Pages

Wednesday, December 18, 2013

ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ !


 

        பாரதியின் குயில் பாட்டு அவருடைய படைப்புகளில் தனித்தன்மை வாய்ந்தது. முதலாவதாக, இது செய்யுள் வடிவிலான கதைப் பாட்டு. பாரதி பல தலைப்புகளில் மரபுக் கவிதைகளும் வசன கவிதைகளும் எழுதியுள்ளார். பல கதைகளும் உரைநடை வடிவில் எழுதியுள்ளார். ஆனால் இது ஒன்று தான் பாடல் வடிவில் சொல்லப்பட்ட கதை.

        பாரதியின் ஒவ்வொரு கதையிலும் ஒரு நீதி அல்லது சமூகத்திற்கான ஒரு செய்தி வெளிப்படையாகத் தெரியும். ஆனால் இக்கதையில் நீதிகளை வெளிப்படையாகத் தெரிவிக்காதது மட்டுமல்ல. முடிவில் ஒரு மர்மமான முடிச்சையும் வைத்திருக்கிறார்.  

சோலை, குயில், காதல், சொன்னகதை யத்தனையும்,
மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே 
தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சியென்றே கண்டு கொண்டேன். 
ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே யானாலும்,
வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க 
யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?

        எனவே ஏதோ செய்தி மறைந்துள்ளது என்று நமக்குத் தோன்றுகிறது. அது என்ன என்று அறிய, அந்தப் பாடலை முழுமையாகப் படிப்பதோடு மட்டுமல்லாமல் பாரதியின் மற்ற படைப்புகளையும் ஆழ்ந்து கற்க வேண்டும். ஏனெனில் நாம் சொல்ல இருக்கும் விளக்கம் நம் கற்பனையில் பிறந்ததாக இருக்கக் கூடாது. பாரதியின் பிற படைப்புகளில் காணப்படும் அவரது உள்ளத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். இந்த அடிப்படையில் குயில் பாட்டில் மறைந்துள்ள செய்தியைத் தேடிக் கண்டுபிடிக்க முயல்வோம். முதலில் அந்தக் கதையைத் தெரிந்து கொள்வோம்.
       
        கவிஞர் ஒரு நாள் ஒரு மாந்தோப்பில் உலவிக் கொண்டிருந்தார். அங்கிருந்த குயில்களில் ஒன்று மட்டும் மற்றவற்றை விடச் சிறப்பாகப் பாடிக் கொண்டிருந்தது. கானத்தால் ஈர்க்கப்பட்டு அதன் மேல் காதல் கொண்டார் கவிஞர். தனக்கு ஏற்ற ஒரு காதலரைத் தேடிக் கொண்டிருந்த குயிலும் கவிஞருடன் இன் மொழிகள் பேசி, நான்காம் நாள் வருமாறு கேட்டுக் கொண்டது. 
       
        காதல் நினைவால் பித்துப் பிடித்தவர் போல் ஆன கவிஞர், மறு நாளே தோப்பிற்குச் சென்றார். அங்கு அந்தக் குயில் ஒரு குரங்குடன் காதல் வார்த்தைகள் பேசிக் கொண்டிருப்பதை மறைவிலிருந்து காண்கிறார். வஞ்சகக் குயிலையும் குரங்கையும் கொல்லக் கருதி வாளை வீசுகிறார். அவை தப்பி விடுகின்றன.
       
        காதல் நினைவு வாட்டவே மறு நாளும் தோப்பிற்குச் செல்கிறார். அங்கு அந்த வஞ்சகக் குயில் ஒரு மாட்டுடன் காதல் செய்து கொண்டிருப்பதைக் கண்டு பதைக்கிறார். மாட்டைக் கொல்ல வாளை வீச, அது தப்பிவிடுகிறது.
       
