Pages

Saturday, September 18, 2010

பிரம்மாவின் தலையெழுத்து

यद्धात्रा निजफालपट्टलिखितं स्तोकंमहद्वाधनम्तत्प्राप्नोति मरुस्थलेपि नितरां मेरौच नाताप्यधिकम्


நாம் எங்கிருந்தாலும் நமக்குத் தலையில் எழுதினது நம்மிடம் வந்து சேரும்                                                                              
                                                          -  பர்த்ருஹரி
கோடைக்காலம். உச்சி வெய்யில் நேரம். பண்ணையார் தன் வீட்டு வாசலில் காற்றுப் பந்தலில் விசு பலகையின் மேல் உட்கார்ந்துகொண்டு தெருவில் போவோர் வருவோரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு கிழவர் வெகு வேகமாகக் கிழக்கிலிருந்து வந்து பண்ணையாரைக் கடந்து போனார். ஊருக்குப் புதிதாக இருக்கிறாரே இவர் யார் என்று யோசித்த பண்ணையார், கிழவரைப் பார்த்து, எங்கே ஐயா, இந்த வேகாத வெய்யிலில் அவசரமாக ஓடுகிறீர்கள்? சற்று உட்கார்ந்து தாகத்துக்கு ஏதேனும் சாப்பிட்டுவிட்டு இளைப்பாறிவிட்டுப் போகலாமே என்றார். உட்கார நேரமில்லை, ஒரு அவசர காரியம் என்று சொல்லிக் கொண்டே கிழவர் போய்விட்டார்.

      சற்று நேரம் கழித்துக் கிழவர் மேற்கிலிருந்து திரும்பி வந்தார். பண்ணையார் அவரைக் கட்டாயமாக உட்கார்த்தி வைத்து, தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்து விட்டு, நீங்கள் யார்? இந்த ஊரில் என்ன வேலை?” என்று விசாரித்தார். அது சொல்லக் கூடாத விஷயம் என்று கிழவர் நழுவினார். பண்ணையார் அவரை விடுவதாக இல்லை. நீண்ட வாக்கு வாதத்திற்குப் பிறகு பண்ணையார் அப்படி என்னய்யா பிரம்ம ரகசியம்? நான் இந்த ஊரின் தலைவனும் கூட. எனக்குத் தெரியாமல் இந்த ஊரில் எதுவும் நடக்கக் கூடாது. நீங்கள் சொல்ல மறுத்தால் உங்களைச் சிறையில் தள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. தெரியுமா? என்று மிரட்டினார்.

      சிறை என்ற வார்த்தையைக் கேட்டதும் கிழவர் நடுங்கி விட்டார். ஏற்கெனவே ஒரு சிறுவன் அவரைத் தலையில் குட்டிச் சிறையில் தள்ளி விட்ட அனுபவம் அவருக்கு நினைவுக்கு வந்தது. அவர் உண்மையைக் கக்கலானார்.

      நான் தான் பிரம்மா. இந்த ஊரில் மேலத் தெருவில் இருக்கும் ராமசாமியின் மனைவிக்குப் பிரசவ நேரம். பிறக்கப் போகும் குழந்தைக்குத் தலையில் பாக்கியத்தை எழுத மறந்துவிட்டேன். பிரசவம் ஆவதற்குள் அதை எழுதிவிடவேண்டும் என்பதற்காக அவசரமாகப் போனேன். மற்றவர் கண்களுக்குப் புலனாகாத நான் எப்படியோ உங்கள் கண்ணில் பட்டு விட்டேன்.

      பண்ணையார் நிமிர்ந்து உட்கார்ந்தார். அவர் வாய்க்கு அவல் கிடைத்துவிட்டது. முழுவதையும் தெரிந்து கொள்ள விரும்பினார். என்ன எழுதி இருக்கிறீர்கள் அந்தக் குழந்தை தலையில்?” என்று கேட்டார். கிழவர் சொல்ல மறுத்தார். பண்ணையார் மறுபடியும் சிறை அஸ்திரத்தைப் பிரயோகித்தார். யாருக்கும் சொல்வதில்லை என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டு கிழவர் சொன்னார் அந்தப் பையனுக்கு வாழ்நாள் முழுவதும் வீட்டில் ஒரு பசு மாடும் ஒரு கலம் நெல்லும் இருக்கும். எவ்வளவு பாடுபட்டாலும் அதற்கு மேல் அவனுக்குச் சேராது. எவ்வளவு தர்மம் செய்தாலும் அது குறைந்தும் போகாது.

