Pages

Saturday, September 17, 2011

பாவம் சிவன்


 சிவனுக்கு எத்தனை கண்? இது தெரியாதா? மூன்று கண் என்று உடனே பதில் சொல்பவர்கள் சற்றே மன்னிக்க வேண்டும். கவி காளமேகத்தின் கணக்குப்படி சிவனுக்கு உள்ளது அரைக் கண் தானாம். எப்படி? காளமேகம் சொல்கிறார். சிவனின் உடலில் சரி பாதி உமையம்மை பிடித்துக் கொண்டிருக்கிறாள். எனவே மூன்றில் பாதி ஒன்றரைக் கண் உமையுடையது. மீதி உள்ளதிலாவது சிவனுக்கு உரிமை உண்டா? இல்லையாம். அதிலும் ஒரு கண் கண்ணப்பனுடையது. மீதி அரைக் கண் தான் சிவனுககுச் சொந்தமானது என்று வாதிடுகிறார் அவர்.

முக்கண்ணன் என்றரனை முன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற் குள்ளது அரைக்கண்ணே-மிக்க
உமையாள்கண் ஒன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்று
அமையும் இதனாலென்று அறி.

காளமேகமாவது நகைச்சுவைப் புலவர் என்று பேர் வாங்கியவர். அப்பரடிகள் இருக்கிறாரே! அவர் இளமையில் சமணத்தில் இருந்து முதுமை வந்தபின் சைவத்தைச் சரணடைந்தவர். அவரது பாடல்களில் தன் பழைய வாழ்க்கை பற்றிய கழிவிரக்கமும் சிவபெருமானின் பெருமைகளும் தான் காணப்படும். அவர் கூட சிவனின் மூன்று கண்களை வைத்துக் கொண்டு கிண்டல் செய்கிறார். 

இன்றரைக் கண்ணுடை யாரெங்கு மில்லை யிமயமென்னும்
குன்றரைக் கண்ணன் குலமகட் பாவைக்குக் கூறிட்ட நா
ளன்றரைக் கண்ணுங் கொடுத்துமை யாளையும் பாகம்வைத்த
ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி யூருறை யுத்தமனே. (தேவாரம் 4-86-7)

உலகத்தில் எல்லோருக்கும் இரண்டு கண் தான் உண்டு. சில பேர் ஒரு கண் பார்வையை இழந்தவர்களாக இருந்தால் அவர்களை ஒற்றைக் கண்ணன் என்று சொல்வார்கள். ஆனால் ஒரு கண்ணும் இல்லாமல் இரண்டு கண்ணும் இல்லாமல் ஒன்றரைக் கண் உடையவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இதோ இருக்கிறார் பாருங்கள்.

அவருக்கு முதலில் மூன்று கண் தான் இருந்தது. இமயமலையின் அரசனான இமவானின் மகளை மணந்து கொண்டபோது தன் உடம்பில் பாதியை உமா தேவிக்குக் கொடுத்து விட்டார். அதனால் சிவனுக்கு ஒன்றரைக் கண் தான் மிச்சம் என்கிறார் நாவுக்கரசர்.

அண்மைக் காலப் புலவரான கோபால கிருஷ்ண பாரதி பாடுகிறார்,

 அந்தமில் நடனம் செய்யும் அம்பல வாணனே 
அருமையாகவே பெற்று ஒருமையுடன் வளர்த்த 
தந்தை தாய் இருந்தால் இவ்வுலகத்தில்
உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா

கல்லால் ஒருவன் கடந்தடிக்க உடல் பதைக்க
காலின் செருப்பால் ஒரு வேடன் எதிர்த்து உதைக்க
வில்லினால் ஒருவன் வந்தடிக்க
உமது திருமேனி என்னமாய் நொந்ததோ
கூசாமல் இடையன் கைக்கோடாரியால் வெட்ட
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா எனத் திட்ட
வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க
அந்த வேளை யாரை நினைந்தீரோ ஐயா
சீலமில்லாதொரு பெண் காரியுமிழலாச்சே
சேர்ந்தவளும் தலைமீதேற எளிதாய்ப் போச்சே
பாலகிருஷ்ணன் இதைப் பார்க்கும்படியாச்சே
பாருலகில் எங்கணும் பார்க்கில் இதுவே பேச்சே

 பாவம் சிவன். இந்தப் புலவர்கள் வாயில் அகப்பட்டுக் கிண்டலுக்கு ஆளாகி, தன் அரைக் கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்கிறார்.