        நான்காம் நாள் குயில் இவரை எதிர்பார்த்துக் காத்திருந்தது. கவிஞர் தான் கண்ட அதன் வஞ்சக நடத்தைகளைக் கூறி அதைக் கொல்லக் கருதுகிறார். குயிலோ தன் கதையை முழுவதும் கேட்டு விட்டுக் கொல்லுமாறு கெஞ்சுகிறது. குயில் தன் பூர்வ ஜன்மக் கதையைக் கூறுகிறது.
        வீர முருகனென்னும் வேடன் மகளாகச் சேர நாட்டில் ஓர் மலையில் பிறந்து சின்னக் குயிலி என்னும் பெயருடன் வளர்ந்தாள் அவள். அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கிய அவளை மணக்க விரும்பினான் அவளது மாமன் மகனான மாடன் என்பான். பொன்னை, மலரை, புதுத் தேனைக் கொண்டு வந்து நித்தம் கொடுத்து நினைவெல்லாம் அவளாக அவன் சித்தம் வருந்தியதால், அவள் மாலையிட வாக்களித்தாள்; மையலினால் இல்லை; அவன் சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாள்.
        இதை அறியாத அவளுடைய தந்தை அவளுக்கு நெட்டைக் குரங்கன் என்னும் இளைஞனைக் கணவனாக்க நிச்சயித்தான்.   இந்நிலையில் அவள் ஒரு இளவரசனைக் கண்டு காதல் கொள்கிறாள். அவனும் “நீயே துணை எனக்கு. நீயே குலதெய்வம். நின்னையன்றிப் பிற பெண்ணை  நினையேன். இப்பொழுதே நின் மனைக்குச் சென்றிடுவோம், நின் வீட்டிலுள்ளோர்பால் என் மனதைச் சொல்வேன். எனது நிலை உரைப்பேன், வேத நெறியில் விவாகம் உனைச் செய்து கொள்வேன்'' என்று வலக் கைதட்டி வாக்களித்தான். பூரிப்புக் கொண்ட அவளை அவன் அணைத்து இதழ் பருகும் நேரத்தில் குரங்கனும் மாடனும் பார்த்துப் பதைபதைத்து இளவரசனை வாளால் வெட்டினர். அவனும் இவர்களைக் கொன்று தானும் வீழ்ந்து இறந்தான்.

        சின்னக் குயிலி குயிலாகப் பிறந்தாள். அவள் ஒரு முனிவரைச் சந்தித்த போது அவர் அவளது முற் பிறப்புக் கதையையும் கூறி வருங்காலத்தையும் உரைத்தார். மாடனும் குரங்கனும் பேயாகப் பிறந்து அவளைப் பின்தொடர்வார்கள் என்றும் அவளது நெஞ்சம் கவர்ந்த இளவரசன் தொண்டை நாட்டில் ஒரு மாந்தோப்பில் அவளது பாட்டால் கவரப்பட்டு அவளைச் சந்தித்து மணப்பான் என்றும் அவர் கூறினார்.

        முனிவர் கூறியபடியே, அவளுடைய முற்பிறப்புக் காதலனே கவிஞராக வந்துள்ளதைத் தான் உணர்ந்ததாக அவள் உரைக்க, கவிஞர் அக் குயிலை அணைத்து இன்பவெறி கொண்டு முத்தமிட்டார். கோகிலத்தைக் காணவில்லை. பெண்ணொருத்தி அங்கு நின்றாள்; பெண்ணவளைக் கண்டு பெருங்களி கொண்டார் அவர். இப்படி மகிழ்ச்சியாக முடிகிறது கதை.

        இனி, கதையில் வெளிப்படையாகத் தெரியும் முக்கியக் கருத்துகளைக் கவனிப்போம்.

பெண்மையின் தெய்விகம்

        பாரதி பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்று போற்றியவர் என்பதை நாம் அறிவோம். எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை என்று கும்மி அடித்தவர். நாணும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம் என்று பெண்களைத் திரை மறைவு அடிமைத் தளையிலிருந்து விடுவித்தவர். தெய்வத்தின் பல் வேறு வடிவங்களை அவர் பாடினாலும், தெய்வத்தின் பெண் வடிவத்தையே சக்தி என்னும் பெயரால் பெரிதும் போற்றினார். சந்திரிகையின் கதை பெண் விடுதலையையே மையக் கருத்தாகக் கொண்டது. அவருடைய பிற கதைகளிலும் பெண்மையின் உயர்வு பேசப்படுகிறது. அவருடைய கதைகளிலும் கட்டுரைகளிலும் பெரும்பாலும் பெண் குழந்தைகளே இடம் பெறுகிறார்கள். ஆண் குழந்தைகளை அவர் கதாபாத்திரமாகப் பயன்படுத்தியது மிக அரிதாகவே. கண்ணனைப் பல வடிவங்களில் பாடிய அவர் குழந்தையாகக் கற்பனை செய்யும் போது கண்ணம்மா என்ற பெண் குழந்தையாகவே வடிக்கிறார்.  இந்தப் பாட்டிலும் அவர் பெண்மையின் தெய்விகத் தன்மையைப் போற்றுவதையே முக்கியக் கருத்தாகக் கொண்டிருந்தார் என்பது இசையால் இவரைக் கவர்ந்த குயில் மானிட வடிவம் பெற்ற போது, பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா!  என்று அவர் வியப்பதிலிருந்து தெரிகிறது.
 