      கிழவர் போய்விட்டார். பண்ணையார் இது பற்றி யாரிடமும் சொல்லாமல் அந்தக் குழந்தை வளருவதைக் கவனித்துக் கொண்டிருந்தார். வருடங்கள் ஓடிவிட்டன. அந்தப் பையன் வாலிபனாகிப் பண்ணையாரிடமே கூலி ஆளாக வேலைக்குச் சேர்ந்தான்.

      ஒரு நாள் பண்ணையார் அந்தப் பையனைக் கூப்பிட்டார். ஏண்டா, அஞ்சு வருஷமா பண்ணையிலே வேலை செய்யறியே, பணம் காசு எதாவது சேர்த்து வெச்சிருக்கியாடா, கல்யாணம் பண்ணிக்க வேண்டாமாடா?” என்றார்.

      என்னங்க சேமிப்பு, வீட்டிலே ஒரு கலம் நெல்லும் ஒரு மாடும் தாங்க இருக்கு. எங்கேங்க கல்யாணம் பண்ணிக்கிறது? எனக்கு யாருங்க பொண்ணு கொடுப்பாங்க?” என்றான் அவன். பண்ணையாருக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது. நான் சொல்றபடி கேட்டீன்னா, உனக்குப் பெண் கொடுக்க நான் நீன்னு போட்டி போட்டுக்கிட்டு வருவாங்கடா என்றார்.

      பண்ணையாரின் யோசனைப்படி அவன் தன்னுடைய மாட்டையும் ஒரு கலம் நெல்லையும் ஏழைகளுக்குத் தானம் செய்துவிட்டான். மறுநாள் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று அவனுக்குக் கவலையாக இருந்த போதிலும் பண்ணையார் மேல் அவனுக்கு இருந்த பக்தியால் அவர் பொறுப்பு என்று மனதைத் தேற்றிக் கொண்டான்.

      என்ன ஆச்சரியம்! மறு நாள் காலை அவன் கண்விழித்த போது, அவன் வீட்டில் ஒரு கலம் நெல் மூட்டை கட்டிப் போடப்பட்டு இருந்தது. கொல்லையில் ஒரு புதிய பசுவும் நின்றது. எங்கிருந்து வந்தது? தெரிய வில்லை.

      பண்ணையார் யோசனைப்படி மறுநாளும் அவன் அவற்றைத் தானம் செய்ய அன்றும் புதிய பசுவும் நெல்லும் எங்கிருந்தோ வந்தன. தினசரி அவன் அவ்வாறு தானம் செய்வதும் தினசரி புதிது புதிதாக அவனுக்குச் செல்வம் சேருவதும்  கண்ட மக்கள் அவனைக் கலியுகக் கர்ணன் என்று புகழ்ந்தனர்.

      இரவு நகர சோதனைக்கு வந்த காவலர்கள் கண்ணில் ஒரு கிழவர் தலையில் ஒரு சுமையுடனும் கையில் ஒரு மாட்டுடனும் வருவது தெரிந்தது.  கேட்ட கேள்விக்குச் சரியாகப் பதில் சொல்லாததால் பண்ணையாரிடம் கொண்டு நிறுத்தினர். அவர் அவரைச் சிறையில் தள்ள உத்திரவிட்டார்.  உடனே கிழவர் வாய் திறந்தார். என்னைத் தெரியவில்லையா? தெரியாத்தனமாக ஒரு நாள் உங்களிடம் தேவ ரகசியத்தைச் சொல்லி விட்டேன். நான் எழுதினது உண்மையாக வேண்டும் என்பதற்காக தினசரி இந்தச் சுமையைச் சுமந்துகொண்டு அவன் வீட்டில் போட்டு விட்டு வருகிறேன். என் தலையில் நீங்கள் அப்படி எழுதிவிட்டீர்களே!” என்று சொல்லிப் பெருமூச்செறிந்தார்.