Thursday, September 15, 2011

புதிய ஆலயம்

(இந்த என் படைப்பு வல்லமை மின் இதழில் பிரசுரம் ஆகியுள்ளது.)

 சுற்றிலும் பார்க்கிறோம் சோகச் செய்திகள்
சாதியின் பெயரால் மதமெனும் சாக்கால்
உடமை சேர்க்க உரிமை நாட்ட
அடிதடி கொலைகள் ஆயிரம் நிதமும்
அமைதி வேண்டி ஆலயம் சென்றால்
அங்கும் ஆண்டவன் கையில் ஆயுதம்
ராமன் பாணம் கண்ணன் சக்கரம்
கணபதி அங்குசம் காளியின் போர்வாள்
 மாறுபட்டார் மனத்தினை மாற்ற
கொலை வழி அன்றிப் பிறவழி அறியா
முதிரா மனத்தினர் வகுத்தவை இவையாம்
 சமய முறையிலும் சாத்திரங்களிலும்
புதியன புகுதல் வழுவல அதனால்
புத்தர் காந்தி புனிதர் வள்ளல்
போதனை செய்த புண்ணிய வழியை
நெஞ்சில் நிறுத்தும் தெய்வங் களுக்கு
புதிய ஆலயம் புனைவோம் வாரீர்
 ஆலமர்ந் திருந்து அறமொழி அருளும்
மோன குருவை மூலவர் ஆக்குவோம்
ஆடல் புரிந்து அணுதொறும் இயக்கும்
தாண்டவன் கோயில் தனியே அமைப்போம்
செல்வம் அருளும் சீரார் திருமகள்
அறிவினை அருளும் கலைமக ளுக்கும்
ஆலயம் பலவாய் ஆங்காங் கமைப்போம்
வள்ள லாரை வணங்கிடும் மன்றம்
போதி மரத்தடி முனிவன் சைத்தியம்
வீதிகள் தோறும் விளங்க வைப்போம்
அமைதி வழியில் அகிலம் வெல்லும்
ஆற்றல் பெற்றிட அவரை வணங்குவோம்

Tuesday, September 13, 2011

நரி பரி ஆனது எப்பொழுது?