காதலின் உயர்வு

        சின்னக் குயிலியைக் கேட்காமல் அவளுடைய தந்தை அவளை நெட்டைக் குரங்கனுக்கு மணம் முடிக்க நிச்சயிக்கிறான். அவளுடைய இரக்க சுபாவத்தைப் பயன்படுத்தி, மாமன் மகன் மாடன் தன்னை மணக்குமாறு வற்புறுத்துகிறான். மனம் அவனிடம் ஈடுபடாவிட்டாலும் அவள் கருணையினால் அவனை மணக்கச் சம்மதிக்கிறாள். (நம் சமுதாயத்தில் பெண்ணின் இயல்பான நாட்டம் பற்றிக் கவலைப்படாமல் வேறு பல காரணங்களுக்காக அவளது மண வாழ்வைப் பலி ஆக்குவது இங்குக் காட்டப்படுகிறது.) சேர இளவரசனிடம் மட்டுமே அவளுக்கு உண்மையான காதல் ஏற்படுகிறது. அது அந்தப் பிறவியில் நிறைவேறாவிட்டாலும் அடுத்த பிறவியிலாவது நிறைவேறுவது குறித்து நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. காதல் செய்வீர் உலகத்தீரே; அஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம் என்று அவர் காதலை உயர்த்துவது இங்கும் எதிரொலிக்கிறது.

கற்பின் மாட்சி    

        கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் இருக்க வேண்டிய பண்பு என்று கருதப்பட்டு வந்த காலத்தில், கற்பு நிலை என்று சொல்ல வந்தார் அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம் என்று துணிந்து கூறியவர் பாரதி. ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது தான் காதலின் இன்பம். அவ்வாறின்றி, பல பெண்களை ஒரு ஆடவன் மணப்பதால் பெண் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுகிறாள். சமத்துவம் இல்லாவிடில் அது காதல் அல்ல. சமூகத்தில் நிலவி வரும் பல தார மணத்தைக் கண்டித்துப் புதுமைப் பெண்ணான சின்னக்குயிலி இளவரசனிடம் பேசும் வீர உரை இது.

''ஐயனே! உங்கள் அரண்மனையில் ஐந்நூறு 
தையலருண் டாம்; அழகில் தன்னிகரில் லாதவராம்;
கல்வி தெரிந்தவராம்; கல்லுருகப் பாடுவராம்;
அன்னவரைச் சேர்ந்தே நீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர்,
மன்னவரே வேண்டேன், மலைக்குறவர் தம்மகள்யான்;
கொல்லு மடற்சிங்கம் குழிமுயலை வேட்பதுண்டோ
வெல்லுதிறல் மாவேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பார்
பத்தினியா வாழ்வதல்லால் பார்வேந்தர் தாமெனினும் 
நத்தி விலைமகளா நாங்கள்குடி போவதில்லை
பொன்னடியைப் போற்றுகின்றேன், போய் வருவீர்

பெண் குலப் பீழை

        மானிடர் போல் அல்லாமல், சுதந்தரமானது என்று நாம் கருதும் பறவைக் குலத்தில் பிறந்த போதிலும் குயிலின் காதல் அவ்வளவு எளிதாக நிறைவேறிவிடவில்லை. மாடனும் குரங்கனும் அவளைத் துரத்துகின்றனர். அபலைப் பெண் ஜன்மமான அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களைக் காதலிப்பதாக நடிக்க வேண்டியுள்ளது. அதை அவள் கவிஞரிடம் உரைக்கும் போது வேறொரு பாடலில் அவர் பாடிய,

பெண்ணென்று பூமி தனில் பிறந்து விட்டால் மிகப்
பீழை இருக்குதடி தங்கமே தங்கம்

என்ற வரிகள் நம் நினைவுக்கு வருகின்றன.

நகைச் சுவை

        சக்தியைச் சரணடைதல், நாட்டு விடுதலை, பெண் குல முன்னேற்றம், வேதநெறி தழைக்கச் செய்தல், பூமியிலே கிருத யுகத்தை நாட்டல் என்று பாரதி எடுத்துக் கொண்ட விஷயங்கள் யாவுமே கனமானவை. இத்தனை லட்சியங்களையும் சாதிக்கத் தனக்கு ஆயுள் போதாது என்ற உள்ளுணர்வால் உந்தப்பட்ட அவர் எப்பொழுதும் பக்தி, வீரம் ஆகிய உணர்ச்சிகளின் பிழம்பாக இருந்தார். எனவே அவருடைய படைப்புகளில், குறிப்பாகக் கவிதைகளில் நகைச்சுவையைக் காண முடிவதில்லை.

        ஆனால் பாரதி நகைச்சுவை உணர்வு இல்லாதவர் அல்லர். அவருடைய கவிதைகளில் இரண்டு இடத்தில் மட்டும் இது சற்றே தலை தூக்குகிறது. கண்ணன் என் சேவகன் என்ற பாடலில் சேவகரால் பட்ட தொல்லைகளை விவரிக்கும்போது,

ஏனடா நீ நேற்று இங்கு வரவில்லை என்றால்
பானையிலே தேளிருந்து பல்லாற் கடித்ததென்பார்
பாட்டியார் செத்து விட்ட பன்னிரண்டாம் நாளென்பார்.
வீட்டிலே பெண்டாட்டி மேற் பூதம் வந்ததென்பார்

என்று சேவகர்கள் வழக்கமாகச் சொல்லும் பொய்களை நகைச்சுவையோடு சொல்வார்.