             

Tuesday, September 14, 2010

கொசுக்கடி

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே, முன்காலத்திலே கொசு எல்லாம் யானை சைஸுக்கு இருந்துதாம். இப்ப மட்டும் என்னவாம், எங்க ஆதம்பாக்கத்திலேவந்து பாருங்கோன்னு யாரோ முணுமுணுக்கறது காதிலே விழறது. கமெண்ட் அடிக்காம கதையை முழுக்கக் கேட்டுப் புண்ணியத்தைத் தேடிங்கோ.

            யானை சைஸுன்னு சும்மா வேடிக்கைக்குச் சொல்லல்லை, நிசமாவே யானை சைஸுக்கு இருந்ததுதாம். இதுக்கும் ஒரு தும்பிக்கை, ஷார்ப்பா இருந்துதாம். அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் என்னன்னா, அதுக்கு நாலு காலு, இதுக்கு ஆறு காலு, அவ்வளவு தான்.

            இந்தக் கொசு யானை என்ன பண்ணித்துன்னா, தன்னோட துதிக்கையாலே, தூங்கறவா ஒடம்புலே குத்தி கொடம் கொடமா ரத்தத்தை உறிஞ்சித்தாம்.

            மத்த பிராணிகள்ளாம் தடித்தோலு, ரோமம், ஓடுன்னு ஏதோ ஒரு கவசத்தைப் போத்திண்டு இந்தக் கொசு கிட்டேயிருந்து தப்பிச்சுண்டுடுத்தாம். ஊருக்கு எளைச்சவன் புள்ளயார் கோவில் ஆண்டிங்கறாப்பல, இதுலே பாதிக்கப்பட்டது மனுஷன் மட்டும் தானாம்.

            இந்த மனுஷன் என்ன பண்ணினான், கடவுள் கிட்ட பிரார்த்தனை பண்ணினானாம்.

கொசுக்கடி என்னும் பெரும் தொல்லையாலே
கொஞ்சம் கூட ராவிலே தூக்கம் இல்லே
கடவுளே கருணையை மறுக்கலாமோ
கதி ஒண்ணு காட்டியே அருள்வாயே.

ராவண சம்ஹார ரகுநாதா
இரணிய வதம் செய்த நரசிம்மா
உனக்கிது ஒரு பெரும் வேலையாமோ
என் துயர் தீர்த்தருள் பெருமாளே.....ன்னு கதறினானாம்.

            பகவான் பிரத்யட்சமானார். மந்தஹாஸமா சிரிச்சிண்டே சொன்னாராம், அடபோடா முட்டாள். உன்னைக் காப்பாத்திக்கிற சக்தியை உன் கிட்டயே வெச்சிருக்கேண்டா.

பாம்புக்கு பல்லை வெச்சேன்
பாய்புலிக்கு நகத்தை வெச்சேன்
மாட்டுக்குக் கொம்பை வெச்சேன்
மனுஷனுக்கு அறிவை வெச்சேன்
புத்தியைக் கொண்டு பொழச்சுக்கோடான்னு சொல்லிட்டு அந்தர்த்தானம் ஆயிட்டாராம்.

            மனுஷன் யோசனை பண்ண ஆரம்பிச்சான். இப்படி இருக்கச்சே ஒரு நாள்,  
இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
ஈட்டிகள் பல செய்திடுவீரே ன்னு ஒரு அசரீரி கொரல் காதிலே விழுந்துதாம். அது தான் சரின்னு அவன் நெறய ஈட்டிகள் பண்ணினான். ஆளாளுக்கு ஈட்டியை எடுத்துண்டு இந்தக் கொசு யானையைத் தொரத்திண்டு போறா. அதுகள் ஓட, இவா பின்னாடியே போய் ஈட்டியை விட்டெறிஞ்சு விட்டெறிஞ்சு ஒண்ணு ஒண்ணாக் கொன்னு தீத்தா. எல்லாக் கொசுவும் செத்துப் போச்சு. ஒண்ணே ஒண்ணு தான் மிச்சம். அது என்ன பண்ணித்துன்னா. ஓட்டமா ஓடிப்போய் ஒரு குகையிலே ஒளிஞ்சுண்டுடுத்தாம். வாசல்லே ஒரு பெரிய பாறாங்கல்லை வெச்சு மூடிண்டுடுத்தாம்.

