர்க்கும் பயன்படும் வகையில் அவற்றை மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளனர். அதற்காக நாம் அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். இந்த மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றிற்கும் அடிப்படை ஸாயணாசார்யர் என்பவர் 14 ஆம் நூற்றாண்டில் எழுதிய உரை தான். ஸாயணரோ வேதங்களுக்கு வேள்விக் கண்ணோட்டத்துடனேயே உரை எழுதி உள்ளார். வேறு வகையான உரைகள் கிடைக்காத நிலையில் மேலை நாட்டவர் இதனையே வேதத்தின் உண்மையான கருத்து என்று கருதி அதன் அடிப்படையில்  சில விளக்கங்கள் கொடுத்துள்ளனர்.

இவர்கள் கூறுவதாவது, பண்டைய ஆரியர்கள் மின்னல், நீர், காற்று, தீ முதலான இயற்கைத் தெய்வங்களை வணங்கினர். இந்தத் தெய்வங்களை மகிழ்விக்க வேள்விகள் செய்தனர். இவற்றில் இவர்கள் தீ வளர்த்து அதில் விலங்குகளைப் பலியிட்டும் சோமரசம் என்னும் போதை தரும் பானங்களை அளித்தும் வழிபட்டனர். தங்களை விரோதிகளிடமிருந்து காப்பாற்றுமாறு இவர்கள் தேவர்களை வேண்டினர். விரோதிகள் என அவர்கள் குறிப்பிடுவது இந்த வேள்வி முறைக்கு மாறுபட்ட கூட்டத்தினரான திராவிடர் என்னும் கூட்டத்தாரை.

ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்களின் கற்பனையான ஆரியர் குடியேற்றம்,  திராவிடர்களுடன் போர் முதலிய கொள்கைகள் அவர்கள் நம்மைப் பிரித்து வைத்து ஆளுவதற்கு வசதியாக இருந்தது. அவர்களது இந்தக் கண்டுபிடிப்புகளை மறு பரிசீலனை இன்றி ஒப்புக்கொண்ட நம் நாட்டு ஆசிரியர்களும் அக் கருத்துகளையே உண்மை என்பதாகப் பரப்பி வந்துள்ளனர். 

இவ்வாறு வேதங்கள் தவறான முறையில் புரிந்து கொள்ளப்பட்டதால் பலரும் வேதத்தை இகழும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அரவிந்தரும் அவர் வழி நின்று பாரதியும் ஆன்மிகக் குறியீட்டு முறையில் வேதத்திற்குப் பொருள் கண்டு இது வரை தெளிவு படுத்தப்படாத பகுதிகளில் சிறந்த ஆன்மிகக் கருத்துகள் அடங்கி இருப்பதை வெளிப்படுத்தினர்.

ஆன்மிகக் குறீயீடு என்பது என்ன? வேதத்தில் சொல்லப்பட்ட வேள்வி என்பது மனிதன் இறை நிலை அடையச் செய்யும் முயற்சியைக் குறிக்கும். இந்திரன் என்பது இடி மின்னல் தெய்வம் அல்ல. அது விஞ்ஞான சக்தியை அதாவது தெய்விகத் தன்மை கொண்ட மனத்தைக் குறிக்கிறது. அக்னி என்பது தீ அல்ல. அது ஞான சக்தி என்னும் அறிவுத் துணிவை அதாவது மேல்நிலை அடையவேண்டும் என்னும் இறை நாட்டத்தைச் சுட்டும். அவ்வாறே சூரியன் என்பது அறிவாகிய ஒளியையும், கோ (பசு)  என்பது அதன் கிரணங்களையும் குறிக்கும். வேள்வியில் அளிக்கப்படும் ஹவிஸ் எனப்படும் நெய்யுணவிற்கு ஞானத் தெளிவு என்று பொருள் கொள்ள வேண்டும். விருத்திரன் என்பது ஆரியருக்கு விரோதமான திராவிடர் இனத் தலைவன் அல்ல. அதன் வேர்ச் சொல்லான விருத் என்பது மறைத்தல் என்னும் பொருள் உடையது. அது அறிவை மறைக்கும்   அஞ்ஞானத்தைக் குறிக்கிறது.  