        அடுத்தது, குயில் பாட்டில் குயில் குரங்கினிடம் காதல் மொழிகள் பேசும்போது காணப்படுகிறது. குரங்கு இழிவான மிருகம் என்ற கருத்தை மாற்றி, குரங்கே மனிதரை விட மேலானது என்று சான்று காட்டிக் குயில் பேசும்போது நம்மை அறியாமல் நமக்குச் சிரிப்பு வருகிறது.

பேடைக் குயிலிதனைப் பேசியது: - ''வானரரே!
ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான் 
எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத் 
தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ

மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே,
எண்ணிநின்றார் தம்மை; எனிலொருகால் ஊர்வகுத்தல்,
கோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில 
வாயிலிலே, அந்த மனிதர் உயர்வெனலாம்.
மேனி யழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும் 
கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே,
வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிக ராவாரோ

ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும்,
பட்டுமயிர் மூடப்படாத தமதுடலை 
எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம்
ஆசை முகத்தினைப் போல் ஆக்க முயன்றிடினும் 
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே 
கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில் 
ஏறத் தெரியாமல் ஏணி வைத்துச் சென்றாலும்,
வேறெத்தைச் செய்தாலும் வேகமுறப் பாய்வதிலே
வானரர்போ லாவரோ? வாலுக்குப் போவதெங்கே?
ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ

பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு கந்தைபோல்;
வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே 
தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ?

சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும் -
வானரர் போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?

ஒளியைப் போற்றல்     

        இறைவன் எல்லாமாக வியாபித்து நிற்பவன். வீசுறு காற்றில், நெருப்பில், வெளியில்  என்று எல்லா இடங்களிலும் இறைவன் வியாபித்து நின்றாலும் அவனை ஒளி வடிவாகவும் ஒலி வடிவாகவும் வணங்கும் வழக்கம் மிகப் பழமையானது.

பண்ணில் இனிய பாடலோடு பாயும் ஒளியெலாம்
பாரில் எம்மை உரிமைகொண்டு  பற்றி நிற்கவே
.......
வேண்டுமடி எப்போதும் விடுதலை

என்ற  வரிகளிலிருந்து பாரதிக்கு அந்த இரண்டு வடிவங்களில் இருந்த சிறப்பான ஈடுபாடு தெரிகிறது. அந்த இரண்டு வடிவும் குயில் பாட்டின் அடிப்படைகளாக உள்ளன.

        முதலில், இறைவனின் ஒளி வடிவைக் காண்போம். பாரதிக்கு இயற்கை ஒளி மீது அளவற்ற ஆசை உண்டு. ஞாயிற்றின் ஒளி பற்றி அவர் பல பாடல்கள் பாடியுள்ளார். பல இடங்களில் இறைவனின் சோதி வடிவைப் போற்றுகிறார்.  எடுத்துக்காட்டாக, பாஞ்சாலி சபதத்தில் அவர் சூரிய உதயக் காட்சியை வர்ணிப்பதைக் காண்போம்.

'பாரடியோ! வானத்திற் புதுமை யெல்லாம்,
பண்மொழீ! கணந்தோறும் மாறி மாறி
ஓரடிமற் றோரடியோ டொத்த லின்றி
உவகையுற நவநவமாய்த் தோன்றுங் காட்சி
யாரடிஇங் கிவைபோலப் புவியின் மீதே
எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார்?
சீரடியால் பழவேத முனிவர் போற்றுஞ்
செழுஞ்சோதி வனப்பையெலாம் சேரக் காண்பாய்.

'
கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
கணந்தோறும் நவநவமாங் களிப்புத் தோன்றும்;
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ?ஆங்கே,
கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக்
காளிபரா சக்தி அவள் களிக்குங் கோலம்
கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர்
கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்.

'
அடிவானத் தேஅங்கு பரிதிக் கோளம்
அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்
இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து,
முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே
மொய்குழலாய்,சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்!
வடிவான தொன்றாகத் தகடி ரண்டு
வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்.
**
அமைதியொடு பார்த்திடுவாய் மின்னே! பின்னே
அசைவுறுமோர் மின்செய்த வட்டு; முன்னே
சமையுமொரு பச்சைநிற வட்டங் காண்பாய்.
தரணியிலிங் கிதுபோலோர் பசுமை உண்டோ?
இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள்
எண்ணில்லா திடையிடையே எழுதல் காண்பாய்;
உமை கவிதை செய்கின்றாள், எழுந்து நின்றே
உரைத்திடுவோம், ''பல்லாண்டு வாழ்க!'' என்றே.

