Pages

Saturday, June 1, 2013

அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்




                இறைவன் கண்ணனாக அவதரித்துப் பாரதப் போரில் பார்த்தனுக்குச் சாரதியாகப் பணி புரிந்தது நமக்குத் தெரியும். அதே கண்ணன் துரியோதனனாக வடிவெடுத்து அர்ஜுனனோடு சண்டையிட்ட செய்தி தெரியுமா?

      இது என்ன புதுக்கதை? பாரதத்திற்குப் போட்டியாக யாரேனும் நாத்திகர் கீரதம் என்று ஏதாவது எழுதி இருக்கிறார்களா என்ன?

                இதை எழுதியவர் நாத்திகர் அல்ல. அத்வைத வேதாந்தத்தில் தோய்ந்து கண்ணனின் பரம பக்தராக வாழ்ந்து, இன்று பதின்மூன்றாவது ஆழ்வாராகப் போற்றப்படும் பாரதி தான் இப்படிச் சொல்கிறார்.

      அரைச் செய்தி சொன்னால் குழப்பமாகத் தான் இருக்கும். முழுவதையும் கேளுங்கள்.

      கடவுள் உலகத்தைப் படைத்தார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். எதைக் கொண்டு படைத்தார் என்ற வினாவுக்கு விடையாக அத்வைதம் கூறுகிறது கடவுள் எதைக் கொண்டும் உலகைப் படைக்கவில்லை. தானே பிரபஞ்சமாகத் தோற்றம் காட்டி அருளினார். அப்படி என்றால் இங்குக் காணப்படும் மலைகள், கடல்கள், காடுகள், விலங்குகள், மனிதர்கள் எல்லாமே கடவுளின் வெவ்வேறு தோற்றங்கள் தாமே. அப்படி இருக்க, மானிடரில் சிலரைப் பகைவர் என்று கூறி வெறுக்கிறோமே அது சரியா? சரி அல்ல. அதனால் தான் பாரதி கூறுகிறார்

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்
புகை நடுவினில் தீ இருப்பதைப் பூமியிற் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்

      யாரையும் மேல் தோற்றத்தை மட்டும் பார்த்து மதிப்பிடக் கூடாது. ஆழ்ந்து நோக்குக. புகை நடுவில் தீ போல, சிப்பியினுள் முத்து போல, குப்பை நடுவே மலர் கொஞ்சும் குருக்கத்திக் கொடி போல, பகைவனிடத்திலும் உறைவது பிரம்ம சைதன்யமே. தின்ன வரும் புலியைப் பார். அதன் கண்ணில் தெரியும் பசியைக் கூர்ந்து நோக்கு. பராசக்தி தென்படுவாள். எந்த தேவி எல்லா உயிரினங்களிலும் பசி வடிவில் விளங்குகிறாளோ, அந்தத் தேவிக்கு மீண்டும் மீண்டும் வணக்கம் என்று தேவி பாகவதம் கூறுவதைச் சிந்தனை செய். அந்தப் பராசக்தியைக் கும்பிடு.

      எல்லா உயிர்களாகவும் இருப்பது ஒரே கடவுள் என்றால், எதிரி என்று முத்திரை குத்தி ஒருவனை அழித்து விட்டு நீ வாழ நினைப்பது எவ்வளவு பேதைமை? எதிரியை அழிப்பதன் மூலம் நீ கடவுளை அழிக்க முயல்கிறாய். நீயும் கடவுள் தானே? அதாவது உன்னையே நீ அழிக்க முற்படுகிறாய்.

      இதெல்லாம் கடவுளின் லீலை என்பதை உணர்க. அவனே புலியாகவும் மானாகவும் வடிவெடுத்து ஒன்றை ஒன்று அழிப்பதாகத் தோற்றம் காட்டுகிறான். எதுவும் அழிவதும் இல்லை, எதுவும் அழிக்கப்படுவதும் இல்லை. மாயத் தோற்றங்களில் ஒன்று மறைகிறது, ஒரு புதிய மாயத் தோற்றம் ஏற்படுகிறது.

      பாரதக் கதை கேட்டிருக்கிறோம். அங்கே, பார்த்த சாரதியாக வந்தது மட்டும் கண்ணன் அல்ல. அங்கு இருந்த அனைத்து மனிதர்களும் விலங்குகளும் உயிரற்ற பொருள்களும் கண்ணனே. அவனே தன்னை இப்படிப் பல  கூறாக ஆக்கிக் கொண்டு பாரதப் போர் என்னும் மாயையைத் தோற்றுவித்தான். சுருக்கமாகச் சொல்லப் போனால், பார்த்த சாரதி மட்டுமல்ல, பார்த்தனும் கண்ணனே, அவனை எதிர்த்த துரியோதனனும் கண்ணனே, அவனது தம்பிகளும் கண்ணனே.

      விசுவரூப தரிசனம் தந்து நடந்தது, நடப்பது, நடக்கப் போவது என்ற முக்காலத்தையும் காட்டின கண்ணன் தன் உடலுக்குள்ளேயே இரு திறத்துப் படைகளையும் உள்ளடக்கிக் காட்டவில்லையா? இந்த உண்மையைச் சந்தேகம் இன்றித் தெரிந்து கொண்டால் உன் உள்ளம் நிறைவு பெறும். சிறிதேனும் சந்தேகம் கொண்டால் குடம் தேனில் ஒரு துளி விஷம் என்ற கதை ஆகிவிடும் என்பது பாரதியின் கருத்து.

      இனி அப்பாடலைப் பார்ப்போம்.

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்

புகை நடுவினில் தீ இருப்பதைப் பூமியிற் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ?
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக் கொடி வளராதோ?

உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ள நிறைவாமோ?
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனாமோ?

வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ?
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவான் என்ற சாத்திரம் கேளாயோ?

போருக்கு வந்தங்கெதிர்த்த கௌரவர் போல வந்தானும் அவன்
நேருக்கருச்சுனன் தேரிற் கசை கொண்டு நின்றதும்   கண்ணனன்றோ?

தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு சிந்தையிற் போற்றிடுவாய்

அன்னை பராசக்தி அவ்வுருவாயினள் அவளைக் கும்பிடுவாய்.

No comments:

Post a Comment