            வெளியிலே மனுஷாள்ளாம் ஈட்டியும் கையுமா நிக்கறா. ஒரு நாளாச்சு, ரெண்டு நாளாச்சு, இப்படி வருஷக்ககணக்கா ஆயிடுத்து. கொசு அன்ன ஆகாரம் இல்லாமே, உள்ளேயே இருக்கு. அதுக்கு ஒடம்பு எளைச்சு மாடு சைஸுக்கு வந்து, அப்புறம் நாய் சைஸுக்கு வந்துதாம். படிப்படியா தேய்ஞ்சு எறும்பு சைஸுக்கு வந்துடுத்து. இன்னும் ரெண்டு நாள் பட்டினி கெடந்தா ப்ராணன் போயிடும்ங்கற நிலைலே தான் அதுக்கு பகவான் ஞாபகம் வந்துதாம்.

            ‘ஆண்டவனே, கல்லுக்குள்ளே இருக்கிற தேரைக்கும் கர்ப்பத்திலே இருக்கற உயிருக்கும் நீ ஆகாரம் கொடுத்துக் காப்பாத்தறதா சொல்றாளே, குகைக்குள்ளே கெடக்கற எனக்குப் பசி தீர்க்க மாட்டியான்னு சொல்லிக் கெஞ்சித்தாம். பகவான் ப்ரத்யட்சமாகி, ஒன்னைக் காப்பாத்திக்கற சக்தியை ஒனக்குள்ளேயே வெச்சிருக்கேன்னு சொல்லிட்டு மறைஞ்சுட்டாராம்.

      கொசு யோசனை பண்ணித்து. அட ஆமாம். ஒடம்பு லேசா இருக்கு. கொஞ்சூண்டு சக்தியிலே அதிக தூரம் நகர முடியறது. அட, எனக்கு ரெக்கை கூட இருக்கே, என்னாலே பறக்க முடியறதேன்னுதாம். வாசல்லே இருக்கற இடுக்கு வழியா ஹேப்பி, இன்று முதல் ஹேப்பின்னு பாடிண்டே வெளியிலே பறந்து போயிடுத்தாம்.

            அப்புறம் என்ன, மத்தப் பிராணிகளை விட்டு, நேரே மனுஷா இருக்கற எடத்துக்கு வந்துதாம். பாவிகளா, என்னை ஈட்டியாலேயா கொல்ல வந்தீங்கன்னு சொல்லிப் பழிவாங்க ஆரம்பிச்சுதாம். சீக்கிரமே அதுக்குப் புத்திர பௌத்திராதிகள் ஏற்பட்டு எல்லாருமா சேர்ந்து மனுஷாளைப் புடுங்க ஆரம்பிச்சுதுகளாம்.

            இப்ப மனுஷனுக்குப் பிரச்சினை. புத்தியைக் கொண்டு பொழச்சுக்கோன்னு பகவான் சொல்லிட்டதாலே அவன் யோசனை பண்ண ஆரம்பிச்சான்.

            தலைக்கு மேலே வேகமா விசிறியைச் சுழலவிட்டான். முதல்லே பயந்த கொசுவெல்லாம் இப்ப பழகிப்போய் சுழல் காத்திலேயே மிதந்து வந்து கடிக்க ஆரம்பிச்சுதாம். அல்லெத்ரின்னு ஒரு வெஷத்தை நெருப்பிலே பொகைய விட்டான். வழக்கம் போல மொதல்லே நாலு கொசு செத்துப் போச்சு. மத்ததெல்லாம் மாத்து மருந்தைத் தின்னுட்டு வந்து இந்த வெஷம் எங்களை என்ன செய்யும்னு நிக்கறதுகள். ஒரு வலைக்குள்ளே பூந்துண்டு தூங்கலாம்னு பாத்தான். கொசு என்ன பண்ணித்துன்னா, ஸுரஸா வாயிலே புகுந்த ஹனுமான் மாதிரி ஒடம்பை சின்னதா ஆக்கிண்டு உள்ளே வந்து, எனக்கு இது ஒரு தடை ஆமோ?’ன்னு காது கிட்டே வந்து பாட்டுப் பாடறது.