'பார்; சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்
எத்தனை தீப்பட் டெரிவன? ஓகோ!
என்னடி! இந்த வண்ணத் தியல்புகள்!
எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்!- செழும்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள்!- வெம்மை தோன்றாமே
எரிந்திடுந் தங்கத் தீவுகள்!- பாரடி!
நீலப் பொய்கைகள்!-அடடா, நீல
வன்ன மொன்றில் எத்தனை வகையடி!
எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்,
எத்தனை!- கரிய பெரும்பெரும் பூதம்!
நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட
கருஞ்சிக ரங்கள்!- காணடி, ஆங்கு
தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
இருட்கடல்!-ஆஹா! எங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!'
  
        இதற்கு விளக்கம் கொடுக்கையில் பாரதி குளக்கரைகளிற் போய் கருடன் பார்ப்பதென்றால் நம்மவர்கள் கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். ஸூர்யாஸ்தமன காலத்தில் வானத்தில் தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போகிறதில்லை என்று வருந்துகிறார். குயில் பாட்டில் ஒளியைப் போற்றுவதற்கென்று வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கிறார். கதையின் துவக்கமே சோதியையும் வேத ஒலியையும் கொண்டு மங்களகரமாக அமைந்துள்ளது. 

காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே 
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல் 
மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா 
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி 
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய
செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின் 
மேற்கே, சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை, 


        நடுவில் ஓரிடத்தில்
சோலையிடை, செஞ்ஞாயிற் றொண்கதிரால் 
பச்சைமர மெல்லாம் பளபளென விளங்கும் காட்சியை வர்ணிக்கிறார்.

        கதை சொல்லிக் கொண்டு வரும்போதே பாதியில் ஒரு இடைவெளி ஏற்படுத்திக் கொண்டு ஒளியைப் புகழ்கிறார் பாரதி. இது கதைக்குச் சம்பந்தம் இல்லை எனினும் அவருக்கு ஒளியின் பால் இருந்த நாட்டம் காரணமாக, “குயிலின் வஞ்சகத்தால் மனமுடைந்து போனதால் மேற்கொண்டு கதை சொல்ல முடியாமல் போகவே, மன ஆறுதலுக்காக காலைக் கதிரழகை வர்ணிக்கிறேன்” என்று இதைக் கதையோடு தொடர்பு படுத்துகிறார்.

வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான் 
மோனவொளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான்,
.......
மேலைக் கதையுரைக்க வெள்கிக் குலையுமனம்,
காலைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன்.

தங்க முருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி 
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச் 
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை 
ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?
கண்ணையினி தென்றுரைப்பார்; கண்ணுக்குக் கண்ணாகி
விண்ணை அளக்கும் ஒளி மேம்படுமோர் இன்பமன்றோ

மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும் 
மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல் 
நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப் புளதோ

புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி
மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து 
விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினைக் 
காலைப் பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன்.
       
இசையின் பெருமை

        குக்குக்கூ என்று குயில் பாடிய பாடலில் கவிஞருக்குத் தொக்க பொருளெல்லாம் தோன்றியதாம். அதன் உள்ளுறையை ஆராய்வோம்.

காதல், காதல், காதல், .
காதல் போயிற் காதல் போயிற் 
சாதல், சாதல், சாதல்.

        இது பல்லவி. இவ்வாறே மேலும்  ஒன்பது கண்ணிகள். ஒவ்வொன்றிலும் ஒரு பொருளும் அதன் எதிர்ப் பொருளும் கூறப்பட்டுள்ளன. அருள், இன்பம், நாதம், தாளம், பணம், புகழ், உறுதி, கூடல், குழல் என இவை அமைந்திருக்கும் வரிசை அமைப்பைப் பார்த்தால் அதில் ஒரு செய்தி புலப்படுகிறது.

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம்;சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.

என்று, பாரதி வேறு ஒரு இடத்தில் கூறியதே குயில் பாட்டிலும் வலியுறுத்தப் படுகிறது. இங்கு காதல் என்ற சொல் இரு பால் இளைஞரிடையே உடற் கவர்ச்சி காரணமாகத் தோன்றும் உணர்ச்சியைக் குறிக்கவில்லை. மாறாக, உள்ளத்தில் ஊறி உயிர் கலந்து நிற்கும் அன்பைக் குறிக்கிறது.

வயது முற்றிய பின்னுறு காதலே
மாசுடைத்தது, தெய்விகமன்று காண்
இயலு புன்மை உடலுக்கின்பெனும்
எண்ணமும் சிறிதேன்றதக் காதலால்

என்று அவர் கூறுவதால் உடலின்பம் கலவாத காதலே தெய்விகமானது என்பது அவரது கருத்து என அறிகிறோம்.

        ஸரஸ்வதி காதல், லட்சுமி காதல், காளி காதல் என்று தெய்வங்களின் மீதும் காதல் கொண்டவர் பாரதி. இத்தகைய அன்பின் விளைவு இறை அருளும் வாழ்வில் இன்பமும். அந்த இன்பம் எல்லை கடவாததாக  இருக்க வேண்டும். எல்லை மீறினால் துன்பம் ஏற்படும்.