(இந்த என் கட்டுரை வல்லமை மின் இதழில் வெளிவந்தது) பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்த வாதவூரடிகள் அராபிய வணிகரிடம் குதிரை வாங்கக் கடற்கரைப் பகுதிக்குச் சென்றார். அங்கு சிவபெருமான் குருந்த மரத்தடியில் குரு வடிவாக எழுந்தருளி இவருக்கு உபதேசம் செய்தார். வந்த வேலையை மறந்து இறைவனுக்கு ஆலயம் எழுப்புவதில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொருள் முழுவதையும் செலவிட்டார். அரசனிடமிருந்து அழைப்பு வந்ததும், சிவனிடம் முறையிட, பெருமானும் நரிகளைப் பரியாக்கிக் குதிரைச் சேவகனாக வந்து பாண்டியனிடம் ஒப்புவித்துச் சென்றார். இரவில் அக்குதிரைகள் மீண்டும் நரியாயின. அது கண்டு சினந்த அரசன் மணிவாசகரைச் சிறையிலிட்டான். பின் இறைவன் மணிவாசகரின் பெருமையை அரசனும் பிறரும் உணருமாறு, வைகையில் வெள்ளம் தோற்றுவித்துத் திருவிளையாடல் புரிந்தார். இந்த நிகழ்ச்சி திருவிளையாடற் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. மணிவாசகர் வாழ்வில் நடந்ததாகக் கூறப்படும் இதற்கு அவரது திருவாசகத்தில் அகச்சான்று உள்ளதா? ஆராய்வோம். திருவாசகத்தில் 3 இடங்களில் நரியைப் பரியாக்கிய விபரம் கூறப்பட்டுள்ளது. கீர்த்த்தித் திருவகவல் 36வது வரியில் - “நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்.” திருவேசறவு 1-“நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவாறன்றே உன் பேரருளே.” ஆனந்தமாலை 7- “நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்தாய்.” இது தவிர 9 இடங்களில் சிவன் குதிரைச் சேவகனாக வந்த செய்தி கூறப்பட்டுள்ளது. இந்த 12 இடங்களில் எதிலும், இந்தத் திருவிளையாடல் தனக்காகச் செய்யப்பட்டதாகவோ தன் வாழ் நாளில் நடைபெற்றதாகவோ மணிவாசகர் குறிப்பிடவில்லை. தன்னடக்கத்தின் காரணமாக, மணிவாசகர் தன்னைப் பற்றிக் கூறாமல் இறைவனின் திருவிளையாடலை மட்டும் குறிப்பிடுகிறார் என்ற வாதம் பொருந்தாது. ஏனெனில், மணிவாசகர் பல இடங்களில் இறைவன் தனக்காகச் செய்த பெருங் கருணை பற்றிப் பலவாறாகப் புகழ்கிறார். என் குற்றங்களைப் பொருட்படுத்தாது ஆண்டு கொண்டாயே, இறைவா உன் கருணைத்திறத்தை நான் எப்படி இயம்புவேன் என்று விம்முகிறார். என்னைத் தில்லைக்கு வா என்று பணித்து என்னை உன் அடியவருடன் கூட்டிவைத்தவன் அல்லவா நீ என்று போற்றுகிறார். . நாயினேனை நலமலி தில்லையுட் கோலமார்தரு பொதுவினில் வருகென ஏல என்னை ஈங்கொழித்தருளி அன்றுடன் சென்ற அருள் பெறும் அடியவர் ஒன்றவொன்ற உடன்கலந்தருளி......... கீர்த்தித் திருவகவல் 127- 131 எந்தத் திருவிளையாடலையும் இன்னாருக்காகச் செய்யப்பட்டது என்று கூறும் வழக்கம் இல்லாதவர் மணிவாசகர் என்ற கூற்றும் பொருந்தாது. ஏனெனில், பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சியைக் கூறும்போது, ‘அடியவட்காகப் பாங்காய் மண் சுமந்து’ என்று பிட்டு வாணிச்சியைப் பற்றிக் குறிப்பிடுகிறார். கீர்த்தித் திருவகவல் 15 பாண்டிய மன்னனுக்காகக் குதிரைச் சேவகனாக இறைவன் வந்ததைத் திருப்பாண்டிப் பதிகத்தில் 6 இடங்களில் குறிப்பிட்டு ‘மதுரையர் மன்னன் மறுபிறப்போட மறித்திடும்’ பாண்டிப்பிரான் என்று இறைவனைப் போற்றும் அவர் எந்த இடத்திலும் தனக்காக இறைவன் குதிரை