            இப்படி அவன் தடுக்கிலே பூந்தா, அது கோலத்திலே பூர்றது. இப்பத்தான் மனுஷனுக்கு ஞானம் வந்துதாம். நான் கேவலம் அல்ப சக்தன். அந்த பகவான் தான் காப்பாத்தணும்னு திரௌபதி மாதிரி ரெண்டு கையையும் மேலே தூக்கிண்டு கதறறான்.

            பகவானானா, ஆனந்தமா பள்ளி கொண்டிருக்கார். கொசு அவரைக் கடிக்கல்லே. அவர் எழுந்துட்டார்னா மனுஷனுக்கு ஒத்தாசை பண்ணிடப்போறாரேன்னு கொசு அவரை விட்டு வெச்சிருக்கு. பகவான் தானாக் கண் தெறந்தாத் தான் இந்தக் கஷ்டத்துக்கு விமோசனம்னு சொல்லிண்டு மனுஷாள்ளாம் பிங்கர்ஸைக் கிராஸ் பண்ணிண்டு ஒக்காந்திருக்காளாம்.

      இந்தக் கதையெ சொன்னவா கேட்டவா எல்லாருக்கும் ஸர்வ மங்களமும் உண்டாகும்னு பாகவதம் சொல்றது. அத்தோட, ஆல்அவுட், குட்நைட், மார்ட்டீன், ஓடோமாஸ், ஹிட், நெட்லான் இன்ன பிற வஸ்துக்கள் உற்பத்தி பண்றவாளும் பரம க்ஷேமமா இருப்பாங்கற சேதியையும் சொல்லி பூர்த்தி பண்ணிக்கிறேன். 

கடவுளின் நிறம் கறுப்பா. வெள்ளையா?

        
 ஐயமும் திகைப்பும் தொலைந்தன ஆங்கே
அச்சமும் தொலைந்தது சினமும்
பொய்யுமென்றினைய புன்மைகளெல்லாம்
போயின உறுதி நான் கொண்டேன்
வையமிங்கனைத்தும் ஆக்கியும் காத்தும்
மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத்
துய்ய வெண்ணிறத்தாள் தனைக் கரியவளைத்
துணையெனத் தொடர்ந்தது கொண்டே
     பாரதி பராசக்தியை வர்ணிக்கும் போது தூய்மையான வெள்ளை நிறத்தவள் என்று கூறிவிட்டு, உடனேயே கரியவள் என்றும் கூறுகிறார். இது நமக்கு முரண்பாடாகத் தோன்றுகிறது.
     உண்மையில் பராசக்தியின் நிறம் தான் என்ன? வெள்ளையா,  கறுப்பா?
     பாரதி அதை நிர்ணயம் செய்யமுடியாமல் குழம்புகிறாரோ என்று நாம் நினைக்கிறோம். ஆனால் ஐயம், திகைப்பு, அச்சம், பொய் இவை தன்னிடமிருந்து நீங்கியபின்  பாடுவதாக உள்ள பாடல் இது. இப்பொழுது குழப்பம் நமக்குத் தான்.
     பாரதி மட்டுமல்ல, மணிவாசகரும் வியாசரும்  இன்னும் பலரும் கூட இதே போலப் பேசி இருக்கிறார்கள்.
      திருவாசகத்தில் மணிவாசகர் இதே மாதிரி சில முரண்பாடான அடைமொழிகளைப் பயன் படுத்தி இறைவனை வர்ணிக்கிறார். சோதியனே என்று கூறிவிட்டு உடனேயே துன்னிருளே என்கிறார். வெய்யாய், தணியாய் என்றும் சேயாய், நணியானே என்றும் இன்பமும் துன்பமும் இல்லானே, உள்ளானே என்றும்   மாறுபட்ட அடைமொழிகளை அடுத்தடுத்து அவர் பயன்படுத்துகிறார்.
     வியாச பாரதத்தின் ஒரு பகுதியான விஷ்ணு ஸஹஸ்ர நாமமும் இதே போல்  இறைவனை அணு ப்ருஹத் க்ருச ஸ்தூலோ குணணப்ருன் நிர்குணோ என்று வர்ணித்துக் கொண்டு போகிறது. அணு போல் மிக நுண்ணியவர், மிகப் பெரியவர், மெலிந்தவர், பருத்தவர், குணங்கள் நிறைந்தவர், குணமே இல்லாதவர் என்பது இதன் பொருள்.
     அருணகிரிநாதர் இதையே எதிர்மறைச் சொற்களால் வெளிப்படுத்துகிறார்.
     உருவன்று அருவன்று  உளதன்று இலதன்று
     இருளன்று ஒளியன்று என நின்றதுவே