        வாழ்வில் இன்பம் தரும் பொருள்களிலே தலையாயது இசை. நாதம் பண்ணோடும் தாளத்தோடும் கலந்து வரும்போது அது இசையாகி இன்பம் தருகிறது. அது காதலின் இணை பிரியாத அங்கமாக அமைகிறது. பாட்டுக் கலந்திடவே ஒரு பத்தினிப் பெண் வேண்டும் என்று பாரதி மற்றொரு இடத்தில் பாடுகிறார்.

        மனிதன் வெறுமனே இசை கேட்டுக் கொண்டு பொழுதைப் போக்கக் கூடாது. அவன் புரையற்ற புகழ் தரும் செயல்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும்.  அதற்குத் தேவையான மன உறுதியையும் உடல் உறுதியையும் அவன் இறைவனிடம் வேண்டிப் பெறல் வேண்டும். மனதிலுறுதி வேண்டும் காரியத்திலுறுதி வேண்டும்  என்று பெரிய கடவுளை வேண்டுகிறார் அவர்.

        இத்தகைய  உறுதியுடன் புகழ் தரும் செயல்களைச் செய்துகொண்டு இசை நாட்டம் கொண்ட ஒருவன் அந்த இசை மூலம் இறைவனுடன் கூட வேண்டும்.

        காதலில் ஆரம்பித்து குயிலின் பாட்டு குழலில் அதாவது இசையில் முடிவது, வெளித் தோற்றத்தில் அது ஒரு காதல் கதையாக இருந்த போதிலும் அதன் ஆத்மா இசையே என்பதைச் சூசகமாகத் தெரிவிக்கிறது.

        இசையில் மயங்காத உயிரினம் இல்லை என்பதைக் குரங்கும் மாடும் குயிலின் பாட்டால் கவரப்பட்டு அதைக் காதலித்ததைக் கொண்டு அறிய முடிகிறது.  ஆனால் இசையை எழுப்பக் கூடிய திறமை மனிதர்க்கு மட்டுமே உண்டு. எனவே இறைவன் மற்ற உயிர்களிடம் பரிவு காட்டிய போதிலும் மனிதனிடம் சிறப்பான காதல் கொள்கிறான். இசை இறைவனையும் மனிதனையும் இணைக்கிறது.

        இசையின் காரணமாகத் தான் அவருக்குக் குயிலின் மேல் காதல் ஏற்பட்டது. துவக்கத்தில் தானும் குயிலாக மாறிவிட மாட்டோமா என்று ஏங்குகிறார்.  இறுதியில் குயில் மானிடப் பெண்ணாக மாறியதாக முடித்து மானிடர்க்கு இசையின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். கதை முழுவதுமே இசையின் பெருமை கூறுவது தான் என்றாலும் இசையின் சிறப்புகளைக் கூறும் வரிகளை மட்டும் பார்ப்போம்.

        குயில் பாடிய பாட்டினால் அந்தச் சூழலில் ஏற்பட்ட விளைவுகள் என்ன? வர்ணிக்கிறார், கேட்போம்.

ஆண்குயில்கள் மேனி புளகமுற,
ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக,
சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க்
காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க,
இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல்,
மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய் 
வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள் 
இந்தவுரு வெய்தித்தான் ஏற்றம் விளங்குதல்போல்,
இன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தை

        அது ஏழுலகும் இன்பத்தீ ஏற்றுந் திறனுடையதாக உள்ளதாம்

        இசை என்பது மேடையில் பாடப்படுவது மட்டுமல்ல. அது அருவி நீர் முதலான எல்லா இடங்களிலும் வெளிப்படுகிறது. அதைக் கூர்ந்து கேட்கும் அறிவு இருந்தால் தான் அதை ரசிக்க முடியும். உலகில் எங்கெங்கெல்லாம் இசை காணப்படுகிறது என்று பட்டியலிடுகிறார் பாரதி.

கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்,
ஆற்று நீரோசை அருவி யொலியினிலும்,
நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும் 
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்,
மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால் 
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்,
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்குங்
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும் 
சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும் 
பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும் 
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் 
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்,
வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர் 
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி 
நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும் 
பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்

       குயிலின் பாட்டுக்குக் கவிஞர் மட்டும் வசமாகவில்லை, குரங்கும் அடிமைப்பட்டதைக் காண்கிறோம்

ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே: -
காட்டின் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும்,
பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்.
வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே 
முற்றும் வெறிபோல் முழுவெறிகொண் டாங்ஙனே
தாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும் 
''
ஆவி யுருகுதடி, ஆஹா ஹா'' என்பதுவும்,
கண்ணைச் சிமிட்டுவதும், காலாலுங் கையாலும் 
மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரியிறைப்பதுவும் 
''
ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே!
பேச முடியாப் பெருங்காதல் கொண்டுவிட்டேன்,
காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்;
காதலினாற் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய்,
எப்பொழுதும் நின்னை இனிப்பிரிவ தாற்றுகிலேன்,
இப்போதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன்''

        இறைவன் படைப்பில் பாட்டினைப் போல் ஆச்சரியமானது எதுவும் இல்லை.  அது உவமை இல்லாத இன்பம் தருவது, உலகையே மறக்க வைப்பது.