அரவிந்தர் தன் கற்பனையை வேத மந்திரங்களில் புகுத்துகிறாரோ என்ற ஐயம் எழலாம். ஸாயணருக்குக் காலத்தால் முந்தியவரான யாஸ்கர் என்பவர் வேதத்திற்கு அரும்பதவுரை எழுதியுள்ளார். அவர் சொற்களின் வேர் வரை சென்று பொருள் காண்பவர். அவரது வழி நின்றே அரவிந்தரும் இந்திரன் முதலான சொற்களுக்குப் புதிய பொருள் தருகிறார்.

சடங்குகளைப் போற்றும் கொள்கை உடைய ஸாயணரும் சில இடங்களில் இத்தகைய குறியீட்டுப் பொருள் தருகிறார். பல இடங்களில் சடங்குகளுக்குப் பயன்படும் வகையில் வலிந்து பொருள் கொள்கிறார். இந்த முரண்பாட்டை நீக்குகிறார் அரவிந்தர். மேலும் பல சூக்தங்களில் ஸாயணரும் அவரை ஒட்டி மொழிபெயர்த்த மேலை நாட்டவரும் தரும் பொருள் புரியாத புதிராக உள்ளது. அரவிந்தரின் குறியீடு தான் அதைச் சரியாக விளக்குகிறது.
      
உதாரணத்திற்கு ரிக் வேதம் 1-32 இன் மொழிபெயர்ப்பு இது.

                “1 இந்திரனுடைய வீரச் செயல்களை இங்கு சொல்லுகின்றேன். அவன் வஜ்ரி. மின்னல் அவனுக்குப் படை. அவனுடைய முன்னைத் திறமைகளைச் சொல்லுகின்றேன். பாம்பைக் கொன்றான். மலைகளின் சார்புகளை உடைத்தான்.

                “2 மலையின் மேலே கிடந்த விருத்திரப் பாம்பை அழித்து விட்டான். வானத்தாலாகிய வயிரப் படையை இவனுக்கு த்வஷ்டா என்ற தேவன் செய்து கொடுத்தான். நதிகள் வானக் கடலை நோக்கிப் பாடிக் கொண்டு செல்கின்றன, இரைந்து கொண்டு செல்லும் ஆவினம் போல.

                “3 இந்திரன் ஏறு போன்றான். மூன்று படிகளிலே மதுவுண்டான். அந்த மது வேள்வியிலே வடிக்கப்பட்டது.

                “4 அரவுகளிலே முதலில் தோன்றியவனை இந்திரன் கொன்ற பிறகு மற்ற மாயாவிகளின் மாயைகளை எல்லாம் வென்றான். பின்பு சூர்யனையும் வானத்தையும் உஷாதேவியையும் தோற்றுவித்தான். அதன் பிறகு இந்திரா, உனக்கோர் பகைவனுமில்லை.

                “5 மறைக்கும் தொழிலே கொண்ட விருத்திரனுக்குத் தோளில்லை. அவனை இந்திரன் பேரிடியாலே கொன்றான். பிளந்த விறகுகளைப் போலே விருத்திரன் மண் மீது சிதறி வீழ்ந்தான்.

                “6 போர்த் தொழில் அறியாதவன் விருத்திரன். இவன் நேர்மை நாடுவோனும் மகாவீரனுமாகிய இந்திரனைப் போருக்கு அழைத்தான். இந்திரனுடைய அம்புத் திரளை இவனால் கடந்து செல்ல முடியவில்லை. சிதறுகிற தனது திறமைகளை இந்திர சத்ரு ஒன்று சேர்க்க முயன்றான்.

                “7 காலும் கையும் இல்லாதவன் விருத்திரன். இந்திரனோடு இவன் போர் செய்ய வந்தான். அவனுடைய வயிரப் படை இவனை மலையின் மீது கொன்றது. பலவற்றிலே விளங்குவோன் இந்திரன். ஆணேறுகளை ஆண்மை போகிய எருதுகள் எதிர்ப்பது போல அவனை விருத்திரன் பகைத்தான், சிதறி வீழ்ந்தான்.