மேல் வந்ததாகக் கூறவில்லை. அதிசயப்பத்து என்ற பகுதியில் அவர் குறிப்பிடும் அதிசயம், மானிடரில் கடையனான தன்னை இறைவன் ஆண்டுகொண்டது தான். மண்ணிலே பிறந்திறந்து மண்ணாவதற் கொருப்படுகின்றேனை அண்ணல் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே. மேலும் அவர் இறைவனின் மிகப் பெரிய அதிசயச் செயலாக வியந்து பாராட்டுவது கல்லைப் பிசைந்து கனியாக்கிய விந்தையைத் தான். ஆம். கல் போன்ற தன் மனத்தை நெகிழ வைத்து ‘மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்து, கை தலை மேல் வைத்து கண்ணீர் ததும்பி உள்ளம் வெதும்பி’ இறைவனைப் போற்றும் நெறியில் ஆற்றுப்படுத்திய செயல் தான் மிகப் பெரிய அதிசயம். கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற்கன்பன் ஆக்கினாய் - திருச்சதகம் 94 கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக் கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை வெள்ளத் தழுத்தி வினை கடிந்த வேதியனை தில்லை நகர் புக்குச் சிற்றம்பல மன்னும் ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய் - திருவம்மானை 5 இறைவனின் மற்ற திருவிளையாடல்களை வர்ணிப்பது போல, எங்கோ எப்போதோ நடந்தது என்ற முறையில் தான் அவர் நரியைப் பரியாக்கிய திருவிளையாடலையும் கூறுகிறாரே அன்றித் தன் வாழ்வில் அது நடந்ததாகக் குறிப்பிடாத நிலையில் இந்தக் கதை எப்படியோ மணிவாசகர் வரலாற்றுடன் தன்னை இணைத்துக் கொண்டுவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, நரியைப் பரி ஆக்கிய திருவிளையாடல் மணிவாசகர் காலத்துக்கு முன்பே நடந்தது என்பதற்கு வலுவான சான்று, மணிவாசகருக்குக் காலத்தால் முற்பட்ட திருநாவுக்கரசரும் இறைவன் நரியைப் பரி ஆக்கிய நிகழ்ச்சியைக் குறிப்பிடுவது தான். அப்பரின் திருவீழிமிழலைப் பதிகத்தில் இறைவன் இடுகாட்டு நரியைப் பரியாகக் கொண்டு மகிழ்வதாகக் கூறுகிறார். எரியினார் இறையார் இடுகாட்டிடை நரியினாற் பரியா மகிழ்கின்றதோர் பெரியனார் தம் பிறப்பொடு சாதலை விரியினார் தொழு வீழி மிழலையே திருவாரூர்ப் பதிகத்தில் மேலும் தெளிவாக இறைவன் நரியைக் குதிரை செய்பவன் என்றே கூறுகிறார். நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும் விரதங்கொண்டாடவல்லானும் விச்சின்றி நாறு செய்வானும் முரசதிர்ந்தானை முன்னோட முன்பணிந்தமரர்கள் ஏத்த அரவரைச் சாத்தி நின்றானும் ஆரூரமர்ந்த அம்மானே இதில் இறைவன் எல்லாம் வல்லவன் என்பதற்குச் சான்றாக சில எடுத்துக்காட்டுகள் தருகிறாரே தவிர இந்த நிகழ்ச்சி நடந்ததாக அவர் குறிப்பிடவில்லை. மறைமலை அடிகள் கூறுவது போல மணிவாசகர் திருநாவுக்கரசருக்குக் காலத்தால் முந்தியவர் என்பதை ஏற்றுக் கொண்டாலும் பிரச்சினை தீரவில்லை. தன் காலத்திலும் முற்காலத்திலும் இருந்த பல அடியார்களைக் குறிப்பிடும் அப்பர் பெருமான் .மணிவாசகர் பற்றியோ அவர் பொருட்டு நரி பரியாக்கப்பட்டதையோ குறிப்பிடாதததும் சிக்கலைத் தருகிறது. அப்பர் மட்டுமல்ல பிற தேவார ஆசிரியர்களும்மணிவாசகர் பற்றிக் குறிப்பிடவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். நரியைப் பரி ஆக்கிய நிகழ்ச்சி ஒன்று நடந்திருந்தாலும் அது மணிவாசகர் காலத்தில் அல்ல என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது.