பாட்டு முடியும்வரை பாரறியேன், விண்ணறியேன்;
கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்!
தன்னை யறியேன்; தனைப்போல் எருதறியேன்;
பொன்னை நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன்பமொன்றே 
கண்டேன், படைப்புக் கடவுளே! நான் முகனே!
பண்டே யுலகு படைத்தனைநீ என்கின்றார்.
நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டி வைத்தாய் 
நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய்.
காற்றை முன்னே ஊதினாய் காணரிய வானவெளி 
தோற்றுவித்தாய், நின்றன், தொழில்வலிமை யாரறிவார்?
உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத 
கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி 
வட்ட வுருளைகள் போல் வானத்தில் அண்டங்கள் 
எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்;
எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளைப்
பொல்லாப் பிரமா, புகுத்திவிட்டாய் அம்மாவோ!
காலம் படைத்தாய் கடப்பதிலாத் திக்கமைத்தாய்;
ஞாலம் பலவினிலும் நாடோ றுந் தாம்பிறந்து 
தோன்றி மறையும் தொடர்பாப் பல அனந்தம்!
சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய், நான்முகனே!
சால மிகப்பெரிய சாதனைகாண் இஃதெல்லாம்!
ஞாலமிசை நின்றன் சமர்த்துரைக்க வல்லார் யார்?
ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே 
கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா!
காட்டுநெடு வானம், கடலெல்லாம் விந்தையெனில்,
பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!
பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில் 
நாதங்கள் நேரும் நயத்தினுக்கு நேராமோ?
ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே,
ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ!

        மானிடப் பெண்ணாக மாறிய குயிலியின் உடல் அழகு, கவிதை  பண் கூத்து இவற்றின் சாரத்தோடு இன்னமுதைக் கலந்து செய்தது என்று சொல்லி இசையை அமுதத்திற்கு இணையாக ஆக்கிக் கதையை முடிக்கிறார் கவிஞர்..

                   .............கவிதைக் கனிபிழிந்த 
சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம் 
ஏற்றி, அதனோடே இன்னமுதைத் தான்கலந்து,
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்

       
        இனி, பாட்டின் கருத்தை வேதாந்தமாக விரித்துரைக்க முடியுமா என்று பார்ப்போம். நாத உபாசனை என்ற பெயரில் இசை மூலம் இறைவனை வழிபடும் முறை நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இசையில் பாரதிக்கு இருந்த ஆர்வமும் ஞானமும் மிகுதி. அவருடைய பாடல்களில் பல பாடுவதற்கென்றே இயற்றப்பட்டவை. வந்தே மாதரம் என்ற பங்கிம் சந்திரரின் பாடலை முதலில் அகவல் பாவாக மொழிபெயர்த்த பாரதி, அது பாடுவதற்கு ஏற்றதாக இல்லை என உணர்ந்து மீண்டும் ஒரு முறை சந்தங்களுடன் தான் அதை மொழிபெயர்த்ததைக் கூறுகிறார். அவர் இசை வல்லுநராகவும் இருந்ததால் பொருளுக்கேற்ற சந்தமும் பண்ணும் அமைத்துப் பாட முடிந்தது. அவருடைய கட்டுரை ஒன்றில் அக்காலத்தில் தமிழ் நாட்டு இசை முறைகளைப்பற்றி விரிவான விமரிசனங்கள் செய்து அதை எத்திசையில் வளர்க்க வேண்டும் என்பதற்கான குறிப்புகளும் தந்துள்ளார்.

        குயிற் பாட்டு ஒரு உருவகம். இதில் இறைவன் குயிலாக உருவகப் படுத்தப் பட்டுள்ளான். ஏன் குயில்? உயிரினங்களிலே மனிதர் தவிர, பறவைகள் மட்டுமே இசை போன்ற இனிய ஓசை எழுப்பக் கூடியவை. பறவைகளுக்குள்ளே இனிய குரல் உடையது குயில். ஏழிசையாய் இசைப் பயனாய் விளங்கும் இறைவனைப் பாரதி குயிலாக உருவகித்தது பொருத்தமே.

        கதையில் வரும் கவிஞர் மானிடச் சாதியின் பிரதிநிதியாகவும், குரங்கும் மாடும் பிற உயிரினங்களைக் காட்டுவதாகவும் விளங்குகின்றனர். இறைவனின் வாயிலிருந்து நெஞ்சைக் கவரும் இனிய இசை தோன்றுகிறது. அந்த இசையின் பொருள் என்ன? வேகத் திரைகளினால் வேதப் பொருள் பாடும் புதுவை அல்லவா? அங்கு குயில் பாட்டிலும் பாரதிக்கு வேதப் பொருளே புலப்படுகிறது.
       