                “8 ஆற்றடி பிளவுண்டு கிடப்பது போலே விருத்திரன் கிடந்தான். இவன் மீது நதிகள் சென்றன. அவை மனதின் மேல் ஏறிச் சென்றன. முன்னர் அவற்றை விருத்திரன் தனது வலிமையாலே சூழ்ந்து நின்றான். இப்போது அவற்றின் அடியிலே வீழ்ந்து கிடக்கிறான்.

                “9 விருத்திரன் தாயும் அகல வீழ்ந்தாள். தாய் மேலும் மகன் கீழுமாயினர். இந்திரன் அவள் மீது வீசியிருந்த படையை மீட்டுக்கொண்டான். கன்றுடன் கிடக்கும் பசுவைப் போலே கிடந்தனள் தாநு.

                “10 தங்கு தடையில்லாது பாயும் நதிகளிடையே அவனுடல் அமிழ்ந்திக் கிடந்தது. விருத்திரனது உடல் மறைவைக் கண்டு நதிகள் விரிந்து பெருகின. இந்திரனைப் பகை கொண்டோன் நெட்டிருளில் வீழ்ந்தான்.

                “11 கதிர்களைப் பணியென்னும் பகைவன் பிடித்து வைத்தது போலே நதிகளை விருத்திரன் தடுத்துக் கொண்டான். அவை பகைவனுக்குப் பத்தினிகள் ஆயின. அவற்றைப் பாம்பு காத்தது. நீர்த் திரள் வெளிப்படும் வாயில் அடைபட்டிருந்தது. விருத்திரனைக் கொன்று இந்திரன் அதைத் திறந்தான்.

                “12 இந்திரா, முதற் பெருங் கடவுள் உன்னைப் போரிலே செலுத்தினான். அப்போது நீ எமக்கு வலியதோர் உயிர்க் காவலன் ஆயினை. கதிர்களை வென்றாய், சூரா, மதுவை வென்றாய். ஏழு நதிகளையும் பெருகும்படி விடுவித்தாய்.

                “13 இந்திரனும் விருத்திரனும் போர் செய்த காலத்தில் பகைவன் விளைவித்த மின்னலும் தென்றலும் இடியும் அவன் பொழிந்த மழையும் இவனைத் தீண்டவில்லை. பிறகு பகைவனுடைய சேனைகள் வந்தெதிர்த்தன. அவற்றையும் இந்திரன் வென்றான்.

                “14 இந்திரா, பகைவனை அழித்தபிறகு, அச்சத்தோடு செல்லும் பருந்து போல, நீ எதன் பொருட்டாகத் தொண்ணூற்று ஒன்பது நதிகளையும் உலகங்களையும் கடந்து மேலேறிச் செல்கிறாய்? நீ கண்டு மனம் அஞ்சத் தகுந்த போராளி பாம்பினிடத்தில் ஏது?

                “15 செல்வன நிற்பன அனைத்திற்கும் இந்திரனே அரசன். இவன் வயிரப் படையைக் கைக் கொண்டான். சிகரங்களுடைய அனந்த மலைக்கும் இவனே வேந்தன். தொழில் செய்வோரை எல்லாம் இவனே ஆளுகின்றான். ஆரக் கால்களை வளையம் சூழ்ந்திருப்பது போல இவன் அவர்களைச் சூழ்ந்து நிற்கின்றான்.
 