Monday, September 12, 2011

ஸம்ஸ்கிருதமும் கணினியும்

/இந்த என் கட்டுரை வல்லமை மின்னிதழில் வெளியாகியுள்ளது./



ஸம்ஸ்கிருதம் எவ்வாறு கணினிக்கு ஏற்ற மொழி என்பதை Artificial Intelligence Magazine Volume 6 Number 1 (1985) என்ற பத்திரிகையில் விளக்கியுள்ளார் ரிக் பிரிக்ஸ் என்ற நாசா விஞ்ஞானி. Rick Brigs - RIACS, NASA Ames Research Center, Moffet Field, California 94305. அவருடைய கட்டுரையைத் தழுவியது இது.

வினையை மையப்படுத்தும் செமான்டிக் நெட்

கணினி மூலம் மொழிபெயர்க்கும்போது, அகராதிப்படி நேருக்கு நேரான வார்த்தைகளைப் போடுவதன் மூலம் சரியான மொழிமாற்றம் செய்ய முடியாது என்பதை அனைவரும் அறிவர். அதற்கு முதல்படியாக, ஒரு மொழியில் சொல்லப்பட்ட கருத்தை, ‘செமான்டிக் நெட்’ Semantic Net எனப்படும் கூற்று வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, முருகன் வள்ளிக்குப் பழம் கொடுத்தான் என்ற வாக்கியத்தைச் செமான்டிக் நெட்டாக மாற்றினால் கீழ்க்கண்டவாறு வரும்.

கொடு- செய்பவர் – முருகன்
கொடு – பெறுபவர் – வள்ளி
கொடு – பொருள் – பழம்
கொடு – காலம் – இறந்தகாலம்

இதில் கொடு என்ற வினையை மையப்படுத்தி அது வாக்கியத்தின் மற்ற சொற்களோடு எத்தகைய உறவு கொண்டிருக்கிறது என்பது சந்தேகத்திற்கோ, இரண்டு பொருள் வருவதற்கோ இடமில்லாத வகையில் முறைப் படுத்தப்படுகிறது. அதைப் படமாகக் கீழே காண்க.



இனி சற்றே சிக்கலான மற்றொரு உதாரணம் பார்ப்போம்.
“பெரியதெரு, 37 ஆம் எண் இல்லத்தில் உள்ள ஆசிரியர் முருகன், வள்ளி என்ற வக்கீலுக்கு ஒரு புத்தகம் தந்தார்.”




செயல் - நிகழ்வுகள் என்னும் பெருங்குழுவில் உறுப்பான கொடுத்தல் நிகழ்வுகளில் ஒன்று.

செய்பவர் - விலாசங்கள் என்ற பெருங்குழுவில் உறுப்பான பெரியதெரு, 37 என்பதை இடமாகக் கொண்டவர், நபர்கள் என்ற பெருங்குழுவில் உறுப்பான முருகன், தொழில்கள் என்ற பெருங்குழுவில் உறுப்பான ஆசிரியத் தொழில் செய்பவர்.

பெறுபவர் - தொழில்கள் என்னும் பெருங்குழுவில் உறுப்பான வக்கீல் தொழில் செய்பவர், நபர்கள் என்னும் பெருங்குழுவில் உறுப்பான வள்ளி.

செயப்படுபொருள் - பொருள்கள் என்ற பெருங்குழுவில் உறுப்பான புத்தகம்.

காலம் - இறந்த காலம்.

மேற்கண்ட வகையில் சொன்னால் தான் கணினியால் புரிந்து கொள்ள முடியும்.. ஆனால் நாம் நடைமுறையில் இவ்வாறு பேசுவதில்லை. இந்தக் கணினி மொழியிலிருந்து இயற்கை மொழிகள் மிகவும் விலகி நிற்கின்றன. அப்படி இருக்க, இந்தக் கணினி மொழியிலிருந்து சற்றும் விலகாத ஒரு இயற்கை மொழி உண்டென்றால் அது ஸம்ஸ்கிருதம் மட்டுமே என்கிறார் பிரிக்ஸ்.