     இவர்களுக்கெல்லாம் மூல ஆதாரமான வேதமே இது போல முரண் தொடைகளால் இறைவனைப் போற்றுகிறது. யஜுர் வேதத்தின் ருத்ரம் என்னும் பகுதியிலிருந்து சில உதாரணங்கள் பார்ப்போம்.
4.1 மஹத்ப்ய க்ஷுல்லகேப்யஸ் ச வோ நமோ நமோ
   ரதிப்யோ அரதேப்யஸ் ச வோ நமோ நமோ
பெரியவரும்  அற்பரும் ஆகிய உங்களுக்கு நமஸ்காரம்.
ரதம் உடையவரும் இல்லாதவரும் ஆகிய உங்களுக்கு நமஸ்காரம்
5.4 நம கபர்தினே ச வ்யுப்தகேசாய ச
சடைமுடியரும் கேசம் மழிக்கப் பெற்றவரும் ஆகிய உங்களுக்கு நமஸ்காரம்.
5.8 நமோ ஹ்ரஸ்வாய ச வாமனாய ச
    நமோ ப்ருஹதே ச
குட்டை வடிவினரும் மிகக் குறுகிய வடிவினரும் மிகப் பெரிய வடிவினரும் ஆகிய உங்களுக்கு நமஸ்காரம்.
6.1 நமோ ஜ்யேஷ்டாய ச கனிஷ்டாய ச   
   நம பூர்வஜாய ச அபரஜாய ச
   நமோ மத்யமாய ச அபகல்பாய ச
பெரியவராகவும் சிறியவராகவும், முன்னர் பிறந்தவராகவும் பின்னர் பிறந்தவராகவும், நடுவயதினராகவும் பக்குவமடையாத இளம் வயதினராகவும் உள்ள உங்களுக்கு நமஸ்காரம்.
7.2 நமோ வர்ஷ்யாய ச அவர்ஷ்யாய ச
மழை நீரில் இருப்பவரும் மழை இல்லாத இடத்தில் இருப்பவருமான உங்களுக்கு நமஸ்காரம்.

     இது போல் ஆயிரக் கணக்கான உதாரணங்கள் காட்டமுடியும்.
     இந்த முரண் கூற்றுகளின் மூலம் வேத ரிஷிகளும் பின்னர் வந்த மகான்களும் நமக்கு உணர்த்த முயல்வது என்ன?
     உருவத் தொடர்புடைய சொற்களை இவர்கள் பயன்படுத்திய போதிலும் அவை உருவத்தைக் குறிக்கவில்லை. இறைப் பேராற்றலைத் தங்கள் மனக் கண்ணால் கண்டு உணர்ந்த அவர்கள் தங்கள் அனுபூதியை விவரிக்க வார்த்தைகள் கிடைக்காமல் தவிப்பது நமக்குப் புரிகிறது. எப்படிச் சொன்னாலும் அது உள்ளதை உள்ளபடி மற்றவர்க்கு உணர்த்திய நிறைவு அவர்களுக்கு ஏற்படுவதாக இல்லை. அதனால் தான் பல விதமாக மாற்றி மாற்றிச் சொல்லிப் பார்க்கிறார்கள்.
          இது தொடர்பாக நாவுக்கரசர் கூறுவது கவனிக்கத் தக்கது.
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே
    
     இறை அருளால் நாம் அந்த அனுபூதி அடைந்தால் தான் அதை உணர முடியும். அது வாக்குக்கும் புலன்களுக்கும் மனதுக்கும் அப்பாற்பட்டது என்பதை உணராதவர்கள்  சொற்களின் அடிப்படையில் சண்டை இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.