Pages

Friday, February 24, 2012

ஐந்தெழுத்து



      அம்மையாரின் பாடல்களில் சிவன் என்ற சொல் காணப்படாதது போல, அதை ஒட்டிப் பிறந்த நமசிவாய மந்திரமும் காணக் கிடைத்திலது. திருவிரட்டை மணிமாலையில் 10 மற்றும் 16 ஆவது பாடல்களில் வரும் ஐந்து என்ற சொல் நமசிவாய மந்திரத்தைக் குறிப்பதாகச் சிலர் பொருள் கொள்கின்றனர். கூர்ந்து நோக்கினால் உண்மையை உணரலாம்.

தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான் செற்பொற் கழல்.       (தி-10)

புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே
எண்ணியோ ரைந்தும் இசைந்தனவால் திண்ணிய
கைம்மாவின் ஈருரிவை மூவுருவும் போர்த்துகந்த
அம்மானுக் காட்பட்ட அன்பு.       (தி-16)

      மேலான ஐந்தையும் சாதித்துப் பணிவுடன் மேலான தத்துவத்தை உணர்ந்தவர்கள் இறைவன் கழலைக் காண்பார்கள் என்பது முதல் பாடலின் பொருள். இறைவன் அருளால் நற்செயல்களும், தீநெறி சாராத ஐந்தும் தனக்கு வந்து சேர்ந்ததாக இரண்டாவது பாடலில் அம்மையார் கூறுகிறார்.

      இரண்டு இடங்களிலும் ஐந்து என்பது நமசிவாய மந்திரத்தைக் குறிப்பதாகப் பொருள் படவில்லை. புத்தர் போதித்த பஞ்ச சீலம் என்னும் அறநெறிகளோ அல்லது வேறு ஏதேனும் ஐந்து நன்னெறிகளின் தொகுப்போ தான் குறிக்கப் படுவதாகத் தெரிகிறது.

      திரு.வி.. இது ஐந்தெழுத்தைத் தான் குறிப்பது என்று உறுதிபடக் கூறவில்லை. முதல் பாடலில் வரும் ஐந்து என்பது ஐந்தெழுத்தையும் குறிக்கலாம், கொல்லாமை, களவாடாமை, கள்ளாமை, வெஃகாமை, பொய்யாமை ஆகிய அறநெறிகளையும் குறிக்கலாம், பஞ்ச சுத்தி என்னும் சடங்கையும் குறிக்கலாம் என்கிறார். இரண்டாவது பாடலில் வரும் ஐந்து ஐம்புலன்களைக் குறிக்கும் என்று மட்டும் குறிப்பிடுகிறார்.

                நமசிவாய என்ற மந்திரம் ருத்ரம் என்ற வேதப் பகுதியில் காணப்படுகிறது. இறைவனின் பல தோற்றங்களை விவரித்து, வணக்கம் தெரிவித்துக் கொண்டு வரும் 273 போற்றிகளில் 226வது மற்றும் 227வதாக நம சிவாய, சிவதராய என்று வருகிறது. மங்கலமானவருக்கு வணக்கம், மிக அதிகமான மங்கலமுடையாருக்கு வணக்கம் என்று இவை பொருள்படும்.

      எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்ற மையக் கருத்து உடையது ருத்ரம். அரசனுக்கு ஆலோசனை கூறும் அறிஞர் சபையின் தலைவர் முதல் தன் யஜமானின் வயலில் கதிர்களைத் திருடும் கடைக்கோடி மனிதன் ஈறாகப் பல வகை நிலை மனிதர் வடிவிலும் விளங்குபவராக வர்ணிக்கப்படுகிறார் ருத்திரன். இது செய்தொழில் வேறுபாட்டால் எவரும் தெய்வத் தன்மை இழப்பதில்லை என்பதை உணர்த்திச் சாமானிய மக்களும் சைவத்தில் பங்கு கொள்வதை ஊக்குவித்தது.
                வேதத்தில் நம (வணக்கம்) என்று தொடர்ந்து பல முறை வரும் பாடல் இது ஒன்றே. இது, ‘நாமாலை சூடியும் நம்மீசன் பொன்னடிக்கே பூமாலை கொண்டு புனைந்து அன்பால் ஏத்த வேண்டும் என்று அடியார்களுக்கு அம்மையார் உணர்த்தியபடி நாமாலைக்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது. (அ-87) வேதம் ஓத முடியாதவர்களும் சொல்லக் கூடியதாக நமசிவாய மந்திரம் அமைந்து, பாமர மக்களுக்கும் பிறவிப் பிணி அறுக்க எளிய வழி கிடைத்ததால் சைவம் மக்கள் இயக்கமாக வளர்ந்தது.
                வடக்கிலிருந்து வந்த அந்தணர்களால் பிரபலப்படுத்தப்பட்ட இரண்டாவது வேதப்பாடலான சமகம் இவ்வுலக வாழ்வுத் தேவைகளைக் கோருவது ஆகும். உணவு, புகழ், கேள்வித் திறமை, சத்துருக்களை வெல்லும் திறன், ஆயுள், நல்ல உடல், புத்திர பௌத்திரர்கள், வித்தை, நன்னம்பிக்கை, வசீகரண சக்தி, ஆடல் பாடல், செல்வம், இவ்வுலக இன்பம், சொர்க்கம், நல்ல வீடு, நோயின்மை, பயமின்மை, பலவகை தானியங்கள், மலைகள், மரங்கள் என்று இப்படியாகச் சுமார் 343 பொருட்கள் எனக்கு உரியனவாக ஆகட்டும் என்று வேண்டும் இது, அக்னியையும் விஷ்ணுவையும் குறித்ததாகத் துவங்கி, என்னைத் தேவர்கள் காப்பாற்றட்டும், பிதிரர்கள் அதை ஆமோதிக்கட்டும் என்று முடிவடைகிறது.

                சிவன் பெயரோ, ருத்ரன் பெயரோ வராவிடினும் இப்பாடல் சிவனுக்கு உரியதாக ஆக்கப்பட்டது. இது பிரசாரம் செய்யப்பட்டதால் மறுவுலகிலேயே பார்வையைப் பதிய வைத்துக் கொண்டு இவ்வுலக வாழ்வைப் புறக்கணிக்கும் சமண சாக்கியப் போக்கு மாற்றப் பட்டது. சமணத்தை எதிர்த்து வைணவம் போரிட்டதாகச் சான்றுகள் இல்லை.

சிவன் என்னும் நாமம் ஏற்பட்டது எப்படி?

                 கறைமிடற்று அண்ணல் சிவந்த மேனி உடையவர் என்ற கருத்து சங்க நூல்களிலும் அம்மையார் பாடல்களிலும் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இறைவன் சிவன் என்ற பெயரால் சுட்டப்படவில்லை. எனவே சிவந்த நிறம் மட்டுமன்றி, வேறு ஒரு காரணமும் சேர்ந்து கொண்டதால் தான் அப்பெயர் வழங்கலாயிற்று என ஊகிக்கலாம்.

சிவகதி அருள்பவர் சிவன்

                முத்தி நிலையைக் குறிப்பிடச் சமணர்கள் சிவகதி என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளனர் என்று, காரைக்கால் அம்மையார் பாடல்களுக்குத் தான் எழுதிய உரையில் திரு.வி.கலியாணசுந்தரனார் கூறுகிறார். இந்த வடசொல் மங்கலகரமான, நல்ல நிலைமை என்று பொருள் தருவது. கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட சமணர்களைப் பொறுத்தவரை, சிவகதி என்பது இறைவன் என்ற ஒருவர் இல்லாமலேயே மகாவீரர் கொள்கைகளின் மீது நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் இவற்றால் விளைவது.

      அம்மையார் முதல் மூத்த திருப்பதிகத்தின் கடைக்காப்பில் காரைக்காற் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே என்கிறார். அவர் குறிப்பிடுவது முத்தி நிலையையே.