ஸம்ஸ்கிருத இலக்கணத்தில் வாக்கியத்தின் சொற்களிடையே உள்ள உறவுகளைக் காண மேற்கண்ட முறையே பின்பற்றப்படுவதாக அவர் கூறுகிறார். இம்முறை கி.மு. முதலாவது ஆயிரம் ஆண்டுகளில் பாணினியால் அறிமுகப்படுத்தப்பட்டு பின் வந்தவர்களால் விரிவுபடுத்தப்பட்டது என்றும் 18ஆம் நூற்றாண்டில் மராட்டியப் பிரதேசத்தில் வாழ்ந்த நாகேசர் என்பவரால் எழுதப்பட்ட வையாகரண சித்தாந்த மஞ்ஜூஷா என்ற நூல் இவ்வரிசையில் கடைசியாக வந்த நூல் என்றும் கூறுகிறார். அதிலிருந்து சில உதாரணங்கள் தருகிறார்.

சொற்றொடரும் அதன் உறுப்புகளும்

இந்திய இலக்கண ஆசிரியர்களின் முறைப்படி, ஒவ்வொரு வாக்கியமும் ஒரு செயலைக் குறிப்பிடுகிறது. அச்செயல் வினைச் சொல்லாலும் அதன் துணைகளாகிய பெயர்ச்சொல் முதலியவற்றாலும் குறிப்பிடப்படுகிறது.

‘சித்ரா கிராமத்தைச் சென்றடைகிறாள்’ என்ற வாக்கியத்தை நாகேசர் அலசுவது இவ்வாறு -

“ஒரு செயல் நடைபெறுகிறது. அது தொடர்பு என்னும் ஒரு விளைவை ஏற்படுத்துகிறது. செய்பவர் சித்ரா, வேறு யாரும் அல்ல. காலம் நிகழ்காலம். செயலின் செயப்படுபொருள் கிராமம், வேறு எதுவும் அல்ல.“

வினைச் சொல்லின் பொருள் செயல்- பலன் என்று இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு செயலும் பல உட்செயல்களாகப் பகுக்கப்படக் கூடியது என்ற கருத்தை நாகேசர் வலியுறுத்துகிறார்.

கந்தன் முருகனுக்குப் புத்தகம் கொடுத்தான் என்பதில் கொடுத்தல் என்பது செயல், புத்தக இடமாற்றம் என்பது பலன். இச்செயல், கந்தன் கையில் வைத்திருத்தல், அதை முருகனை நோக்கி நீட்டுதல், அது முருகன் கையோடு தொடர்பு கொள்ளுதல், கந்தன் கையை விட்டு நீங்குதல் ஆகிய பல உட்செயல்களைக் கொண்டது என்று கூறுகிறார்.

வேற்றுமைகளும் காரகங்களும்

தமிழில் இருப்பது போல ஸம்ஸ்கிருதத்திலும் எட்டு வேற்றுமைகள் –விபக்திகள்- உண்டு. அதில் முதல் 7 வேற்றுமைகள்- தமிழில் போலவே முறையே செய்பவர், செயப்படுபொருள், கருவி, சென்றடையும் இடம், புறப்படும் இடம், உடமை, இருக்கும் இடம் ஆகியவற்றைக் குறிப்பிடுவன. இதில் ஆறாம் வேற்றுமையான உடமையும், 8 ஆம் வேற்றுமையான விளியும் வாக்கியத்தின் மையக் கருத்தான செயலைப் பற்றி விளக்குவதில்லை. ஏனைய ஆறும் செயலை விளக்குவதால் அவை ‘காரக’ என்ற பெயர் பெறுகின்றன. இந்த ஆறு காரகங்கள் செயலுக்கும மற்ற துணைச் சொற்களுக்குமான உறவைக் குறிப்பிட்டு சொற்றொடருக்கு முழுமையான பொருளைத் தருகின்றன.