மேலே கண்ட மொழி ஆக்கம் நமக்கு எதுவும் விளங்காது இருப்பதில் வியப்பு இல்லை. பாம்பு நதியைக் குகையில் அடைத்து வைத்திருந்தது, இந்திரன் அதைக் கொன்று நதிகளை விடுவித்தான் என்பது குழந்தைக் கதை போல உள்ளது. இதில் என்ன ஆன்மீகத் தத்துவம் இருக்கிறது, இது போன்ற கதைகளைக் கொண்ட வேதத்தைக் கொண்டாடுகிறார்களே என்று நமக்குத் தோன்றும். அதன் உண்மையான பொருளை அறிய அரவிந்தர் வழி நின்று பாரதி அளிக்கும் விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

இந்திரன் என்பது விஞ்ஞான சக்தி. இவனுக்குப் பகை அஞ்ஞானம். இந்த அஞ்ஞானத்திற்கு விருத்திரன் என்பது பெயர். (விருத்திரன்= மூடுவோன், மறைப்போன்.) விருத்திரன் இருள், அவனே தெய்வ இன்பங்களிலிருந்து நம்மைப் பிரித்து வைக்கும் அஹங்காரம், அதாவது பிரிவுணர்ச்சி. அவன் தாய்க்குத் தாநு என்று பெயர். (தாநு= பிரிப்பது)

நமக்குள்ளே மூன்று படிகள் இருக்கின்றன, மண், காற்று வானம் என. வானத்தின் மேலே உண்மை உலகம் இருக்கிறது. அந்த உண்மை உலகத்திலிருந்து நமது அறிவிலே ஞான ஒளியின் கிரணங்களும் தேவ இன்பங்களாகிய நதிகளும் எப்போதும் பாயும்படி செய்ய வேண்டும். இதுவே வேத ரிஷிகளின் நாட்டம்.

அந்த நதிகளையும் கதிர்களையும் நம்முள்ளே பாயவொட்டாதபடி விருத்திராசுரனும், பணி முதலிய மற்றப் பிசாசுகளும் தடுக்கின்றன. அச்சம், கவலை, சிறுமை, திகைப்பு, சோர்வு முதலாக நம்முள்ளே வாழும் அசுரருக்குக் கணக்கில்லை. இவர்களுக்கெல்லாம் தலைவன் விருத்திரன். இவன் மேற்கூறப்பட்ட தேவநதிகளை மண்மலையின் கீழே உள்ள ஓர் இருட்குகையில் அடக்கி வைத்து அவை நமது அறிவிலே பாயாதபடி மேலே நின்று தடுக்கிறான்.

இந்த விருத்திரனை வேதம் பாம்பு என்று சொல்லுகிறது. அஞ்ஞானம் ஒரு விஷப்பூச்சி. அதற்குக் கை கால் கிடையாது. வீரியம் கிடையாது. நெளிந்து நெளிந்து உள்ளே புகுந்து ஒளியையும் இன்பத்தையும் மறைக்கிறது.

இந்திரன் முதலிய தேவர்களை யாகத்தினாலே தோழமை கொண்டால் அவர்கள் இந்தப் பாம்பையும் இதன் சேனைகளையும் கொன்று தேவநதிகளை விடுவித்து நம்முள்ளே பாயும்படி செய்து நமக்கு அமரத் தன்மை உண்டாகும்படி செய்கிறார்கள். யாகம் என்பது நமது உடல் பொருள் ஆவி அறிவு அனைத்தையும் தேவர்களுக்கு அர்ப்பணம் செய்து விடுதல். இந்த வேள்வி செய்தால் மண் காற்று வான் (உடல் உயிர் அறிவு) என்ற மூன்று படிகளிலும் தேவர் வந்து நிலை பெற்று அமிர்த பானம் (சோமரஸம் குடித்தல்) செய்கிறார்கள். இது மகரிஷிகளின் யோகானுபவத்திலே கண்டது. இதனை நன்கு அறிந்து கொண்டால் மந்திரங்களின் பொருள் தெளிவு படும்.

பாரதியின் இந்த விளக்கத்துக்குப் பின் இதை மீண்டும் படிக்கும்போது நமக்கு ஒரு புதிய பொருள் விளங்குகிறது அல்லவா? இது போல மேலும் சில சூக்தங்களுக்குப் பாரதி புதிய பொருள் தருகிறார். அவர் மட்டும் நீண்ட நாள் வாழ்ந்திருந்தால் நான்கு வேதங்களையும் முழுமையாக மொழிபெயர்த்து வேதம் புதுமை செய்திருப்பார். 

No comments:

Post a Comment