                சங்க காலத்தில் காய் கடவுள் என வழங்கப்பட்டு அஞ்சுதலுக்கு உரியவராகக் கருதப்பட்ட கண்ணுதற் கடவுள் அம்மையார் காலத்தில் ஒரு மாற்றம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். இப்பொழுதும் அவரது தோற்றம் அச்சம் தருவதாகத் தான் இருக்கிறது. ஆனால் அவர் அடியார்களிடம் அன்பு மிகுந்தவராகச் சித்தரிக்கப்படுகிறார். அவருடைய தோற்றத்துக்காக அவரை இகழாது போற்றினால் அவர் அடியார்களுக்கு எல்லாம் கொடுப்பார், நம்மை அவர் எந்த உயர்நிலையிலும் வைப்பார், எந்த உயர் உலகமும் தருவார் என்று அவருடைய எளிவந்த கருணையைப் போற்றுகிறார் அம்மையார். (அ-29, 78)

      இறைவன் காமனையும், காலனையும், முப்புரத்தையும் எரித்தவன் மட்டுமல்ல, விசயனுக்கு வில் அளித்த கருணையாளனும் கூட. ராவணனின் முரணை அழித்தானே அன்றி அவனையே அழிக்கவில்லை. அத்தகைய ஈசனை அன்பென்னும் போர்வையினுள் சுருட்டி நெஞ்சத்துக்குள் மறைத்து வைத்துவிட்டோம் என்று பெருமிதப்படுகிறார் அம்மையார். (அ-96)

                இறைவனை அஞ்சுதற்குரியவன் என்ற தொலைவிலிருந்து அன்புக்குரியவன் என்ற அண்மைக்குக் கொண்டுவந்த அவர் இன்னும் சற்று நெருங்கி அவனைக் கிண்டல் செய்யவும் துணிகிறார் என்பதை முன்னர்க் கண்டோம்.

                இவ்வாறு இறைவனின் நன்மை தரும் கோலத்தை முதன்மைப்படுத்தி அம்மையார் ஏற்படுத்திய பக்தி அலை இந்தத் தன்மையை வெளிப்படுத்தும் ஒரு அடைமொழியால் இறைவனை அழைக்கலாமே என்று மக்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்க வேண்டும்.

                சிவ என்ற சொல் தமிழில் சிவப்பு நிறத்தையும் ஸம்ஸ்கிருதத்தில் நலம் செய்பவர் என்ற பொருளையும் குறிப்பதாகும். இரு வகையிலும் அது இறைவனின் வெவ்வேறு பண்புகளைக் குறிப்பதாலும், இரு மொழியாளர்களுக்கும் உடன்பாடான சொல்லாக இருந்ததாலும் அது தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம். வேதத்தில் ஆளப்பட்ட சொல்லாகவும் அது அமைந்தது, அதற்குப் பெருமையையும் ஏற்றுக் கொள்ளப்படும் தன்மையையும் சேர்த்திருக்கும்.

                 “தமிழ்ச் சொல், வடசொல் எனுமிவ்விரண்டும் உணர்த்தும் அவனை உணரலுமாமே என்று திருமூலர் கூறுவதன் பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும். (திருமந்திரம் 66 ஆகமச்சிறப்பு 10)
     
                பெயரில்லாப் பெருமானைச் சுட்டும் எல்லாப் பெயர்களும் பண்புகளைக் குறிப்பிடும் அடைமொழிகளாகத் தான் பயன்படுத்தப் பட்டுள்ளன. அவ்வகையில் இது வரை பயன்படுத்தப் படாத சிவன் என்ற அடைமொழியும் சிவகதியையும் இவ்வுலக நல்வாழ்வையும் அருள வல்ல பெருமானின் நலம் செய்யும் தன்மையைக் குறிப்பிடுவதாகவே திருமூலர் பாடல்களிலும் தேவாரத்திலும் வந்துள்ளது. 

                                                         




No comments:

Post a Comment