        குயிலின் இசையில் மெய்மறந்து அதன் மேல் காதல் கொண்டு இறுதியில் அதனுடனேயே ஒன்றி விடுவதாக அமைந்த இக்கதை, இசையின் மூலம் தன்னை மறந்து, உலகை மறந்து இறைவனுடன் கலக்கும் முறையை விளக்க வந்ததே குயில் பாட்டின் வேதாந்தப் பொருளென்று காட்டுகிறது.

        குயிலின் முற்பிறப்புக் கதையை அறிவதற்கு முன், குயில் மாட்டுடனும குரங்குடனும் அன்புடன் பேசுவது பிடிக்காமல் கவிஞர் அதைக் கொல்லக் கருதுகிறார். இது இறைவனைப் பற்றி நன்கு அறியாதவர் இறைவனை நிந்திப்பதைக் காட்டுகிறது.

        தேவார திருவாசக ஆசிரியர்களும் ஆழ்வார்களும் இறைவனைக் காதலனாகக் கற்பித்துப் பாடியுள்ளனர். நாயக நாயகி பாவம் எனப்படும் இம்முறையில் பண்டைப் புலவர் எல்லோரும் தன்னைப் பெண்ணாகக் கருதிக்கொண்டு இறைவன் ஆகிய ஆண் மேல் காதல் கொள்வதாகப் பாடியுள்ளனர்.  பெண் சமத்துவம் பேண வந்த பாரதி, கண்ணன் என் காதலன் என்றும் பாடினார், கண்ணம்மா என் காதலி என்றும் பாடினார். இந்தக் குயில் பாட்டில் இறைவனைப் பெண் குயிலாகக் காட்டி, பெண்மை தான் தெய்விகமாம் காட்சியடா என்றும் கூறிப் பெண்மைக்குச் சிறப்புச் சேர்க்கிறார். 

        இறைவனை அடையும் வழியில் நான்கு படிநிலைகள் உண்டு. சாலோகம்- இறைவனின் இருப்பிடத்தை அடைதல்
சாமீப்யம்- இறைவனின் அருகாமையை அடைதல்
சாரூபம்- இறைவனைப் போன்ற உருவம் பெறுதல்
சாயுச்யம்- இறைவனோடு இரண்டறக் கலத்தல்

        இந்த நான்கு நிலைகளையும் குயில் பாட்டில் காண முடிகிறது. குயில் வாழும் மாஞ்சோலையைக் கவிஞர் சென்றடைதல் சாலோகம் ஆகும்.

        முதல் சந்திப்பில் மரத்தருகே போய் நின்று பேடே திரவியமே என்று கவிஞர் பேசத் தொடங்குவதும், அடுத்த சந்திப்பில்

காதலருள் புரிவீர், காதலில்லை யென்றிடிலோ 
சாதலருளித் தமது கையால் கொன்றிடுவீர்
என்று குயிலும் எனது கையில் வீழ்ந்தது காண்

என்பதுவும் படிப்படியான சாமீப்யம் ஆகும்.

        துவக்கத்தில் மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ என்று கவிஞர் ஏங்குகிறார். கதை முடிவில்

அன்புடனே யானும் அருங்குயிலைக் கைக்கொண்டு 
முன்புவைத்து நோக்கிபின் மூண்டுவரும் இன்பவெறி 
கொண்டதனை முத்தமிட்டேன். கோகிலத்தைக் காணவில்லை
விண்டுரைக்க மாட்டாத விந்தையடா! விந்தையடா!
ஆசைக் கடலின் அமுதமடா! அற்புதத்தின் 
தேசமடா! பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா!
பெண்ணொருத்தி அங்குநின்றாள்;

என்று சொல்லும்போது இறைவன் மானிட உருவம் தரித்து கவிஞருடன் சாரூபம் அடைந்ததையும் காண்கிறோம். பக்தன் தன்னைத் தேடி வரும் வரை காத்திராமல் ‘தானே வந்தெம்மை  தலையளித்தாட் கொண்டருளும்’ இறைவனின் எளிவந்த கருணைத் திறம் இதில் காட்டப்படுகிறது. 

பெண்ணவளைக் கண்டு பெருங்களிகொண் டாங்ஙனே 
நண்ணித் தழுவி நறுங்கள் ளிதழினையே 
முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில் 
சித்தம் மயங்கிச் சிலபோழ் திருந்தேன்
என்று அவர் சொல்லும்போது சாயுஜ்ய –இரண்டறக் கலக்கும்- நிலைக்கு முந்திய படியில் அவர் இருப்பதையும் அதன் விளைவான ஆனந்தத்தை அவர் அனுபவித்ததையும் அறிகிறோம்.

No comments:

Post a Comment