பிரிக்ஸ் விளக்கும் நாகேசரின் இந்த உதாராணத்தைக் கவனியுங்கள். ‘நட்பின் காரணமாக மித்ரா தேவதத்தனுக்காக நெருப்பு கொண்டு பானையில் அரிசி சமைக்கிறாள்.‘

இதில் செயல் சமைத்தல். இது அடுப்பை மூட்டுதல், பானையை வைத்தல், நீர் ஊற்றுதல், அரிசி இடுதல், அரிசியின் கடினத் தன்மையைப் போக்கி மென்மையாக்குதல் ஆகிய பல உட்செயல்களைக் கொண்டது. இச் சொற்றொடரின் பொருளை நாகேசர் அலசும் முறை இது-

“மென்மையாக்குவதற்குச் சாதகமான ஒரு செயல் நடைபெறுகிறது. செய்பவர் – மித்ரா, உட்படும் பொருள் - அரிசி. கருவி –.நெருப்பு, செயலின் பயன் சென்றடையும் இடம் – தேவதத்தன், செயல் புறப்படும் இடம் அல்லது காரணம் – நட்பு, நடைபெறும் இடம் - பானை.”

இவ்வாறு செமான்டிக் நெட் முறையும் நாகேசரின் அலசல் முறையும் ஒன்றாக இருப்பது காட்டப்படுகிறது.

சொல் வரிசை அமைப்பு

Syntax எனப்படும் சொல் வரிசை முறை ஆங்கிலத்தில் முக்கிய இடம் பெறுகிறது. Rama killed Ravana என்பதில் சொற்களின் இட வரிசையை மாற்றி விட்டால் பொருள் மாறிவிடும் அல்லது பொருள் விளங்காது. மாறாக, தமிழில் ராமன் ராவணனைக் கொன்றான் என்பதை இடம் மாற்றி
ராமன் கொன்றான் ராவணனை என்றோ
ராவணனை ராமன் கொன்றான் என்றோ
கொன்றான் ராமன் ராவணனை என்றோ எழுதினாலும் பொருள் மாறாது.

ஆனால் தமிழில் இது ஓரளவுக்குத் தான் பொருந்தும். ‘கோசலவேந்தன் ராமன் லங்காதிபனான ராவணனை கூர்மையான அம்பினால் கொன்றான்’ என்ற சொற்றொடரை மேற்கண்டது போல் மாற்றி எழுதினால் பொருள் சிதைந்துவிடும்.

ஆனால் ஸம்ஸ்கிருதத்தில் அடைமொழிகளுக்கும் வேற்றுமை உருபு சேர்க்கப்படுவதால், ‘கோசலவேந்தன் ராமன் லங்காதிபனை ராவணனை கூர்மையானதால் அம்பினால் கொன்றான்’ என்று தான் எழுதவேண்டும். அதனால் சொல் வரிசையை எப்படி மாற்றினாலும் பொருள் மாறுவதில்லை. “கோசலவேந்தன் ராவணனை கூர்மையானதால் கொன்றான் ராமன் லங்காதிபனை அம்பினால்” என்று எழுதினாலும் ஒத்த காரகச் சொற்களை இணைத்துப் பொருள் கொள்வதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

ஒரு சொல் சொற்றொடரில் எத்தகைய பணி ஆற்றுகிறது என்பதை மாறுபாடு இல்லாமல் கணினி புரிந்து கொள்ள இதுவே சிறந்த வழி என்கிறார் பிரிக்ஸ்.

கூட்டல் கழித்தல் முறை

‘மரத்திலிருந்து இலை விழுகிறது’ என்ற சொற்றொடரை செமான்டிக் நெட் வகையில் அமைத்தால் இலை என்னும் பொருள், இருப்பிடம் 1 இலிருந்து இருப்பிடம் 2க்கு நிலை மாற்றம் அடைவதாகச் சொல்ல வேண்டும்.

இலை என்னும் பொருள், இருப்பிடம் 1 இலிருந்து பிரிகிறது. இருப்பிடம் 2 உடன் சேர்கிறது என்று அலசுகிறார் நாகேசர். இது முதல் இருப்பிடத்தில் கழித்தல், இரண்டாவது இருப்பிடத்தில் கூட்டல் என்னும் கணினி முறைக்கு ஏற்றதாக இருப்பதால் இந்திய முறை செமான்டிக் நெட் முறையினும் மேம்பட்டதாக இருக்கிறது என்பது பிரிக்ஸின் கருத்து.